##~##

ரப்பிரசாதம்... 105 வயதைக் கடந்தும் திடகாத்திரமாக வாழும் காஞ்சிபுரம் அடுத்துள்ள திம்மசமுத்திரம் தாத்தா. 20 குழந்தைகள், 104 பேரக் குழந்தைகள் என ஊரில் பாதிப்பேரை உறவினர்களாகவைத்து இருக்கும் தாத்தாவைச் சந்தித்தோம். கொளுத்தும் வெயிலில் பட்டாப்பட்டி டவுசருடன் புல் தரையைச் செதுக்கிக்கொண்டு இருந்தவர், ''கொஞ்ச நேரம் காத்திருங்க தம்பி'' என்று வீட்டுக்குள் சென்றவர், பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் சகிதமாக வெளியே வந்து ஆச்சர்யம் தந்தார்.

''எனக்குச் சொந்த ஊரே இதுதான். 1907-ல் பிறந்தேன். அப்பா விவசாயி. கல்யாணமாகி ரொம்ப நாளா எங்க அம்மாவுக்குக் குழந்தை இல்லை. சோளிங்கர் கோயில் பிராகாரத்தில் உச்சிவெயிலில் நெஞ்சைத் தரையில் தேச்சிக்கிட்டு, நாக்கால் தரையை நக்கிக்கிட்டே நகர்ற பரிகாரத்தைச் செஞ்ச பிறகு பிறந்தவன் நான். அதனால் 'வரப்பிரசாதம்’னு பேருவெச்சிருக்காங்க. தவம் இருந்து பெத்த பிள்ளைங்கிறதால பொத்திப் பொத்தி வளர்த்தாங்க. பக்கத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் வாத்தியார் வேலை பார்த்தேன்.  திடீர்னு ஒருநாள் என்னை வெளியூர் ஸ்கூலுக்கு மாத்திட்டாங்க. 'நீ வெளியூர்ப் போய்தான் சம்பாதிக்கணும்னு அவசியம் இல்லை’னு அப்பா, அம்மா சொன்னதால் வேலையை விட்டுட்டேன். அவ்வளவு செல்லம். 1940-ல் கல்யாணமாச்சு. அப்ப என் கல்யாண செலவு எவ்வளவு தெரியுமா? வெறும் 19 ரூபாதான். அடுத்தடுத்து எட்டுப் புள்ளைங்க பெத்துக்கிட்டோம். அடுத்த ஆறு வருஷத்தில் மகராசி போய் சேர்ந்துட்டா.

ஞானி போல் வாழ்!

அப்புறம் கொஞ்சநாள் போலீஸ் வேலை, பிறகு ரயில்வே வேலைனு எட்டு வருஷத்தை ஓட்டிட்டேன். பசங்க எதிர்காலத்துக்காக, லூர்துமேரியை இரண்டாவதா கல்யாணம் பண்ணிக்கிட்டேன். 'மனைவி அமைவது எல்லாம் இறைவன் கொடுத்த வரம்’கறது என்னைப் பொறுத்தவரை உண்மை. எல்லாப் பிள்ளைகளையும் வித்தியாசம் இல்லாம வளர்த்து ஆளாக்கினா. இப்போ பார்வை போன அவளை நான்தான் கண்ணா இருந்து பாத்துக்குறேன்'' என்றவரை இடைமறிக்கும் எட்டாவது மருமகள் கண்ணகி, ''வீட்டுக்கு வந்தா கொஞ்ச நேரம் சும்மா இருக்க மாட்டார். வீடு, கொல்லையைச் சுத்தம் பண்றதுனு வேலையை இழுத்துப்போட்டுக்கிட்டு செய்வார்'' என்கிறார்.

ஞானி போல் வாழ்!

ஆரோக்கிய ரகசியம் கேட்டால், கடகடவென சிரிக்கும் வரப்பிரசாதம், ''100 வயசைக் கடந்து வாழ்வது பெரிய அதிசயம் இல்லை தம்பி. வாழ்க்கையை ஞானி மாதிரி அணுகினால் போதும். துன்பத்துக்குத் துயரப்படக் கூடாது. இன்பத்தில் ஆடக் கூடாது. இதில்தான் வாழ்க்கையின் சூட்சுமம் இருக்கு. இத்தனை வருஷத்தில் நடந்த எத்தனையோ நல்ல விஷயம், கெட்ட விஷயங்களைப் பார்த்தாச்சு. ஆனால், எதையும் ரொம்ப நேரம் மனசில் வெச்சுக்க மாட்டேன்.  எல்லாம் கடவுள் செயல்னு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் இருப்பேன்.

முடிஞ்சா நாலு பேருக்கு நல்லது செய்யுங்க. அவங்க சிரிப்பும், உங்களுக்குக் கிடைக்கிற திருப்தியும் ரொம்ப நாள் வாழ வைக்கும்'' என்று தத்துவம் உதிர்க்கிறார்.

''நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து தினமும் காலையில் கொஞ்சம் இஞ்சியைத் துண்டு பண்ணி வாயில் அடக்கிக்குவேன். ஆனால், உற்சாகத்துக்குத்தானே தவிர, ஆயுளுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை. மத்தபடி எல்லாமே சாப்பிடுவேன். கொஞ்ச நாள் முன்னத்தான் இந்த ரெண்டு பல்லும் விழுந்துச்சு'' என்பவர், 'ஆ’வென வாயைத் திறந்து காட்டுகிறார். அதிகாலை 4 மணிக்கு எழுந்து ஒரு மணி நேர நடைப்பயிற்சி, பிறகு பைபிள் படிப்பது,  காலையில் ரெண்டு இட்லி, வீட்டைச் சுத்தப்படுத்துவது, பேரன் பேத்திகளுடன் விளையாட்டு, மதிய உணவுக்குப் பிறகு இரண்டு மணி நேர தூக்கம், 4 மணிக்கு எழுந்து கவலையுடன் வருபவர்களுக்காக பிரார்த்தனை செய்வது, மீண்டும் பேரக் குழந்தைகளுடன் விளையாட்டு என தினசரி பொழுதைக் கழிக்கிறார் வரப்பிரசாதம்.

''இந்த வயசிலும் தன்னோட வேலையை தானே செய்யணும்னு நினைப்பார். தன் துணிகளை அவரே துவைப்பார். சமயத்தில்  திண்ணையில் உட்கார்ந்துக்கிட்டு என் வொய்ஃபுக்கிட்ட தண்ணி கேட்டால், இவர் எழுந்திருச்சுப் போய் தண்ணிகொண்டு வந்து கொடுப்பார். இன்னமும் நான்வெஜ் நல்லா சாப்பிடுவார். போன வருஷம் ஊர்த் திருவிழாவில் வயதானவங்களுக்கான ஓட்டப் பந்தயப் போட்டி நடத்துனாங்க. 60 வயசில் இருந்து 80 வயசு வரை உள்ளவங்க கலந்துக்கிட்டாங்க. அதில் இவர் கலந்துகிட்டு முதல் பரிசு வாங்கினார்'' என்று அப்பாவின் பெருமை பேசும் மகன் தாஸ் தொடர்ந்தார்.

''போன வருஷம் 10-வது வகுப்பு பரீட்சையில் என் பையன் ஃபெயிலாகிட்டான். திட்டினேன். கோபப்பட்டு விஷம் குடிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டான். மகனோட மனசைப் புரிஞசுக்காததால் என் ஒரே பையனை பறிகொடுத்துட்டு நிக்கிறேன். ஆனால், எங்கப்பா எந்த விஷயத்துக்காகவும் எங்களை திட்டினதே இல்லை. நானும் அப்படி நடந்திருந்தேன்னா இந்நேரம் என் பையனும் இந்த போட்டோவில் நின்னுட்டு  இருந்து இருப்பான்!'' என்று கண்கலங்கிய தாஸைத் தேற்றும் வரப்பிரசாதம், ''நான் 120 வயதுவரை இருப்பேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. இருக்குற வரை ஏதாவது நல்லது செஞ்சிட்டு போவோமே தம்பி'' என்று சிரிக்கிறார்.  வரப்பிரசாதம் தாத்தாவுக்கு  பேரன்-பேத்திகள் வைத்துள்ள செல்லப் பெயர்... ஸ்ட்ராங் மேன்!

- எஸ்.கிருபாகரன், படங்கள்: வீ.ஆனந்தஜோதி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு