Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 10

பாரதி தம்பி, படம்: ரமேஷ் கந்தசாமி

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 10

பாரதி தம்பி, படம்: ரமேஷ் கந்தசாமி

Published:Updated:

மிழகப் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரையில் தற்போது அமலில் உள்ள தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு (Continuous Comprehensive Evaluation சி.சி.இ.), கல்வியாளர்களிடையே பல்வேறு விவாதங்களைத் தூண்டியுள்ளது. 2012-13ம் கல்வி ஆண்டில் இருந்து அமலில் இருக்கும் இந்த முறை, நமது பாரம்பர்ய வகுப்பறைச் சூழலை தலைகீழாகப் புரட்டிப்போட்டு, கற்கும் முறை, கற்பிக்கும் முறை என அனைத்தையும் மறுசீரமைத்து, புதிய பாய்ச்சலை நிகழ்த்தி உள்ளது.

இதன்படி, மாணவர்கள் முழு ஆண்டு தேர்வு வரை மொத்தப் புத்தகத்தையும் படித்துக்கொண்டிருக்கத் தேவை இல்லை. ஒவ்வொரு பாடப் பிரிவும் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, முப்பருவத் தேர்வு முறை கொண்டுவரப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வுக்கும் அதற்கு உண்டான பகுதியை மட்டும் படித்தால் போதும். இது, மாணவர்களுக்கு பெரிய ஆசுவாசம். காலாண்டுக்குப் படித்து, அதையும் சேர்த்து அரையாண்டுக்குப் படித்து, எல்லாவற்றையும் சேர்த்து முழு ஆண்டுக்குப் படித்து... என்ற சுமை மிகுந்த பழைய முறையில் இருந்து மாணவர்களுக்கு விடுதலை. பழைய முறையின்படி, வருடம் முழுவதும் நன்றாகப் படிக்கும் மாணவர் இறுதித் தேர்வு சமயத்தில் உடல்நிலை சரியில்லாமலோ, வேறு ஏதோ காரணத்தினாலோ சரியாக எழுத முடியாமல் போனால், ஆண்டு முழுவதும் நன்றாகப் படித்திருந்தும்கூட பயன் இல்லை. சி.சி.இ-யின்படி முப்பருவ முறையில் தேர்வுகள் நடப்பதால், மாணவரின் ஆண்டு முழுவதுக்குமான கற்கும் திறன் மதிப்பிடப்படுகிறது.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 10

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேர்வுகளில் மட்டுமா... மதிப்பெண் வழங்கும் முறையிலும் மாற்றம் வந்துள்ளது. இதன்படி மாணவர்கள் 60 மதிப்பெண்களுக்குத்தான் தேர்வு எழுதுகின்றனர். மீதம் உள்ள 40 மதிப்பெண்கள் இரண்டாகப் பிரிக்கப்படுகின்றன. வகுப்பறையில் மாணவர்களின் கவனிக்கும் திறன் எப்படி உள்ளது என்பதற்கு 20 மதிப்பெண்கள். இது முக்கியமானது. ஏனெனில், இதுவரையில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் சேர்த்து ஏதோ ஓர் ஆசிரியர் கேள்வித்தாள் தயாரிப்பார். அதற்கு மாணவர்கள் பதில் எழுத வேண்டும். பாடம் நடத்துவது ஒருவர், கேள்வி கேட்பது இன்னொருவர் என்ற இந்த முறை வன்முறையானது. பாடம் நடத்தியவரே கேள்வி கேட்டால்தான், எந்த மாணவர் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளார், யாருக்குக் கற்றல் குறைபாடு உள்ளது என்பதைக் கண்டறிய முடியும். சி.சி.இ அதற்கு வாய்ப்பு அளிக்கிறது. இந்த 20 மதிப்பெண்கள் அதற்குத்தான். மற்றொரு 20 மதிப்பெண், ஆசிரியர் தரும் பாடம் சார்ந்த செயல்பாடுகளை (activities) மாணவர் எப்படிச் செய்கிறார் என்பதற்கானது.

பருவ முறை தேர்வுகள் பள்ளிகளில் வெற்றிகரமான மாற்றங்களைக் கொண்டுவரும் என்பதற்கு சி.பி.எஸ்.இ பள்ளிகளே உதாரணம். சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 10-ம் வகுப்பில் இரு பருவத் தேர்வு முறை இப்போதும் அமலில் உள்ளது.

சி.சி.இ முறை என்பது, ஆசிரியர்களிடம் கடின உழைப்பைக் கோருகிறது. பழைய முறையில் மொத்த வகுப்புக்கும் ஒரு பாடத்தை நடத்திவிட்டு ஆசிரியர் கிளம்பிவிடுவார். இந்தப் புதிய முறையில் ஒவ்வொரு மாணவரையும் தனிப்பட்ட வகையில் கூர்ந்து கவனித்தாக வேண்டும். பழைய முறையில் ஒரு கேள்விக்கு பாடப் புத்தகத்தில் என்ன விடை இருக்கிறதோ அதைத்தான் எழுத வேண்டும்; அதற்குத்தான் மதிப்பெண். அதைவிடக் கூடுதலாகத் தெரிந்திருந்தாலும் அதை எழுத முடியாது.  

ஒரு நெல் விவசாயி வீட்டு மாணவரிடம், நெல் பயிரிடும் முறைகுறித்து பாடத்தில் இருந்து கேள்வி கேட்பதைக் காட்டிலும் அவரது அனுபவத்தில் இருந்து விவரிக்கச் சொன்னால், மிகச் சரியாகச் சொல்வார். ஒரு கிராமத்து மாணவரிடம், 'பறவை முட்டை போடுமா, குட்டி போடுமா?’ என்று கேட்டால், புன்னகையுடன் தன் ஊர்ப் பறவைகள் குறித்து விவரிப்பார். புதிய சி.சி.இ முறை இந்தச் சுய சிந்தனை முறையை அனுமதிக்கிறது; ஊக்குவிக்கிறது; மதிப்பெண் வழங்குகிறது.

உதாரணமாக, சி.சி.இ 6-ம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில் ரயில், பேருந்து இரண்டிலும் மக்கள் கூட்டம் தொங்கியபடி செல்லும் புகைப்படங்கள் அருகருகே தரப்பட்டுள்ளன. 'இதைப் பற்றிய உன் கருத்தை ஐந்து நிமிடங்கள் பேசுக’ என்பது கேள்வி. கூட்டம் நிரம்பிய ரயில்களையும் பேருந்துகளையும் தினசரி பார்க்கும்; அதில் பயணிக்கும் நகரத்து மாணவர், அந்தப் புகைப்படங்கள் குறித்து எண்ணற்ற கருத்துகளைச் சொல்ல முடியும். வாகனப் பற்றாக்குறை, மக்கள்தொகைப் பெருக்கம், நகர்மயமாதல், உயிர் ஆபத்து, போக்குவரத்து விதிகள்... என்ற பல விடைகளைத் தருவதற்கான சாத்தியங்களை அது உள்ளடக்கியுள்ளது. முக்கியமாக, இதற்கான விடைகளை மாணவர் எழுதத் தேவை இல்லை; வகுப்பில் பேசினாலே போதுமானது. அதற்கும் மதிப்பெண் உண்டு. நமது கல்வி முறை, எழுத்துடன் பிரிக்க முடியாத வகையில் காலங்காலமாக ஒட்டவைக்கப்பட்டுள்ளது. ஒரு கேள்விக்கான விடை தெரிந்து, அதைச் சொன்னால் மதிப்பெண் கிடையாது. எழுதிக் காட்ட வேண்டும். அப்போதுதான் மதிப்பெண். இந்த இறுக்கமான முறையைத் தளர்த்தி சொல்வழிக் கல்விக்கும் முக்கியத்துவம் தருகிறது சி.சி.இ.

ஒரு மாணவர் வகுப்பறையில் பாடிக்கொண்டே இருக்கிறார் என்றால், 'படிக்க வந்த இடத்துல என்ன பாட்டு வேண்டியிருக்கு?’ என்று தட்டிவைப்பது பழைய முறை. இப்போது அந்த மாணவரின் பாடும் திறனை வளர்க்கவேண்டியது ஆசிரியரின் பொறுப்பு. முதல் பருவத்தில் அவரது பாடும் திறன் எப்படி இருந்தது, இறுதிப் பருவத்தில் எப்படி இருக்கிறது என்பதைக் கண்காணித்து அந்த மாணவருக்கு என்று ஒரு பதிவேட்டை பராமரிக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு மாணவருக்கும் செய்ய வேண்டும். முன்பு தேர்வு விடைத்தாள்களை ஓர் ஆசிரியர் திருத்துகிறார் என்றால், எல்லா விடைத்தாள்களிலும் ஒரே பதில்தான் இருக்கும். அதாவது 'பூக்கும் வகைத் தாவரங்கள் எவை?’ என்றால், பதில் ஒன்றுதான். புதிய முறை அப்படி அல்ல. இதில் கேள்வியின் தன்மையும் மாறுகிறது; பதில்களும் மாறுகின்றன. ஒரு வகுப்பறையில் 40 பேர் இருக்கிறார்கள் என்றால், 40 விதமான விடைகள் கிடைக்கின்றன.

சி.சி.இ முறை வந்த பிறகு பள்ளியில் இருந்து இடைநிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, வெகுவாகக் குறைந்துள்ளது. ஆனால், 'கல்வியின் தரம் குறைந்துவிட்டது. 7-ம் வகுப்பு மாணவருக்கு 'அ’னா, 'ஆ’வண்ணாகூடத் தெரியவில்லை’ என்று சிலர் விமர்சிக்கின்றனர். எங்கேனும் சில இடங்களில் அப்படி இருக்கலாம். ஒட்டுமொத்தமாக அப்படிச் சொல்ல முடியாது. அப்படியே இருந்தாலும் அது மாணவரின் தவறோ, சி.சி.இ முறையின் தவறோ அல்ல. நமது கல்வித் துறையின் நிர்வாகத் தவறாகவோ, ஆசிரியர்களின் 'அரசு ஊழியர் அசட்டை மனநிலை’யாகவோதான் இருக்கும். முந்தைய நமது கல்விமுறை, ஒரு மாணவருக்கு எதுவெல்லாம் தெரியாது என்பதைக் கண்டறிவதைத்தான் முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்தது. பழைய கேள்வித்தாள்களை நினைவுபடுத்திப் பார்த்தாலே இது புரியும். சி.சி.இ முறை, ஒரு மாணவருக்கு எதுவெல்லாம் தெரியும் என்பதைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நேர்மறையில் வழங்கப்படும் இதுதான், கல்வியின் உண்மையான நோக்கத்தைப் பூர்த்தி செய்கிறது!

இன்றைய நிலையில் ஒரு மாணவர் எல்.கே.ஜி-யில் தொடங்கி +2 வரையிலும் 14 ஆண்டுகள் பள்ளிக்கூடம் செல்கிறார். ஆனால் +2-வில் நான்கு பாடங்களில் எடுக்கும் மதிப்பெண்கள்தான் அவரது ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் தீர்மானிப்பதாக உள்ளது. அதாவது 14 ஆண்டு காலப் படிப்பை வெறும் நான்கு நாட்களை வைத்து முடிவுசெய்கிறோம். இதில் உள்ள அநீதியை உணரும் யாரும், சி.சி.இ முறையை வரவேற்கவே செய்வார்கள். நமது ஆசிரியர்களில் ஒரு பகுதியினர்கூட இதை ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால், பெரும்பகுதி ஆசிரியர்கள் புதிய சி.சி.இ முறையுடன் பொருந்திப்போவதில் சிரமப்படுகின்றனர்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 10

அரசு இந்த முறையை அமல்படுத்தும் முன்பு, ஆசிரியர்களுக்குப் போதுமான அளவில் பயிற்சி அளித்திருக்க வேண்டும்; அவர்களின் மனங்களில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ஓடியாடி, உடல் அசைவுகளின் மூலமும் பாடம் நடத்தச் சொல்கிறது சி.சி.இ. இத்தனை நாட்கள் உட்கார்ந்தபடியே பாடம் நடத்திய 50 வயது ஆசிரியரை, திடீரென இப்போது எழுந்து ஓடச் சொன்னால் அவரால் முடியுமா? இவற்றை முன்கூட்டியே பரிசீலித்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாததன் விளைவுதான் இன்று சரிபாதி ஆசிரியர்கள் 'இந்த முறையே தவறானது. இது, மாணவர்களை மேலும் சோம்பேறிகளாக்கவே உதவுகிறது’ என்று குற்றம் சாட்டுகின்றனர்.

ன்னொரு பக்கம் சி.சி.இ முறை ஆசிரியர்களுக்கான வேலைப்பளுவை பல மடங்கு அதிகரித்துவிட்டது. ஓர் வகுப்பறையில் 20, 25 மாணவர்கள் இருந்தால், ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிக் கவனம் செலுத்த முடியும். ஆனால் நமது அரசுப் பள்ளிகள் பலவற்றில் ஆசிரியர் - மாணவர் விகிதம் 1:60, 1:100 என்பதாகவும், அதைத் தாண்டியும் உள்ளது. இத்தனை பேரையும் ஓர் ஆசிரியர் தனித்தனியே கண்காணிப்பது சாத்தியமே இல்லாதது. கல்வித் துறை அதிகாரிகள் இந்த நடைமுறைச் சிக்கல்களை சரிசெய்யாமல், ஆசிரியர்கள் மீது தொடர்ந்து அழுத்தம் செலுத்துகின்றனர். இதனால் என்ன ஆகிறது என்றால், ஆசிரியர்கள் வெறுமனே ஆவணங்களில் மட்டும் எல்லாவற்றையும் எழுதிவிட்டு நடைமுறையில் எதையும் செய்யாமல் விட்டுவிடுகின்றனர். இதை நாம் எப்படிப் புரிந்துகொள்வது? 'ஆசிரியர்களுக்கு தலைக்கு மேல் வேலை. அவர்களும் என்னதான் செய்வார்கள்?’ என்று கரிசனத்துடன் இதை அணுக முடியுமா? தலைக்கு மேல் வேலை இருப்பது உண்மைதான். அந்தச் சுமையை இறக்கிவைக்க முயற்சிக்கும் அதே நேரம், கால்களுக்கும் கீழ் இருக்கும் மாணவர்களை அந்தச் சுமை அழுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் அவர்களின் கடமைதான். சொல்லப்போனால், இரண்டாவதுதான் முதன்மைக் கடமை. அதற்குத்தான் ஆசிரியர்கள் முன்னுரிமை தர வேண்டும்!

- பாடம் படிப்போம்...

பத்தாம் வகுப்பிலும் தேவை மாற்றம்!

சி.சி.இ முறை 1-9ம் வகுப்பு வரையிலும் நடைமுறையில் உள்ளது. ஆனால், 10-ம் வகுப்பு பழைய முறையில்தான் நடந்து வருகிறது. மூன்று ஆண்டுகளாக சி.சி.இ முறையில் பயின்ற மாணவர்கள் இப்போது 10-ம் வகுப்பில் நுழைந்துள்ளனர். இதுவரையில் முப்பருவத் தேர்வு முறையில் தேர்வு எழுதிய இவர்கள், இப்போது மொத்தப் புத்தகத்தையும் படித்தாக வேண்டும். 10-ம் வகுப்புத் தேர்வு எழுதவிருக்கும் சுமார் 12 லட்சம் மாணவர்கள் இந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றனர். அடுத்து வரும் ஆண்டுகளிலும் இது தொடரும். 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலும் சி.சி.இ முறை; 10-ம் வகுப்பில் இருந்து வேறு முறை... என்பது மாணவர்களை உளவியல்ரீதியாகப் பாதிக்கக்கூடியது. 10-ம் வகுப்புக்கும் சி.சி.இ முறையைக் கொண்டுவர வேண்டும் என்பது கல்வியாளர்களின் கோரிக்கை. +1,+2-க்கு இரு பருவத் தேர்வு முறையைக் கொண்டு வர வேண்டும் என்றும் கோரப்படுகிறது. இது நியாயமானதும் சரியானதும்கூட. அரசு உடனே இதுகுறித்து பரிசீலிக்க வேண்டும். இல்லையெனில் நல்ல திட்டம் ஒன்று, தேவை இல்லாமல் சீரழிக்கப்படும் நிலையே ஏற்படும்!

கேள்வித்தாளை சுவாரஸ்யப்படுத்துங்கள்!

சி.சி.இ. முறையில் கேள்விகள் முக்கியமானவை. கர்நாடக மாநில கேள்வித்தாளில் ஒரு கேள்வி. 'கர்நாடக அரசு, மின் சிக்கனத்தைப் பின்பற்றும் ஒரு குடும்பத்துக்கு விருது தர உள்ளது. கீழ்க்காணும் மூன்று குடும்பங்களில் எந்தக் குடும்பத்துக்கு மின் சிக்கனத்துக்கான விருது தரலாம். பரிந்துரை செய்க’ என்று சொல்லிவிட்டு மூன்று படங்கள் தரப்பட்டுள்ளன. முதல் படத்தில் ஒரு வீட்டில் எல்லா அறைகளிலும் விளக்குகள் எரிகின்றன்; மின்விசிறிகள் ஓடுகிறன்றன. ஆனால், வீட்டில் உள்ளவர்கள் ஓர் அறையில்தான் இருக்கிறார்கள். இன்னொரு வீட்டில் எல்லோரும் ஓர் அறையில் அமர்ந்துள்ளனர். அந்த அறையில் மட்டும் விளக்கு; மின்விசிறி இயங்குகிறது. மற்றொரு வீட்டில் எல்லா அறைகளிலும் ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதைப் பார்த்து மாணவர் பதில் எழுதும்போது சுயமாகச் சிந்திக்கிறார். மின் சிக்கனத்தில் இருந்து எல்.இ.டி விளக்கு வரை பலவற்றைத் தெரிந்துகொள்கிறான்.

இத்தகைய கேள்வித்தாள், பல பக்கங்கள் கொண்டதாக ஒரு புத்தகம்போல இருக்கும்; இருக்க வேண்டும். மற்ற மாநிலங்களில் அப்படித்தான் உள்ளது. ஆனால், தமிழகத்தில் பாடங்களை சி.சி.இ முறையில் நடத்திவிட்டு கேள்வித்தாளை மட்டும் வழக்கம்போல நான்கு பக்கத்தில் அடித்துத் தருகிறார்கள். அதில் 'தஞ்சாவூர், தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படுகிறது. ஏன்?’ என்று இருக்கிறது. இது மாணவரின் பதில் எழுதும் ஆர்வத்தைக் குறைக்கிறது. அரசு, கேள்வித்தாள்கள் விஷயத்தில் முழுக் கவனம் செலுத்தி, அதற்கு ஆகும் செலவுகளைப் பற்றி கவலைப்படாமல் உடனடியாக மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும்.