Election bannerElection banner
Published:Updated:

மதுரையில் பவர் ஸ்டார் டெரர்!

மதுரையில் பவர் ஸ்டார் டெரர்!

##~##

'எழுச்சி நாயகரே’, 'திரையுலக இமயமே’, 'எங்கள் தங்கமே’, 'எங்கள் திலகமே’, 'நாளைய மன்னவரே’ -  கொஞ்ச நாட்களாக 'அண்ணனே’ அடங்கி ஒடுங்கிக் கிடக்க, குபீர் என முளைத்த இந்த ஃப்ளெக்ஸ் போர்டு கள் மதுரைவாசிகளை ஏகத்துக்கும் மிரளச் செய்து விட்டது. ஆகஸ்ட் 13-ம் தேதிதான் அந்தச் சம்பவ நாள். ஃப்ளெக்ஸ் பேனர்களில் முறைத்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும், சவால் விட்டுக்கொண்டும், வேட்டை நாய்களை ஓடாமல் இழுத்துப் பிடித்துக்கொண்டும் இருந்த வரை நேரில் 'பார்த்தேவிட்டார்கள்’ மதுரை மக்கள். மதுரையில் ரிலீஸே ஆகாத பவர் ஸ்டாரின் 'லத்திகா’ படத்தின் 150-வது நாள் வெற்றி விழாவை, மதுரையில் நடத்தி 'அடடே’ ஆர்ப்பாட்டம் செய்துவிட்டார் பவர் ஸ்டார் சீனிவாசன்!

எல்லா ஃபிளெக்ஸ்களின் ஓரத்தில், 'சின்னத்திரை, சினிமா துணை நடிகைகளின் கலக்கல் நடனம் - இலவச அனுமதி!’ என்ற வரி பளிச்சிட்டது. இது போதாதா? அரங்கத்துக்குள் ஒரே தள்ளுமுள்ளு. திடீர் என 10, 20 பேர் வெடிகளைக் கொளுத்திப் போட, புகை மூட்டத்துக்கு இடையே இருமியபடி வந்தார் 'பவர் ஸ்டார்’ டாக்டர் சீனிவாசன்.

மதுரையில் பவர் ஸ்டார் டெரர்!

பவர் ஸ்டார் ரொம்ப செலவழித்து இருப்பார்போல! லத்திகா வெளியாகாத ஊர்களில் இருந்து எல்லாம் ரசிகர் மன்றங்களைத் தொடங்கி, அதன் நிர்வாகிகளை விழாவுக்கு அழைத்து வந்து இருந்தார்கள். கையில்வைத்து இருந்த துண்டுத் தாளில் இருந்து மனப்பாடம் செய்துவிட்டு, ''தலைவா... 'உனக்காக ஒரு கவிதை’, 'மண்டபம்’ வரிசையில் 'லத்திகா’ மிகப் பெரிய வெற்றி பெற்று இருக்கிறது. (அப்படியா?) அடுத்து வர இருக்கும் 'தேசிய நெடுஞ்சாலை’, 'ஆனந்தத் தொல்லை’, 'மன்னவன்’ போன்ற படங்களும்

மதுரையில் பவர் ஸ்டார் டெரர்!

ரெக்கார்ட் பிரேக் பண்ணும். இது நிச்சயம்... வேத சத்தியம்! (கவித..கவித)!''- என்று பாராட்டினார் ஒரு நிர்வாகி.  தன்னடக்கத்தோடு, நாடியைத் தடவியபடி அதைக் கேட்டுக்கொண்டு இருந்தார் பவர் ஸ்டார்.

'பருத்திவீரன்’ சரவணன், கமலா தியேட்டர் அதிபர் வி.என்.சிதம்பரம், தே.மு.தி.க. எம்.எல்.ஏ-க்கள் சுந்தர்ராஜன், ராஜா ஆகியோரைத் தொடர்ந்து பவர் ஸ்டாரை வாழ்த்திய இன்னொரு வி.ஐ.பி. மதுரை ஆதீனம். ''மருத்துவத் துறையில் இருந்துகொண்டு, தமிழர்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் (சாமி படத்தையும் பார்க்கலை. ஸ்டில்ஸையும் பார்க்கலைபோல!) சமுதாயத்துக்கு எடுத்துக் காட்டுகின்ற, கலைத் துறைக்கு வந்து இருக்கிற தம்பி சீனிவாசனை மனதாரப் பாராட்டுகிறேன்!'' என்று பவர் ஸ்டாரே பதறும் அளவுக்குப் புகழ்ந்து தள்ளினார் ஆதினம்!

கொடுத்ததுக்கு மேல் எல்லோரும் கூவிவிட்டுப் போக, க்ளைமாக்ஸில் மைக் பிடித்தார் பவர். 'நடிகர் விஜயகாந்த் எனது நண்பர். அவர் வர முடியாத காரணத்தால் தனது கட்சி எம்.எல்.ஏ-க்கள் இருவரை அனுப்பிவைத்து இருக்கிறார். (கேப்டன் நீங்களுமா?) எனது சொந்த ஊர் மதுரை. அதனால்தான் லத்திகா வெற்றி விழாவை மதுரையில் நடத்துகிறேன். இந்த விழாவுக்குத் திரளாக வந்து இருக்கும் என் ரசிகப் பெருமக்கள் (அது யாருப்பா... நமக்குத் தெரியாம?) என்னை நெகிழவைத்துவிட்டார்கள். இப்போது சொல்கிறேன். அடுத்தடுத்து எனது வெற்றிப் படங்களின் விழா எல்லாம் மதுரையில்தான் நடக்கும். இதுதான் என்னை வளர்த்த மதுரைக்கு நான் செய்யும் தொண்டு!' என்றார்.

ஆக, 'மதுரை மீட்பு பார்ட்-2’ -வுக்கு விரைவில் நாள் குறிக்க வேண்டியதுதான்!

மதுரையில் பவர் ஸ்டார் டெரர்!

ரா.அண்ணாமலை, படங்கள்: ஈ.ஜெ.நந்தகுமார்

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு