Published:Updated:

ஜெராக்ஸ் எம்.ஜி.ஆர்!

எம்.ஜி.ஆர் இறந்து 27 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே எம்.ஜி.ஆரின் தாக்கம் இன்னமும். தூத்துக்குடி அழகர் ஜூவல்லரியின் உரிமையாளர் பத்மநாபனும் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர்.

ஜெராக்ஸ் எம்.ஜி.ஆர்!

''எங்க கடைக்கு நேரு, காமராஜர், கக்கன், எம்.ஜி.ஆர் போன்ற பெரிய தலைவருங்க வந்திருக்காங்க. ஆனாலும் நாங்க எந்தக் கட்சியையும் சார்ந்தவங்க கிடையாது. ஒரு நாள் எம்.ஜி.ஆர் பற்றிய ஒரு புத்தகத்தைப் படிச்சேன். அப்போதிலிருந்தே அவர் வழி நடக்கிற தொண்டனாகவே மாறிவிட்டேன். தனக்காக வாழ்ந்தா மட்டும் போதாது, மத்தவங்களுக்காகவும் வாழ வேண்டும்னு எம்.ஜி.ஆர் சொல்லிக் கொடுத்திருக்கிறார். ஷூட்டிங்கில் இருக்கும்போது, அங்கே இருக்கிறவங்க சாப்பிட்டால்தான் தலைவரும் சாப்பிடுவாராம். அதுவும் அந்த மக்களுக்கு  என்ன சாப்பாடோ, அதைத்தான் இவரும் சாப்பிடுவாராம்.

ஜெராக்ஸ் எம்.ஜி.ஆர்!

பீடி, சிகரெட், சாராயம்னு எதையுமே எம்.ஜி.ஆர் தொட்டது இல்லை. சினிமாவில்கூட அப்படி நடிக்கவில்லை. அவர் வழியைப் பின்பற்றுகிற நானும் அது போலவேதான். ஒன்றையுமே தொட மாட்டேன். வாழ்நாள் முழுவதும் எம்.ஜி.ஆர் போலவே வாழ வேண்டும் என ஆசைப்பட்ட நான், 'உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் எம்.ஜி.ஆர் தனது ஜோடியுடன் வெளிநாடு சென்றதுபோல், நானும் எனது மனைவி செண்பகவள்ளியுடன் சிங்கப்பூர், ஹாங்காங், பேங்காங், மலேசியா, லண்டன், பாரீஸ், ஸ்விட்சர்லாந்த், ஜெர்மன், ரோம், இத்தாலி, நார்வே போன்ற நாடுகளுக்குப் போய் வந்திருக்கிறேன். ஷூட்டிங் நடந்த அதே பகுதிகளில் நின்று அவர் எப்படி டூயட் பாடினாரோ? அதேபோல் நானும் எனது மனைவியுடன் டூயட் பாடியிருக்கேன்'' என்றவர்,

ஜெராக்ஸ் எம்.ஜி.ஆர்!

''மக்களை நல்வழிப்படுத்திய மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். போல மிமிக்ரி செய்பவர்கள் அவர் குண்டடிபட்ட பிறகு பேசியதையே பேசி கிண்டல் செய்கிறார்கள். அடிபடுவதற்கு முன்பு எடுத்த படங்களில் உள்ள வசனத்தைப் பேச வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். எம்.ஜி.ஆரும் கடவுளும் ஒண்ணுதான்.  இருவரையும் நான் நேரில் பார்க்கவில்லை. எம்.ஜி.ஆர் - தனிப்பிறவி, கடவுள் - தெய்வப்பிறவி. அவ்வளவுதான்'' என்கிறார் பரவசத்துடன்.

என்னா பக்தி!

- எஸ்.சரவணப்பெருமாள், படங்கள்: ஏ.சிதம்பரம்

அடுத்த கட்டுரைக்கு