Published:Updated:

இஸ்ரேலுக்கு சமைத்துப்போடும் இந்தியப் பெண்!

'சிக்கன் கறி குயின்’ தெரியுமா? இஸ்ரேலில் இந்தப் பெயரைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. பெயர் ரீனா புஷ்கர்னா. யூத அம்மாவுக்கும் சீக்கிய அப்பாவுக்கும் பிறந்த இந்த இந்தியப் பெண் அங்கே தந்தூரி ஹோட்டல் பிசினஸில் கொடி கட்டிப் பறக்கிற வி.வி.ஐ.பி. இந்த சிக்கன் குயின் பண்ணிய ஒரு காரியம்தான் இப்போது அவரை இணையத்தில் கடும் விமர்சனத்துக்குள்ளாக்கி

இஸ்ரேலுக்கு சமைத்துப்போடும் இந்தியப் பெண்!

இருக்கிறது. போர் நடந்துகொண்டிருக்கும் வேளையில் காஸா  இஸ்ரேல் எல்லைப் பகுதிக்கே சென்று இஸ்ரேல் ராணுவத்துக்கு பிரியாணி சமைத்துப்போட்டுத் திரும்பி இருக்கிறார். 400 கிலோ பிரியாணியை இலவசமாக எல்லைப் பகுதிக்கு அருகில் சமைத்து எடுத்துச் சென்றிருக்கிறார். போரில் அப்பாவி மக்கள் வாழும் காஸாவின் மீது கருமமே கண்ணாகக் குண்டு வீசிவரும் 2,000 போர் வீரர்களுக்கும் சாப்பாடு போட்டுத் தெம்பூட்டி வந்திருக்கிறார்.

''இஸ்ரேல் நகரான டெல் அவிவ்வில் இருந்து எங்கள் யூனிட்டே அங்கே போய் சமைத்துப் போட்டது வித்தியாச அனுபவமாக இருந்தது. என் அப்பா இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவர். அதனால் இளம் வயதிலேயே போர் வீரர்களின் வலியையும் கடமை உணர்ச்சியையும் நன்கு உணர்ந்தவள் நான். 30 வருடங்களுக்கு முன்பே இஸ்ரேல் நாட்டின் குடியுரிமை பெற்றாலும் மனதளவில் இன்னமும் இந்தியப் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணாக என்னை உணர்கிறேன். அதனால்தான் இந்த சின்ன முயற்சி. போர் இருபக்கமும் வலியைத் தரவல்லது என்பதை நான் நன்கு அறிவேன். 2,000 மக்களைக் காவு வாங்கிய இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும் என்பதே என் ஆசை. தேவைப்பட்டால் காஸாவில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் பிரியாணி சமைத்துக் கொடுக்க ஆர்வமாக இருக்கிறேன்'' என்று சென்டிமென்ட்டாக (?) பேசி இருக்கிறார்.

இஸ்ரேலுக்கு சமைத்துப்போடும் இந்தியப் பெண்!

டெல் அவிவ் நகரில் இருக்கும் பா.ஜ.கவின் வெளி நாட்டுப் பிரதிநிதிகள் அமைப்பில் முக்கியப் பொறுப்பில் இருக்கிறவர்தான் இந்த ரீனா. மோடி பதவிவேற்பு விழாவுக்கும்கூட டெல்லி வந்திருந்த வெளிநாடு வாழ் பா.ஜ.க ஆதரவாளர்களைத் தலைமையேற்று அழைத்து வந்தவர் இவர். மோடியை வாழ்த்தியதையும் ஆசி வாங்கிச் சென்றதையும் பூரிப்போடு பேசும் இந்தப் பெண்ணின் பிரியாணி விருந்தைக் கண்டித்து முகநூலில் பலர் கடுமையாக திட்டித் தீர்க்கிறார்கள். 'குழந்தைக் கறியில் பிரியாணி சமைத்த சிக்கன் குயின்’ என்றெல்லாம் விமர்சனக் கணைகள் தொடுக்கப்படு கின்றன.

பிரியாணி கசக்குதே!

ஆர்.சரண்