Published:Updated:

இங்கே ஒருமுறை எட்டிப் பாருங்க!

தினமும் இரண்டு முறையாவது சென்னை ஸ்பென்சர் பிளாசாவைக் கடந்துபோவேன். ஸ்பென்சர் பிளாசாவுக்கு எதிரிலேயே இருக்கும் கடை 'பேரார்வமூட்டும் பழமைப் பொருளகம்’. பெயரே எனக்குள் பேரார்வத்தை ஊட்ட, கடைக்குள் எட்டிப்பார்த்து பிரமித்துப்போனேன். சென்னைக்கு வரும் முக்கியப் பிரமுகர்கள் போக வேண்டிய இடங்களின் லிஸ்ட்டில், இந்தக் கடை இடம் பிடித்துவிடுகிறது. சென்னையில் பழங்கால அரிய பொருட்கள் சேகரிப்பவர் களுக்கு என்று முதன்முதலில் தொடங்கப்பட்ட கடை இது.

இங்கே ஒருமுறை எட்டிப் பாருங்க!

'என் சொந்த ஊர் டெல்லி. 1940-களில் வட இந்தியாவில் கடுமையான மதச்சண்டையும் பாகிஸ்தான் பிரிவினை பிரச்னையும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த நேரம். என் தகப்பனார் முகம்மது  பாதுகாப்பான மத துவேஷம் இல்லாத பகுதியைத் தேடினார். அப்படியான மாநிலமாக தமிழகம்தான் இருந்தது. எனவே டெல்லியில் இருந்து இங்கே குடிபெயர்ந்தோம். தேவையான அளவு பணம் இருந்ததால், யாரும் செய்யாத தொழிலான இதைத் தொடங்கினார் அப்பா'' என்கிறார் இந்தக் கடையின் உரிமையாளர் லத்தீப். லார்சன் அண்ட் டூப்ரோவில் மெக்கானிக்கல் இஞ்சினீயரிங் படித்த லத்தீபுக்கும் பழங்காலப் பொருட்கள் சேகரிப்பில் ஆர்வம் ஏற்பட, வேலையை விட்டுவிட்டு தந்தையுடன் கடையைக் கவனிக்கத் துவங்கிவிட்டார்.

முதல்முதலாக வந்த மெக்கானிக்கல் கால்குலேட்டர், சூரிய வெளிச்சத்தை வைத்து நேரம் காட்டும் சன் டயல்  என்கிற சூரியக் கடிகாரம், எறும்பைவிட சிறிய சங்கு, அரிதிலும் அரிதான இங்கிலாந்தின் கடற்படையான ராயல் நேவியில் பயன்படுத்தப்பட்ட திசைகாட்டி என இவருடைய கடையே ஒரு மியூஸியம்தான்.  

இங்கே ஒருமுறை எட்டிப் பாருங்க!

''நடுத்தர வர்க்கத்தின் கைகளில் பணம் புரள ஆரம்பித்ததால், ஒரு காலத்தில் பணக்காரர்களின் பொழுதுபோக்காக இருந்த பழங்காலப் பொருட்கள் சேகரிப்பு பழக்கம் இன்று நடுத்தர மக்களிடமும் வந்துவிட்டது. நம் காலத்தில் நாம் பயன்படுத்தி வந்த டைப்ரைட்டரும் மொபைலும் இன்று சேகரிக்கப்பட வேண்டிய பொருட்கள் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது பெரும் ஆச்சர்யம்'' என்ற லத்தீப்பிடம் இந்தத் தொழிலில் வரும் சிக்கல்கள் குறித்துக் கேட்டேன்.

இங்கே ஒருமுறை எட்டிப் பாருங்க!

'நாகரத்தினக் கல், மண்ணுளிப் பாம்பு, இரிடியம் கலசம் என தமிழ்நாட்டில் வரிசை கட்டி வரும் மோசடிகளில் ஒன்று லிபோ காயின். அப்படி ஒரு காயினே இல்லை. ஆனால் அந்த காயின் போல டூப்ளிகேட் உருவாக்கவென்றே ராஜஸ்தானில் ஆட்கள் இருக்கிறார்கள். கிழக்கிந்திய கம்பெனி காசுகள், பழங்கால மன்னர்களின் காசுகள் ஆகியவற்றைப் போலியாக செய்து இதை சேகரிப்போரிடம் விற்பனைக்கு விட்டுள்ளனர். எனவே காயின்களை விற்பதும் இல்லை. அதுபோல ஸ்டாம்ப்பும் போலியாக வந்துவிட்டது. மிகச் சிறிய நுகர்வோர் வட்டம்கொண்ட இந்தத் துறையிலும் போலிகள் வந்தால் என்ன செய்வது?' என்றார்.

இங்கே ஒருமுறை எட்டிப் பாருங்க!

பெரியார், அண்ணா, எம்ஜிஆர், கலைஞர் என்று அரசியல் வி.ஐ.பி-க்கள், சினிமா நட்சத்திரங்களும் இங்கே வந்துள்ளனர். டெண்டுல்கர் இந்தக் கடையின் வாடிக்கையாளர். பழங்காலப் பொருட்கள் சேகரிப்பும் விற்பனையும் ஆர்வத்திற்கு என்றால், கைத்தறித் துணிகள் வியாபாரத்திற்கு என்று பிரித்து வைத்துள்ளார். அதிலும் இந்தியா முழுவதும் கிடைக்கும் விதவிதமான கைத்தறிகள் இவரிடம் கிடைக்கின்றன.

'என்னைப் பொறுத்தவரை விற்பனை பெரிய விஷயம் அல்ல. இதைக் காட்சிக்காகவே வைத்துள்ளேன். இளைஞர்கள் இந்தச் சேமிப்பைக் கண்டு மகிழ்ந்து தாங்களும் இதுபோல் சேகரிக்க வேண்டும் என்று இதயப்பூர்வமாக விரும்பினால், பணம் வாங்காமல்கூட கொடுத்து விடுவேன்' என்கிறார்.

சூப்பர்ல!

- செந்தில்குமார்

படங்கள்: வீ.நாகமணி

அடுத்த கட்டுரைக்கு