##~##

ண்டி வேடிக்கை - சேலத்தில் தீபாவளி வாண வேடிக்கையை விட கலர்ஃபுல் திருவிழா இது. இதிகாச நாயகர்கள் மற்றும் கடவுளர்கள் வேஷம் கட்டி, பிரமாண்டமான வாகனங்களில் வலம் வரும் நிகழ்ச்சிதான் வண்டி வேடிக்கை. சேலம் மக்களின் கலாசாரத்துடன் பின்னிப் பிணைந்த இந்த விழா இல்லாமல் ஆடி மாதம் நிறைவு அடையாது!

 கோட்டை மாரியம்மன் பண்டிகையை முன்னிட்டு நடக்கும் இந்த விழாவுக்கு வேஷம் கட்ட, பல லட்சங்களை வாரி இறைக்கிறார்கள். சிறப்பாக வேஷம் கட்டி வருபவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. இதைக் காண வெளிநாடுகளில் இருந்தும் ஆட்கள் குவிகிறார்கள். இவர்களுக்குப் பல ஆண்டுகளாக மேக்-அப் போடும் கலைஞர் ஹரிபிரசாத் ராவ், சென்னையைச் சேர்ந்தவர். ஆண்டுதோறும் ஆஜராகிவிடும் அவரிடம் பேசினோம். ''35 வருஷமா வேஷம் கட்டுறவங்களுக்கு மேக்-அப் போட்டுவிடுறேன். நான் மேக்-அப் போட்டுவிட்ட அம்பலவாண சுவாமி வண்டி வேடிக்கை நண்பர்கள் குழுதான், கடந்த மூன்று வருஷமா முதல் பரிசு வாங்கி இருக்கு. இந்த வருஷம் மகாபாரதத்தில் வரும் அபிமன்யூ - வத்சலாதேவியின் கந்தர்வ திருமண நிகழ்வு. இதில் அபிமன்யூ, வத்சலாதேவி, கிருஷ்ணன், கடோத்கஜன் போன்றவர்களின் வேஷங்களைப் போட்டு இருக்கேன். சினிமாத் துறையினர் பயன்படுத்தும் காஸ்ட்லியான மேக்-அப் பவுடரைத்தான் இங்கேயும் பயன்படுத்துறோம். ஒவ்வொருவர் தோலுக்குத் தகுந்த மாதிரி பவுடர் நம்பர் இருக்கு. அதற்குத் தகுந்த மாதிரிதான் மேக்-அப் பவுடரைப் பயன்படுத்தணும். இந்தத் தொழிலில் நிரந்தர வருமானம் கிடைக்காது. ஆனா, இந்தக் காலத்து இளைஞர்களுக்குப் புராண காலத்து கடவுள் வேஷம் போட்டு பார்க்கிற மகிழ்ச்சி அலாதியானது!'' என்றார்.  

நாங்க இதிகாச நாயகர்கள்!

அபிமன்யூவாகவே மாறி இருந்த நிர்மல்குமார்... பி.பி.ஏ. முடித்து மார்க்கெட்டிங் பணியில் இருப்பவர். ''எனக்கு இது ரெண்டாவது வருஷம்.  போன வருஷம் மண்டோதரியாக பெண் வேஷம் போட்டேன். எங்க வண்டியில் நான்தான் ஹீரோ. இப்ப என் நண்பர்கள் பார்த்தாக்கூட என்னை யாருனு கண்டுபிடிக்க முடியாது. என்னையும் பார்க்க ஆயிரக்கணக்கான பேர் வந்து இருக்காங்கனு நினைக்கிறப்போ பரவசமா இருக்கு!'' என்கிறார்

வத்சலாதேவி வேடம் பூண்ட மதனவேல் மெடிக்கல் ரெப். ''அஞ்சு வருஷமா வேஷம் கட்டுறேன். எங்க அத்தை பொண்ணு மேல எனக்கு லவ். சில வருஷம் முன்னாடி கிருஷ்ணர் வேஷத்தில் இருக்கும்போது, வேடிக்கைப் பார்த்துட்டு இருந்த என் அத்தை பொண்ணுகிட்ட வண்டியில் இருந்து குதிச்சுப்போய் என் லவ்வைச் சொல்லிட்டேன். என்னை அடையாளம் தெரியாத அவங்க அலறி அடிச்சுட்டு ஓடிட்டாங்க. அப்புறம் விவரம் தெரிஞ்சு ரொம்பவே வெட்கப்பட்டாங்க. அப்பவே எங்களுக்குள்ள லவ் ஒர்க்-அவுட் ஆகிடுச்சு. சமீபத்தில்தான் நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம்!'' என்று காதல் ஃப்ளாஷ்பேக் சொன்னார் மதனவேல்!

அம்பலவாண சுவாமி வண்டி வேடிக்கைக் குழு தலைவர், ஓபுளி கிருஷ்ணன், ''300 வருஷத்துக்கு மேல இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடக்குதுனு சொல்றாங்க. குகை, செவ்வாய்ப்பேட்டை, தாதகாப்பட்டி உள்ளிட்ட இடங்களில் இருந்து இதற்காக இருக்கும் பிரபலமான குழுக்கள், லட்சக்கணக்கில் செலவு செஞ்சு பிரமாண்டமா அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் வேஷம் கட்டிட்டு வருவாங்க. குறிப்பா, குகை ஆண்டிசெட்டி தெருவில் இருந்து 106-வது வருஷமா வண்டி வேடிக்கைக் கட்டி வர்றாங்க.  

  பொதுவா வேஷம் கட்டுற ஆளுங்களை ஒரு மாசத்துக்கு முன்னாடியே தேர்வு செஞ்சிடுவோம். வேஷம் கட்டுறதுன்னா சும்மா இல்லை. ஒரு மாசம் அவங்க அசைவம், மது சாப்பிடாம, தினமும் சாமிக்கு ரெண்டு வேளை பூஜை போட்டு விரதம் இருக்கணும். அப்படி சுத்தபத்தமா இல்லாம வேஷம் கட்டுனா அவங்களுக்கு விபரீதம் ஆகிடும்!'' என்கிறார் பயபக்தியுடன்.

- வீ.கே.ரமேஷ், படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு