##~##

முனியப்பிள்ளையைப் பார்க்கும்போது நம் கண் களின் மீது நமக்கே சந்தேகம் எழுகிறது! பார்வை அற்ற இவர் செய்யும் காரியங்கள், அத்தனை ஆச்சர்யம் அளிப்பவை!

 விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெரிய சிறுவத்தூரில் வசிக்கிறார் முனியப்பிள்ளை. நான்கு வயதில் இவரைத் தாக்கிய அம்மை நோய், அவரது பார்வைத் திறனைப் பறித்துவிட்டது! சிறு வயதில் தாய், தந்தையை இழந்து இப்போது அண்ணன் வீட்டில் வசித்து வருகிறார். யாருடைய உதவியும் இல்லாமல், காலையில் எழுந்ததும், தானே குளித்து, தனது உடைகளையும் துவைப்பதோடு மட்டுமல்லாமல், அந்த ஊரில் அனைத்து இடங்களுக்கும் யாருடைய துணையும் இல்லாமல் சென்று வருகிறார்.

பார்வைகளுக்கு அப்பால்...

கண் தெரியாமல் இருக்கும்போதே, விதவிதமாக வயர் கூடைகள் பின்னுவது, தென்னங்கீற்றில் தட்டி முடைவது என்று அசத்துகிறார். கிணற்றில் இறங்கி நீச்சல் அடிப்பது, தேங்காய் மட்டை உரிப்பது என்று பல வேலைகளை எல்லோரையும்போல் இயல்பாகச் செய்கிறார்.

''ஆரம்பத்தில் உலகமே இருண்டு போன மாதிரிதான் இருந்தது. அப்பதான் மஹாசெல்வி அக்கா எனக்கு உதவி செஞ்சாங்க. எங்க வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த அவங்க என்கூடப் பிறக்காத அக்கா. அவங்கதான் எனக்குக் கூடை பின்ன கத்துக்கொடுத்தாங்க. அவங்க வீட்ல ஒரு பண்டம் செஞ்சாலும்

பார்வைகளுக்கு அப்பால்...

என்னைக் கூப் பிட்டுக் கொடுப்பாங்க. அவ்வளவு அன்பா இருந்தவங்க, இப்போ மனரீதியா பாதிக் கப்பட்டு சில நேரங்களில் என்னையே திட்டுவாங்க. அவங்க சத்தம் எனக்கு இப்போ கேட்டாலும் அழுகைதான் வரும் அண்ணே!'' என்று கண் கலங்கு கிறார்.

''இந்த ஊரில் யாராவது கூடை வேணும்னா, ஒயர் வாங்கிட்டு வந்து, முனியப்பிள்ளையிடம் கொடுத்துடுவாங்க. உடனே கடகடன்னு கூடை பின்னிக் கொடுத்துடுவான். அதேபோல வீடு கட்டுறதுக்கும் தென்னந்தட்டி வேணும்னா தென்னம் ஓலையை வாங்கிக்கொடுத்தாப் போதும். 1 மணி நேரத்துக்கு 20 தென்னந்தட்டி பின்னிக் கொடுத்துடுவான். இதுக்கெல்லாம் பெரிசா காசு, பணம்னு வாங்குறது கிடையாது. பாதி ஓசிக்குத்தான் செய்து கொடுக்குறான். குரலை வெச்சே யார் கூப்பிடுறாங்கன்னு சரியா சொல்வான். முனியப்பிள்ளை எங்க ஊரில் உள்ள பிள்ளை இல்லீங்க. எங்க வீட்டுப் பிள்ளைகளில் ஒருத்தன்!'' என்று ஒருமித்த குரலில் நெகிழ்கிறார்கள் ஊர் மக்கள்.

சிறு வயதில் ஊரை விட்டுப் போனவர்களின் குரலைக்கூட ஞாபகம்வைத்து, அவர்கள் ஊருக்கு வரும்போது சரியாகப் பெயர் சொல்லி அசத்துவாராம் முனியப்பிள்ளை. ''இப்பவும் எப்பவும் முனியப்பனுக்குப் பார்வை தெரியா ததை நாங்க ஒரு குறையா நினைக்கலை. ஏன்னா, அவனால் நாம செய்யுற அத்தனை வேலைகளையும் செய்ய முடியும். அவன் வருமானம் எங்களுக்குத் தேவை இல்லை. காலம் முழுக்க எங்களோட இருந்தாலே போதும். அவன்தான் எங்களுக்கு மூத்த பிள்ளை!'' என்று பெருமையோடு சொல்கின்றனர் மூன்று பெண் பிள்ளைகளுக்குப் பெற்றோரான முனியப்பிள்ளையின் அண்ணன் ரவிச்சந்திரனும் அண்ணி வசந்தியும்.

பார்வைகளுக்கு அப்பால்...

''எங்க ஊரில் இருக்குற எட்டுத் தெருவிலும் பங்குனி மாதம் ஒவ்வொரு நாள் மழை வேண்டி களிமண்ணால் ஆன, ஆண்-பெண் சிலைகளுக்குப் பூ அலங்காரம் செய்து திருமணம் செய்துவைப்போம். இந்த ஊரில் உள்ள பெண் பிள்ளைங்க ஒரு தட்டில் பூ, பழம் எடுத்துக்கிட்டு, அந்தப் பெண் சிலையையும் தூக்கிட்டு மேள தாளத்துடன் பெண் அழைப்பு நடத்துவாங்க. இப்படி நடத்தும் நிகழ்ச்சிக்கு முன்பெல்லாம் சலவைத் தொழிலாளி ஒருவர்தான் பொம்மை செய்து கொடுத்துக்கிட்டு இருந்தாரு. ஆனா, இப்போ முனியப்பிள்ளைதான் அந்தச் சிலைகளைச் செய்யிறாரு!'' என்கின்றனர் பெரிய சிறுவத்தூர் மக்கள்.

சிறுவத்தூரின் 'எங்க வீட்டுப் பிள்ளை’ இந்த முனியப்பிள்ளை!

- அற்புதராஜ், படங்கள்: எஸ்.தேவராஜன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு