##~## |
''தேடலுக்கு வயது இல்லை. வயதைக் கடந்தும் கல்வியைத் தேடுகிறேன்.' - சிம்பிளாகச் சிரிக்கிறார் கிருஷ்ணமாச்சாரி. சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் தொடர்பியல் துறையில் எம்.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வரும் 76 வயது மாணவர்.
''என்னோட சொந்த ஊர் திருச்சி. அங்கு புனித ஜோசப் கல்லூரியில் கணிதவியலில் முதுகலை பட்டம் பெற்றேன். பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்தில், நவீன கணிதவியல் துறையில் புள்ளியியலில் பட்டம் பெற்றேன். மைசூர் பல்கலைக்கழகத்தில் சம்ஸ்கிருதம் பயின்றேன். பிறகு சம்ஸ்கிருதத்தில் சென்னைப் பல்கலையில் டாக்டர் பட்டமும் பெற்றேன். இது தவிர, நான் டி.வி.எஸ். லூகாஸில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவன். தற்போது அந்த நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளேன்.

நான் நிறைய கற்றுவிட்டதாக நினைக்கவில்லை. 'எதையோ தவறவிட்டுக்கொண்டு இருக்கிறேன்’ என்ற எண்ணமே என்னைத் தொடர்ந்து கல்வி கற்க வைக்கிறது. இந்த கோர்ஸ் முடிந்ததும் எனது நீண்ட நாள் கனவான 'கேம்பிரிட்ஜ்’ அல்லது 'ஹார்வேர்ட்’ பல்கலைக்கழகத்தில் படிக்கணும்'' என்கிற கிருஷ்ணமாச்சாரி, புனித ஜோசப் கல்லூரியில் நம் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வகுப்புத் தோழர்.

''இன்றைய இளைஞர்களின் தொழில்நுட்ப அறிவைக் கண்டு நான் மிரள்கிறேன். நான் தொடர்ந்து கற்க இதுவும் ஒரு காரணம். அவர்களுக்கு மத்தியில் இருப்பதால் எனக்கு வயதாகிக்கொண்டு இருக்கிறது என்ற நினைப்பே வருவது இல்லை. படிப்பில் மற்றவர்களுடன் போட்டியிடுகிறேன். வகுப்புக்கு முதல் மாணவனாக வந்துவிடுகிறேன்'' என்று சிரிக்கும் இவரின் மற்றொரு நிறைவேறாத ஆசை, இந்திய ராணுவத்தில் சேர்வது.
''வண்ணங்களை அறியும் குறைபாடு உள்ளதால் ராணுவத்தில் சேரும் எனது ஆசை கனவானது. 10-ம் வகுப்புவரை தமிழ் வழியில்தான் கல்வி. அதன் பிறகே ஆங்கிலம் அறிமுகமானது. இன்று எனது ஆங்கில உச்சரிப்பைக் கேட்கும் பலர், 'யாரிடம் ஆங்கிலம் கற்றீர்கள்?’ என்று ஆச்சர்யமாகக் கேட்கின்றனர். 'பயிற்சி, முயற்சி இருந்தால் எதுவும் வசப்படும்’ என்பதற்கு நானே ஓர் உதாரணம். அகமதாப£த் 'இந்தியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் மேனேஜ்மென்ட்’டில் பணியாற்றும்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தையான விக்ரம் சாராபாயுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அவை வாழ்நாளில் மறக்க முடியாத நாட்கள். இந்த அனுபவங்களை என் வகுப்பு மாணவர்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவர்களும் என்னை நண்பனாகவே நடத்துகின்றனர்.

சமீபத்தில் அமெரிக்கா சென்று அங்குள்ள முக்கியமான நாளிதழான 'சிகாகோ டிரைபியூன்’ அலுவலகத்தைப் பார்வையிட்டேன். அங்கு பணிபுரியும் எழுத்தாளர் 'ரிக் கோகன்’-ஐ சந்தித்தேன். 'இந்த வயதில் ஏன் இப்படி ஒரு விஷப் பரீட்சை?’ என்றார். 'சமூகத்தில் மிகப் பெரும் மாற்றங்கள் நிகழ்வதற்கு பத்திரிகைகளே காரணமாக இருக்கின்றன. இதழியல் படிக்க இதுவே காரணம்’ என்றேன். நான் உயிரோடு இருக்கும்வரை ஒரு மாணவனாகவே இருக்க விரும்புகிறேன்!' என்றபடி வகுப்பறைக்குள் நுழைகிறார் கிருஷ்ணமாச்சாரி!
பா.பற்குணன், படங்கள்: பா.காயத்ரி அகல்யா