Published:Updated:

நகையைக் காணோமா... மாத்திரை சாப்பிடுங்க!

ரு சுபயோக சுபதினத்தில் சென்னையைச் சேர்ந்த டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி என்பவர் எழுதிய 'இங்கிலாந்து மலர் மருந்துகள்’ என்ற புத்தகம் படிக்கக் கிடைத்தது. அந்தப் புத்தகத்தைப் படிக்கும்போதே, என் உடலுக்குள் ஒவ்வொரு பாகமாக அறுந்து விழுவதைப் போன்ற உணர்வு. அந்த மருந்துகளைச் சாப்பிடுவதால் என்ன பயன் தெரியுமா? 'இந்த மாத்திரையைப் போட்டுக்கொண்டு ஆட்டோவில் ஏறினால், ஆட்டோ டிரைவர் மீட்டருக்கு மேல் காசு கேட்க மாட்டார்; வீட்டிற்குள் திருடன் புகுந்துவிட்டால், உடனே இந்த மாத்திரையை வாயில் போட்டால், திருடன் நம்மைப் பார்த்துத் தலைதெறிக்க ஓடுவான்’ என திக் திகீர் பக்கங்களாக இருந்தன. பின் அட்டையில், 'பணப் பிரச்னை தீர, லஞ்சம் கொடுக்காமல் வேலை நடக்க, பேட்டை ரௌடிகளின் அட்டூழியங்களைத் தடுக்க, கார்ப்பரேஷன் குழாயில் தண்ணீர் வர, இன்றே வாங்குவீர் இங்கிலாந்து மலர் மருந்து’ என திகில் கிளப்ப... 'டாக்டர்ர்ர்ர்ர்’ என்று அலறியபடி அவரைத் தேடிக் கிளம்பினேன். இனி, அங்கே நடந்தது அப்படியே!

நகையைக் காணோமா... மாத்திரை சாப்பிடுங்க!

''அது என்ன சார்... மலர் மருத்துவம்?''  கேள்வியை முடிக்கும் முன்பே, சட்டென எழுந்து அருகிலிருந்த கரும்பலகைக்குப் போனார் வி.கிருஷ்ணமூர்த்தி (வேறென்ன? பாடம்தான்!).

'' 'Heurstic’’னு ஆங்கிலத்துல ஒரு வார்த்தை இருக்கு தெரியுமா? 'ஆசிரியர் என்கிற ஒருத்தர் இல்லாம எல்லா விஷயங்களையும் நாமே கத்துக்கிறதுக்குப் பெயர்தான் அது. இதை ஏன் சொல்றேன்னா, நான் நடத்துற மருத்துவ வகுப்புகள் எல்லாமே நானே சொந்தமா கத்துக்கிட்டதுதான்(!?). பை த பை... நான் காலேஜ் டிஸ்கன்டினியூ ஆனவன்'' என அதிரடி ட்விஸ்ட் கொடுத்தவரிடம், ''வெளியில் டாக்டர் கிருஷ்ணமூர்த்தினு போர்டு போட்டிருந்துச்சே?'' என்றேன் அப்பாவியாக.

''ஆமா, வைத்தியம் பார்க்கிறவனை டாக்டர்னுதானே சொல்வாங்க. நானும் வைத்தியம்தான் பார்க்கிறேன். காசு சம்பாதிக்கிறதுக்காக இந்த மாதிரி வேஷத்தோட திரியிறேன்னு நினைக்காதீங்க. இதெல்லாம் உங்களுக்குச் சொன்னா புரியாது. ஏன்னா, நீங்க இருக்கிற உலகம் வேற; என் உலகம் வேற. என்னோட மருத்துவத்தை எல்லோரும் அனுபவப்பூர்வமா ஏத்துக்கிட்டதனாலதான், கும்பகோணத்துல பிறந்து, பி.ஏ., முழுசா முடிக்காத என்னோட சித்த வைத்தியப் புத்தகங்களை உலகத்துல இருக்கிற எல்லா மருத்துவ மாணவர்களுக்கும் அனுப்புறேன். எந்த மருத்துவரும் மாணவர்களும் இது தவறானதுனு மறுப்பு சொன்னதே இல்லை. ஏன்னா என் மலர் மருத்துவத்தின் மகத்துவம் அப்படி. சில சம்பவங்களை உங்களுக்கு உதாரணமா சொல்றேன்'' என்று விவரித்தார்.

சம்பவம் 1 : ''பத்து வருஷத்துக்கு முன்னால் திண்டுக்கல்லில் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு ஹைவேயில் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயிடுச்சு. டிரைவர், கண்டக்டர், பஸ்ஸில் இருந்த பயணிகள் எல்லோருக்கும் பலத்த காயம். அப்போ அந்த வழியா என்னோட ரெகுலர் பேஷன்ட் ஒருத்தர் போயிருக்கார். அவரோட கையில் 'ரெஸ்க்யூ ரெமடி’ங்கிற இங்கிலாந்து மலர் மருத்துவ மாத்திரை. கொஞ்சமும் தாமதிக்காம, பஸ்ஸுக்கு அடியில சிக்கிக்கிட்டு இருந்த எல்லோருக்கும் தலா ஒரு மாத்திரையை வாயில் போட... அடுத்த சில நிமிடங்கள்ல அவங்களே பஸ்ஸை நிமிர்த்தி, வண்டியை ஸ்டார்ட் பண்ணிக் கௌம்பிட்டாங்க''

சம்பவம் 2 : ''ரெகுலரா சிகரெட் பிடிக்கிற ஒருத்தர், என்னோட 'வால்நட்’ மாத்திரையைச் சாப்பிட்டு வயலின் கலைஞர் ஆகிட்டார். எப்படினு கேட்கிறீங்களா? உதட்டுக்கும் விரலுக்கும் மேலும், கீழுமா சிகரெட் பிடிப்போம். இது நெகட்டிவ் ரியாக்ஷன். இந்த மருந்து சாப்பிட்டா அது பாசிட்டிவ் ரியாக்ஷனா மாறிடும். (எனக்கு 'சதுரங்க வேட்டை’ ஞாபகம் வந்தது) அப்புறம் அவர் தனது விரலை வலதும், இடதுமா திருப்ப ஆரம்பிச்சு வயலின் வாசிக்க ஆரம்பிச்சுட்டார்'' ( 'உன்னோட திறமை இதுதான்’னு நாம புரிஞ்சுக்கணும்னு தான் இயற்கை நமக்கு சிகரெட் பழக்கத்துக்கு அடிமை ஆக்கியிருக்காம்!)

சம்பவம் 3 : ''சின்னப் பெண்ணுக்கு தீராத வயிற்று வலி. அலறிக்கிட்டு இருந்த பொண்ணைத் தூக்கிக்கிட்டு வந்தாங்க அவங்க அம்மா. 'செர்ரி  ப்ளம்’கிற மாத்திரையைக் குடுத்தேன். அப்போ இருந்து அந்தப் பொண்ணு அலறலை நிப்பாட்டிட்டுப் பாட்டுப் பாட ஆரம்பிச்சுட்டா. இப்போ அந்தப் பொண்ணு இங்கிலாந்துல கிளப்ல பாட்டுப் பாடி, லட்சம் லட்சமா சம்பாதிச்சுக்கிட்டு இருக்கா'' (போதும் டாக்டர்! நெஜமாவே முடியலை!)

''இதுதாங்க 'இங்கிலாந்து மலர் மருத்துவம்’ இதழின் சிறப்புகள். இந்த மருத்துவ முறையை லண்டன் மாநகரைச் சேர்ந்த டாக்டர் எட்வர்டு பாட்ச் என்பவர் கண்டுபிடித்தார். இந்த மலர் மருத்துவத்திற்குத் தேவையான 38 மலர்கள் இங்கிலாந்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியது. இதை நான் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செஞ்சு, மாத்திரை வடிவில் தயாரித்து மக்களுக்கு வினியோகித்து சேவை பண்றேன். இதில் எந்த லாப நோக்கமும் கிடையாது. 'உன்னுடைய வேலையைச் சரியாகச் செய்; உன் தேவைகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’னு பகவத் கீதை சொல்லுது. இதுதான் நிஜமும். காந்தியும் அன்னை தெரசாவும் மக்களுக்காகத் தங்களின் வாழ்க்கையை அர்ப்பணிச்சுக்கிட்டதனாலதான் அவங்களுக்கான மதிப்பு, மரியாதை, பணம் எல்லாமே தானா கிடைச்சது. நானும் அந்த வழியைப் பின்பற்றி மக்களோட பிரச்னைகளைத் தீர்த்துட்டு இருக்கேன். எனக்கு பணம் ஏதோ ஒரு வகையில் கிடைச்சுடும்'' என்று அவர் பேசிக்கொண்டிருக்கும்போது போன் வந்தது. லவுட் ஸ்பீக்கரில் போட்டுப் பேசினார் கிருஷ்ணமூர்த்தி.

நகையைக் காணோமா... மாத்திரை சாப்பிடுங்க!

''சார்... என் பணத்தை யாரோ திருடிட்டாங்க. வீட்ல இருக்கிறவங்கதான் திருடியிருக்காங்கனு நிச்சயமாத் தெரியும். இப்போ என்ன சார் பண்றது?'' என ஒரு பெண் கேட்க, ''நான் கொடுத்த மாத்திரையை வீட்டுல இருக்கிற எல்லோருக்கும் கொடுத்து சாப்பிடச் சொல்லு, திருடினவனே உன்கிட்ட வந்து பணத்தைக் கொடுத்துட்டு மன்னிப்பு கேட்பான்'' என்றார். ''இல்லை சார். அது கொஞ்சம் ரிஸ்க்...'' என அந்தப் பெண் இழுக்க, ''அப்போ அந்த மாத்திரையை நீ நாலு நாளைக்கு சாப்பிடு. பணம் கைக்கு வந்துடும்'' என்று சொல்லி போனை வைக்கவும், நான் அதிர்ந்துபோய் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

''இப்படித்தான் தம்பி. பல பேருக்கு பல விதமா எங்க மருந்து பயன்படுது.  ஸ்கூல், காலேஜ்ல படிக்கிறதெல்லாம் படிப்பே கிடையாது. 9-ம் வகுப்பு ஃபெயில் ஆன ஒருத்தர் எழுதின 'ஆக்ஸ்போர்டு டிக்ஷனரி’யைத்தான் பட்டப்படிப்பு முடிச்சவனும் படிச்சுக்கிட்டு இருக்கான். அதையெல்லாம் மறந்துடுங்க. ஜெர்மனி, சீனா, இங்கிலாந்து இந்த மூன்று நாடுகள்ல பின்பற்றப்படுகிற ஹோமியோபதி மருத்துவமும் இங்கிலாந்துல பின்பற்றப்படுகிற மலர் மருத்துவத்தையும் நான் மத்தவங்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறேன். ஜெர்மனி மருத்துவ முறையை நானே கத்துக்கிட்டு, சிக்கன்குனியா, டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல்னு எல்லா வியாதிகளுக்கும் ஒரே மாத்திரையில சரிபண்ணியிருக்கேன்.

நிறைய ஹோமியோபதி மருத்துவர்கள் என்னோட வகுப்புகளுக்கு வந்து கத்துக்கிட்டுப் போறாங்க. இதுவரை நான் சொன்ன எல்லா விஷயமும் உங்களுக்கு காமெடியாத் தெரிஞ்சிருக்கலாம்... ஆனா, இது நிஜம். என் புத்தகங்களோட முதல் பதிப்பை எல்லோருக்கும் இலவசமாக் கொடுக்கிறேன். ஆனா ரெண்டாவது தடவை புத்தகம் கேட்டா, கண்டிப்பா காசு கொடுக்கணும். புத்தகத்தில் இந்த மருந்தைப் பயன்படுத்தி பலன் அடைஞ்சவங்களோட போன் நம்பரும் கொடுத்திருக்கோம். சந்தேகம் இருந்தா, அவங்களுக்கே போன் பண்ணிக் கேட்டுக்கோங்க'' என்று எழுந்தவர், கை நிறைய புத்தகங்களை அள்ளிக்கொண்டு வந்து என்னிடமும் போட்டோகிராஃபரிடமும் கொடுத்துவிட்டு, திரும்பவும் அமர்ந்தவர்...

''அப்புறம்... ஏதோ 'பேட்டி எடுக்கணும்’னு சொன்னீங்க. கேள்வியை ஆரம்பிங்க'' என்றார்.

நான் அப்பீட்டு!

- கே.ஜி.மணிகண்டன்

படங்கள் : ஆ.முத்துக்குமார்

அடுத்த கட்டுரைக்கு