##~##

ருந்ததியர் சமூகத்தின் வலிகளைப் பதிவுசெய்த 'பலி’, 'பிறகொரு இரவு’ சிறுகதைகள் மூலம் தமிழ் இலக்கியவாதிகள் மத்தியில் அறியப்பட்டவர், எழுத்தாளர் தேவிபாரதி. காலச்சுவடு இதழின் பொறுப்பாசிரியர். தனது சொந்த ஊரான ஈரோடு மாவட்டம், புதுவெங்கரையாம்பாளையம் பற்றி கதை பேசுகிறார் தேவிபாரதி...

 ''ஈரோடு மாவட்டத்தில் நத்தக்காடையூர் - முத்தூருக்கு இடையில் இருக்கிற ஊர்தான் புதுவெங்கரையாம்பாளையம். நொய்யல் ஆற்றின் கரையில் இருக்கும் ஊர். இன்றுவரை பெரிய அளவில் பேருந்து வசதி இல்லாத குக்கிராமம். எங்க ஊரைப் பற்றி சுருக்கமா சொல்லணும்னா... அது வாழ்ந்து கெட்ட ஊர்!  

என் ஊர்!

முன்பெல்லாம் 'நொய்யல்’ங்கிறது எங்கள் மக்களின் தண்ணீர்த் தாய். சுத்தி இருக்குற விவசாய பூமி எல்லாம் நொய்யல் பாசனத்தில் செழிப்பா இருக்கும். அன்னிக்கு எங்க மக்கள்கிட்ட சந்தோஷத்தைத் தவிர வேற எதையுமே பார்க்க முடியாது. பள்ளிக்கூடம் போகும் நேரம் தவிர்த்து எங்க பொழுதுபோக்கே நொய்யல் ஆறுதான். நொய்யல் ஆற்றின் ஒரு பகுதியில் அடர்த்தியான காட்டுப் பகுதியும் மறுகரையில் செழித்து வளர்ந்த விவசாய நிலங்களுமாகக் காட்சி தரும்.

என் ஊர்!

நொய்யல் ஆற்றில் வெள்ளம் வந்தால் பாறைகளில் தண்ணீர் மோதும் சத்தம் சுற்று வட்டாரக் கிராமங்களுக்கும் கேட்கும். என் தாத்தா விவசாயமும் பார்த்துக்கிட்டு ஆசிரியர் வேலையும் பார்த்தார். அவர் ஜோதிடரும்கூட. பத்தாயிரம் பேருக்கு மேல் அவர் ஜாதகம் எழுதி இருப்பார். என் அப்பா ராணுவ வீரர். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் படை யிடம் இந்திய ராணுவ வீரர்கள் கைதாகினர். அதில் என் அப்பாவும் ஒருவர். அவருக்குக் கதைப் புத்தகங்கள் படிப்பதில் அளவற்ற ஆர்வம்.

நான் ஆறாம் வகுப்புப் படிக்கும்போது ஜெயகாந்தனுடைய கதைகளை படிக்க ஆரம்பிச்சேன். அந்தத் தாக்கம்தான் என்னை ஓர் எழுத்தாளனாக உருவாக்கி இருக்கு. என்னைப் பொறுத்தவரை ஒரு எழுத்தாளன் அவனுடைய வாழ்க்கையில் பார்த்த, உணர்ந்த, யதார்த்த நிகழ்வுகளை கதை ஆக்கினாலே வாழ்நாள் முழுதும் எழுதிக்கிட்டே இருக்கலாம். என் கதைகளும் அப்படித்தான். நான் கண்ட வாழ்க்கையைத்தான் எழுத்தாக்கி வருகிறேன்.

எங்க ஊரில் தேவநாத்தா கோயிலும் பொட்டுச்சாமி கோயிலும் ரொம்பப் பிரசித்தம். ரெண்டு கோயிலும் நொய்யல் ஆற்றங்கரையில் இருக்குது. அந்தக் கோயில் திருவிழா எப்படா வரும்னு காத்து இருப்போம். விழா வந்துட்டா கிடா வெட்டி ஊரே ஆத்தங்கரையில் உட்கார்ந்து சாப்பிடும். அப்ப உடுக்கை அடிப் பாட்டுக்காரர்கள் வருவாங்க. அந்த 10 நாட்களும் நல்லதங்காள், பொன்னர் - சங்கர் கதைகளை உடுக்கை அடிச்சுக்கிட்டே பாடுவாங்க. அதைக் கேட்கக் கேட்க மனக் கண்ணில் காட்சிகள் விரியும். கற்பனை பெருகும். எங்கோ வேறு ஓர் உலகத்துக்குப் போனது மாதிரி இருக்கும்.

இப்படி நொய்யலைச் சுத்திதான் எங்க வாழ்க்கை இருந்தது. ஆனா, இன்னிக்கு எங்க நொய்யல் செத்துப் போச்சு. எங்களுக்கு வரப்பிரசாதமாக இருந்த நொய்யலை இன்னிக்கு வெறுத்து ஒதுக்க வேண்டிய சூழல். பக்கத்தில் போனாலே துர்நாற்றம் அடிக்குது. நான் நொய்யலில் கால் நனைச்சு எட்டு வருஷமாச்சு. விவசாய பூமி எல்லாம் பொட்டல் காடா மாறிடுச்சு. அதனால்தான் சொன்னேன், எங்க ஊர் வாழ்ந்து கெட்ட ஊர்னு!

என் ஊர்!

நொய்யலைப் பற்றியும் நொய்யல் கரை மக்களின் நாகரிகத்தையும் வைத்து 'நொய்யல்’னு நாவலை 10 வருஷமா எழுதிட்டு இருக்கேன். இன்னும் முடிக்கலை. ஆனாலும், என் ஊர் என்னுடையது இல்லைனு ஆகிடுமா என்ன? இன்னிக்கும் மாசம் ஒருமுறையாவது வீட்டுக்கு வந்துடுவேன். சோகத்திலும் ஒரு சுகம் இருக்கத்தானே செய்யும்!''

- சந்திப்பு, படங்கள்: கி.ச.திலீபன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு