Published:Updated:

டாக்டர் முத்து C/O பஸ் ஸ்டாண்ட்

டாக்டர் முத்து C/O பஸ் ஸ்டாண்ட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

ரேல் என விரையும் பேருந்துகள், கையில் சுமையும் கண்களில் தேடலுமாகப் பயணிகள், சுறுசுறுவென நடந்துகொண்டு இருக்கும் பேருந்து நிலைய வியாபாரங் கள்... விழுப்புரம் பேருந்து நிலையத்தின் இந்தப் பரபரப்புக்கு மேலும் விறுவிறுப்புக் கூட்டுகிறது அந்த வைத்தியசாலை!

65 வயது முத்துதான் டாக்டர்! வியர்வை வழிய முத்து மருத்துவ விளக்கம் சொல்லிக்கொண்டு இருக்க, சுற்றிலும் கூட்டம் களைகட்ட, நாமும் எட்டிப் பார்த்தோம். பத்துப் பதினைந்து டப்பாக்களில் வால்மிளகு, வல்லாரை போன்ற மூலிகைப் பொடிகள், கனமான தேக்குமரத் தடிமனில் பூமி சர்க்கரை கிழங்கு - மொத்தமே இவ்வளவுதான் அந்த வைத்திய சாலை!

வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தவர்களில் ஓர் இளைஞரிடம் ''தம்பி, நீ ரொம்ப வீக்கா இருக்கியே! கையைக்கொடு. நாடி பார்ப்போம்'' என்று வலுவில் கை பிடித்து நாடி பார்க்கிறார். ''தம்பி, உனக்கு அடிக்கடி களைப்பு இருக்குமே. இப்பவே ரொம்ப சக்திய இழந்துட்டபோல!'' என்று முத்து சொல்ல, கூட்டம் கொல் என்று சிரிக்கிறது. இளைஞரோ கூச்சத்தில் நெளிகிறார்.  

டாக்டர் முத்து C/O பஸ் ஸ்டாண்ட்

''நரம்புத் தளர்ச்சி, மலச்சிக்கல், பித்தம், சூடு எல்லாமும் போக, மக்களே... பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, செட்டிக்குளம் முத்து வைத்தியர்!'' என்று பிதாமகன்சூர்யா கணக்காக முத்து தாத்தா குரல் எழுப்புகிறார்.

''தாத்தா, இன்னதுக்கு இன்ன மருந்துதான் என்று எப்படிக் கொடுப்பீங்க?'' என்று கேட்டோம். ''நாடி பிடித்து, நாக்கு பாத்து, நரம்பு பிடித்து, அதுக்குத் தக்கன மருந்து கொடுத்தா தீராததும் தீரும்!'' என்று பதில் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே, கூட்டத்தில் இருந்து இடைமறிக்கிறது ஒரு குரல். ''வைத்தியரே, நாய் கடிச்சு நாலு நாள் ஆவுது. மருந்து கொடுங்க'' என்கிறார் நடுத்தர வயதுக்காரர். கடி பட்ட இடத்தைச் சில நிமிடங்கள் உற்றுப் பார்த்துவிட்டு, டப்பாக்களில் இருந்து இரண்டு மூன்று பொடிகளைக் கலந்துகொடுக்கிறார். '''கிழக்கப் பார்த்து நின்னு 'இதுக்குப் பத்தியம் கிடையாது. இதுக்குப் பத்தியம் கிடையாது’னு மூணு தடவ சொல்லிட்டு இந்தத் தண்ணியக் குடி!'' என்று நாய்க் கடி பார்ட்டியின் கையில் அந்தப் பொடியைத் திணிக்கிறார்.

உடல் சூட்டைத் தணிக்கும் பூமிக் கிழங்கு ஒரு துண்டு பத்து ரூபாயாம். கூட்டத்தில் இருந்து ஒரு பெரியவர் வாங்க, ஆளாளுக்குப் பத்து ரூபாய் நீட்டுகிறார்கள். ''நல்லாப் பொடிசா நறுக்கி, கசகசா, வெந்தயம் கலந்து வதக்கி காலை, மாலை ரெண்டு வேளை சாப்பிட்டா சூடு தணியும்பா!'' என்று ஆலோசனையும் சொல்கிறார். தேனி, போடி பக்கம் மட்டுமே கிடைக்கும் இந்தப் பூமி சர்க்கரை கிழங்கு, வெள்ளைப்படுதலுக்குச் சிறந்த மருந்தாம். அதனால் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்த சில பெண்களும் வாங்கிச் சென்றனர்.

டாக்டர் முத்து C/O பஸ் ஸ்டாண்ட்

''நல்லா டீசன்ட்டா கோட் சூட் போட்டு  குளுகுளுனு ரூமைப் போட்டு பார்த்தாத்தான் வைத்தியன்னு ஒப்புக்கிடறாங்க. ஆனா, இந்த மாதிரி தேடி வந்து வைத்தியம் சொன்னா ஏத்துக்கிடமாட்டாங்க தம்பி!'' என்று தன் ஆதங்கத்தையும் பகிர்ந்துகொண்டார். ''நரம்புத் தளர்ச்சிக்குக் கொடுக்கும் ரஜமணிக்கு மட்டும் ஐந்நூறு ரூவா வாங்குறேன். மத்தபடி நாடி பார்த்து மருந்து கொடுத்தாலும், விஷக்கடி முறிவு மருந்துன்னாலும் பத்து ரூபாய்தான். பரம்பரையே மருத்துவக் குடும்பங்க தம்பீ... அதனால் காசைப் பாக்குறது இல்லை!'' என்கிறார் முத்து. இவராவது பரவாயில்லை. இவரது மனைவி வீட்டுக்கே வந்து பிரசவம் பாத்தாலும், வெத்தலை பாக்கு மற்றும் தட்சணையாக ஒரு ரூபாய் மட்டும்தான் வாங்குவாராம்.

நல்லதொரு குடும்பம், மருத்துவப் பல்கலைக்கழகம்!  

நீரை.மகேந்திரன், படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு