##~##

புலிகளை எப்படி கணக்கு எடுக்கிறார்கள் தெரியுமா?  

 களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயத்தின் துணை இயக்குநர் து.வெங்கடேஷ்  விளக்குகிறார். ''புலிகளின் விருப்பமான உணவு மிளா, சாம்பார் மான், காட்டு மாடு போன்றவைதான். இரையை உண்ட பின் தனது நகத்தில் ஒட்டி இருக்கும் மாமிசத் துகள்களை அகற்றுவதற்காக, மரங்களை பிராண்டுவது புலிகளின் பழக்கம். அதிக அளவில் நீர் பருகும் பழக்கம் உடைய புலிகள், 'சுச்சா’ (ஒன் பாத்ரூம்) போகும்போது தனது முன்னங்கால்களால் தரையைக் கிளறும். புலிகளின் இந்த இயல்புகளைக்கொண்டுதான் அவைகளின் எண்ணிக்கையைக் கணக்கிடுகிறோம்.

புலி புல்லைத் தின்னும்!

அகில இந்திய அளவில் புலிகள் கணக்கு எடுப்பில் மூன்று நிலைகள் பின்பற்றப்படுகிறது. முதல் நிலையில் காட்டில் வாழும் புலிகள் மற்றும் இதர மாமிசம் உண்ணும் விலங்குகளின் காலடித் தடங்கள், எச்சம் போன்ற தடயங்களைக் கண்டறிவோம். புலிகளின் உணவான மான் போன்றவை காட்டில் எந்த அளவில் இருக்கிறது என்கிற விவரத்தைச் சேகரிப்போம். புலிகளின் வாழ்விடங்களில், தானியங்கி கேமராவை வைத்து புகைப்படம் எடுப்பது மூன்றாவது வகை. இந்தத் தகவல்களைச் சேகரித்து, டேராடூனில் உள்ள இந்திய வன உயிரியல் நிறுவனத்துக்கு அனுப்பிவைப்போம்.  

புலிகள் கணக்கு எடுப்பில் முதல் நிலைதான் முக்கியப் பகுதி ஆகும். இதில் ஈடுபடும் களப் பணியாளர்களுக்கு வன அதிகாரிகளால் பயிற்சி அளிக்கப்படுகிறது. புலிகளைக் கண்டறிய காட்டு வழித் தடங்கள் தெரிந்த சிறிய குழு அனுப்பப்படும். புலிகளின் தடயம் எடுக்கச் செல்பவர்கள், புலியின் கால் தடம், புலிகளின் எச்சம், புலியால் அடித்துத் தின்று மீதியான கழிவு, புலியால் மரத்தில் உருவாக்கப்பட்ட கீறல்கள், புலி தரையில் கிளறிய இடங்கள் போன்ற வற்றைக் கண்காணித்து விவரம் சேகரிப்பார்கள்.  

புலி புல்லைத் தின்னும்!

புலிகளின் கால் தடம் தென்பட்டால் அதன் மாதிரிப் படிவம் எடுக்க, அதன் மீது ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் பொடியைக் கரைத்து ஊற்றி அப்படியே அச்சு எடுப் பார்கள். புலிகள் பெரும்பாலும் நீர் நிலை களுக்குச் செல்ல ஒரே பாதையைத்தான் பயன்படுத்தும். எனவே நீர் நிலைகளை ஒட்டி உள்ள சகதிகளில் புலிகளின் காலடித் தடங்களை எளிதாகக்  காணலாம்.  

மேலும், புலிகளின் எச்சத்தில் வேட்டையாடப் பட்ட விலங்குகளின் உரோமங்கள் இருக்கும். மரபணு பரிசோதனை மூலம் அது புலிகளின் எச்சம்தானா என்று கண்டறிந்துவிடுவோம்.  இது புலிகளை நேரடியாகப் பார்க்காமலேயே கணக்கு எடுக்கும் முறை ஆகும். ஏனெனில், புலிகள் கூச்ச சுபாவம்கொண்டவை. மனிதர்களைப் பார்த்ததும் தூரத்தில் இருந்தே விலகிச் சென்றுவிடும். மிக மிக அபூர்வமாகத்தான் புலிகள் மனிதனின் பார்வைக்குச் சிக்கும்.  

புலிகளை புகைப்படம் எடுக்கும் முறைக்கு 'கேமரா ட்ராப்பிங்’ என்று பெயர். 4 சதுர கி.மீ. பரப்பளவுக்கு இரண்டு கேமராக்கள் வீதம் 80, 100 சதுர கி.மீ. பரப்பளவில் கேமராக்கள் பொருத்துவோம். புலிகளின் உயரத்துக்கு ஏற்றாற்போல, எதிர் எதிரே இரண்டு கேமராக்கள் பொருத்தப்படும். இரண்டு கேமராவுக்கு இடையே சென்சார் கற்றைகள் இருக்கும். புலி அதைக் கடக்கும்போது, இரண்டு கேமராக்களும் ஒரே நேரத்தில் இரண்டு கோணத்தில் அந்தப் புலியைப் படம் பிடிக்கும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக கைரேகை இருப்பதைப்போல, ஒவ்வொரு புலிக்கும் உடலில் பிரத்யேகமான வரிகள் இருக்கும். இதனால், குழப்பம் இல்லாமல் புலிகளைக் கணக்கிடலாம்.  

புலி புல்லைத் தின்னும்!

உலகில் இந்தியாவில்தான் இப்போது புலிகள் அதிகமாக இருக்கிறது. இப்போது இருக்கும் புலிகளின் எண்ணிக்கைக் குறை யாமல் பார்த்துக்கொள்வதில் நம் அனைவருக்குமே பெரும்பங்கு இருக்கிறது. காடுகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை ஒவ்வொரு மனிதருக்கும் இருந்தால், புலிகளும் நம்மைப்போலவே நலமாக இருக்கும்!''

- வி.ஜெய்கிருஷ்ண கோகிலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு