Published:Updated:

தரையும் நீரும் வீணாகாது... மாடித்தோட்டம் இன்னும் ஈசி..! கரூர் மாணவியின் கண்டுபிடிப்பு

தரையும் நீரும் வீணாகாது... மாடித்தோட்டம் இன்னும் ஈசி..! கரூர் மாணவியின் கண்டுபிடிப்பு

கிராமங்களில் விவசாயம் வறட்சியால் வறண்டு போனாலும், சிறு நகரம் மற்றும் பெரு நகரங்களில் மாடித்தோட்டம் அமைத்து, காய்கறிகள் பயிரிடும் கைங்கர்யம் கனஜோராக நடந்து வருகிறது. ஆனால், மாடித்தோட்டம் அமைப்பதில் சில சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. மாடித்தோட்டம் அமைத்து செடிகளுக்கு நீர் பாய்ச்சும்போது, அதில் வீணாகும் நீரால் மாடியின் தரைத்தளம் பாதிப்படையும் ஆபத்தும் இருக்கிறது. அதற்கு மாற்றாக,தண்ணீரை சிக்கனமாக செடிகளுக்கு பாய்ச்சுவதோடு ஒருசொட்டு நீர்கூட மாடியில் படாமல் செய்யும் புது டெக்னிக்கை கண்டுபிடித்திருக்கிறார் மாணவி ஒருவர். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மதுமிதா, காய்கறி வியாபாரியின் மகள். அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். இவர் கண்டுபிடித்த இந்த சிக்கன நீர் மற்றும் வீணாகாமல் தண்ணீர் பாய்ச்சும் முறை தேசிய அளவிலான பள்ளிகளுக்குகிடையேயான அறிவியல் கண்காட்சியில் கவனம் பெற்றிருக்கிறது. 

கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியத்தில் உள்ள வடசேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் மதுமிதா. அந்தப் பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஜெரால்டு ஆரோக்கியராஜின் வழிகாட்டுதலோடு இந்தச் சாதனைக் கண்டுபிடிப்பை கண்டுபிடித்திருக்கிறார்.   வடசேரி பள்ளியில் வைத்து அவரை சந்தித்தோம்.

 "விவசாயம் இன்னைக்கு மோசமா போனாலும், மக்களிடம் இயற்கை காய்கறிகளை சாப்பிடனும்ங்கிற விழிப்புஉணர்வு வந்திருக்கு. எங்கப்பா காய்கறி வியாபாரிங்கிறதால, அவரோடு சேர்ந்து ஓய்வு நேரங்களில் காய்கறி விற்பேன். அப்போது, என் தந்தையிடம் காய்கறி வாங்குபவர்கள், 'இது இயற்கையாக விளைந்ததா?'ன்னு கேட்பாங்க. கடந்த நான்கைந்து மாதங்களாக எங்களிடம் ரெகுலராக காய்கறிகள் வாங்குபவர்கள் எங்களிடம் காய்கறிகள் வாங்குவதில்லை. விசாரிச்சப்ப, அவர்கள் தங்கள் வீட்டு கொல்லைப்புறங்களிலும், மாடியிலும் தோட்டம் அமைத்து இயற்கை முறையில் காய்கறிகள் பயிரிட்டு பயன்படுத்துவது தெரிஞ்சது. ஆனால், 'மாடித்தோட்டம் அமைத்ததில் காய்கறியும் கிடைச்சாப்புல ஆச்சு, வீட்டுக்குள்ளும் கூலிங்காவும் இருக்கு. ஆனால், மாடித்தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சும்போது மாடியின் தரைத்தளம் டேமேஜ் ஆவுது'ன்னு புலம்பினாங்க. இதை எங்க அறிவியல் ஆசிரியர் ஜெரால்டு ஆரோக்கியராஜிடம் சொன்னேன். அவரின் அறிவுறுத்தலோடு அந்தப் பிரச்னை தீர்வதற்கான புது டெக்னிக் முறையில் நீர் பாய்ச்சும் அமைப்பைக் கண்டுபிடித்தேன். அது, தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சியிலும் தேர்வாகி இருப்பது மகிழ்ச்சி" என்றவர், தனது கண்டுபிடிப்பை விவரித்தார்.

"சதுர வடிவிலான பெட்டி போன்ற மரத்திலான அமைப்பை எடுத்துக்கனும். அதில் ஒரு பக்கம் முழுவதும் திறந்து இருக்கணும். அப்புறம், காலி 25 லிட்டர் தண்ணீர் பிளாஸ்ட்டிக் கேன் ஒன்றை எடுத்துக்கனும். அதேபோல், இரண்டு முழ நீளத்துக்கு விளக்குக்கு பயன்படுத்தும் கொஞ்சம் தடிமனான திரியை எடுத்துக்கனும். அப்புறம் மீடியம் சைஸ் புனல் ஒன்றை வாங்கிக்கனும். அந்த வாட்டர் கேனில் படுக்கவாட்டில் போட்டு அதன் மேல் ஒரு பக்கம் திரி போற அளவுக்கு ஒரு ஓட்டையும், மற்றொரு பகுதியில் புனல் போற அளவுக்கு ஒரு ஓட்டையும் போட்டுக்கனும். இதே மாதிரி, இதுக்கு சமமா மரப்பெட்டி மேல் பகுதியிலும் இரு ஓட்டைகள் போடனும். அந்த வாட்டர் கேனை நல்லா, திறக்க முடியாத அளவுக்கு இறுக்கமா மூடிடனும். அதை எடுத்து அந்த மரப் பெட்டிக்குள் அதில் உள்ள ஓட்டைகள் மேல் பகுதியில் இருப்பது மாதிரி வைக்கனும். வைத்தவுடன், புனலை மரப்பெட்டி ஓட்டை வழியாக உள்ளே விட்டு, கூடவே வாட்டர் கேன் ஓட்டை வழியா உள்ளே போக வைக்கனும். மரப்பெட்டி ஓட்டை வழியா திரியின் ஒரு முனையை உள்ளே விட்டு, அதேபோல் வாட்டர் கேனின் அடிப்பகுதி வரை திரியின் அந்த முனை இருக்கும்படி அமைக்கனும். திரியின் மேல் முனையை செடி இருக்கும் தொட்டியின் கீழ்ப்பகுதி ஓட்டை வழியாக உள்ளே செலுத்தி, மணல் உள்ளே இருக்கும் செடியின் வேரை ஒட்டிக்கொண்டு விடனும். அவ்வளவுதான் இந்த அமைப்பு. இப்போ, புனல் வழியா வாட்டர் கேனில் தண்ணீர் ஊற்றி நிரப்பிவிட்டால், அது திரி வழியாக போய் தொட்டியில் உள்ள செடியின் வேர்களுக்கு சேரும். அந்த செடி தனக்குத் தேவையான நீரை மட்டும் எடுத்துக்கொள்வதால், தண்ணீரும் அதிகம் தேவைப்படாது. ஒரு துளி தண்ணீர்கூட வேஸ்டாகாது. மாடியும் பாழாகாது. 

மண்ணெண்ணெய் விளக்கின் செயல்பாடுதான் இந்த டெக்னிக். ஒருநாள் வீட்டில் இரவு முழுக்க மின்சாரம் இல்லை. அப்போது, அம்மா கொளுத்தி வைத்த மண்ணெண்ணெய் விளக்கை பார்த்து யோசிச்சதுதான் இந்தக் கண்டுபிடிப்பு. இதுக்கு எனது அறிவியல் ஆசிரியர் ஜெரால்டு சார், பள்ளியின் தலைமை ஆசிரியர் விக்டர் ஜெயராஜ் மற்றும் ஆசிரியர்களும் உதவி பண்ணினாங்க. இந்த முறையால் ஒரே ஒரு செடிதான் வளர்க்க முடியும். நூறு ரூபாய்க்குள்தான் செலவாகும் என்றாலும், ஒவ்வொரு செடிக்கும் இப்படி ஒவ்வொரு அமைப்பு செய்து வைத்தால், அது இடத்தையும் அடைக்க வாய்ப்பிருக்கு. அதனால், இதே விளக்கு திரி மெத்தடை மாடலா வச்சு, நிறைய செடிகள் ஒரே அமைப்பு மூலம் வளர்க்கும் முறையை கண்டுபிடிச்சுருக்கேன். பி.யூ.சி பைப்பை ஒன்றை நாம் எவ்வளவு செடிகள் வளர்க்கிறோமோ அவ்வளவு நீளத்துக்கு எடுத்துக்கனும். ட வடிவில் அமைச்சுக்கனும். பக்கவாட்டில் உள்ள பைப்பின் ஓட்டையை அடைச்சுக்கனும்.

அந்த பைப்பில் அங்கங்கே செடி அமைப்பதற்குண்டான இடைவெளிகளில் அடுத்தடுத்து ஓட்டை போட்டு, அதன் வழியாக திரிகளை விடனும். அந்த ஓட்டைகளின் மேல் செடிகளை வைத்து, அதேபோல் திரிகளை உள்ளே செடிகளின் வேர் வரை அனுப்பிக்கனும். பைப்பின் வானம் நோக்கி இருக்கும் மற்றொரு வாய் வழியாக தண்ணீரை ஊற்றினால், ஒரே நேரத்தில் பல செடிகளுக்கு நீர் பாய்ச்ச முடியும். அதுவும் சிக்கனமாக. இந்த பைப்பை நிலைநிறுத்த பலகையால் ஒரு தாங்கி அமைப்பு செஞ்சுக்கனும்.

அடுத்த கண்டுபிடிப்பும் விவசாயம் தொடர்பா இருக்கனும்ன்னு மெனக்கெடுகிறேன். குறிப்பா இயற்கை விவசாயத்துக்கு பயன்படும் விஷயங்களை கண்டறியனும்ன்னு விரும்புறேன். அதுக்கான முயற்சி போய்கிட்டு இருக்கு" என்றார்.

அறிவியல் ஆசிரியரான ஜெரால்டு ஆரோக்கியராஜ், 

"இந்த கண்டுபிடுப்பு சிறந்ததா தெரிந்ததால், இந்த விளக்கு திரி நுண்புழை ஏற்ற முறையை அறிவியல் கண்காட்சிக்கு எங்க பள்ளி சார்பா எடுத்துக்கிட்டு போனோம். இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நடத்துன அந்த அறிவியல் கண்காட்சியில், கரூர் மாவட்ட அளவில் பரணி பார்க் பள்ளியில் நடந்த கண்காட்சியில் தேர்வானுச்சு. அதுல மாவட்ட அளவுல 20 பேர் செலக்ட் ஆனாங்க. அதுல மதுமிதாவும் ஒருத்தர். அப்புறம், மாநில அளவிலும் இது 42 கண்டுபிடிப்புகள்ல ஒண்ணா இது தேர்வானுச்சு. அப்புறம், டெல்லியில் உள்ள நேஷனல் பிஷிக்கல் லேபரட்டரியில் நடந்த தேசிய அளவிலான கண்காட்சியில் மொத்தம் மதுமிதாவையும் சேர்த்து 589 மாணவர்களின் கண்டுபிடிப்புகள் இடம் பெற்றுச்சு. அதுல இருந்து பைனலா 60 சிறந்த ஆக்கங்களை தேர்தெடுத்தாங்க. அதில் மதுமிதாவின் இந்த கண்டுபிடிப்பும் ஒன்று. அதோடு, மதுமிதாவின் கண்டுபிடிப்பை கூடுதல் கவனம் பெற்று அவருக்கு பாராட்டுச் சான்றிதழும், மாதாமாதம் 5000 ரூபாய் ஊக்கத்தொகையும் கொடுத்திருக்காங்க. தமிழ்நாட்டில் இருந்து தேர்வான ஒரே அரசுப் பள்ளி கண்டுபிடிப்பு எங்களுடையதுதான். மாடித்தோட்டம் அமைக்கும் ஆர்வம் சாதாரண ஆட்கள் தொடங்கி மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் வரை எல்லா தரப்புக்கும் ஏற்பட்டிருக்கு. அப்படிப்பட்ட சூழலில், அவர்களுக்கு மதுமிதாவின் கண்டுபிடிப்பு குறைந்த செலவில் மாடி டேமேஜ் ஆகாமல் கிடைக்கும் நிறைவான நீர்பாய்ச்சும் முறையாக இருக்கும். தேவைப்படுபவர்கள் எங்களிடம் ஆலோசனை பெறலாம். நாங்களே அமைத்துத் தரவும் தயாராக இருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு