Published:Updated:

இவர்கள் இன்னும் குழந்தைகள்!

இவர்கள் இன்னும் குழந்தைகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

##~##

'பள்ளிக்கூடம் நடத்த இடம் வேணும்னு சொன்ன உடன் இடம் தர முன்வந்தவங்க, இப்படி ஒரு பள்ளிக்கூடம்னு சொன்னதும் இடம் கொடுக்க மறுத்துட்டாங்க. போராடித்தான் இந்த இடத்தைப் பிடிச்சோம்!'' என்று வருத்தம் தொனிக்கப் பேசுகிறார் சித்ரா.

டவுன் சின்ட்ரோம், செரிபரல் பால்சி, ஆட்டிஸம் போன்ற மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான 'சத்யா சிறப்புப் பள்ளி’யின் இயக்குநர் இவர். ஏழு வருடங்களாக நடத்தப்படும் இந்தப் பள்ளியில் 250 சிறப்புக் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

''அமெரிக்காவில் பணியாற்றிய மருத்துவர் சுரேந்தர், புதுச்சேரியில மூளை வளர்ச்சி குன்றியவர்களுக்குச் சிறப்புப் பள்ளி ஆரம்பிக்க நினைச்சு, தன் கல்லூரி நண்பர்களின் உதவியால் இந்தப் பள்ளியை ஆரம்பிச்சார். ஆனா, அவ்வளவு சுலபத்தில் இந்தப் பள்ளியில் குழந்தைகள் சேரலை. இதுமாதிரியான குழந்தைகள் இருக்காங்கன்னு தெரிஞ்சா, நாங்களே வீடு தேடிப் போய் பேசி அழைச்சுட்டு வருவோம்.

இவர்கள் இன்னும் குழந்தைகள்!

அப்படி ஒருமுறை பாதிக்கப்பட்ட பெண்ணைப் பார்க்க ஒரு கிராமத்துக்குச் சென்று இருந்தோம். அந்தப் பெண்ணோட அம்மா ஒரு நாளைக்கு 8 மணி நேரம் அவளை நைலான் கயித்துல கட்டிப் போட்டுட்டு வேலைக்குப் போயிடுவாங்க. அந்தப் பொண்ணு கையில காயங்களும் தழும்புகளுமா இருந்தன. 'உங்க பெண்ணை இப்படி நீங்களே கட்டிப் போடலாமா?’னு கேட்டதுக்கு அந்த அம்மா சொன்ன ரெண்டு விஷயங்கள் எங் களை ரொம்பவே யோசிக்கவைத்தது.

'எந்தப் பள்ளியிலும் என் பொண்ணைச் சேர்க்க மறுக்கிறாங்க. என்னோட கூலி வேலை சம்பாத்தியத்தில் பாதி என் பொண்ணுக்கே போயிடுது!’ அந்த ரெண்டு விஷயங்களுமே உண்மை. சாதாரணமா ஒரு குழந்தைக்கு மாதம் 500 ரூபா செலவாச்சுன்னா, இந்த மாதிரி குழந் தைகளுக்கு அஞ்சு மடங்கு அதிகமா செலவாகும்.

இவர்கள் இன்னும் குழந்தைகள்!

அதனால்தான் இப்படி ஒரு பள்ளியைத் தொடங்கினோம். 2 வயசில் இருந்து 45 வயதுவரை உள்ளவங்க இங்கே இருக்காங்க. இது மாதிரியான குழந்தைகளுக்கு 14 வயசுக்குள்ள சரியான சிகிச்சை கொடுத்தா, நிச்சயம் நல்ல முன் னேற்றம் இருக்கும். பேச முடியாதவங்களுக்கு ஸ்பீச் தெரபி, கை, கால்கள் சரிவர இயங்குறதுக்குத் தண்ணீரில்வெச்சு ஹைட்ரோ தெரபி, 18 வயசுக்கு மேல் இருக்கிறவங்களுக்கு ஆக்குபெஷனல் தெரபினு பல வகையான சிகிச்சைகள் கொடுக்கிறோம்.

எங்க முயற்சியால் நாலு குழந்தைகள் மற்ற மாணவர்களைப்போல் பள்ளியில் சேர்ந்து படிச்சிக்கிட்டு இருக்காங்க. போன வாரம் ரெண்டு பேர் ஆக்குபெஷ னல் தெரபி மூலமா தட்டாஞ்சாவடியில் இருக்கும் தொழிற்சாலையில் மெஷின் ஆபரேட் பண்ற வேலையில் சேர்ந்து இருக்காங்க!'' என்று தன்னம்பிக்கை வார்த்தைகள் உதிர்க்கிறார் சித்ரா.

''குழந்தைகள் பிறந்த உடனே அழணும். மூணு மாசத்தில் தலை நிக்கணும். அப்புறம் குப்புறப் படுத்துத் தவழணும். ஒரு வயசு ஆகும்போது உட்காரணும். இது எல்லாம் சரியா நடந்தா, அந்தக் குழந்தையோட மூளை வளர்ச்சி சரியா இருக்குனு முடிவு பண்ணிடலாம். ஆனா, இந்த முறைப்படியான மாற்றங்கள் நடக்க, சில மாதங்கள் தாமதமானா உடனடியா தக்க மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கணும். ரொம்பச் சின்ன வயசுலயே பிரச்னை என்னன்னு கண்டுபிடிச்சுட்டா, சரியான சிகிச்சை முறைகள் மூலம் நிச்சயம் குணமாக்க முடியும்!'' என்கிறார் பள்ளியின் தலைமை நிர்வாகி நல்லாம் கிருஷ்ண பாபு.

கிராமப் பகுதிகளில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் இருக்கும் இடத்துக்கே சென்று சிகிச்சை அளிக்க ஒரு மொபைல் யூனிட் வாகனமும் இங்கு உள்ளது. வாழ்க்கைப் புத்தகத்தின் முதல் பக்கத்தையே தாண்டாமல் குழந்தைகள், குழந்தைகளாகவே தேங்கி விடும் சோகம் இவர்களுடையது. அந்தச் சோகத்தை சிறிதளவேனும் கலையச் செய்யும் இப் பள்ளியின் சேவை, உண்மையில் 'சிறப்பு’த் தகுதி வாய்ந்ததுதான்!

- நா.இள.அறவாழி, படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு