Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 9

பாரதி தம்பி, படம்: ந.வசந்தகுமார்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 9

பாரதி தம்பி, படம்: ந.வசந்தகுமார்

Published:Updated:

ல்வி ஏன் சமமாகவும் சீராகவும் இருக்க வேண்டும்? இந்தக் கேள்வியை நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அதன் அவசியம் புரியும். ஏனெனில், வரலாற்றில் எப்போதுமே கல்வி சமமாகவும் சீராகவும் இருந்தது இல்லை. அது உயர் வர்க்கத்தைச் சேர்ந்தோருக்கும், சாதி அடுக்கின் மேலே இருப்போருக்கும் மட்டுமே சொந்தமானதாக இருந்தது. சாதாரண மக்களுக்கு, கல்வி எப்போதும் விலக்கப்பட்ட கனிதான். குருகுலக் கல்வியும் திண்ணைக் கல்வியும், குப்பனுக்கும் சுப்பனுக்கும் கிடையாது. அவை சாதி அடுக்கில் மேலே உள்ளோருக்கானவை. மெக்காலே கல்வியின் வருகைதான் இந்தப் பாகுபாடுகளைக் கலைத்தது. ஆகவே, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் சமச்சீர் கல்வி என்பது மிகவும் முக்கியமானது.

மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன, தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்தி! சமச்சீர் கல்விமுறையின்படி கல்விபெற்ற மூன்று 'செட்’ மாணவர்கள், 10-ம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வை எழுதிவிட்டனர். தேர்வு முடிவுகளின்படி, முந்தைய ஆண்டுகளின் தேர்ச்சி விகிதத்தைவிட இவர்கள் அதிகம் தேர்ச்சிப்பெற்றுள்ளனர். தேர்வு முடிவு என்ற வெளிப்படையாகத் தெரியும் அடையாளத்தைத் தாண்டி சமச்சீர் கல்வி, வகுப்பறையின் தன்மையைத் தலைகீழாக மாற்றியிருக்கிறது. நமது பாரம்பரிய வகுப்பறையில் ஆசிரியர் சொல்வார்; மாணவர்கள் கேட்டுக்கொள்வார்கள். அது ஒருவழிப்பாதை. அங்கு உரையாடலுக்கு இடம் இல்லை. இந்தப் புதிய வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களுடன் சேர்ந்து இயங்கியாக வேண்டும். மாணவர்களும் வெறுமனே சொல்லிக் கொடுத்ததை மனப்பாடம் செய்யும் இயந்திரங்களாக இருக்க முடியாது. புரிந்துகொண்டால்தான் படிக்க முடியும். இது, உறைந்துகிடந்த மாணவனின் சுய அறிவாற்றலைத் தூண்டிவிடுகிறது. பாடப் புத்தகத்துக்கு அப்பாற்பட்டு சொந்தமாகச் சிந்திக்கவைக்கிறது. புத்தகத்தில் இருக்கும் சொற்களை அப்படியே மனப்பாடம் செய்து எழுதாமல் சொந்த சொற்களில் தேர்வை எழுதவைக்கிறது. இத்தகைய சுய சிந்தனையை வளர்ப்பதுதான் கல்வியின் முதன்மையான நோக்கமாக இருக்க வேண்டும். அந்த வகையில் சமச்சீர் கல்வி என்பது, தமிழகக் கல்வி வரலாற்றில் ஒரு பெரும் பாய்ச்சல்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 9

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், இந்தக் கருத்துடன் பலர் உடன்பட மாட்டார்கள். ஏனெனில், பொதுவெளியில் சமச்சீர் கல்வி குறித்து மிகவும் கீழ்மையான கருத்துகள் தொடர்ந்து திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றில் முக்கியமானது, 'சமச்சீர் கல்வியில் தரம் இல்லை’ என்ற வாதம். 'தரம்’ என்பதற்கு என்ன அளவுகோல்? அதை நிர்ணயிப்பது யார்? சமச்சீர் கல்வியை எதனுடன் ஒப்பிட்டு இது தரம் குறைவானது என்ற முடிவுக்கு வருகின்றனர்? இந்தக் கேள்விகளுக்கு யாரிடமும் பதில் இல்லை. சமச்சீர் கல்வி பாடத் திட்டம், திடீரென ஒரு நாளில் உருவாக்கப்படவில்லை. இந்திய அளவில் பள்ளிக் கல்விக்கான பாட நூல்களை வெளியிடும் நிறுவனமான என்.சி.இ.ஆர்.டி., வகுப்பு வாரியான பாடத் திட்டத்தை (curriculum) உருவாக்குகிறது. அப்படி உருவாக்கப்பட்ட தேசியப் பாடத் திட்ட வரையறை 2005-ஐ (National curriculum framework 2005) அடிப்படையாகக்கொண்டுதான் சமச்சீர் கல்விப் புத்தகங்கள் தயாரிக்கப்பட்டன. சமச்சீர் கல்விகுறித்த வழக்கு 2011-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது பாட நூல்களின் தரம்குறித்து, என்.சி.இ.ஆர்.டி உறுப்பினர்களின் உதவியுடன் பரிசீலித்து, பாட நூல்களை ஆய்வுசெய்து சமச்சீர் கல்வி நூல்கள் மிகவும் தரமுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகச் சான்று அளிக்கப்பட்டது.

சமச்சீர் கல்வி அமல்படுத்தப்படும் முன்பாக செய்யப்பட்ட கள ஆய்வில், மெட்ரிக் பள்ளி மற்றும் அரசுப் பள்ளியின் பாடப் புத்தகங்கள் ஒப்பீட்டு ஆய்வு செய்யப்பட்டன. அதில் அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பில் படிக்கும் பாடத்தை மெட்ரிக் பள்ளியில் 5-ம் வகுப்பில் படித்தார்கள். அதாவது, தனியார் பள்ளி மாணவர்கள் ஒரு வகுப்பு முன்னே படித்தனர். சமச்சீர் கல்விமுறை, இதைக் கணக்கில் எடுத்துக்கொண்டது. வகுக்கப்பட்ட புதிய பாடத் திட்டமானது, அந்தந்த வயதின் கற்கும் திறனுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. ஒரு மாணவனோ / மாணவியோ, எந்தக் கல்வியை எந்த வயதில் பெற வேண்டும் என்பதற்கு ஒரு நிர்ணயம் இருக்கிறது. பாடத் திட்டம் அதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். இதுதான் அளவுகோல். இதில் தவறு நிகழ்ந்தால், '7-ம் வகுப்புப் பையனுக்கு 5-ம் வகுப்புப் பாடத்தை நடத்துகிறார்கள்’ என்று சொன்னால், தரத்தில் சிக்கல் என்று சொல்லலாம். அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து தரம் குறித்த அவதூறுகள் கிளப்பப்படுகின்றன.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு சென்னையின் முன்னணி பள்ளியும், தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து சமச்சீர் கல்வி குறித்து ஆய்வு நடத்தியதாகச் செய்திகள் வெளிவந்தன. மாணவர்கள், பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் என 344 பேர்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார்களாம். அவர்களில் 98 சதவிகிதம் பேர் சமச்சீர் கல்வி தரமற்றது என்றும், சி.பி.எஸ்.இ-தான் சிறந்தது என்றும் கருத்துச் சொன்னார்களாம். வெறும் 344 பேரிடம் கருத்துக் கேட்டுவிட்டு அதை ஒட்டுமொத்த சமச்சீர் கல்விகுறித்த பொதுமக்களின் எண்ணம்போல ஊடகங்களில் முன்வைக்கின்றனர். இவர்கள், சமச்சீர் கல்விகுறித்து மக்களிடம் பரப்பப்பட்டுள்ள அவதூறுகளுக்கு ஒரு வடிவம் கொடுத்து ஒருங்கிணைக்கின்றனர். இந்தக் கருத்துக் கணிப்புக்குப் பின்னால் சமச்சீர் கல்வியை ஒழித்துக்கட்டும் நோக்கம் இருப்பதாக சந்தேகப்படுவதற்கான எல்லா சாத்தியங்களும் இருக்கின்றன.

ஏன் இவர்கள் எல்லோரும் சமச்சீர் கல்வியை வெறுக்கிறார்கள்? கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை அவர்களின் கல்விக் கொள்ளைக்கு இது கடிவாளம் போடுகிறது, அதனால் எதிர்க்கின்றனர். மக்களைப் பொறுத்தவரை ஒரு பிரிவினர், 'சமம்’ என்ற சொல்லையே வெறுக்கிறார்கள். 'பணம் கொடுத்துப் படிக்கும் என் பிள்ளையும், ஓசியில் படிக்கும் உன் பிள்ளையும் எப்படிச் சம கல்வியைப் பெறலாம்?’ என்பது அவர்களின் ஆழ்மன உதறல். ஆகவே, வேறுபட்ட கல்விமுறைகள் வேண்டும் என்கின்றனர். 'ஒரு வாடிக்கையாளருக்குத் தேர்வுசெய்யும் வாய்ப்பு இருக்க வேண்டும். ஒரு டிபார்ட்மென்ட் ஸ்டோரில் நுழைந்தால் 10 ரூபாய் உள்ளவரும், 50 ரூபாய் உள்ளவரும், 1,000 ரூபாய் உள்ளவரும் அவரவர் வசதிக்கு ஏற்ப பொருள் வாங்க முடிய வேண்டும். அதுதான் சந்தை விதி’ என்பது அவர்களின் வாதம். 'கல்வி என்பது சந்தையில் விற்கப்படும் சரக்கு என்றாகிவிட்ட பின்னர், சந்தை விதியையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்’ என்பது அவர்களின் தார்மீக கோபத்துக்கான அடிப்படை.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 9

இன்னொரு பக்கம் 'சமச்சீர் கல்வி மிகவும் எளிமையாக இருக்கிறது. மாணவர்களை மேலும் சோம்பேறி ஆக்குகிறது’ என்ற கருத்தும் சொல்லப்படுகிறது. பாடப் புத்தகம் கடினமாகத்தான் இருக்க வேண்டும் என்று ஏதாவது விதி இருக்கிறதா? அதிகமான புத்தகங்களைப் படித்தால்தான் அதிக அறிவு வரும் என்று நம்பிப் பழகிவிட்டதுகூட இந்தக் கருத்துக்குப் பின்னால் இருக்கலாம். ஆனால், தனியார் பள்ளிகள் இந்தக் கருத்தைச் சொல்வதன் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அவர்கள், தாங்கள் வாங்கும் தாறுமாறான கட்டணத்தை நியாயப்படுத்த, அதிகமாகப் பாடம் நடத்தவேண்டியுள்ளது அல்லது அப்படி ஒரு தோற் றத்தையேனும் ஏற்படுத்த வேண்டியுள்ளது. சமச்சீர் கல்வி, 'வாங்கும் காசுக்கு ஏற்ப கூவ முடியாததாக’ இருப்பதுதான் இவர்களுக்குப் பிரச்னை.

கடைசியாக, 'சமச்சீர் கல்வியில் படித்தால் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற முடியாது’ என்கிறார்கள். இது பெற்றோர்களின் மனதை அசைத்துப்பார்க்கும் வாதம். 'இதுல படிச்சா உன் பிள்ளை ஒண்ணுத்துக்கும் ஆக மாட்டான்’ என்ற அச்சுறுத்தல். இது முழுக்க, முழுக்க பொய்ப் பிரசாரம் என்பதுடன் எந்த ஆதாரமும் அற்றது. சமச்சீர் கல்வி வந்து மூன்று வருடங்கள்தான் ஆகின்றன. அதற்குள் இந்த முடிவுக்கு எப்படி வர முடியும்? எனில், மற்ற கல்விமுறைகளில் படித்த எல்லோரும் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்றுவிடுகிறார்களா? மாணவர்களைப் போட்டித் தேர்வுக்குத் தயார் செய்வதுதான் பள்ளிக்கூடத்தின் வேலையா? எனில், அது பள்ளிக்கூடமா? குதிரை லாயமா?

உண்மையில், சமச்சீர் கல்வியின் பிரச்னை என்பது, கல்வி முறையில் இல்லை; செயல்படுத்துவதில் இருக்கிறது. அரசுப் பள்ளிகளை எடுத்துக்கொண்டால் உள் கட்டுமான வசதிகள் குறைவு, ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைவு என்பது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். உண்மையில் நமது ஆசிரியர்களின் அக்கறையின்மைதான் அங்கு முக்கியமான பிரச்னை. சமச்சீர் கல்வி வகுப்பறையில் மாணவனின் தனித்திறன் வெளிப்படும் தருணத்தை ஓர் ஆசிரியர் கூர்ந்து கண்டறிய வேண்டும். புதிய புதிய முறைகளில் கற்பிக்க வேண்டும். கற்றல் என்பதை மகிழ்ச்சியான அனுபவமாக மாற்றும் ரசவாதம் அறிந்திருக்க வேண்டும். அதற்கு, முதலில் அவர்கள் கற்க வேண்டும். தங்கள் துறைகளில் நிகழும் மாற்றங்களைத் தெரிந்துகொண்டு அதில் தங்களைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். இவை எவற்றையும் செய்யாமல் மாணவர்களைக் குற்றம் சாட்டி ஒதுங்கிக்கொள்வது நொண்டிச்சாக்கு.

- பாடம் படிப்போம்...

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 9

உண்மையான முன்னேற்றம் எது?

'இரண்டு கோடி லாபம் நிச்சயம்’ என்கிறது அண்மையில் பத்திரிகைகளில் வெளியான இந்த விளம்பரம். வெளிப்படையாகச் சொல்வதே இவ்வளவுப் பெரிய தொகையெனில், உண்மையான லாபம் எவ்வளவு என்று தெரியவில்லை. அரசு நிர்ணயித்த கட்டணத்தை வாங்காத, தன் ஆசிரியர்களுக்கு முறைப்படி ஊதியம் வழங்காத, முறையாகக் கணக்கு- வழக்குக் காட்டாத, இந்த முறைகேடுகள் அனைத்தையும் அப்பட்டமாகச் செய்யும் இத்தகைய தனியார் பள்ளிகளில் படித்தால்தான் தங்கள் பிள்ளைகள் நீதி, நியாயம், நேர்மையுடன் வளர்வார்கள் என்று பெற்றோர்கள் நினைப்பதுதான் பெரிய நகைமுரண். குற்றவாளிகளிடம் ஒப்படைத்தால்தான் குழந்தை முன்னேறும் என்று கருதுவது எப்படிச் சரியாகும்?

நாம் வாழ்க்கையின் முன்னேற்றத்தைச் செங்குத்தானதாகக் கருதுகிறோம். அதில் கீழிருந்து மேலாக ஏறிச் செல்ல என்று பயிற்றுவிக்கப்பட்டுள்ளோம். பணம் சம்பாதிப்பதில் உள்ள வேறுபாடு இதை உண்மைபோல தோன்றவைக்கிறது. ஆனால், உண்மையில் முன்னேற்றம் என்பது செங்குத்தானது அல்ல; அது கிடைமட்டமானது. எல்லோரும் சமதளத்தில் ஒருவர் கையைப் பற்றிக்கொண்டு, இணைந்து முன்னேறுகிறோம். மனிதக்குரங்கு மனிதனாக மாறியதில் இருந்து, கடவுள், கடவுள் துகளாக மாறிய நவீன காலம் வரை, இத்தகைய கூட்டு உழைப்புதான் நமக்கு முன்னேற்றத்தைப் பரிசளித்து உள்ளது. ஆகவே, முன்னேற்றம் என்ற சொல்லின் பொருளை கல்விக்குப் பொருத்தும்போது, நாம் ஒரு விரிந்த தளத்தில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும்.

நாம் பெறும் கல்வியின் பயன், நம் அடுத்த தலைமுறையை நம்மைவிட அறிவில் மேம்பட்டவர்களாக மாற்ற வேண்டும். இதுவே முதன்மையானது. அந்த அறிவு, பரந்த மனப்பான்மைகொண்டவர்களாக, சுய மரியாதைமிக்கவர்களாக, கருணை உள்ளம் படைத்தோராக, சுயமாக முடிவு எடுக்கும் ஆற்றல் உள்ளவர்களாக, நேர்மையானவர்களாக நம் பிள்ளைகளை மாற்ற வேண்டும். இத்தகைய அற உணர்ச்சிமிக்க மனப்பாங்கு, தனியார் பள்ளிகளில் படிக்கும்போது வருகிறதா?