Published:Updated:

வருமானவரித் துறை நோட்டீஸை ஸ்மார்ட்டாகக் கையாள்வது எப்படி?

வருமானவரித் துறை நோட்டீஸை ஸ்மார்ட்டாகக் கையாள்வது எப்படி?
வருமானவரித் துறை நோட்டீஸை ஸ்மார்ட்டாகக் கையாள்வது எப்படி?

ஜூலை 31-ம் தேதி, வருமானவரித் துறையின் இணையதளம் முற்றிலுமாக முடங்கிப்போனது. காரணம், வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய அன்று கடைசி நாள். அன்று ஒரே நாளில் பல லட்சம் பேர் தங்களது வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முயற்சித்தனர். இணையதளம் முடங்கிப்போன காரணத்தினால், ஆகஸ்ட் 5-ம் தேதி வரை கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கெடு தேதிக்குள் வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்யாவிட்டாலோ, வருமானத்தை மறைத்திருந்தாலோ அல்லது கணக்கைத் தாக்கல் செய்வதில் ஏதேனும் தவறு இருந்தாலோ உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம். நோட்டீஸ் என்றதுமே பீதியடைய வேண்டாம். நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும், எதற்கெல்லாம் நோட்டீஸ் வரும் என்பதைப் பார்க்கலாம். 

நோட்டீஸ் எதற்கெல்லாம் வரும்?
வருமானவரி செலுத்தவேண்டிய வரம்பில் உள்ள ஒருவர்...

1. வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்யாமல் இருந்தால்.
2. வரி செலுத்தவேண்டிய மதிப்பில் உள்ள வருமானத்தைக் கணக்கில் காட்டாமல் இருந்தால்.
3. உங்களுடைய நிறுவனத்தில் உங்கள் வருமானத்துக்கான வரி பிடிக்கப்பட்டிருந்தாலும், நிறுவனம் உங்களுக்கான வருமானவரிக் கணக்குத் தாக்கலைச் செய்யாவிட்டால் நோட்டீஸ் அனுப்பப்படும். 
4. அதிக மதிப்பிலான பணம் மற்றும் சொத்து பரிவர்த்தனைகளை நாம் கணக்கில் காட்டாவிட்டாலும் நோட்டீஸ் அனுப்பப்படும்.

அவை கீழே தரப்பட்டுள்ளன. 
    * 30 லட்சம் ரூபாய்க்குமேல் நிலமோ, வீடோ வாங்கினாலும் விற்றாலும்.
    * சேமிப்புக்கணக்கில் வருடத்துக்கு10 லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பணப்பரிவர்த்தனை இருந்தால்.
    *  ஒரே நாளில் 50,000 ரூபாய்க்கும் அதிகமாக அடிக்கடி டெபாசிட் செய்தால்.
    * வருடத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக கிரெடிட் கார்டுக்குக் கட்டணம் கட்டியிருந்தால்.
    * நிரந்தர இருப்பு, வருடத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமானால்.
    * மியூச்சுவல் ஃபண்ட், ஈக்விட்டி பங்குகள் போன்றவை வருடத்துக்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கும் அதிகமானால்.

5. வெளிநாடுகளில் சுற்றுலா சென்றிருந்தாலோ, ஆடம்பரமாகத் திருமணம் செய்திருந்தாலோ, ஏன் வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்றிருந்தால்கூட நோட்டீஸ் வர வாய்ப்புள்ளது. 

வங்கி, நிதி நிறுவனம் உள்ளிட்ட நிதி சார்ந்த அனைத்து நிறுவனங்களின் விவரங்களும் வருமானவரித் துறையோடு இணைக்கப்பட்டிருக்கும். நம் ஒவ்வொருவரின் சேமிப்பு, முதலீடு மற்றும் சொத்துகள் ஆகியவற்றின் விவரங்கள் அனைத்தும் வருமானவரித் துறையிடம் இருக்கும். எனவே, யாரும் வருமானவரித் துறையிடமிருந்து தப்பவே முடியாது. பான் எண்ணைக் குறிப்பிடவேண்டிய அவசியம் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளும் வருமானவரித் துறையிடம் இருக்கும். 

வருமானவரித் துறை, தானாகவே வரி செலுத்துவோரின் விவரங்கள் அப்டேட் ஆகும் வகையில் நன்கு மேம்படுத்தப்பட்ட சாஃப்ட்வேர் மூலம் விவரங்களை எல்லாம் பராமரித்துவருகிறது. அதனால் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானம் ஈட்டும் ஒவ்வொருவரின் தகவல்களும் அதில் புதுப்பிக்கப்படும். ஒவ்வொரு நிதி ஆண்டுக்கான நோட்டீஸ்களும் இரண்டு நிதி ஆண்டுகளுக்குப் பின்னரே அனுப்பப்படும். குறிப்பிட்ட நேரத்தில் வரிக் கணக்குத் தாக்கல் செய்யாவிட்டால், 90 சதவிகிதம் வரை அபராதம் உண்டு. வரி ஏய்ப்புத் தொகை மிக அதிகமாக இருந்தால், சிறை தண்டனையும் உண்டு.

நோட்டீஸ் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

நோட்டீஸை அலட்சியப்படுத்தாமல் முழுமையாகப் படிக்க வேண்டும். அதில் குறிப்பிட்டுள்ள பெயர், பான் எண் போன்ற விவரங்கள் உங்களுடையதுதானா என்பதை, சரிபார்த்துக்கொள்ள வேண்டும். 

நீங்கள் வருமானவரிக் கணக்குத் தாக்கல் செய்திருந்தால், தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கையும், நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள வருமானவரிக் கணக்கையும் ஒப்பிட்டுப் பாருங்கள். நோட்டீஸில் கூடுதலாகக் குறிப்பிட்டுள்ள வருமானத்துக்கு நீங்கள் வரிக் கணக்குத் தாக்கல் செய்திருந்தால் கவலைப்பட தேவையில்லை. 

நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள தாக்கல் செய்யப்படாத வருமானத்தை, நீங்கள் ஏற்கெனவே தாக்கல் செய்திருக்கிறீர்கள் என்பதற்கான ஆவணத்தின் நகல், தாக்கல் செய்த தேதி, தாக்கல் செய்ததற்கான ஆதாரச் சான்று எண் ஆகியவற்றை சமர்ப்பித்தால் போதும். இதற்கு நீங்கள் நேரடியாகப் போக வேண்டும் என்று அவசியமில்லை. தபாலிலும் அனுப்பலாம். 

ஒரு நிதி ஆண்டுக்கான வரிக் கணக்குக் குறித்து ஆறு ஆண்டுகள் வரையில் வருமானவரி அதிகாரிகள் கேள்விகள் எழுப்பக்கூடும். எனவே, ஏழு ஆண்டுகள் வரை வருமானவரிக் கணக்குத் தாக்கல் ஆவணங்களையும், நீங்கள் குறிப்பிட்டுள்ள வருமானம், வரிச்சலுகை ஆகியவற்றுக்கான சான்று ஆதாரங்களையும் பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது. 

நீங்கள் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள வருமானத்தைத் தாக்கல் செய்யும்போது குறிப்பிடாமல் இருந்திருந்தால், அதை உடனடியாக தாக்கல் செய்து, பிறகு அந்த ஆவணங்களை வருமானவரித் துறைக்கு அனுப்ப வேண்டும். இதுவரை வருமானவரிக் கணக்குத் தாக்கல் என்றால் என்னவென்றே தெரியாத புதிய நபருக்கு நோட்டீஸ் வருகிறது என்றால், நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள வருமானத்துக்கு வரிக் கணக்குத் தாக்கல் செய்ய வேண்டும். 

அந்தச் சமயத்தில் அனைத்து வருமான விவரங்கள், வங்கிக்கணக்கு விவரங்கள், அவர் வாங்கிய அல்லது விற்ற சொத்துகளின் விவரங்கள், தன்னுடைய பான் எண் ஆகியவற்றை ஆன்லைனில் பதிவுசெய்து, பிறகு பதிவுசெய்தும் வரும் `26 ஏஎஸ்' என்ற ஆவணத்தை நகல் எடுத்து நம்முடைய அனைத்து வருமான விவரங்களையும் ஒளிவுமறைவு இல்லாமல் குறிப்பிட்டு, வருமானவரித் துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். பிறகு, நாம் செலுத்தவேண்டிய வருமானவரியை அதற்கான அபராதத்தையும் வட்டியையும் சேர்த்துச் செலுத்த வேண்டும்.

முதலில் நாம் எல்லோரும் நம்முடைய வருமானத்தில் எவற்றுக்கெல்லாம் வரி செலுத்த வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும், வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்து  நம்முடைய வருமானம் மற்றும் சொத்துகளை மறைக்காமல் குறிப்பிட்டு, கெடு தேதிக்கு முன்னரே வருமானவரிக் கணக்கைத் தாக்கல் செய்தால் இதுபோன்ற நோட்டீஸ்கள் வருவதைத் தவிர்க்கலாம்.