Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 11

பாரதி தம்பி, படம்: எம்.விஜயகுமார்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 11

பாரதி தம்பி, படம்: எம்.விஜயகுமார்

Published:Updated:
கற்க கசடற விற்க அதற்குத் தக! - 11

தேர்வில் 'கரும்பு எங்கு விளைகிறது?’ என்பது கேள்வி. ஒரு மாணவருக்கு பாடப் புத்தகத்தில் உள்ள விடை தெரியும். எழுதினார்; மதிப்பெண் கிடைத்தது. இன்னொருவருக்கு பாடப் புத்தக விடை தெரியாது. அவரது கிராமத்தில் கரும்பு விளைகிறது என்றாலும் அதை எழுத முடியாது. புத்தகத்தில் உள்ள விடையைத்தான் எழுத வேண்டும். அது நினைவுக்கு வரவில்லை; ஆகவே எழுதவில்லை; அதனால் மதிப்பெண் இல்லை. இப்போது இரண்டு பேரின் முன்னால் ஒரு கரும்பை வைத்து, 'இது என்ன?’ என்று கேட்கப்படுகிறது. தேர்வில் சரியான விடை எழுதியவருக்கு, அது என்ன என்றே தெரியவில்லை. விடை எழுதாத மாணவர் சட்டென்று 'கரும்பு’ என்று சொன்னார். நடைமுறையில் இருந்து துண்டிக்கப்பட்டதாக இருக்கும் நமது கல்விமுறையின் அபத்தத்தை இவை உணர்த்துகின்றன என்றபோதிலும், இரண்டுமே அறிவுதான். ஒன்று எழுத்தறிவு என்றால், மற்றது சொல்வதன் வழியே வெளிப்படும் அறிவு. எழுதுதல், பேசுதல், கேட்டல் ஆகிய மூன்று திறன்களுக்கும் கல்வியில் சம முக்கியத்துவம் உண்டு. மூன்றும் ஒருங்கிணையும்போதுதான், கல்வி முழுமை பெறுகிறது!

ஒரு குழந்தை மூன்றரை வயதில் எல்.கே.ஜி செல்கிறது என்றால், அதற்கு முன்பாகவே எத்தனையோ விஷயங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறது. அதுவும் நவீன காலத்தில் 3, 4 வயது குழந்தைகளின் அறிவுத்திறன், ஆச்சர்யப்படும்விதமாக இருக்கிறது. எனில், அந்த அறிவின் ஒவ்வொரு துளியையும் எழுதி, எழுதித்தான் பெற்றார்களா? இல்லையே... ஒரு குழந்தை, தான் வாழும் சூழலைக் கிரகித்து அறிவைப் பெறுகிறது. இது இயற்கை விதி. இயற்கையின் இந்தப் பேராற்றலைப் பின்னுக்குத் தள்ளி, 'எதையும் எழுதிக்காட்டினால்தான் ஒப்புக்கொள்வேன்’ என்று நம் கல்வி அடம்பிடிக்கிறது. அதை நமது புத்திக்குள் உறையவைத்திருக்கிறது. முன்னேறிய கல்விமுறையைக்கொண்ட பல நாடுகளில் பேசுதலுக்கும் கேட்டலுக்கும் சமஅளவு முக்கியத்துவம் தரப்படுகிறது. அதை நம் ஊரிலும் கொண்டுவந்திருக்கிறது சி.சி.இ எனப்படும் 'தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு’ (Continuous and Comprehensive Evaluation).  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 11

தற்போதைய நிலையில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை சி.சி.இ முறை இருக்கிறது. 10-ம் வகுப்பில் இருந்து பழைய முறையில்தான் படிக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக சி.சி.இ முறைக்குப் பழகிவிட்டு மறுபடியும் பழைய மனப்பாடக் கல்விமுறைக்குத் திரும்புவது மாணவர்களுக்கு மிகவும் சிரமமானது. 'எல்லாம் படிப்புதானே... எல்லாம் புத்தகம்தானே’ என பொத்தாம்பொதுவாக இதைப் பார்க்க முடியாது. சி.சி.இ முறை என்பது, முப்பருவத் தேர்வு முறை. சாதாரண முறையில் வருடக் கடைசியில் முழு ஆண்டில் மொத்தமாகத் தேர்வு எழுத வேண்டும்.

ஒரு விஷயத்தை எப்படி அணுகுவது என்பதற்கு, இதுவரை ஒரு முறையில் பழகியிருப்பார்கள். இப்போது வேறு ஒரு முறையில் பழக வேண்டும். அவ்வப்போதைய சிக்கல்களை அவ்வப்போது தீர்ப்பது; மொத்தமாகச் சேர்த்துவைத்து தீர்வு காண்பது என்ற இரண்டு முரண்பட்ட வழிமுறைகளை அடுத்தடுத்து எதிர்கொள்ளும் மாணவர்கள், கடும் மனச்சிக்கலுக்கு ஆளாவார்கள். இது, மாணவர்களின் கல்வியைத் தவிர்த்த மற்ற ஆளுமையிலும் செல்வாக்கு செலுத்தக்கூடும். இதை இந்தக் கோணத்தில் பார்க்க வேண்டும்.

இத்தகைய புரிதலுடன் இந்தச் சிக்கலை அணுகவேண்டிய அரசோ, தனியார் பள்ளிகளின் வேட்டைக்காடாக இருக்கும் 10-ம் வகுப்புக்கு சி.சி.இ முறையைக் கொண்டுவரத் தயங்குகிறது; 9-ம் வகுப்புடன் நிறுத்திக்கொள்கிறது. கல்வியாளர்களின் கோரிக்கைபடி, '10, 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு இரு பருவத் தேர்வு முறை’ வந்துவிட்டால், தனியார் பள்ளிகளின் கொட்டத்தை பெருமளவுக்கு அடக்க முடியும்.

ன்று தனியார் பள்ளிகளுக்கு வருமானம் கொட்டித்தரும் முக்கியமான வழிமுறைகளில் ஒன்று, 'நோட்ஸ்’ போடுவது. அதை விற்பதிலேயே அவர்கள் பள்ளியின் நடைமுறைச் செலவுகளை எடுத்துவிடுகின்றனர். சி.சி.இ முறையில் நோட்ஸுக்கு வேலை இல்லை. (ஆனால், சிலர் இதற்கும் குதர்க்கமான வழிமுறைகளைக் கண்டறிந்து, நோட்ஸ் போடத் தொடங்கிவிட்டனர். அரசு, உடனடியாக  அதைத் தடுத்து நிறுத்த வேண்டும்).

இப்படி தனியார் பள்ளிகளின் லாபத்தை மறைமுகமாக உத்தரவாதப்படுத்துவது ஒரு பக்கம் என்றால், அரசுப் பள்ளிகளில் சி.சி.இ எப்படிச் செயல்படுத்தப்படுகிறது என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஒரு கல்விமுறையாக சி.சி.இ சிறப்பானதாக இருந்தபோதிலும் செயல்படுத்தப்படும் இடத்தில் அது மிக, மிக மோசமாகவே இருக்கிறது. ஆகப் பெரும்பான்மையான அரசுப் பள்ளிகளில் சி.சி.இ வெறும் சடங்காகவே இருக்கிறது. சரிபாதி ஆசிரியர்களுக்கு இந்த முறையின் அடிப்படைகூடப் புரியவில்லை. 'புத்தகத்தை விட்டுட்டு என்னென்னமோ சொல்லித்தரச் சொல்றானுவ’ என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு மாணவன் பாட்டுப் பாடுவதற்கு மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதும், கதை சொல்வதை உற்சாகப்படுத்த வேண்டும் என்பதும் அவர்களுக்குக் கடுப்பு ஏற்றுகின்றன. ஆசிரியர் பணிகுறித்து அவர்களின் மூளையில் உறைந்துள்ள சித்திரத்துக்கு இது நேர்மாறாக இருக்கிறது.

ஒரு வகுப்பறையைச் சுத்தப்படுத்த வேண்டும் என்று சொன்னால், அதற்கு முதலில் தயாராகி நிற்பவன், படிப்பில் சுமாராக விளங்கும் கடைசி பெஞ்ச் மாணவன்தான். பள்ளி மைதானத்தைச் சுத்தப்படுத்த வேண்டும் என்றாலும், அவன்தான் முன்வரிசையில் நிற்பான். 'நமக்குப் படிப்பு வரவில்லை. இதையாவது செய்வோம்’ என்று மாணவன் நினைக்கலாம். ஆனால், ஆசிரியர் அப்படி நினைக்கக் கூடாது. கடைசி பெஞ்ச் மாணவன் மைதானத்தைச் சுத்தப்படுத்த முன்வருவதில், நேர்மறை அம்சம் ஒன்று உள்ளது. அவனிடம் வளர்த்து எடுக்கப்பட வேண்டிய தலைமைப் பண்பு இருக்கிறது. இதைக் கண்டறிவது ஓர் ஆசிரியரின் கடமை. இதற்கு சி.சி.இ முறைப்படி மதிப்பெண் வழங்க முடியும். இதை முதலில் ஆசிரியர் உணர வேண்டும். இத்தகைய புரிதல் இல்லாததன் காரணமாக, ஆசிரியர்கள் வேண்டாவெறுப்பாக, மிகமிக அவநம்பிக்கையுடன் வகுப்பறைக்குச் செல்கின்றனர்.

பெயருக்கு ஒரு 'சார்ட்’ வாங்கி மாட்டி வைத்துக்கொள்கின்றனர். அது வாரக்கணக்கில், மாதக்கணக்கில் அப்படியே தொங்குகிறது. சி.சி.இ முறையில் தேர்வுக்கு 60 மதிப்பெண், செயல்பாட்டுக்கு 40 மதிப்பெண். ஆசிரியர்களின் கவனம் அந்த 60 மதிப்பெண்ணில் மட்டும்தான் இருக்கிறது. 40 மதிப்பெண் வழங்க ஒவ்வொரு மாணவரின் தனித்திறனைப் பார்க்க வேண்டும். ஆனால் அதை ஒரு பொருட்டாக ஆசிரியர்கள் மதிப்பது இல்லை. தேர்வில் மாணவர்கள் எடுத்துள்ள மதிப்பெண்ணுக்கு ஏற்ப இதில் ஒரு மதிப்பெண்ணை இவர்களே போட்டுக்கொள்கின்றனர். சில பள்ளிகளைத் தவிர, ஆகப் பெரும்பான்மையான பள்ளிகளின் நிலை இதுதான். ஆனால், எந்தப் பள்ளிக்கு எத்தனை முறை இன்ஸ்பெக்ஷன் போனாலும் இதைக் கண்டுபிடிக்க முடியாது. எல்லா ஆவணங்களும் பக்காவாக இருக்கும்.

இதைத்தான் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 'எக்கச்சக்கமா சார்ட் ரெடி பண்ண வேண்டியிருக்கு’ என்று கவலைப்பட்டுக் கொள்கின்றனர். அதாவது, உண்மையிலேயே சொல்லித் தர வேண்டுமே என்ற கவலை அல்ல; சொல்லித்தந்தது போன்று ஆவணங்களைத் தயார் செய்ய வேண்டுமே என்ற கவலை. இப்படி வேலை செய்வதைப்போல நடிக்க வேண்டியிருப்பதுகூட அவர்களுக்குச் சுமையாக இருக்கிறது.  

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 11

'சி.சி.இ முறை, ஒவ்வொரு மாணவரின் மீதும் தனிப்பட்ட கவனம் செலுத்தச் சொல்கிறது. அரசுப் பள்ளிகள் பலவற்றில் ஆசிரியர்: மாணவர் விகிதாசாரம் அதிகமாக இருக்கும் நிலையில் இது ஆசிரியர்களின் பணிச்சுமையை அதிகரிக்கிறது’ என்பது பொதுவாகச் சொல்லப்படும் ஒரு காரணம். இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. காரணம், எல்லா பள்ளிகளிலும் இந்த நிலை இல்லை. பல பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைவாகத்தான் உள்ளது. இன்னொன்று, மாணவர்கள் அதிகமாக இருக்கும் பள்ளிகளில், ஆசிரியர்கள் அப்படி தங்களின் திறனுக்கு அப்பாற்பட்டு பணிபுரிகிறார்களா என்ன? சில விதிவிலக்குகள் இருக்கின்றன என்றபோதிலும், பொதுவான பதில் எதிர்மறையாகவே உள்ளது. ஆக, ஆசிரியர்கள் தங்கள் வேலையைச் செய்யாமல் இருப்பதற்கு, இதை ஒரு நொண்டிச்சாக்காக முன்வைக்கிறார்கள். இத்தகைய சிக்கல்களை ஆய்வுசெய்து, சி.சி.இ சரியாகச் செயல்படுத்தப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க எந்த 'செக் பாய்ன்ட்’டும் இல்லை. இதனால் வெறுமனே பெயர் அளவுக்கானதாக ஆவணங்களில் மட்டும் வெற்றிகரமானதாக இருக்கிறது சி.சி.இ.  

உண்மையில் சி.சி.இ என்பதற்கு அப்பால், ஆசிரியருக்கும் மாணவருக்குமான உறவு எத்தகையதாக இருக்கிறது என்பதும் முக்கியம். அரசுப் பள்ளி ஒன்றை எடுத்துக்கொண்டால் பல மாணவர்கள் காலையில் சாப்பிடாமல் வருவார்கள். மதிய உணவு வரையிலும் சோர்வாகவே இருக்கும் அவர்களை அக்கறையுடன் அணுகி விசாரிக்க வேண்டும். ஒரு மாணவர் தினமும் தாமதமாக வருகிறார் என்றால், அவரது குடும்ப நிலை குறித்து கேட்டறிய வேண்டும். அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் கூலி வேலை பார்ப்பவர்கள். எங்கோ ஓர் ஊரில் தங்கியிருப்பார்கள். வீட்டில் கிடைக்காத அக்கறையை, அரவணைப்பை ஆசிரியர்தான் சேர்த்துத் தர வேண்டும். பாடப் புத்தகத்துக்கு அப்பாற்பட்ட மாணவர்களுடனான இதுபோன்ற உறவுதான் ஓர் ஆசிரியருக்கு உரிய அடிப்படைத் தகுதி. ஆனால் ஆசிரியர்கள், மாணவர்களின் குடும்பப் பின்னணியை விசாரிப்பதையும், மற்ற விவரங்களைத் தெரிந்துகொள்வதையும் தங்களுக்கு சம்பந்தம் இல்லாததாக நினைக்கின்றனர். கேட்டால் மாணவன் மீது பழி போடுவார்கள். 'நீங்க போய்க் கேட்டுப் பாருங்க... எவ்வளவு திமிராப் பதில் சொல்றாங்கனு’ என்று அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

உங்கள் பிள்ளை படிக்காமல்போனால், குறைந்த மதிப்பெண் எடுத்தால், திமிராகப் பேசினால், இப்படித்தான் பொறுப்பு இல்லாமல் தட்டிக்கழிப்பீர்களா? உங்கள் பிள்ளையைப் படிக்கவைக்க, நல்ல பண்புகளுடன் வளர்க்க எவ்வளவு மெனக்கெடுவீர்கள்? அதே அக்கறையை நீங்கள் பணிபுரியும் பள்ளி மாணவர்களின் மீது காட்ட வேண்டாமா?!

- பாடம் படிப்போம்...

தோல்வியைத் தவிர்க்கலாமே!

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 11

ஆயிஷா இரா.நடராசன், கல்வியாளர்

''இன்று ஒரு குழந்தை அறிவைத் தேடி பள்ளிக்கு வரவேண்டிய அவசியம் இல்லை. அறிவு, இணையம் முழுவதும் கொட்டிக்கிடக்கிறது. ஒவ்வொரு கைபேசியிலும் அறிவு நிறைந்துள்ளது. எனில், இன்றைய குழந்தை எதற்காக பள்ளிக்கு வர வேண்டும்? திறன்களை வளர்த்துக்கொள்ளத்தான் பள்ளிக்கு வர வேண்டும். குழந்தைகளின் அறிவைச் சோதித்து அதன் தோல்விகளை மட்டுமே அதிகம் பேசிக்கொண்டிருந்த கல்வியை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். கணிதமேதை ராமானுஜன் இந்தியாவில் கல்வி கற்றபோது கணிதத்தைத் தவிர மற்ற அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்துகொண்டிருந்தார். நமது கல்விமுறை அந்தத் தோல்வியைத்தான் அவருக்குத் திரும்பத் திரும்ப நினைவுபடுத்தியது. அவர் வெற்றிபெறும் துறையை இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவர்தான் கண்டறிந்தார். இன்று நம் முன்னால் உள்ள கேள்வியும் இதுதான். நம் குழந்தைகளின் வெற்றிகளை முன்வைக்கும் சி.சி.இ முறையை ஆதரிக்கப்போகிறோமா? அல்லது தொடர்ந்து தோல்விகளை மட்டுமே நினைவுபடுத்திக் கொண்டிருக்கப்போகிறோமா? குழந்தையின் பல்திறனுக்கும் மதிப்பளிக்கும் சி.சி.இ முறை சரியாகப் பின்பற்றப்படுமானால் தோல்வி அடையும் குழந்தை என்று ஒருவர்கூட இருக்க மாட்டார்கள்!''

தீண்டாமை பெருங்குற்றம்!

முந்தைய நமது பாடப் புத்தகங்களில் 'தீண்டாமை ஒரு பாவச்செயல், தீண்டாமை ஒரு பெருங்குற்றம், தீண்டாமை ஒரு மனிதத்தன்மையற்ற செயல்’ என்று முதல் பக்கத்தில் எழுதியிருப்பார்கள். மாணவர்கள் இதை, 'காலாண்டு ஒரு பாவச்செயல், அரையாண்டு ஒரு பெருங்குற்றம், முழு ஆண்டு ஒரு மனிதத்தன்மையற்ற செயல்’ என்று மாற்றி எழுதி, கிண்டல் செய்வது உண்டு. சமச்சீர் கல்விக்கான பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டபோது இந்த வாசகங்கள் கவனத்தில்கொள்ளப்பட்டன. அப்போது, 'பாவச்செயல் என்பது மத நம்பிக்கை சார்ந்தது. இளம் வயதில் மாணவர்களின் மனதில் பாவ, புண்ணியம் போன்ற மதம் சார்ந்த நம்பிக்கைகளை விதைக்கக் கூடாது’ என்ற வாதம் முன்வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்போது அந்த வாக்கியம், 'தீண்டாமை மனிதநேயமற்ற செயல்-பெருங்குற்றம்’ என்பதாக உள்ளது!