Published:Updated:

நலம் 360’ - 11

மருத்துவர் கு.சிவராமன்

போலா... உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் புதிய தொற்றுநோய். மரணித்த காட்டு வெளவால்களிடம் இருந்தும், சிம்பன்சி யிடம் இருந்தும் மனிதனுக்குள் எபோலா நுழைந்ததாகக் கருதப்படுகிறது. பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் எனக் கடந்த சில வருடங்களில் கொத்துக்கொத்தாக மரணங்களைத் தந்துவிட்டுப்போன, தொற்றுநோய்களைப்போல இந்த வைரஸால் வரும் நோயும் அதிக மரணங்களைத் தரும் என, உலக சுகாதார நிறுவனம் கடுமையாக எச்சரிக்கிறது.

உலகை ஆள்வதாக நினைத்துக்கொண்டிருக்கும் மனிதனுக்கு, இதுபோன்ற தொற்றுநோய்கள்தான் அவ்வப்போது மரண பயத்தைக் காட்டிவிட்டுச் செல்கின்றன. இதற்கு முன் வரலாற்றின் பதிவுகளில் மிக மோசமாகப் பதிவுசெய்யப்பட்ட தொற்றுநோய் பிளேக். 14-ம் நூற்றாண்டின் மத்தியில் உலகின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே 450 மில்லியனாக இருந்தபோது, 75 மில்லியன் சீன, ஐரோப்பிய மக்களை பிளேக் நோய் வாரிச்சுருட்டிக் கொண்டுபோனது. அதை 'கறுப்பு மரணம்’ என்கின்றனர். அந்த பிளேக்தான், உலகில் மிக அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய தொற்றுநோய். அதன் பிறகு காலரா, எய்ட்ஸ்... என ஏகப்பட்ட தொற்றுநோய்கள் மனிதனை மிரட்டிக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனாலும், மனிதன் அடங்குவதாக இல்லை.

சரி, வெடித்துக் கிளம்பினால் வீரியமாகப் பரவும் இந்தத் தொற்றுநோய்களை எப்படி எதிர்கொள்வது? அதை அந்தந்தச் சூழ்நிலைகள்தான் முடிவுசெய்யும் என்றாலும், பொதுவாக நமது உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை எப்போதும் உச்சத்திலேயே வைத்திருக்கவேண்டியது மிக அவசியம். சூழல் சிதைவு, மருந்து விற்பனை உத்திகள் என தொற்றுக்குப் பின்புறம் அரசியல், இன்னும் பிற இத்யாதிகள் இருக்கட்டும். நம் தினசரி வாழ்வியலையே உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை 'ரீசார்ஜ்’ செய்தபடியே இருக்கும் வகையில் அமைத்துக்கொள்வதே நல்லது. பெருவாரியாக உடல் உழைப்பு குறைந்த நிலையில், ஒவ்வோர் உணவோடும் வணிக ரசாயனம் ஒட்டிக்கொண்ட இன்றைய நவீன வாழ்வியலில், நோய் எதிர்ப்பு ஆற்றல் வீரியம் இழக்கிறது என்பது ஊர்ஜிதமான உண்மை. அதை மீட்டு எடுக்க சில சின்னச் சின்ன அக்கறைகளே போதும்.

நலம் 360’  - 11

அனைவருக்குமான அக்கறை:

அறுசுவைகள் சேர்ந்த உணவு, அன்றாடம் அளவாக இருப்பது ஆரோக்கியத்தின் அடிப்படை. பாரம்பர்ய உணவு அப்படித்தான் பரிமாறப்பட்டது. காளமேகப் புலவர் பதிவில் வரும், 'கரிக்காய் பெரித்தாள், கன்னிக்காய் வாட்டினாள், பரிக்காய் கூட்டினாள், அப்பக்காய் துவட்டினாள்’ என்ற செய்தியில் சொல்லப்பட்டவை வெறும் காய்கறிகள் பெயர் மட்டும் அல்ல. அன்றைய உணவில், துவர்ப்பான அத்தி, புளிப்பும் துவர்ப்புமான மாங்காய், துவர்ப்பும் இனிப்புமான வாழைக்கச்சல், கசப்பும் துவர்ப்புமான கத்திரிக்காய், இவற்றை சமைக்கையில் துளி கடல் உப்பு... என அனைத்து சுவைகளும் கலவையாக இருந்தன என்பது தெரியவருகிறது. ஆனால், இன்று அதே உணவு, 'கேவண்டிஷ்’ வாழை, 'கார்பைடு கல்’லால் பழுத்த அல்போன்சா மாம்பழம், 'பி.டி’ கத்திரி, 'அயோடைஸ்டு’ உப்பு என உருமாறிவிட்டது. இதை நாம் உண்ணும்போது நோய் எதிர்ப்பு ஆற்றல் வருமா... அல்லது நோய் வருமா... என அவற்றைப் படைத்தவர்கள்தான் பதில் அளிக்க வேண்டும்.

உணவில் கசப்பும் துவர்ப்புமான சுவைகளை நம்மில் பலர் மறந்தேவிட்டோம். இவை இரண்டும் அன்றாடம் ஏதேனும் ஓர் உணவில் இருப்பது, நோய்க்கு எதிரான இயற்கைக் கேடயத்தை எந்த நேரமும் அணிந்திருப்பதற்குச் சமம். அதிக கசப்பைத் தரும் நிலவேம்புக்குள் டெங்கு ஜுரத்தை மட்டுப்படுத்தும் கூறு ஒளிந்து இருக்கிறது. பன்றிக் காய்ச்சலுக்கு இன்றளவில் ஒரே மருந்தான டாமிஃப்ளூ தயாரிக்கப் பயன்படும் SAI அமிலம், பிரியாணிக்குப் போடும் அன்னாசிப் பூவின் கசப்புக்குள் ஒளிந்திருக்கிறது. புற்றுக்கு எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் கசப்பும் துவர்ப்புமான ஃபீனால்கள், பால் சேர்க்காத பச்சைத் தேநீரில் கலந்திருக்கிறது. காச நோய்க்கும், ஹெச்.ஐ.வி-க்கும் எதிரான நோய் எதிர்ப்பு ஆற்றல் தரும் கசப்பு, புளிப்பு, இனிப்பு, துவர்ப்பு... கலந்த சத்துக்கள் நெல்லிக்காயில் நிரம்பி இருக்கின்றன. சாதாரண வைரஸ் ஜுரத்துக்கு எதிரான எதிர்ப்பு ஆற்றல் துளசியின் கசப்புக்கும் துவர்ப்புக்கும் இடையே இருக்கிறது.

குழந்தைகளுக்கான அக்கறை:

எந்த வெளித்தீண்டலும் இல்லாமல் ஒவ்வோர் அணுக்குள்ளும் இயல்பாகவே ஒளிந்திருக்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலை 'Cell mediated immunity’ என்பார்கள். அந்த எதிர்ப்பு ஆற்றல் நன்றாக இருந்தால் தொற்றுகள் தரும் நுண்ணுயிரிகள், உடலைத் தொந்தரவு செய்வது இல்லை. ஆனால், அந்த நோய் எதிர்ப்பு ஆற்றல் வெள்ளை சர்க்கரை சாப்பிடும்போது, ரசாயனக்கூறுகள் சேர்க்கப்பட்ட துரித உணவுகளைச் சாப்பிடும்போது, டிரான்ஸ் கொழுப்புகள் அடங்கிய பேக்கரி, பஃப்ஸ், ஃபிங்கர் ஃப்ரைஸ் சாப்பிடும்போது செம்மையாகப் பராமரிக்கப்படுவது இல்லை என்கிறது இன்றைய அறிவியல். ஆக, குழந்தைகளை அப்படியான உணவுகளில் இருந்து விலக்கிவைப்பது தொற்றில் இருந்து காக்கும் உன்னத வழி. இயல்பிலேயே மருத்துவக் குணமுள்ள தேனில், மருத்துவக் குணமுள்ள கசப்பான, காரமான மூலிகைகளைக் கலந்துகொடுத்து குழந்தைகளை வளர்த்தவர்கள் நாம். தூதுவளைப் பழத் தேன், மாதுளைப் பழத் தேன், மிளகுத் தேன், நெல்லித் தேன்... ஆகியவை சில உதாரணங்கள். அதேபோல் குழந்தைகளுக்கு சுரசம் என மூலிகை இலைச்சாறைக் கொடுக்கும் பழக்கமும் நம்மிடையே உண்டு. கற்பூரவல்லி இலைச் சாற்றை தேனில் குழைத்து, லேசாக அனலில் காட்டி, தேன் பொங்கும்போது எடுத்து, ஆறவைத்து, அதை அவ்வப்போது அடிக்கடி சளித்தொற்று வரும் குழந்தைக்குக் கொடுக்கலாம். இதேபோல் துளசி, தூதுவளை இலையையும் கொடுக்கலாம்.

நலம் 360’  - 11

சிறப்புக் கவனிப்பு தேவைப்படுவோருக்கான அக்கறை:

சர்க்கரை/புற்று வியாதிக்காரர், சமீபமாக நோயில் இருந்து மீண்டவர்கள், கர்ப்பிணிப் பெண், குழந்தைப் பெற்ற பெண், வயோதிகர் இவர்கள்தான் தொற்றுகளுக்கு அதிகம் ஆளாகக்கூடிய 'vulnerable group’ என்கிறது மருத்துவ உலகம். காலை/மாலை தேன் சேர்த்த, பால் சேர்க்காத தேநீர், லக்டோபாசில்லஸ் எனும் புரோபயாட்டிக் சேர்ந்த இட்லி/கம்பங்கூழ், ஆப்பத்துக்குத் தொட்டுக்கொள்ள... நோய் எதிர்ப்பு ஆற்றலை தாய்ப்பாலுக்கு அடுத்த நிலையில் தரக்கூடிய, தேங்காய்ப்பால், மதிய உணவில் ஏதேனும் ஒரு கீரை... ஆகிய உணவுப்பழக்கம் தொற்றுக்கு எதிரான பாதுகாப்புக் கவசம் ஆகும். சர்க்கரை வியாதி உள்ளவர் தவிர பிறர் இனிப்புக்குப் பதில் பனைவெல்லம், தேன் அல்லது ஆர்கானிக் நாட்டுவெல்லம் இவற்றில் ஒன்றைப் பயன்படுத்தலாம். காரம் தேவைப்படும் தருணங்களில் மிளகைச் சேர்த்துக்கொள்வது, சுவையுடன் நோய் எதிர்ப்பு ஆற்றலையும் சேர்த்துக்கொள்வதற்கு ஒப்பானது.

வெந்தயத்தில் இருந்து 4-hydroxy isoleucine-ம், தக்காலத்தில் (அன்னாசிப் பூவுக்கான வேறு பெயர்) இருந்து SAI அமிலத்தையும், மஞ்சளில் இருந்து குர்குமினையும், தேங்காயில் இருந்து மோனாலாரினையும் உறிஞ்சி, நோய் எதிர்ப்பு ஆற்றல் மாத்திரைகள், மருந்துகளாக மாற்றி கூவிக்கூவி டாலரில் விற்கிறார்கள். ஆனால், அவற்றையெல்லாம் பேச்சிலும் மூச்சிலும் வைத்திருந்த நாம், 'பீட்சா ரொம்ப ஹைஜீனிக்கா தயாரிக்கிறாங்க. ரோட்டுக்கடை ஆப்பம், வடை எல்லாம் அப்படியா இருக்கு?’ எனப் பேசிக்கொண்டிருக்கின்றோம்.

அரை இடுக்கில் அரிப்பைத் தரும் பூஞ்சைத் தொற்றில் இருந்தும், அண்ட வந்த ஐந்தாறு நாட்களில் நம்மைக் கொன்றுகுவித்த பல பாக்டீரியா, வைரஸ்களில் இருந்தும் நம்மை மீட்டு எடுத்தது நவீன அறிவியலின் தடுப்பு மருந்துகளும், உயிர் எதிர் நுண்ணுயிரிகளும்தான். ஆனால், அதே எதிர் நுண்ணுயிரியை அளவு இல்லாமல், மருந்திலும் உணவிலும் தடுப்பிலும் நாம் பயன்படுத்துவது எதிர்விளைவை உண்டாக்கிவிட்டது. இன்றைக்கு காசம் முதலான நோய் தரும் பல பாக்டீரியாக்களுக்கு எதிராக எந்த ஆன்ட்டிபயாட்டிக்கும் வேலை செய்யாத DRUG RESISTANCE நிலை இந்தியா முதலான வளர்ந்த நாடுகளில் உருவாகிவருவது மிகவும் கவலைக்குரிய விஷயம்.

ஒரு இன்ச்சில் ஒரு மில்லியனுக்கும் குறைவான அளவில் உள்ள வைரஸும் சரி, கண்ணுக்குத் தெரியாத பாக்டீரியாவும் சரி, இரை தேடித் தானாக நம்மை அணுகுவது இல்லை. சக இனத்தை அழித்து, தனது நாளைய கொண்டாட்டத்துக்கு கர்ச்சீப் போட்டுவைக்கும் காட்டுமிராண்டிக் குணமும் அவற்றுக்கு உரித்தானது அல்ல. லாபவெறிக்காக இயற்கையைச் சிதைக்கும் மனிதனின் விபரீத முயற்சிகளே அந்தக் கிருமிகளை, நுண்ணுயிரிகளைத் தீண்டித் தூண்டுகின்றன. கொள்ளை நோய் பரப்பும் கிருமிகளிடம், 'ஏன் இந்தப் பேரழிவை உண்டாக்கு கிறீர்கள்?’ என்று கேட்டால், 'அவனை நிறுத்தச் சொல்... நான் நிறுத்துகிறேன்’ என்று மனிதனைச் சுட்டிக்காட்டுமோ என்னவோ!?

- நலம் பரவும்...

எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்க...

1. ஏழு மணி நேரக் கும்மிருட்டுத் தூக்கத்துக்குப் பின், இளங்காலை மொட்டைமாடி வெயிலில் 20 நிமிட உலாவல், தோட்டத்து வேப்பங்காற்றில் கபாலபாதி பிராணாயாமம், பின்னர் நலுங்கு மாவு தேய்த்துக் குளியல், காலையில் கரிசாலை முசுமுசுக்கைத் தேநீர், மத்தியானம் தூய மல்லிச்சம்பா சோறு, அதற்கு மிளகுவேப்பம்பூ ரசம், 'தொட்டுக்கா’வாக நெல்லிக்காய்த் துவையல், இரவில் சிவப்பு அரிசி அவலுடன் சிவப்புக் கொய்யா சாப்பிட்டு வந்தால், எந்தத் தொற்றும் நெருங்க நிச்சயம் யோசிக்கும்!

2. வெள்ளிக் கலனில் குழந்தைக்கு உணவு ஊட்டுவது நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும் என்கிறது நவீன மருத்துவம். அதன் எதிர்நுண்ணுயிர் ஆற்றலைக் கண்டறிந்துள்ள நாசா முதலான பல ஆய்வு அமைப்புகள், வெள்ளி இழையில் சாக்ஸ், ஜட்டி, பனியன்களை உருவாக்கி, குளிக்க இயலாத விண்வெளி வீரர்களுக்கு உடுத்தி அனுப்புகிறது. வெள்ளிப் பாலாடை, வெள்ளித் தட்டு பயன்படுத்த வாய்ப்பு உள்ளோர் இதனை உணவுக் கலனாகப் பயன்படுத்தலாம். வெள்ளிக்கு மாற்று மண்பாத்திரம். மண்பாத்திரத்தில் சமைத்து, மண்கலனில் நீர் வைத்து அருந்துவது நோய் எதிர்ப்பு ஆற்றலை உயர்த்தும்!

3. எண்ணெய்க் குளியல், உடல் நோய் எதிர்ப்பு ஆற்றல் உயர உபாயம் செய்யும். நிணநீர் ஓட்டத்தைச் (Lymphatic drainage) சீராக்கி, உடலின் செல்களுக்கு இடையிலான வெப்பப் பரிமாற்றத்தைச் சூழலுக்கு ஏற்றபடி சீராக்கும் இந்த நல்வாழ்வியலை மீட்டு எடுப்பது, இப்போது காலத்தின் கட்டாயம்.

சீந்தில் அன்னப்பால் கஞ்சி செய்முறை!

ஹெச்.ஐ.வி., காச நோய்க்கு எப்போதும் நாள்பட்ட சிகிச்சை தேவை. இன்று அதற்கான மருந்துகளுடன் நோய் எதிர்ப்பு ஆற்றல் உயர வழங்கப்படும் டானிக்குகளில் மிக முக்கியமாகச் சேர்க்கப்படும் தாவரம் சீந்தில். அமிர்தவல்லி என மருத்துவ இலக்கியங்களில் போற்றிப் பேசப்படும் இந்தச் சீந்தில் சேர்ந்த அன்னப்பால் கஞ்சி, வர்ம சிகிச்சை செய்பவர்களிடமும் பாரம்பர்ய மருத்துவர்களிடமும் மிகப் பிரசத்திபெற்ற ஒரு மருத்துவ உணவு. கசப்பாக இருந்து உடலுக்கு உரம் அளிக்கும் இந்தக் கஞ்சியைத் தயாரிப்பது மிக எளிது.

சோற்றுக் கஞ்சி செய்யும்போது ஒரு துணித்துண்டில் சீந்தில் பொடியைப் பொட்டலமாகக் கட்டி, அரிசியோடு சேர்த்துப் போட்டு வேகவைக்க வேண்டும். கஞ்சி வெந்து எடுத்த பின், துணிப்பொட்டலத்தை அகற்றிவிடலாம். சீந்திலின் சத்துக்கள் கஞ்சியில் கலந்துவிடும். சீந்தில் அன்னப்பால் கஞ்சி, நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்த்து, வர்மத்தில் அடிபட்ட வலி, கணச்சூடு, காசம், மேகச் சூடு (பெண்களுக்கு வெள்ளைப் படுதலுக்கான தூண்டுதல்), அலர்ஜி... எனப் பல நோய்க்கூட்டத்தை தனி ஆளாக  நின்று வெல்லும். அருகில் ஏதேனும் தொற்று நோய்கள் இருந்தால், உங்கள் வீட்டில் இது உணவாக ஓரிரு கரண்டி நிச்சயம் பரிமாறப்பட வேண்டும்!