Published:Updated:

இது “அலுவலகத்துக்கான வாட்ஸ்அப்” - மைக்ரோசஃப்டின் புது சாட் மெஸெஞ்சர்! #Kaizala

இது “அலுவலகத்துக்கான வாட்ஸ்அப்” - மைக்ரோசஃப்டின் புது சாட் மெஸெஞ்சர்! #Kaizala
இது “அலுவலகத்துக்கான வாட்ஸ்அப்” - மைக்ரோசஃப்டின் புது சாட் மெஸெஞ்சர்! #Kaizala

இது “அலுவலகத்துக்கான வாட்ஸ்அப்” - மைக்ரோசஃப்டின் புது சாட் மெஸெஞ்சர்! #Kaizala

லகின் முக்கிய ஆய்வு நிறுவனங்களில் ஒன்றான இப்சாஸ் (Ipsos) ஒவ்வொரு ஆண்டும், இந்திய மக்களிடையே அதிகத் தாக்கத்தை ஏற்படுத்திய பிராண்ட்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.

இந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த சத்ய நாதெல்லா தலைமையேற்றபின், இந்தியச் சந்தைக்கேற்ப புராஜெக்ட் சங்கம், லிங்கெட்இன், ஸ்கைப் லைட் வெர்ஷன் போன்ற பல புதிய தயாரிப்புகளை இந்நிறுவனம் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. இந்த வரிசையில், 'இந்தியாவுக்காக உருவாக்கப்பட்டது' என்ற டேக் லைனோடு கைசாலா (Kaizala) அப்ளிகேஷன் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மராத்தியில் Kaay Zhala என்பதற்கு 'என்ன ஆச்சு' எனப் பொருள். இந்த உச்சரிப்பை மையமாக வைத்துதான் இந்த அப்ளிகேஷனுக்குப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. வடிவமைப்பிலும், பெயரிலும் கூட வாட்ஸ்அப் அப்ளிகேஷனைப் போலதான் இது உருவாக்கப்பட்டுள்ளது. சிம்பிளாகச் சொல்லவேண்டுமென்றால், அலுவலகப் பயன்பாடுகளுக்கான வாட்ஸ்அப்தான் இது! வேலைகளைக் கண்காணிக்கவும், திட்டமிடவும் உதவக்கூடிய சாட் அப்ளிகேஷனாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் டவுன்லோடு செய்யப்பட்ட அப்ளிகேஷனான வாட்ஸ்அப் போன்றே, இது வடிவமைக்கப்பட்டிருந்தாலும், அதைவிடவும் ஏராளமான வசதிகள் இதில் இருக்கின்றன. வாட்ஸ்அப் அப்ளிகேஷனைப் பொறுத்தவரை, குரூப் சாட்டில் அதிகபட்சமாக 256 பேரை மட்டுமே உறுப்பினர்களாகச் சேர்க்கமுடியும். இந்த கைசாலா ஆப்பில், உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு எவ்விதக் கட்டுப்பாடும் கிடையாது. பிசினஸ் ஆப்பான இதில், சாட் மட்டுமின்றி அலுவலகம் சார்ந்த வேலைகளுக்கே அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறது.

ஒரு நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரதிநிதிகள் வெவ்வேறு இடத்தில் இருப்பார்கள். அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து மீட்டிங் நடத்துவதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள்  இருக்கின்றன. புதிதாக அறிமுகப்படுத்த நினைக்கும் ஒரு தயாரிப்பைப்பற்றியோ, திட்டத்தைப்பற்றியோ அவர்களிடம் கருத்துக்கேட்க வேண்டுமென்றால், அது கொஞ்சம் சிரமமான காரியமாகவே இருக்கிறது. ஆனால், இந்த ஆப் மூலம் கருத்துக்கணிப்பு (Poll) அல்லது சர்வே நடத்தி, அவர்களின் கருத்தை சில நிமிடங்களில் அறிந்துகொள்ள முடியும். வேலை தொடர்பான டாக்குமென்ட்ஸ் அனைத்தையும் இதில் அனுப்ப முடியும். இப்படிப் பல வகைகளில் இந்த ஆப் நேரத்தை சிக்கனப்படுத்துகிறது.

அலுவலக வேலைக்காகப் பணியாளர் ஒருவரை வெளியூருக்கு அனுப்புவதாக வைத்துக்கொள்வோம். அவர் அந்த இடத்திற்குச் சென்றதும் இந்த அப்ளிகேஷனில், தனது இருப்பிடத்தைப் பற்றிய தகவல்களை, ஜியோ-டேக் மேப் மூலம் அனுப்பிவிடலாம். இதனால் அவர் அந்த இடத்திற்குச் சென்றதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம். இதனால், வேலையில் நடக்கும் முறைகேட்டைப் பெரிதளவில் தவிர்க்கமுடியும்.

இந்த அப்ளிகேஷன் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் போன்ற இயங்குதளங்களில் இயங்கக்கூடியது. இது மொபைல் அப்ளிகேஷனாக மட்டுமே வடிவமைக்கப்பட்டிருக்கிறது. வெப் பிரவுசர் மூலம் இதைப் பயன்படுத்தமுடியாது என்பது மட்டும் இதன் சிறிய குறை. 2ஜி நெட்வொர்க்கில் கூட இயங்குவது, வேலைகளைச் சிக்கனப்படுத்துவது, எளிதான வடிவமைப்பு, அலுவலக வேலையைத் திட்டமிடுவது போன்ற இதில் உள்ள பல்வேறு சிறப்பம்சங்கள் கவர்வதாகவே இருக்கின்றன. சிறு மற்றும் குறு தொழில் செய்வோருக்கு நிச்சயமாக இந்த ஆப் பயனுள்ளதாகவே இருக்கும்.

உத்தரப்பிரதேசத் தேர்தலின் போது, அம்மாநிலத் தேர்தல் ஆணையம், தேர்தல் தொடர்பான வேலைகளைக் கண்காணிக்க இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தியது. ஆந்திரப் பிரதேச மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மக்களிடையே கருத்துக் கேட்பதற்காகவும், நேரடியாகத் தொடர்பில் இருக்கவும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அப்ளிகேஷன் அறிமுகமாவதற்கு முன்னரே 30 அரசுத்துறைகளில் டெஸ்ட் செய்யப்பட்டது. தற்போது பணிசார்ந்த விஷயங்களுக்காக தினம்தோறும், 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் இதைப் பயன்படுத்திவருகின்றனர்.

ஃபேஸ்புக் நிறுவனம் 'வொர்க் ப்ளேஸ் (Workplace) என்ற பெயரில், ஃபேஸ்புக்கில் இருந்தபடியே பணிசார்ந்த விஷயங்களைச் செய்யக்கூடிய அப்ளிகேஷனைத் தொடர்ந்து விளம்பரப்படுத்திவருகிறது. வாட்ஸ்அப் மெஸெஞ்சரை அலுவலகப் பணிகளுக்காக சில நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இவற்றிற்கு மாற்றாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் கூடுதல் வசதிகளோடு இந்த கைசாலா அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு