Published:Updated:

நலம் 360’ - 10

மருத்துவர் கு.சிவராமன்

நலம் 360’  - 10

லைவலிக்கு 200-க்கும் மேற்பட்ட காரணங்கள். அதனால்தான் தலைவலிக்கான காரணம் தேடுவது, மருத்துவருக்கு தலைவலி தரும் விஷயம் என்பார்கள். 'இளங்கலை மருத்துவப்  படிப்புகளில் 4 மணி நேரம்தான் தலைவலியைப் பற்றி படிக்கிறார்கள். இன்னும் அதைப் பற்றி ஆழமாகப் படித்தால், உலகத்தில் 47 சதவிகிதம் பேருக்கு வருடத்தில் ஒருமுறையேனும் வதைக்கும் தலைவலியை விரட்ட உதவும். நண்பகல் 1 மணி ஷோவுக்குச் சென்று, செம போர் படம் பார்த்துவிட்டு வியர்வை கசிய, தியேட்டர் இருட்டில் இருந்து சுள்ளென அடிக்கும் வெயிலில் தலைகாட்டும்போது தலை வலிக்கும். கொஞ்சம் மோர் குடித்து ஒரு மணி நேரம் உறங்கினால், அந்தத் தலைவலி நீங்கும். 'கொஞ்ச நாளாவே தலை வலிச்சுட்டே இருக்கு டாக்டர்’ என மருத்துவரிடம் சொன்னால், முழங்கையில் துணி கட்டி, பிரஷர் பார்ப்பார். அது லேசாக எகிறி இருக்க, அதற்குப் பின்னதான ரத்த சோதனையில் உப்புக்கள் ஓரவஞ்சனை காட்டியது புரியும். பிறகு, சிறுநீரக டாப்ளர் ஸ்கேன் செய்கையில் தலைவலிக்குக் காரணம், சிறுநீரகத்துக்குப் போகும் ரத்தக்குழாய் சுருக்கம் எனத் தெரியவரும். அப்போதுதான் நீண்ட மருத்துவம் அவசியப்படும்.

'காதலிச்சப்போ 'சந்தோஷ் சுப்ரமணியம்’ ஜெனிலியா மாதிரி இருந்த பொண்ணு, இப்போ 'முதல் மரியாதை’ வடிவுக்கரசி மாதிரி ஆகிட்டாளே’ என எப்போதும் மனைவி பற்றி பொருமுவார்கள் ஆண்கள். அதே சமயம், 'பாஸ் என்கிற பாஸ்கரன்’ ஆர்யா மாதிரி நம்மைச் சுத்திச் சுத்திக் காதலிச்சானே... இப்போ

'நான் கடவுள்’ ஆர்யா மாதிரி ஆகிட்டானே’ எனக் குழம்பிப் புலம்புவார்கள் மனைவிகள். 'ஒண்ணு... உங்களுக்குக் கொடுத்த டார்கெட்டை முடிங்க. இல்லைனா பேப்பரைப் போட்டுட்டு ஒரேயடியாக் கிளம்புங்க!’ என்று அலுவலகத்தில் அல்லோலகல்லோலப்படுவார்கள் ஊழியர்கள், 'அதுக்குள்ள ஒரு மாசம் ஆயிடுச்சா? இன்னும் ரெண்டு நாள்... வலியில செத்தேன்’ என மாதவிடாய் சமயத்தில் பதறும் பெண்கள்... என சமூகத்தின் பல தரப்புக்கும், தலைவலி என்பது அவர்களின் அன்றாடங்களைச் சிதைக்கும் பிரச்னை.

நலம் 360’  - 10

சாதாரண தலைவலிக்கு தேவை இல்லாமல் எடுக்கப்படும் சோதனைகள் இப்போது ஏராளம்.இது சாமான்யனின் புலம்பல் அல்ல. JAMA INTERNAL MEDICINE எனும் பிரபல மருத்துவ இதழும் இதே கருத்தைச் சொல்கிறது. தலைவலிக்காக எடுக்கப்படும் ஸ்கேன்களில் 13 சதவிகிதம் மட்டுமே, ஏதேனும் அசாதாரண முடிவுகளைக் காட்டுகின்றன. அந்த அசாதாரணங்களும்கூட பெரும்பாலும் மூளைக்கட்டி அல்லது மூளை ரத்தக்கசிவு போன்ற அபாயங்களைக் காட்டுவது இல்லை. சமயங்களில் தலைவலிக்குப் பார்த்த ஸ்கேனில், கொஞ்சம் சைனசைட்டிஸ் தெரியும். கொடுத்த காசுக்கு இதாவது தெரியவந்ததே எனத் திருப்தியடைகிறார்கள் அப்பாவிகள். விபத்துகளின்போது எடுக்கப்படும் மூளை ஸ்கேன்களைத் தவிர, தலைவலிக்கு என எடுக்கப்படும் ஸ்கேன்களால் பெரும்பாலும் பிரயோஜனம் கிடையாது.

'தலைவலிக்கான காரணிகளைச் சரியாகக் கணித்து மருத்துவம் செய்ய வேண்டுமே தவிர, ஸ்கேனிங் செய்வது சரியான தீர்வு அல்ல’ என்கிறார் Headaches: Relieving and preventing migraine and other headachesஎனும் மருத்துவ நூலின் ஆசிரியரும் பிரபல நரம்பியல் மருத்துவருமான ஸ்பெய்ரிங்க்ஸ். ஆதலால், இனியேனும் 'ஆடித் தள்ளுபடி விலையில் அட்டகாச ஸ்கேனிங்’ விளம்பரங்களுக்கு இரையாக வேண்டாம். உங்களை நன்கு அறிந்த குடும்ப மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே ஸ்கேன் செய்வது பற்றி தீர்மானியுங்கள். ஏனெனில், தேவையற்ற ஸ்கேன் விடும் எக்ஸ்ரே கதிர்கள் அநாவசியமாக மூளைக்குள் ஊடுருவது அவ்வளவு நல்லது அல்ல. ஒரு எக்ஸ்ரேயின் ஓரிரு விநாடி கதிர்வீச்சுக்கும், மூன்று நிமிட சி.டி ஸ்கேன் கதிர்வீச்சுக்கும் பெரும் அளவு வேறுபாடு உண்டு. உங்களைச் சுற்றி இருக்கும் மின்னணுப் பொருட்களின் மூலம் நீங்கள் இரண்டு வருட காலத்தில் சராசரியாக எதிர்கொள்ளும் கதிர்வீச்சின் அளவை, ஒற்றை சி.டி ஸ்கேன் தரக்கூடும்.

ரொம்பவே மூக்கு அடைத்து, தும்மலுடன், முகம் எல்லாம் நீர் கோத்து வரும் சைனசைட்டிஸ் தலைவலி சிறார்களுக்கும் யுவதிகளுக்கும் அதிகம். முக எலும்பின் சைனஸ் பகுதிகளில் நீர் கோத்து, கொஞ்ச நாளில் சீழ் கோத்து வரும் இந்த சைனசைடிஸ் தலைவலியைப் போக்க, நீர்க்கோர்வை மாத்திரையை நம்மவர்கள் பயன்படுத்திய வரலாறும் உண்டு. மஞ்சள், சுக்கு வகையறாக்களைச் சேர்த்து அரைத்து உருட்டிய அந்த மாத்திரையை நீரில் குழைத்து நெற்றியில், மூக்குத்தண்டில், கன்னக் கதுப்பில் தடவி, ஓர் இரவு தூங்கி எழுந்தால், தலைவலி காணாமல்போகும். கூடவே நொச்சித்தழை போட்டு ஆவி பிடிப்பது, இரவில் மிளகு கஷாயம் சாப்பிடுவது ஆகியவையும் தலைவலியைத் தீர்க்கும் வாழ்வியல் கலாசாரம். கூடவே, சீந்தில் சூரணம் முதலான சைனசைடிஸ் தலைவலியைப் போக்க சித்த மருந்துகள் ஏராளம் நம்மிடம் உண்டு. சீந்தில் கொடியை, சித்த மருத்துவத்தின் மகுடம் எனலாம். நீர்கோத்து, மூக்கு அடைத்து, முகம் வீங்கவைக்கும் சைனசைட்டிஸ் தலைவலிக்கு, சும்மாங்காட்டி அப்போதைக்கான வலி நீக்கும் மருந்தாக இல்லாமல், பித்தம் தணித்து மொத்தமாக தலைவலியை விரட்டும் அமிர்தவல்லி அது.

தலைவலி வராதிருக்க நம் வாழ்வியல் சொன்ன மிக முக்கியப் பக்குவம் எண்ணெய்க் குளியல். 'அட... தலைக்குச் சும்மாவே குளிக்க முடியலை. இதுல எண்ணெய்க் குளியல் வேறயா?’ என்போருக்கு ஒரு சேதி. சைனசைட்டிஸோ, மைக்ரேனோ வாரம் இரு முறை சுக்கு தைலம் தேய்த்துக் குளித்துப் பாருங்கள். வலி மெள்ள மெள்ள மறைவது புரியும். பொதுவாக, வலிக்கு என மாத்திரைகள் அதிகம் எடுப்பது வயிற்றையும் குடலையும் புண்ணாக்கி, பின்னாளில் ஈரலும் சிறுநீரகமும் பாதிக்கும். குண்டூசியாகக் குத்தும் மைக்ரேன் தலைவலியைத் தீர்க்க முடியாமல் தற்கொலை வரை சிந்திப்போரும் உண்டு. அந்த நேரத்தில் வெளியில் கொஞ்சம் சத்தமாக அடிக்கும் ஹாரன், செல்லக் குழந்தையின் சின்னச் சிணுங்கல், கணவரின் அகஸ்மாத்தானக் கேள்வி, ஜன்னல் வழி பளீர் வெளிச்சம் எல்லாமே அவர்களை ஆங்கார ரூபி ஆக்கும்.

மைக்ரேன் எனும் இந்தப் பித்தத் தலைவலிக்கு இஞ்சி ஓர் அற்புத மருந்து. சில நேரங்களில் நவீன வலிநிவாரணிகளைக் காட்டிலும் சிறந்த தேர்வாக இருக்கும் இஞ்சி, மைக்ரேனைக் கொஞ்சிக் குணமாக்குகிறது என, பல மருத்துவக் கட்டுரைகள் சான்று அளிக்கின்றன. சனிக்கிழமையானால் சுக்கு வெந்நீர் சாப்பிட்டு வந்தவர்கள் நாம். இப்போது சனிக்கிழமையானால் புதுசாகத் திறந்த ஹோட்டலில், பழசாகச் செய்த உணவைத் தின்றுவிட்டு வருபவர்கள் ஆகிவிட்டோம். விளைவு... பித்தம் கூடி, அது மைக்ரேன் தலைவலியில் கொண்டுவிடுகிறது. இது வராதிருக்க சாதாரண இஞ்சித் தேனூறல், இஞ்சி ரசாயனம் என நம் பாட்டிகள் பேட்டன்ட் செய்யாத பொக்கிஷம் நம் கைவசம் இருக்கிறது! (செய்முறை விவரம் பெட்டிச் செய்தியில்)

மூன்று வயசு பாப்பா, 'லைட்டா தலைவலிக்குது மிஸ்’ எனப் பள்ளியில் சொல்ல, அங்கு இருந்து வந்த தகவலில் அலுவலக வேலையைப் பாதியில் போட்டுவிட்டு அரக்கபரக்க ஓடி, குழந்தையை வீட்டுக்குக் கூட்டிவந்தால், 'அப்பா... உன் செல்போன் குடு. கேம்ஸ் விளையாடணும்’ எனச் சொல்லும் குழந்தையைப் பார்க்கையில் நமக்கு தலைவலிக்கும். பொதுவாக குழந்தைகள் அன்பான அரவணைப்பை எதிர்பார்த்து தலைவலி, வயிற்றுவலி எனச் சாக்கு சொல்வதும் உண்டு. 'அடடா... உன்னை தீம் பார்க் கூட்டிட்டுப் போகலாம்னு இருந்தேனே... தலை வலிச்சா வேண்டாம்’ எனச் சொல்லிப் பாருங்கள். குழந்தைகளின் தலைவலி சட்டெனக் காணாமல்போகும். ஆனால், இந்த மாதிரியான காரணங்கள் இல்லாமல் குழந்தைகளுக்கு அடிக்கடி தலை வலித்தால், பார்வைத்திறன், வயிற்றுப்பூச்சிகள், காது-தொண்டைப் பகுதிகளில் சளி என அவற்றை உங்கள் மருத்துவர் ஆலோசனைப்படி சரிசெய்ய வேண்டியிருக்கும். இருசக்கர வாகனத்தில் அதிகம் பயணிக்கும் நபருக்கு, கழுத்து எலும்பின் தேய்வில் அல்லது அந்தப் பகுதி முதுகுத்தண்டுவடத் தட்டின் மிக லேசான விலகல் அல்லது வீக்கத்தில்கூட பின் மண்டை வலிக்கலாம். இதற்கு சரியான இயன்முறை சிகிச்சை, வர்ம சிகிச்சை, எண்ணெய்ப் பிழிச்சல் என்ற புற மருத்துவ முறைகளே போதும்.

நலம் 360’  - 10

வயதானவருக்கு வரும் நாள்பட்ட மைக்ரேன் தலைவலியை அலட்சியப்படுத்தக் கூடாது. சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு, ரத்தக்கொழுப்பு பாதித்தவர்களுக்கு வரும் தலைவலி குறித்தும் கூடுதல் எச்சரிக்கை தேவை. மிகச் சாதாரணமாகத் தலைவலியை நாம் அலட்சியப்படுத்துவது, ரத்தக்கொதிப்பு நோயில்தான். காலையில் எழுந்தவுடன் தலை வலித்தால் ரத்த அழுத்த அளவைத்தான் முதலில் பரிசோதிக்க வேண்டும். நிறையப் பேர், வலியாகக் காட்டும் இந்த உடல்மொழியைக் கவனிக்கத் தவறவிட்டு, தடாலடியாக பக்கவாதம் வரும்போதோ, மாரடைப்பு தாக்கும்போதோதான், 'அடடா... அப்போ அதுக்குத்தான் தலை வலிச்சதா?’ என யோசிப்பது உண்டு.

தூசி, புகை, காற்றோட்டம் இல்லாத புழுக்கம், அதிக வெளிச்சம், பசி, தண்ணீர் குறைவு, தாழ் சர்க்கரை, சோர்வு, சரியான இருக்கையில் உட்காரத் தவறுவது, மனப் பதற்றம், மன அழுத்தம், கவலை... என, தலைவலிக்குப் பல பின்னணிகள் உண்டு. ஆனால், அத்தனையும் பெரும்பாலும் முழுமையாகக் குணப்படுத்தக்கூடியவை. தலைவலி என்றவுடன் கூகுள் டாக்டரிடம் குசலம் விசாரித்தால், அது அஸ்ட்ரோசைட்டோமா, கிளையோமா போன்ற புற்றுத்தலைவலி விவரங்களைத் தந்து கலவரப்படுத்தும். பயப்படாதீர்கள். 'போன மாசம் ப்ளஸ் டூ எழுதினானே பையன்... என்ன மார்க் வாங்கினான்? பொண்ணுக்கு எப்போ கல்யாணம்? வேலை... வேலைனு அலைஞ்சது போதும்... வீட்ல எல்லாரையும் கூட்டிட்டு நாலு ஊருக்குப் போயிட்டு வாங்க!’ எனக் கொஞ்சம் மருந்தோடு கூடுதல் கரிசனம் காட்டும் உங்களை நன்கு அறிந்த குடும்ப மருத்துவரிடம், வலியை விவரியுங்கள். உங்களின் எந்தத் தலைவலிக்கும் பூரண குணம் நிச்சயம்!

- நலம் பரவும்...

தலைவலியைத் தூண்டும் வாழ்வியல் காரணங்கள்!

* 6-7 மணி நேரமாவது தடை இல்லா இரவு நேரத் தூக்கம் கிடைத்திடாதபோது...

* 'இன்னைக்கு மதியம் 12 மணி முதல் சாயங்காலம் 6 மணி வரை தூங்குங்க. நாளைக்கு காலையில 6 மணி முதல் மதியம் 1 மணி வரை தூங்கலாம்’ என, பன்னாட் டுக் கணினி கம்பெனி சொல்பேச்சுக் கேட்டு, மாறி மாறித் தூங்கும் போது...

* காற்றோட்டமான வசிப்பிடம் இல்லாதபோது...

* தொல்பொருள் ஆய்வாளரிடம் சிக்கிய ஓலைச்சுவடிபோல, பர்ஸில் வைத்திருக்கும் 15 வருடங்களுக்கு முந்தைய பிரிஸ்கிரிப்ஷனை வைத்துக்கொண்டு, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் தொடர்ந்து மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடும்போது...

* சிங்கப்பூரில் சீப்பாகக் கிடைக்கும் என வாங்கிவந்து பரிசளிக்கப்பட்ட 'சென்ட்’டை கக்கத்திலும் கைக்குட்டையிலும் விசிறிக்கொள்ளும்போது...  

* ஊட்டி, கொடைக்கானலில், ஊர்சுற்றலில், பொட்டிக்கடையில் விற்கும் குளிர் கண்ணாடிகளை வாங்கி மாட்டிக்கொண்டு உலவும்போது...

* பாராட்டாகக் கொஞ்சம் புன்னகை, பரவசப்படுத்தும் உச்சி முத்தம், பரிதவிப்பை ஆசுவாசப்படுத்தும் அரவணைப்பு... இவை எதுவும் எப்போதுமே இல்லாதபோது...

நலம் 360’  - 10

தலைவலிக்கான தீர்வுகள்...

*அடிக்கடி வரும் மைக்ரேன் தலைவலிக்கு, அதிமதுரம், பெருஞ்சீரகம் (சோம்பு), ஹைட்ரேஸ் சேர்க்காத நாட்டுச்சர்க்கரை கலந்த ஒரு டம்ளர் பால் உடனடித் தீர்வு தரும்.

* சீந்தில், சுக்கு, திப்பிலிப் பொடியை மூன்று சிட்டிகை அளவு எடுத்து தேனில் கலந்து முகர்ந்தாலே தலைவலி போகும் என, 'திருவள்ளுவ மாலை’ எனும் நூல் குறிப்பிடுகிறது. இந்த மூன்று பொருட்களும் சைனசைட்டிஸ், மைக்ரேன் மற்றும் மன அழுத்தத் தலைவலிக்கான தீர்வை உடையன என நவீன அறிவியல் சான்றையும் பெற்றவை. முகர்ந்தால் மட்டும் போதாது... சாப்பிடவும் செய்ய வேண்டும்.

* அஜீரணத் தலைவலி, இரவு எல்லாம் 'மப்பேறி’ மறுநாள் வரும் ஹேங்-ஓவர் தலைவலிக்கு சுக்கு, தனியா, மிளகு போட்டு கஷாயம் வைத்து, பனைவெல்லம் கலந்து குடித்தால், தலைக்கு ஏறிய பித்தம் குறைந்து தலைவலி போகும்.

* இஞ்சியை மேல் தோல் சீவி சிறுதுண்டுகளாக்கி, தேனில் ஊறவைத்து தினமும் காலையில் அரை ஸ்பூன் சாப்பிட்டால், மைக்ரேனுக்குத் தடுப்பாக இருக்கும். இதுதான் இஞ்சித் தேனூறல்.

* இஞ்சி, சீரகம் இரண்டையும் பொன் வறுவலாக வறுத்து, அந்தக் கூட்டுக்குச் சம அளவு ஆர்கானிக் வெல்லம் கலந்தால், இஞ்சி ரசாயனம் தயார். சாப்பாட்டுக்குப் பின் இதை அரை ஸ்பூன் சாப்பிடுவது அஜீரணத் தலைவலியைத் தவிர்க்கும்!