##~##

''மணக்கொல்லை. விருத்தாசலம் வட்டத்தில் இருக்கிற ஊர். சுத்துப்பட்டில் ஆறேழு மைல்களைத் தாண்டி, எங்கள் ஊரில் கொள்வன கொடுப்பனவைத்து இருக்கிற வெளி ஊர்க்காரர்களைத் தாண்டி வேறு எவரும் அதிகம் தெரிந்து இருக்காத ஊர். பக்கத்துப் பெரிய ஊர்களான ஆலடி, பாலக்கொல்லையைச் சொல்லி அதுக்கும் பக்கத்தில்... எனப் புரியவைக்க வேண்டும்!'' - தன் ஊர் மர்மம் அவிழ்க்கிறார் எழுத்தாளர் கண்மணி குணசேகரன்.

'' 'இது மணக்கொல்லை இல்லை. பணக்கொல்லை. மண்ணைப் போட்டாலும் பொன்னா வெளையும்!’ - இப்பவும் எங்கள் ஊரில் வயதானவர்கள் பெருமை பேசிக்கொள்வார்கள். ஊருக்குக் கிழக்கே உத்திமா குளம். இப்படி நீர்நிலைகளை வெட்டிவைத்து புண்ணியம் சேர்த்து பிள்ளைப் பேறு வேண்டி  'உத்தமி செட்டியார்’ என்பவரால் வெட்டப்பட்ட குளம் என்பது, வாய் வழி வரலாறு. தெற்கு வெளி முழுக்க மா, பலா மரங்கள். வண்டி மாடுகள் கைமேய்ச்சலாக, வரப்புக்கு வரப்பு நிற்கும்.

என் ஊர்!

அப்படியே நாலு தப்படி தாண்டி அந்தாண்ட போனால் மலையாத்தாள். கையிலும், இடுப்பிலுமாக குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு கணவன் வீட்டில் இருந்து கோபித்துக்கொண்டு வந்தவள். இருளத் தொடங்கிய பொழுதில் பக்கத்தில் இருந்த கிணற்றில் குழந்தைகளோடு தற்கொலை செய்துகொண்டவள், தெய்வமாக நிற்கிறாள்.

வயக்காடும் உண்டு. பேருக்குத்தான் ஏரி. நம்பி நட முடியாது. எல்லாம் கிணற்றுப் பாசனம்தான். நெய்வேலிக்காரனின் ராட்சத உறிஞ்சல்களில் இப்போது எல்லாம் கிணறுகள் ஆவென்று கிடக்க, எல்லாமும் நீர் மோட்டார்கள்தான். கழுத்தைப் பிடித்து நெரிக்கிற கரன்ட் கட்டில், பேரளவில் பாகற்காய் போட்டு பாழ்பட்டுக்கிடக்கிறார்கள்.

என் ஊர்!

வயக்காட்டின் பிள்ளையார் மூலையில் அய்யனார். கண்கண்ட தெய்வம். கற்பூரம்கூடக் கொளுத்தத் தேவை இல்லை. குட்டையில் விழுந்து ஈரத் துண்டோடு ஓடி நெடுங்கிடையில் விழுந்தால், காப்பாற்றக் கூடியவர். ஒழுகுகிற கூரையோ, வர்ணம் சிதைந்த குதிரையோ அவர் எந்தப் புகாரும் செய்யவில்லை. ஊரை ஒட்டி மேற்கில் ரெட்டியார்கள் மட்டுமே கும்பிடுகிற பறவீரன் கோயில். திருட்டுக் கம்பு அறுக்க வந்தவனைப் பிடித்து அழிஞ்சி மரத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டுக் கொளுத்திவிட்டார்கள் ரெட்டிமார்கள். அவனின் நிறைமாத மனைவி விட்ட சாபத்தில் இருந்து தப்பிக்க இப்படி அவனைச் சாமியாக்கிவிட்டார்கள். கிழடு தட்டிய பெரிய இலவு மரத்தை ஒட்டி இடுக்குகளில் அரச மரங்கள் முளைக்க பழைய 'புள்ளையார் கோயில்’. மாலையும் கழுத்துமாக பொண்ணு மாப்பிள்ளைகள் வந்து கற்பூரம் கொளுத்துவார்கள்.

பக்கத்தில் ஊர் ஏரி. எல்லா நாட்களிலும் மனிதர்கள் குளிப்பார்கள். மாட்டுப் பொங்கல் அன்று மட்டும் மாடுகளும் குளிக்கும். கரி நாள் அன்று மட்டும் பொழுதோட, பெண்கள் 'வாய்க்காவெட்டி ஏலேலோ... வரப்பு வெட்டி வாளமீனு ஏலேலோ... கொழம்பு வெச்சி’ கொண்டானு (கும்மி) அடிப்பார்கள். ஆண்கள் முன்பெல்லாம் கபடி ஆடுவார்கள். இப்போது எல்லாம் 'தன்டராகுளம்’ டாஸ்மாக்கில் தண்ணி அடித்துவிட்டு வந்து தள்ளாடுகிறார்கள்.

மற்றபடி, இந்தப் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன் என்றோ, இந்த அஞ்சலகத்தின் மூலம்தான் என் படைப்புகள் போகும் என்றோ என்னால் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியாது. ஏன் என்றால், இரண்டுமே எங்கள் ஊரில் இல்லை. (அண்மையில் பள்ளி மட்டும் முளைத்து இருக்கிறது!) எல்லாமே பக்கத்து ஊர் இருளக்குறிச்சியில்தான். அதேபோன்று என் முதல் படைப்பை இந்த வீட்டில் இருந்துதான் எழுதினேன் என்று காட்டவும் எனக்குப் பொசுப்பு இல்லை. பழைய வீடு என் அண்ணன் பாகத்துக்குப் போய், அதை யும் இடித்து என் அண்ணன் மகன் புது வீடு கட்டி விட்டான்.

நடுக்கங்களோடு கூடிய நெட்டெழுத்தில் கையெழுத்துப் போடும் அப்பா, கை நாட்டு அம்மா. விவசாயக் குடும்பத்தில் இருந்து நானும் என் அண்ணனும்தான் முதல் தலைமுறைப் படிப்பாளிகள். எட்டின வரைக்குமான பங்காளி, ஒரம்பரையில் நான் மட்டுமே படைப்பாளி.

எங்கோ காடுகள் மனைகளாகிக்கொண்டு இருப்பதால் எம் முந்திரிக் காடுகளில் மான்களும் மயில்களும் தென்படவும், தங்க நாற்கர சாலை யால் வெட்டப்பட்ட புளிய மரங்களால் ஊருக் குள் ஏராளமான குரங்குகளும் தவிர, மற்றபடி என் ஊரைப் பற்றிப் பெருமையாகச் சொல் வதற்கு எதுவும் இல்லை. பிற்காலத்தில் 'கண்மணி குணசேகர்னு பெரிய எழுத்தாளர் எங்க ஊர்ல தான் பொறந்தார்’னு யாராவது சொல்லிக் கொண்டால்தான் உண்டு!''

- படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு