Published:Updated:

சுயம் தேடும் பெண்களுக்கான நாள் இந்நாள்! #SingleWorkingWomensDay

சுயம் தேடும் பெண்களுக்கான நாள் இந்நாள்! #SingleWorkingWomensDay
சுயம் தேடும் பெண்களுக்கான நாள் இந்நாள்! #SingleWorkingWomensDay

மகளிர் தினம், அன்னையர் தினம், தந்தையர் தினம் எனப் பல தினங்கள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, அந்த நாளிலாவது அவர்களின் கஷ்டங்களைப் புரிந்துகொண்டு, அவர்கள் நமக்காகச் செய்யும் தியாகங்களை உணர்ந்துகொண்டு, நன்றி தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே. அதுபோல ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 4, Single Working Women’s Day கடைப்பிடிக்கப்படுகிறது. தனித்து வாழ்ந்தவாறு தங்களின் வாழ்வாதாரத்துக்காக உழைக்கும் பெண்களைப் போற்றும் நாள் இது. 

இதற்கெல்லாம் ஒரு தினம் கொண்டாட வேண்டுமா எனத் தோன்றலாம். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் உலகமே கைக்குள் வந்துவிட்ட இன்றும், நம் சமூகத்தில் ஒரு பெண் தனித்து வாழ்ந்துவிடுவது அவ்வளவு எளிதாக இருப்பதில்லை. அவர்கள் வேலைக்கும் செல்பவர்களாக இருந்தால் இரட்டைச் சவால்களைச் சந்திக்க வேண்டும். திருமணமாகியும் வேலைக் காரணமாக வேறு ஊரில் இருப்பவர்கள், திருமணம் ஆகாதவர்கள், விவாகரத்தானவர்கள் என அனைவரும் இதில் அடங்குவர். தங்கள் துறையில் சாதனைப் படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ஓடிக்கொண்டிருக்கும் பெண்களும் உண்டு. 

ஓர் ஆண் சுயமாக இயங்கும்போது, அவர் தனித்து வாழ்கிறார் என யாரும் சொல்வதில்லை. ஆனால் ஒரு பெண் சுயமாக தன் சொந்த உழைப்பில் வாழும்போது, தனித்து வாழ்கிறாள் எனச் சமூதாயத்தினரால் ஒதுக்கப்படுகிறார். விவாகரத்தான ஆண், ஓர் அலுவலகத்தில் வேலைப் பார்ப்பதற்கும், விவாகரத்தான ஒரு பெண் அதே அலுவலகத்தில் வேலைப் பார்ப்பதற்கும், அவர்கள் செய்யும் வேலையில் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், சுற்றியுள்ளவர்கள் பார்க்கும் பார்வையில் நிச்சயமாக வித்தியாசம் இருக்கிறது. 

ஓர் ஆண், தான் சாதிக்க நினைக்கும் துறையில் தனக்கான முத்திரையைப் பதிப்பதற்காக, திருமணத்தைத் தாமதமாக செய்ய எண்ணும்போது அவர் முதுகில் தட்டிக்கொடுக்கிறது சமூகம். ஆனால், ஒரு பெண் அதையே நினைக்கும்போது அவளை ஊக்கப் படுத்துவதில்லை. குடும்பத்தினரால் தினம் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. வெளியிலோ தரக்குறைவான விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன என்பது நிதர்சனமான உண்மை. 

அத்தகைய பெண்களை ஊக்கப்படுத்தவும் போற்றி கௌரவிக்கவும், பார்பரா பெயின் என்பவரால் 2006-ம் ஆண்டு உருவாக்கப்பட்டதுதான் single working women’s day. சிகாகோவைச் சேர்ந்த பார்பரா பெயின் (Barbara Payne), சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக யாருடைய துணையும் இல்லாமல் சுயமாக வேலைப் பார்த்துவருபவர். ஒரு ஈஸ்டர் தினத்தன்று தன் தோழிகளுடன் ஸ்ட்ராபெரி பழங்கள் சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது சிந்தனையின் உருவானதுதான் இந்தத் தினம். 

காதலர் தினம், நண்பர்கள் தினம் இருப்பதுபோல தங்களைப் போன்ற பெண்களை கௌரவிக்கும் ஒரு தினத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என நினைத்தார் பார்பரா. Single Working Women Affiliate Network (SWWAN) என்ற அமைப்பை உருவாக்கினார். ஆகஸ்ட் 4-ம் தேதியை single working women’s day எனவும், அந்த வாரம் முழுவதையும் single working women’s week எனவும் ஏற்படுத்தினார். 

இந்தத் தினத்தை பிறந்தநாள் விழாபோல பிரமாண்டமாக கொண்டாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நமக்குத் தெரிந்த, தங்கள் சொந்த உழைப்பில் வாழும் பெண்களுக்கு மனதார வாழ்த்து தெரிவிப்போம். அவர்கள் நம் சமூகத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் என உணர்வோம். அவர்களிடம் அன்பாகப் பேசினாலே போதும். ஒட்டுமொத்த பெண்களையும் போற்றும் பெண்கள் தினம் இருப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமானது, தன்னம்பிக்கையுடன் சுயமாக வாழும் பெண்களைப் போற்றும் இந்த நாள். 

சுயம் தேடி நடக்கும் பெண்களே... சிகரம் தொட வாழ்த்துகள்!