Published:Updated:

நலம் 360’ - 8

மருத்துவர் கு.சிவராமன், ஓவியம்: ஹாசிப்கான்

நலம் 360’  - 8

ல்வாழ்வை நம்முள் பத்திரப்படுத்த குலேபகாவலி மூலிகை, நானோ துகள் மருந்து, எட்டுக் கை அம்மன் ஆசி... இவை மட்டும் போதாது. நம்மைக் கட்டுப்படுத்தும் ஐந்து முதலாளிகளும் (மண், நீர், தீ, காற்று, ஆகாயம்) நன்றாக இருக்க வேண்டும். அதை மனதில் வைத்துக்கொண்டு நமது ஒவ்வொரு செயல்பாட்டையும் அமைத்துக்கொள்வதே, இயற்கைக்கு நாம் செய்யும் மரியாதை. இயற்கையைச் சீண்டுவது எப்படி நமது சுற்றுச்சூழலைச் சிதைக்கிறதோ, அதேபோல நம் உடலின் உயிர்ச்சூழல் கடிகாரத்தைச் சிதைப்பதும் பல பக்கவிளைவுகளை உண்டாக்கும். அதில் முக்கியமானது, வயிற்று வலி!

வயிற்று வலியைப்போல் மண்டையைப் பிராண்டும் விஷயம் வேறு இல்லை. வலது விலா எலும்புகளுக்குக் கீழே அவ்வப்போது வலி, சில நேரம் எதுக்களிப்பு, கொஞ்சம் அஜீரணம்... என இருக்கும்போது அது 'வயிற்றுப் புண்ணா, குடல் புண்ணா, இல்லை வேறு ஏதேனுமா?’ என, நம்மில் பலர் குழம்புவோம். 'அலுவலகத்தில் போன வாரம் வரை ஆரோக்கியமாக இருந்த சீதாராமன், 'நெஞ்சு கரிக்குது’னு சொல்லிக்கிட்டே சரிஞ்சு விழுந்து, மருத்துவமனைக்குப் போகும் வழியிலேயே செத்துப்போனானே...’ என்று நினைக்கும்போதே, நெஞ்சு படபடத்து முகம், உச்சந்தலை எல்லாம் வியர்த்து, மருத்துவமனைக்கு ஓடும் இளைஞர்கள் இப்போது அதிகம்.

நலம் 360’  - 8

அங்கே, 'எவ்வளவு நாளா இப்படி இருக்கு? நெஞ்சு எலும்புக்குக் கீழா, மார்பின் மையப்பகுதியிலா... எங்கே எரிச்சல் இருக்கு? சாப்பிட நேரமாகும்போது, பசி வரும்போது... வலிக்குதா, சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழிச்சு வலிக்குதா?’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, வேலை, சாப்பாட்டுப் பழக்கம், இன்ஷூரன்ஸ் சங்கதிகள் பற்றி எல்லாம் தெரிந்துகொண்டு, 'இது வயிற்றுப்புண் மாதிரி தெரியலை. பித்தப்பை கல்லா இருக்குமோ... எதுக்கும் ஸ்கேன் எடுத்துப் பார்த்துடலாமே!’ என்பார்கள். 'ஸ்கேனா..? இது கல்லுக்கா, 'கல்லா’வுக்கா?’ என நம்மில் பலர் துப்பறியும் சாம்பு ஆவோம்.

முன்பெல்லாம், 'இது பித்தப்பை வீக்கமா இருக்குமோ?’ எனச் சந்தேகம் வந்தவுடன், டாக்டர் முதலில் நமது வயிற்றைக் கைகளால் அழுத்தி பரிசோதனை செய்வார். நோயாளியின் வலதுபக்க விலா எலும்புகள் முடியும் இடத்துக்குக் கீழாக (அங்கேதான் ஈரல், பித்தப்பை எல்லாம் இருக்கின்றன) மருத்துவர் தனது விரல்களை அழுத்தமாக வைத்துவிட்டு, நோயாளியை மூச்சை நன்கு இழுத்து நிறுத்தச் சொல்வார். அப்போது பித்தப்பை வீக்கத்துடன் இருந்தால், அது முன்வந்து... கருவில் இருக்கும் குழந்தையின் தலைப்பகுதி தாயின் வயிற்றில் உணரப்படுவது போன்ற மெல்லிய உணர்வை மருத்துவர் விரலுக்குத் தரும். ஜான் பெஞ்சமின் மர்ஃபி என்கிற அமெரிக்க விஞ்ஞானி கண்டறிந்த இந்தச் சோதனைக்கு 'மர்ஃபி சோதனை’ என்று பெயர்.

மருத்துவப் படிப்பில் மர்ஃபி சோதனை செய்யத் தெரியாவிட்டால், கண்டிப்பாக பாஸ் கிடையாது. ஆனால், நாம் மர்ஃபி ரேடியோவை ஓரங்கட்டியதுபோல, நம் மருத்துவர்களில் பலர் மர்ஃபி சோதனையையும் ஓரங்கட்டிவிட்டார்கள். 'அதான் ஸ்கேனும் சி.டி-யும் இன்னும் துல்லியமாச் சொல்லுதே...’ என்ற நினைப்பு, கூட்டம், நேரமின்மை எனப் பல காரணங்கள்.

ஆனால், பித்தக்கல்லுக்கான காரணம் என்ன என்று இன்னும் மிகச் சரியாக, துல்லியமாக நவீன மருத்துவத்தால் நிர்ணயிக்க முடியவில்லை. எதைத் தின்றால், எந்த என்சைமை, எவ்வளவு சுரந்து, ஜீரணிக்க வேண்டும் என்ற புரோகிராம், பல மில்லியன் ஆண்டுகளாக நம் மரபில் பொதிந்துவைத்திருக்கிறது நம் ஜீரண மண்டலம். ஆனால், ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட் எனப் புதுபுதுசாகப் பல பூச்சாண்டிகள் சாப்பாடு மூலம் வருவதால், அந்த மரபு புரோகிராம் குழம்புகிறது. தவிர, ஜீரோ சைஸ் இடுப்பு வேண்டி சாப்பிடாமல் அடம்பிடித்து மெலிவது, நார்ச்சத்து, மேக்னீசியம், கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஃபோலேட் எனும் உயிர்ச்சத்துக்கள் ஆகிய முக்கியமான சத்துக்களை உணவில் எடுத்துக்கொள்ளாதது, கொழுப்பைக் கூடுதலாகவும், நார்ச்சத்தைக் குறைவாகவும் சாப்பிடுவது, எல்லா சாமிக்கும் ஏதாச்சும் சுயநல அப்ளிகேஷன் போட்டு வாரத்தில் நான்கு நாட்கள் விரதம் இருப்பது, மெலடோனின் சுரப்புக் குறைவு... எனப் பல காரணங்களை, பித்தப்பை அழற்சிக்கும் கல்லுக்கும் காரணங்களாகக் கூறுகிறது நவீன மருத்துவம்.

நலம் 360’  - 8

'நோய் முதல் நாடி’ பார்ப்பதுதான் வைத்தியம் என்பதில் வள்ளுவனுக்கு மட்டுமல்ல... யூகி முனிக்கும் ஹாரிசனுக்கும்கூட வேறுபட்ட கருத்துகள் கிடையாது. 'தொடர்வாத பந்தமிலாது குன்மம் வராது’ என வயிற்றுப்புண்ணுக்கு வாதத்தையும், விலாவுக்குக் கீழ் வலி தரும் இந்தப் பித்தக்கல் பிரச்னைக்குப் பித்தத்தையும் காரணமாகச் சொல்கிறது தமிழ் மருத்துவம். முதலில் மலச்சிக்கலை நீக்கி, உடலில் வாதத்தைக் குறையுங்கள். எண்ணெய் பலகாரங்களை அதிகம் எடுக்க வேண்டாம் என்பதோடு, பட்டினி முதலிய பித்தம் சேர்க்கும் விஷயங்களையும் தவிர்க்கவும் என்பதே நம் தமிழ் மருத்துவம் சொல்லும் பிரதானமான பரிந்துரைகள். கொஞ்சம் உற்றுப் பார்த்தால், யூகி முனியும் ஹாரிசனும் ஒரே புள்ளியில் நிற்பது புரியும்.

பித்தக்கல்லில் வகைகள் உண்டு. 'நிறையக் கொழுப்பு +  கொஞ்சம் உப்பு’ அல்லது 'கொஞ்சம் கொழுப்பு + நிறைய உப்பு’ எனக் கல் ஆக்கம் இருக்கக்கூடும். சிறுநீரகக் கல்லையும் பித்தக்கல்லையும் நிறையப் பேர் குழப்பிக்கொள்வது உண்டு. பித்தப்பைக்குள் இருக்கும் இந்தக் கல்லை, சிறுநீரகக்கல்போல கரைப்பது மிகக் கடினம். பித்தப்பைக்கல்லை மட்டும் உடைத்து துகளாகும் ஒலிக்கதிர் சிகிச்சை பெரும்பாலும் நடைமுறையில் இல்லை. மொத்தமாக பித்தப்பையையே எடுப்பதுதான் அதிகம் நடக்கிறது. எந்தப் பிரச்னையும் கொடுக்காமல் 1 செ.மீ-க்குக் குறைவாக 'தேமே’ என ஓரமாக இருக்கும் கல்லை அகற்றுகிறேன் என்று பித்தப்பையையே அகற்றுவது, பல நேரங்களில் அவசியம் இல்லாதது. 'அந்தப் பக்கமா குடல் ஆபரேஷன் பண்றோமே... கல் உள்ள இந்தப் பையையும் சேர்த்து எடுத்திடலாமே!’ என்பதில் எனக்கு உடன்பாடும் இல்லை. அதே சமயம், கல் கொஞ்சம் பெரிதாக இருக்கும்போதோ, கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயாளியாக இருக்கும்போதோ, பித்தப்பை நாளப் பகுதியில் (DUCT) கல் சிக்கி அடைத்திருக்கும்போதோ, குடும்பத்தில் புற்றின் ஆதிக்கம் அதிகம் இருக்கும்போதோ அல்லது ஈரல் நொதிகள் பெரிதாக மாற்றம் பெற்றிருக்கும்போதோ, குடும்ப மருத்துவர் ஆலோசனைக்குப் பின்னர் கல்லை அகற்றுவதில் தவறும் இல்லை. 'அய்யோ... பித்தப்பையை எடுத்துட்டா, பித்தம் சுரக்காமல் போய்விடுமே!’ என்ற அச்சமும் தேவை இல்லை. ஏனென்றால், பித்தப்பை என்பது, பித்தம் சுரக்கும் பை அல்ல; ஈரல் சுரக்கும் பித்தத்தைச் சேகரித்து வைத்து, செரிமானத்துக்குத் தேவையானபோது குடலுக்குத் தள்ளிவிடும் அமைப்பு.

ஒருபக்கம் அப்பெண்டிக்ஸ், அடினாய்டு, கருப்பை, பித்தப்பை போன்றவை, அதில் ஏற்படும் சிறு சிரமங்களுக்கு எல்லாம் 'என்னத்துக்கு பிரச்னை?’ என்றோ, 'அதான் இன்ஷூரன்ஸ் இருக்கே...

நலம் 360’  - 8

எடுத்துடுவோம்’ என்ற மேதாவித்தனத்திலோ அறுவைசிகிச்சையில் நீக்கும் போக்குகள் அதிகரித்திருக்கின்றன. இன்னொரு பக்கம் வளர்ச்சியடைந்த புற்று முதலான அறுவைசிகிச்சை அவசியம் தேவைப்படும் நிலையில் தாமதித்து வருந்தும் சம்பவங்களும் பெருகிக்கொண்டே போகின்றன. எனவே, உடல் நலம் பராமரிப்பு விஷயத்தில் நிறைய அக்கறையும், விசாலமான பார்வையும் கொண்டிருப்பதே புத்திசாலித்தனம்.

சில நேரம் ஆதரவாகக் கட்டிப்பிடிப்பதன் மூலம் நோயைக் குணமாக்க முடியும். கைப்பற்றி அழுத்தி, தோள் சாய்த்துத் தட்டிக்கொடுத்தும் குணமாக்க முடியும். மடியில் உட்காரவைத்து வானம் காட்டி வாய் பிளக்கவைத்து அளிக்கும் ஒரு வாய் உணவின் மூலமும் குணமாக்குவது சாத்தியம். நெடுநாள் அனுபவ மூலிகை மருந்தின் மூலம் முற்றிலுமாகத் துடைப்பதும் சாத்தியம். நேற்றைய விஞ்ஞானம் ஆய்ந்து சொன்ன நவீனத்தின் மூலம் வீழ்த்துவதும் சாத்தியம். என்ன... 'என் நோய் இதில் எப்படிக் குணமாகும்?’ என்றெல்லாம் ஆய்வு செய்ய நேரம் இல்லாத சமூகத்தின் விளிம்பில் நிற்கும் சாமானியனின் நோயைத் துல்லியமாகக் கணித்து, கட்டிப்பிடிக்கணுமா... கத்தியை எடுக்கணுமா என்பதை புத்தியுடன் கொஞ்சம் அறத்தையும் தீட்டி தீர்மானிக்க வேண்டும் மருத்துவ உலகம். அவ்வளவே!

- நலம் பரவும்...

நலம் 360’  - 8

வயிற்று வலிக்கான காரணங்கள்!

• நடுவயிற்றிலும், வலதுபக்க விலாவுக்குக் கீழும் வலி வந்தால், அது வயிற்றுப்புண்ணாகவோ, பித்தக்கல் வலியாகவோ, கணைய அழற்சி வலியாகவோ இருக்கலாம்.

•  இரைப்பை, குடல் பகுதிக்குப் போகும் ரத்தக்குழாய்களில் உண்டாகும் அடைப்பு தீவிர வலி உண்டாக்கலாம்.

•  நடுவயிற்றில் எரிச்சலுடன்கூடிய வலி, வயிற்றுப்புண் சார்ந்த வலியாக இருக்கலாம்.

•  விலா எலும்பில் பின் முதுகின் இரு பக்கங்களில் இருந்து முன் பக்கம் சிறுநீர்ப்பை நோக்கி வரும் வலி, சிறுநீரகக் கல்லின் வலியாக இருக்கலாம்.

•  பெண்களுக்கு அடிவயிற்றின் இரு பக்கவாட்டில் வரும் வலி, சினைப்பைக் கட்டிகளின் வலியாக இருக்கலாம். அடிவயிற்றின் மையப் பகுதியில் வரும் வலி நார்க்கட்டி வலியாக இருக்கலாம்.

இதைத் தாண்டி அப்பெண்டிக்ஸ் வலி, அடினோமயோசிஸ் வலி... என வலிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. எல்லா வலிக்கும் 'ஒரு சோடா குடிச்சா, சரியாப் போயிடப்போகுது’ என்ற அலட்சியமும், 'ஓ பகவான் கூப்பிட்டுட்டார்’ என்ற பதற்றமும் ஆகாது. குடும்ப மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது முக்கியம்!

வருமுன் காக்க...

பித்தப்பைக் கல் வராது தடுக்கவும், சிறிய கல்லாக இருந்தால் சிரமம் அளிக்காது இருக்கவும், பின்வரும் உபாயங்கள் உதவும்.

நலம் 360’  - 8

•  கரிசலாங்கண்ணி, மலச்சிக்கலை நீக்கி, பித்தத்தைத் தணிக்கும் மூலிகை. இதில் மஞ்சள் பூ, வெள்ளைப் பூ என இரண்டு வகை உண்டு. வெள்ளைப் பூ வகைதான் இதற்குச் சிறப்பு. இந்தக் கீரையை விழுதாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து, ஒரு மாத காலம் சாப்பிடலாம்.

•  ஒரு சாண் அளவு வளர்ந்திருக்கும் கீழாநெல்லி செடியை வேருடன் பிடுங்கி, நன்கு கழுவி, அரைத்து மோரில் இரண்டு சுண்டைக்காய் அளவு கலந்து சாப்பிடலாம்.

•  சீரகத்தை கரும்புச் சாறு, கீழாநெல்லிச் சாறு, எலுமிச்சை சாறு, முசுமுசுக்கைச் சாற்றில் ஊறவைத்து (ஒவ்வொரு நாள் ஒவ்வொன்றாக ஊறவைத்து) வெயிலில் நன்கு உலர வைக்கவும். பின் மிக்ஸியில் பொடித்து காலையில் இரண்டு டீஸ்பூன், மாலை இரண்டு டீஸ்பூன் என உணவுக்கு முன்னதாகச் சாப்பிடலாம்.

•  வாரம் ஒரு நாள் நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பது, உடலில் பித்தம் தணித்து கல் வராது தடுக்க உதவும். கல் வந்தவர்கள் தலைக்குக் குளிர்தாமரைத் தைலம், கீழாநெல்லித் தைலம், காயத்திருமேனித் தைலம்... என இவற்றில் ஒன்றைத் தேய்த்துக் குளிப்பது நலம்!