##~##

'தெய்வத் திருமகள்’ பட இயக்குநர் விஜய், சென்னையில் தான் வசிக்கும் தேனாம்பேட்டை பகுதி பற்றி மனம் திறக்கிறார்.

 ''காரைக்குடி சொக்கநாதபுரம் கிராமம்தான் எங்கள் பூர்வீகம். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னை தேனாம்பேட்டைதான். இன்னிக்கு சென்னையில் பக்கத்து ஃப்ளாட்ல யார் இருக்குறாங்கன்னு தெரியாம இருக்குறவங்க நிறையப் பேர் இருக்காங்க.  இது கடந்த 10, 15 வருஷத்தில் வந்த மாற்றம். அப்போ எல்லாரும் தாயா, புள்ளையா பழகுவாங்க. ஏனோ அந்த அந்நியோன்யம் இப்ப குறைஞ்சுப்  போயிடுச்சு.

அப்போ சென்னையில் மவுன்ட் ரோடும், தேனாம்பேட்டையும்தான் முக்கியமான இடங்கள். தேனாம்பேட்டை, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டைனு எப்போதும் ரவுண்ட்ஸ்லேயே இருப்போம். கமல் சார் ஆபீஸ், மணிரத்னம் சார் வீடுனு ஜாம்பவான்களின் வீடுகள் இங்கேதான் இருக்கு.

என் ஊர்!

எல்டாம்ஸ் ஏரியாவில் மௌபரீஸ் மெட்ரிக் குலேஷன் ஸ்கூலில்தான் படிச்சேன். கேளிக்கைகள், சந்தோஷங்கள் எல்லாம் கிளாஸ் ரூம்லேயே முடிஞ்சுடும். ஏன்னா ஸ்கூல் முடிஞ்சுதும் டியூஷன், பிறகு ஹோம்வொர்க்னு   படிப்பிலேயே மூழ்கிடுவோம்.

என் ஊர்!

நாங்க இருந்த திருவள்ளுவர் சாலையை ஒரு குட்டி இந்தியானே சொல்லலாம். ஏன்னா எல்லாவித மதங்களைச் சேர்ந்த மக்கள் அங்கே ஒற்றுமையா இருந்தாங்க. திருவள்ளுவர் சாலையில் இருந்தவரைக்கும் வாடகை வீட்லதான் குடி இருந்தோம். அப்ப எங்க வீட்டுக்கு முன்னால்தான் பஸ் யூ டேர்ன் அடிச்சு போகும். ஃபுட்போர்டு அடிச்சு பஸ் திரும்பும்போது கரெக்ட்டா எங்க வீட்டு வாசல்ல குதிச்சுடுவேன். ஆனால், இப்ப அந்த ரூட்ல பஸ்ஸே வர்றது இல்லை.

ஸ்கூல் முடியுற டைம்ல காமராஜர் தெருவில் சொந்த வீட்டுக்குக் குடி வந்துட்டோம். அப்ப கிரிக்கெட்தான் எங்களுக்கு உலகம்.  தினமும் பசி, தூக்கம் மறந்து விளையாடுவோம். அதைத் தவிர அப்ப எங்களுக்கு வேற பொழுதுபோக்கே கிடையாது. அப்பத்தான் மெள்ள மெள்ள டி.வி. சென்னையில் புழக்கத்துக்கு வந்த சமயம். வெள்ளிக்கிழமை 'ஒளியும் ஒலியும்’, ஞாயிற்றுக்கிழமை டி.டி-யில் சினிமானு காத்து இருந்து டி.வி. பார்த்த கலாட்டா காலங்கள் நிறைய ஞாபகத்தில் இருக்கு.

பிறகு, ராதாகிருஷ்ணன் தெருவுக்குக் குடி வந்தோம். அந்தத் தெருவில் எல்லா வீடுகளுக்கும் நான் நல்ல அறிமுகம். அவ்வளவு பாசமானு நினைச்சுடாதீங்க. அவ்வளவு புகார்கள். கிரிக்கெட் விளையாடுறேனு பல வீட்டுக் கண்ணாடியை உடைச்சி இருக்கேன்.  

எங்க ஏரியாவில் பிள்ளையார் சதுர்த்திக்கு கச்சேரி பண்ண வர்ற  சங்கர் - கணேஷ், எல்.ஆர்.ஈஸ்வரி போன்ற பிரபலங்களைப் பார்த்து வியந்து இருக்கேன். 1987-ல் தொடங்கி 97 வரையான இந்த 10 ஆண்டுகாலம்தான் என் மனதுக்கு மிகவும் நெருக்கமானவை.

திருவள்ளுவர் சாலையில காந்தி என்பவர் சலூன் கடை வெச்சு இருந்தார். சின்ன வயதில் அவரிடம்தான் முடி வெட்டிக்கொள்வோம். அவருக்குக் காது கேட்காதுங்கிறதால் அவரிடம் நிறையக் குறும்புகள் செய்வோம். பிறகு, அண்ணன் கடை. 10 பைசா கொடுத்தால் ஒரு சீட் தருவார். அதைச் சுரண்டினால் அதில் என்ன பொருளின் பெயர் இருக்கிறதோ அதைத் தருவார். சமீபத்தில் நாங்கள் குடி இருந்த ஏரியாக்களுக்குப் போய் இருந்தேன். நான் பார்த்து வியந்த சாலைகள், வீடுகள், மைதானங்கள் அனைத்துமே சிறியதாக இருப்பது போன்ற ஓர் உணர்வு. மனிதன் வளர வளர, ஊரும் மாறிக்கொண்டே இருக்கிறது. என் ஏரியாவின் மாற்றத்துக்கு நானே மௌன சாட்சி!''

என் ஊர்!

- ந.வினோத்குமார்,  படங்கள்: பொன்.காசிராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு