Published:Updated:

தூத்துக்குடியில் சரக்கு சாமி!

தூத்துக்குடியில் சரக்கு சாமி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

தூத்துக்குடி மாவட்டம் முத்தை யாபுரம் தோப்புத் தெருவில் இருக்கும் மாளிகைபுரத்து கருப்பசுவாமி கோயில் கொடைவிழா ரொம்பவே ரணகளமானது! காரணம், விழாவின் மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் சாமி சரக்கு சாப்பிட்டு அருவாள் மேல் நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு வழங்குவதுதான். கடந்த வருட விழாவில் சாமி அடித்த ஃபுல் பாட்டில்களின் எண்ணிக்கை 61. அதனால், இந்த வருடம் மூன்று மடங்காக 187 ஃபுல் பாட்டில், 52 ஆஃப் பாட்டில், 12 குவார்ட்டர் பாட்டில் என மொத்தமாக 251 மது புட்டிகளைக் குவித்து,  கோயில் வாசலில் மினி டாஸ்மாக்கையே உருவாக்கிவிட்டார்கள் பக்தர்கள்.

தூத்துக்குடியில் சரக்கு சாமி!

 மேள தாளம் முழங்க பூசாரி முருகன் கோயிலுக்குள் என்ட்ரி கொடுக்கிறார். அருள் வந்ததுமே ரோஜாப் பூ மாலை, எலுமிச்சம் பழ மாலை என விதவிதமான மாலைகளை கழுத்துகொள்ளாத அளவுக்குக் கொண்டுவந்து போடுகிறார்கள். கும்பலாகக் குவித்து வைக்கப்பட்டு இருக்கும் சுருட்டு பாக்கெட்டைக் கையில் எடுத்து, பத்திகளைக் கொளுத்துவதுபோல, மொத்தமாகக் கொளுத்தி முருகன் கையில் கொடுக்கிறார்கள். இரண்டு, மூன்று சுருட்டுகளை ஒரே நேரத்தில் பிடித்து ரயில் இன்ஜின் கணக்காகப் புகைவிடுகிறார் முருகன். ''அண்டா, குண்டா, குடம்கொண்டு வாங்கடா'' என்று முருகன் ஆர்டர் போட, அண்டாக்கள் அணிவகுக்கின்றன. மது பாட்டில் மூடிகளை வாயால் திறந்து, பக்தர்களிடம் கொடுக்கிறார். பயபக்தியோடு வாங்கி, அதை அண்டாவில் ஊற்றுகிறார்கள் பக்தர்கள். மொத்த பாட்டிலையும் உடைத்து 23 பெரிய அண்டாக்கள், 2 பெரிய குடங்கள், ஒரு சிறிய பானையில் நிரப்புகிறார்கள். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, ''மேளத்தை கொட்டுங்கடா...'' என்கிறார் முருகன். 'ரண்டன்டன்.. ரண்டன்னக்கா...’ என்று மேளம் கொட்ட ஆரம்பித்ததும் சொம்பு நிறைய மதுவை அள்ளி கடகடவென குடிக்கிறார். இடைஇடையே சைட் டிஷ்ஷாக எலுமிச்சம்பழத் துண்டு, ஆட்டு ஈரல், பொரித்த கோழித் துண்டுகளை உள்ளே தள்ளுகிறார்.

தூத்துக்குடியில் சரக்கு சாமி!

ஒரு ரவுண்ட் முடிந்ததும்,  ரோஜாப் பூ மாலை கொண்டுவரும் பக்தர்கள், அதை முருகனுக்குப் போட்டுவிட்டு, விசில் அடிக்கிறார்கள். காரணம், கருப்பசாமிக்கு மாலை போட்டு காது கிழிய விசில் அடித்தால் நினைத்தது நடக்குமாம். ''நீட்டுங்கடா அருவாளை...'' என்று முருகன் உறும... எங்கு இருந்தோ வருகிறது ஐந்து அடி உயர அருவாள். அதன் மேல் ஏறி நின்று ஆடுபவர், கீழே 'ஜங்’கென்று குதிக்கிறார். ''பிள்ளை வரம் கேட்டு என் இடத்துக்கு வந்தவன் எவன்டா? வாடா என் முன்னால...'' என்று முருகன் அலற, நடுங்கியபடி வந்து நிற்கிறார் அப்பாவி பக்தர் ஒருவர். ''உனக்கு சீக்கிரமே பிள்ளை தர்றேன் போடா'' என்று  என்று விபூதி அடித்து அனுப்பி வைக்கிறார். சொம்பில் குடித்தது போரடித்ததோ என்னவோ, திடீர் என சின்ன பானையைத் தூக்கி அப்படியே கல்ப்பாக அடிக்கிறார் சாமி. காலி பாட்டில்கள் குவிந்துகொண்டே இருக்க, ''சாமிக்கு சரக்குத் தேவைப்படுகிறது. எனவே பக்தர்கள் சரக்கு வாங்கி வரும்படி விழா கமிட்டி கேட்டுக்கொள்கிறது. இந்த பிராண்ட் என்று இல்லை. ரம், ஜின், விஸ்கி என எது வேண்டுமானாலும் வாங்கி வரலாம். தயவுசெய்து பீர் வாங்கி வருவதைத் தவிர்க்கவும்!'' என்று அறிவிப்பு கொடுத்ததும், அடுத்த அரை மணி நேரத்தில் 50 ஃபுல் பாட்டில்களைக் கொண்டுவந்து அடுக்கிவிட்டார்கள் பக்தர்கள்.

விழா முடியும்போது முத்தையாபுரம் டாஸ்மாக்கில் இருந்த மொத்த சரக்கும் காலியாகி விட்டதால் சிலர் தூத்துக்குடிக்கு பஸ் ஏறி, ஃபுல் பாட்டில்கள் வாங்கி வந்தது தனிக் கதை!

- இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு