Published:Updated:

‘போட்டோ எடுத்தால் மீன் வலையில மாட்டாது!’ - கோவையில் நிஜ ‘முண்டாசுப்பட்டி’ கதை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
‘போட்டோ எடுத்தால் மீன் வலையில மாட்டாது!’ - கோவையில் நிஜ ‘முண்டாசுப்பட்டி’ கதை
‘போட்டோ எடுத்தால் மீன் வலையில மாட்டாது!’ - கோவையில் நிஜ ‘முண்டாசுப்பட்டி’ கதை

‘போட்டோ எடுத்தால் மீன் வலையில மாட்டாது!’ - கோவையில் நிஜ ‘முண்டாசுப்பட்டி’ கதை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘ஊருக்குள் யாரும் போட்டோ எடுக்கக்கூடாது' என்ற சப் டைட்டிலோடு, வந்த முண்டாசுப்பட்டி திரைப்படத்தை நாம் யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். 'போட்டோ எடுத்தால் செத்துப்போயிருவோம்!' என்கிற கடந்த கால மூட நம்பிக்கைக்குக் காட்சி வடிவம் கொடுத்து கலக்கியிருந்தது முண்டாசுப்பட்டி. கேமராவைப் பார்த்ததும் தெறித்து ஓடும் மக்களையும், இறந்துபோன ஒருவரை போட்டோ எடுக்கும்போது கூட, எங்கே நம்மைப் படம் பிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் பிணத்தை போட்டோகிராஃபரிடம் விட்டுவிட்டு ஓடும் மக்களையும் பார்த்து தியேட்டரே சிரித்தது.

சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் அதுபோன்ற முண்டாசுப்பட்டி மனிதர்கள் இருக்கவே செய்கிறார்கள். ‘போட்டோ எடுத்தால் சீக்கிரம் செத்துருவேன்டா பேராண்டி’ எனச் சொல்லும் ஆயாக்களும், போட்டோ பிடித்தால், அழகு கெட்டுப்போகும் என்ற நம்பிக்கை கொண்ட நடுத்தரவயதினரும் பலகிராமங்களில் இப்போதும் இருக்கிறார்கள். இதில், கோவை சிங்காநல்லூர் ஏரியில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். ஒரு மதிய வேளையில் பறவைகளைப் படம் எடுப்பதற்காக புகைப்படக்காரரோடு கோவை சிங்காநல்லூர் ஏரிக்குச் சென்றிருந்தோம். ஏரிக்கரையோரம் ஒரு மர நிழலில் நான்கைந்துபேர், ஏரியில் பிடித்த மீன்களை எடை போட்டு, பேக் செய்து கொண்டிருந்தார்கள். நாங்களும் அந்த மரநிழலுக்கு ஆசைப்பட்டு அங்கு வண்டியை நிறுத்தினோம். கேமராவை எடுத்து மீன்களைப் படம்பிடிக்க ஆரம்பித்தார் நமது புகைப்படக்கலைஞர் விஜய். ‘நிறுத்து சார்… நிறுத்து சார்… என்னத்த படம் எடுக்கிற?’ படபடப்பு குரலோடு ஓடிவந்தார் ஒரு மீனவர். 'உங்கள படம் எடுக்கலைங்க' மீனைத்தான் படம் எடுக்கிறோம். என்று நாங்கள் பதில் சொன்னோம். “அசந்த நேரத்துல என்னா வேலை பாத்தீங்க போங்க... தயவு செஞ்சி மீனை போட்டோ புடிக்காதீங்க. அப்புறம் எங்க பொழப்பே போயிடும்." என்று இன்னாரு மீனவரும் குரல் கொடுக்க... நமக்குக் குழப்பம்.!

‘ஏரியில் அனுமதி இல்லாம மீன்பிடிக்கிறாங்களோ?’ என்று நம் ரிப்போர்ட்டர் மூளை சிந்திக்க ஆரம்பித்தது. ஏன்..? ‘மீனைப் படம் எடுத்தா உங்களுக்கு என்ன?’ என்று கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில்..

“இல்ல சார். பிடிச்சி வச்சிருக்க மீன்களை போட்டோ பிடிச்சா அதுக்கப்புறம் எங்க வலையில மீனே சிக்காது. நாங்க படாதபாடு படணும் அதனாலதான் சொல்றோம்.!”

என்னடா இது புதுசா இருக்கே என்று அவர் சொல்வதைக் கேட்டோம்;

“கண்ணு பட்ரும் சார்.! நாங்க இருவது முப்பது வருஷமா இங்க மீன்பிடிக்கிறோம். யார் லீசுக்கு எடுத்தாலும் அவுங்களுக்கு நாங்கதான் மீன்பிடிச்சு தருவோம். கிலோவுக்கு இவ்வளவுன்னு எங்களுக்குச் சம்பளம். எங்க அனுபவத்துல  நாங்க பாத்திருக்கோம் சார். ஒரு இருவது வருஷத்துக்கு முன்னாடி, நீங்க மீன் பிடிக்கிறதை படம் எடுக்கணும்னு ஒரு பொண்ணு கேமராவோட இங்க வந்துச்சி. எங்க ஓனர்தான் அனுப்பி வச்சார். எங்க பரிசல்லயே ஏத்திகிட்டு போனோம். நாங்க வலைய வீசுறதுல ஆரம்பிச்சி, வலையைச் சுருட்டுறது வரைக்கும் போட்டோ புடிச்சு தள்ளிருச்சி அந்தப் பொண்ணு. அப்ப எங்களுக்கு ஒண்ணும் தெரியலை. ஆனா அதுக்கு அடுத்த ஒரு மாசத்துக்கு எங்களுக்கு மீன் மாட்டவே இல்லை. வெறும் வலையோடு திரும்பி வந்தோம். எல்லாருக்கும் வெறுப்பு தட்டிபோயிருச்சி. எதனால மீன் சிக்க மாட்டேங்குதுனு எல்லாரும் உட்கார்ந்து யோசிச்சோம்!? அந்தப் பொண்ணு எடுத்த போட்டோ ஞாபகத்துக்கு வந்துச்சி. போட்டோ பிடிச்சதாலதான் மீன் மாட்டலைங்குறதை அப்பதான் நாங்க கண்டுபிடிச்சோம்(!?). இதை எங்க முதலாளிகிட்டயும் சொன்னோம். அப்படின்னா இனிமேல் யாரையும் அனுப்பலைன்னு சொல்லிட்டார். அன்னையிலேருந்து நாங்க யாரையும் போட்டோ எடுக்கவுடுறது இல்ல. சில பேர் செல்ஃபோன்ல எடுக்க பாப்பாங்க அதைக்கூட நாங்க தடுத்துருவோம்" அவர் போட்டோ பயத்தின் 'ஃப்ளாஷ்'பேக் செல்ல நமக்குக் கிறுகிறுவென்றது.

அதுமட்டுமில்ல சார் என்று அவர் அடுத்த அத்தியாத்தை ஆரம்பிக்க...( அடுத்தது என்ன..? நம் மனதுக்குள் வடிவேலு வாய்ஸ்.) நாங்க யாரும் மீனோட வாலை புடிச்சி தூக்க மாட்டோம். யாரையும் தூக்கவும் விட மாட்டோம். மீன் வாலை பிடிச்சு தூக்கினாலும் மீன் வலைக்கு சிக்காது. இதை நாங்களா கண்டுபிடிக்கலை. காலகாலமாக உள்ள நம்பிக்கை. என்றவரிடம், கடையில் மீன் விக்கிறவங்க மீன் வாலை பிடிச்சுத் துக்கினாலும் உங்க வலையில மீன் மாட்டாதா? என்று நாம் அப்பாவியாக கேட்டோம். 'அது எங்களை ஒண்ணும் பண்ணாது. அவுங்க வியாபாரத்தைத்தான் பாதிக்கும். இங்கிருந்து மீன் வெளிய போகுற வரைக்கும் நாம பயம்பத்திரமா இருந்தா போதும் சார்…' என்று அவர் பொறுப்போடு சொல்லி முடிக்க... ஆளைவிடுங்கப்பாவென அங்கிருந்துவிட்டோம் ஜூட்…

ஒரே வீட்டில் 30 கேமிராக்கள் சூழ்ந்திருக்கும் இந்த 'பிக் பாஸ்' யுகத்திலும் புகைப்படம் எடுப்பது தொடர்பாக இன்னும் சில மூட நம்பிக்கைகள் எஞ்சியிருக்கவே செய்கின்றன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு