Published:Updated:

'இருப்பா... பாயின்ட் வரட்டும்' என காத்திருந்து, புள்ளிகளை இழந்து... தோற்றதா டெல்லி ? #ProKabaddi

'இருப்பா... பாயின்ட் வரட்டும்' என காத்திருந்து, புள்ளிகளை இழந்து... தோற்றதா டெல்லி ? #ProKabaddi
'இருப்பா... பாயின்ட் வரட்டும்' என காத்திருந்து, புள்ளிகளை இழந்து... தோற்றதா டெல்லி ? #ProKabaddi

'இருப்பா... பாயின்ட் வரட்டும்' என காத்திருந்து, புள்ளிகளை இழந்து... தோற்றதா டெல்லி ? #ProKabaddi

ப்ரோ கபடித் தொடரின்   (Pro Kabaddi) நேற்றைய போட்டியில் குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ் அணியும் தபாங் டெல்லி அணியும் மோதின. டெல்லி தனது முதல் போட்டியில்  வெற்றி பெற்று நம்பிக்கையோடு இந்த மேட்சை எதிர்கொண்டது. குஜராத் அணிக்கு இந்த சீசனில் இதுதான் முதல் போட்டி. செம எனெர்ஜியுடன் களம் கண்டது. 

குஜராத் அணியின் பிளேயிங்  செவனில் சுகேஷ் ஹெக்டே, இரான் வீரர் ஃபாசெல் அட்ரச்சலி, சச்சின்  உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். டெல்லி அணியில் மீரஜ்  ஷேய்க், நிலேஷ் ஷிண்டே, அபோஃபாசல் மக்சொட்லோ ஆகிய முக்கியமான வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். முதல் ரெய்டில் டெல்லி, குஜராத் இரண்டுமே  ரெய்டுகளில் புள்ளிகள் எடுக்காமல் திரும்பிவந்தன. டெல்லி அணி சார்பில்  இரண்டாவது ரெய்டுக்கு கேப்டன் மீராஜ் ஷேயிக் சென்றார். அவருக்குக் கால் லேசாக வழுக்கியது. துரிதமாக செயல்பட்டு அமுக்கிப் பிடித்து தூக்கிப் போட்டது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ். மீரஜ் ஷேயிக் மட்டுமல்ல டெல்லி அணியே அந்த ரெய்டிலிருந்து மேட்சை கோட்டை விடத் தொடங்கியது. 

டெல்லி அணி ரெய்டுகளில் திணறியது. குஜராத் டெல்லி வீரர்கள் வரும்போதெல்லாம் கொசுவைப் பிடித்துத் தூக்கியெறிவது போல களத்துக்கு வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர். இடையில் இரண்டு ரெய்டுகளில் டெல்லி அணியும் ரெய்டுக்கு வந்த  குஜராத் வீரர்களை மடக்கிப் பிடித்தது. அதைத்தவிர வேறொன்றையும் சாதிக்கவில்லை. அற்புதமாக  டேக்கில் செய்துகொண்டிருந்த டெல்லி வீரர் சுனில் அவுட் ஆனதும் அந்த அணி இன்னும் பின்னடைவைச் சந்தித்தது. எனினும் மேட்ச் விறுவிறுப்பாகவே இருந்தது. ஏனெனில் இரண்டு அணியிலும் வெற்று ரெய்டுகள் நிறைய செய்யப்பட்டன. இதனால் முதல் கால் மணி நேரத்தில் எந்த அணியும் மிகப்பெரிய முன்னிலை பெறவில்லை. 

ஸ்கோர்  8-5 என்ற நிலையில், குஜராத் வீரர் ராகேஷ் நர்வால் ரெய்டு சென்றார். டெல்லியின்  கோட்டையில்  நிலேஷ் ஷிண்டே, ஆனந்த் பாட்டில், பாஜிரோ ஹோடகே இருந்தனர். அப்போது  டூ ஆர் டை ரெய்டுக்கு வந்த குஜராத் வீரரை மடக்கிப்பிடிக்க முயற்சி செய்தபோது நிலேஷ் ஷிண்டே எல்லைக் கோட்டுக்கு வெளியே தெரியாமல் காலை வைத்துவிட்டார். இதைக் கவனித்த நடுவர்கள் அவரை உடனே வெளியேறச் சொன்னார்கள். ஆனால் அதை காதில் வாங்கிக் கொள்ளாத நிலேஷ் அந்த ரெய்டு முடியும் வரை களத்தில் எதிரணி வீரருக்குப் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார். 30 நொடிகள் முழு ரெய்டும் முடிந்த பிறகு அம்பயர் நிலேஷை அழைத்து எச்சரிக்கை செய்ததோடு ஒரு டெக்கினிக்கல் பாயின்ட்டையும் குஜராத் அணிக்குக் கொடுத்தனர். அதன் பிறகு மீதமிருந்த இரண்டு பேரையும் குஜராத் எளிதாக ஊதித்தள்ளியது. முதல் பாதியின் கடைசி இரண்டு நிமிடங்களில் குஜராத் அணியின் பக்கம் புள்ளிகள் குவிந்தன. ஸ்கோர் 15 - 5 என்றானது. பத்து புள்ளிகள் பின்தங்கிய நிலையில் மேட்ச் நழுவத் தொடங்கியது குறித்து ஆலோசிக்க இடைவேளையில் கூடியது டெல்லி குழு. 

முதல் பாதியில் மாஸ் பெர்ஃபார்மென்ஸ் காட்டியிருந்தது குஜராத். ரெய்டில் 5 புள்ளிகள், டேக்கிலில் 5 புள்ளிகள், ஆல் அவுட் செய்ததில் இரண்டு புள்ளிகள், எக்ஸ்ட்ரா வகையில் மூன்று புள்ளிகள் என அனைத்து பாக்ஸையும் டிக் செய்திருந்தது. டெல்லி அணி வெறும் ரெய்டு புள்ளிகளை மட்டுமே எடுத்தது. குஜராத் அணி ஆடிய விதத்தைப் பார்க்கும்போது இரண்டாவது பாதியில் அபாரமாக ஆடி 15 புள்ளிகளுக்கு மேலான வித்தியாசத்தில் முரட்டுத்தனமான வெற்றியைப் பெறும் எனத் தோன்றியது. இரண்டாவது பாதி தொடங்கியதும் குஜராத் இன்னும் நெருக்கியது. டெல்லி வீரர் அபோல்ஃபாசில் ரெய்டுக்கு வந்தபோது குஜராத் அணியைச் சேர்ந்த ஃபாசல் அட்ரச்செல்லி கணுக்காலை இழுத்துப் பிடித்து அடக்கினார். அது நேற்றைய தினத்தின் பெர்ஃபெக்ட் டேக்கில். 

நேரம் செல்லச் செல்ல டெல்லி அணியைப் பார்ப்பதற்கே பரிதாபமாகத் தெரிந்தது . குஜராத் அணியில் எல்லா வித்தையும் தெரிந்த ஆட்கள் இருந்தார்கள். ஒருவர் ஒற்றைக்கையால் கணுக்காலைப் பிடித்து இழுப்பார்; இன்னொருவர் இரண்டு கைகளாலும் ரெய்டுக்கு வரும் வீரரின் மூட்டைக் கட்டியணைத்து  அவுட் ஆக்குவார்; சிலர் பாய்வார்கள், சிலர் தோள்களையும், மார்புப்பகுதியையும் பிடித்து ஆளை அமுக்குவார்கள். இப்படிப் பலவித ஆட்களும் அங்கே  இருப்பதால் டெல்லி அணிக்கு ஆரம்பத்தில் மேட்ச்சில் என்ன நடக்கிறதென்றே புரியவில்லை. அதற்குள் விறுவிறுவென புள்ளிகளைச் சேர்த்தது குஜராத். இரண்டாவது பாதியில் முதல் பத்து நிமிட முடிவில் ஸ்கோர் 21 - 8 என இருந்தது. அடுத்த மூன்று நிமிடங்களில் தபாங் டெல்லி மீண்டும் ஆல் அவுட் ஆகவே  26 - 9 என்றானது ஸ்கோர். 

குஜராத்துக்கு மிக எளிதான வெற்றி கிடைப்பது போன்ற சூழ்நிலை இருந்தது. அப்போது குஜராத் அணியின் ஆக்ரோஷமான ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக அலட்சிய ஆட்டமாக மாறத் தொடங்கியது.  டெல்லி அணியில் மூத்த வீரர்கள் சொதப்பிக் கொண்டிருக்க இளங்கன்று ஸ்ரீராம், குஜராத்தின் வியூகங்களுக்குள் சென்று சுழன்று சுழன்று புள்ளிகளைச் சேர்த்தார். டெல்லி அணியின் ஸ்கோர் திடீரென விர்ரென எகிறியது. அடுத்த ஐந்து நிமிடத்தில் டெல்லி மட்டும்தான் புள்ளிகளை அள்ளிக்கொண்டிருந்தது. குஜராத் மிக்சர் சாப்பிட்டது.

இன்னும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் டெல்லி அணி புள்ளிகள் வித்தியாசத்தை சரசரவெனக் குறைத்தது. அப்போது ஸ்கோர் 26 - 19. ஆட்ட நேர முடிவில் 26 - 20 என்ற கணக்கில் வென்றது குஜராத் ஃபார்ச்சூன் ஜெயன்ட்ஸ். கடைசி ஏழரை நிமிடங்களில் ஒரு புள்ளிகூட குஜராத் அணியால் எடுக்க முடியவில்லை. அதே சமயம் டெல்லி அணி 11 புள்ளிகளைக் குவித்தது. What a Come Back ! . பாயின்ட்  வரட்டும்  பாயின்ட் வரட்டும்  எனக் காத்திருக்காமல் கடைசி ஏழு நிமிடங்களில் டெல்லி ஆடிய அசுரவேக ஆட்டத்தை முதல் பாதியிலும் காட்டியிருந்தால் மேட்ச் இன்னும் சுவாரஸ்யம் கூடியிருந்திருக்கும். 

அடுத்த கட்டுரைக்கு