Published:Updated:

நலம் 360’ - 12

மருத்துவர் கு.சிவராமன்

முன்புபோல இளவட்டக்கல் தூக்கி, நான்கைந்து மாடுகளை விரட்டி, குதிரையில் போய் குறுக்கு சிறுத்தவளைக் கவர்ந்துவரும் கஷ்டம் எல்லாம் இன்றைய இளைஞர்களுக்கு இல்லைதான். ஆனாலும், சிக்ஸ்பேக் சித்ரவதை, 'செல்லம்... தங்கம்... புஜ்ஜிம்மா’ கொஞ்சல்களுக்காக நித்திரை வதை... எனக் காதலுக்கான ஆண்களின் மெனக்கெடல்கள் இன்றும் தொடரத்தான் செய்கின்றன.

'எனக்கு மட்டும் சொந்தம்
உனது இதழ் கொடுக்கும் முத்தம்;
உனக்கு மட்டும் கேட்கும்
எனது உயிர் உருகும் சத்தம்’

போன்ற வைரமுத்து வரிகளை 'காப்பி-பேஸ்ட்’  செய்து, வாட்ஸ்-அப், ஃபேஸ்புக்களில் காதலித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். காதலின் சாஃப்ட்வேர் இப்படி காலமாற்றத்துக்கு ஏற்ப தரம் உயர்ந்தாலும், ஹார்டுவேர் நிறையவே பழுதாகி வருவதாக மருத்துவ ஆய்வுகள் பலமாக எச்சரிக்கின்றன.

குடும்பக் கட்டுப்பாடு பிரிவு, ஐந்து கிலோ அரிசி, 500 ரூபாய் இனாம் எல்லாம் தேவை இல்லாமலே, இயல்பாகவே மனித இனத்தின் கருத்தரிக்கும் தன்மை பல மடங்கு குறைந்துவருகிறதாம். 1 மில்லி விந்துவில் 60-120 மில்லியன் உயிர் அணுக்கள் இருந்த காலம் மலையேறி,          15 மில்லியன் இருந்தாலே பரவாயில்லை என மருத்துவம் ஆதரவு ஆறுதல் சொல்கிறது. அதிலும் பெரும்பாலானவர்களுக்கு வெளியாகும் அணுக்களில் 10 சதவிகிதம் மட்டுமே உயிர்ச்சத்து நிறைந்ததாக இருக்கிறதாம். நமக்கு முன்னால் இந்தப் பூவுலகில் பிறந்த எலி, எருமை, குரங்குகளுக்கு எல்லாம் இந்த எண்ணிக்கையும் சதவிகிதமும் பல மடங்கு அதிகமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறது. 31-40 வயதையொட்டிய தம்பதிகளில், 46 சதவிகிதம் பேருக்குக் கருத்தரிப்புக்கான மருத்துவ உதவி தேவை என்கிறது இந்திய ஆய்வு ஒன்று. விளைவு... தெருவுக்கு இரண்டு அண்ணாச்சிக் கடைகள் மாதிரி, ஊருக்கு ஊர் செயற்கைக் கருவாக்க மையங்கள் பெருகிவருகின்றன. என்ன ஆச்சு நமக்கு மட்டும்?

நலம் 360’  - 12

பல்வேறு காரணங்கள்... வாகனம் கக்கும் புகை, பிளாஸ்டிக் பொசுங்களில் பிறக்கும் டயாக்ஸின், இன்னும் பல காற்று மாசுக்களை கருத்தரித்த பெண் சுவாசிப்பது, அவள் வயிற்று ஆண் குழந்தையின் செர்டோலி செல்களை (பின்னாளில் அதுதான் விந்து அணுக்களை உற்பத்தி செய்யும்) கருவில் இருக்கும்போதே சிதைக்கிறதாம். 'உணவு உற்பத்தியைப் பெருக்குகிறேன்’ என மண்ணில் நாம் தூவிய ரசாயன உர நச்சுக்களின் படிமங்கள், இப்போது நம் உயிர் அணுக்களுக்கு உலை வைக்கின்றன. பெண்கள் ஸ்ட்ராபெர்ரி இதழ் அழகு வேண்டி, தாலேட் கலந்த உதட்டுப்பூச்சு தடவுவது, முத்தமிடுவோருக்கு காதல் தந்து, கூடவே கருத்தடையும் செய்துவிடுகிறதாம்.

மறுபுறம்... சைக்கிள்ஸ்டாண்டில், குட்டைச்சுவரில், கடைசி பெஞ்சில், நண்பர்களால் நடத்தப்படும் ஆண்மை குறித்த ரகசிய டியூஷன்களில், மனசுக்குள் ஒட்டிக்கொள்ளும் விந்து குறித்த தப்பான புரிதல்களால் நொந்துதிரியும் ஆண்கள் ஏராளம்... தாராளம். ஆறரை அடி உயர ஆப்பிரிக்க 'போர்னோ’ நடிகர்களைப் பார்த்து, 'அவனை மாதிரி இல்லையே... எனக்கு சிறுசா இருக்கே!’ என உள்ளுக்குள் குமுறும் ஆண்மகன்கள் ஏராளம். இதுபோன்ற உளவியல் ஆண்மைக் குறைவு ஆர்ப்பரித்து வளர்வதற்கு, பாலியல் அறியாமை மிக முக்கியக் காரணம்.

இளங்காலை எதிர்பாராத முத்தத்தில் தொடங்கி, எள்ளலும், கொஞ்சலும், திமிறலும், குதூகலமும் சேர்ந்து முடிவாக நான்கைந்து நிமிடங்களில் உறவுகொள்ளும் உயிர்வித்தையை உணராது, 'நீலப்படத்தில் அவங்க 0.45 மணி நேரமா முனகிட்டு இருக்காங்களே...  நமக்குத் துரித ஸ்கலிதம் சிக்கல் இருக்கோ?!’ எனக் குமைகிறார்கள் இளைஞர்கள். போதாததற்கு 'சுய இன்பத்தால் சுருங்கிப்போச்சா?’ எனும் விஷ விதைகளை நள்ளிரவு டாக்டர்கள் நட்டுவைக்க, 'அப்போ... நான் அப்பாவாகவே முடியாதா?’ என்ற கேள்விக்குள் உறைகிறார்கள். 'ஆண்களில் சுய இன்பம் செய்பவர்கள்        99 சதவிகிதத்தினர்; மீதி  1சதவிகிதத்தினர் பொய்யர்கள்’ என்று ஆங்கிலப் பழமொழி இங்கே உங்கள் கவனத்துக்கு.

நாம் சாப்பிடும் ஒவ்வொரு வாய் உணவும் சாரம், செந்நீர், ஊன் கொழுப்பு, எலும்பு, மஞ்சை... எனப் படிப்படியாக ஆறு தாதுக்களைக் கடந்தே, ஏழாம் உயிர்த்தாதுவான சுக்கிலத்தை அடையும். அத்தனை இடர்பாடுகளையும் தாண்டி சேகரிக்கப்படும் உயிர்துளியை அநாவசியமாக வீணாக்க வேண்டாம் என்பது சித்தர்களின் கருத்து. மற்றபடி சுய இன்பம் என்பது, கொலை பாதகம் அல்ல; அன்றாட அவசியமும் அல்ல!

நலம் 360’  - 12

நள்ளிரவு தாண்டியும் மடியில் மடிக் கணினியைக் கட்டிக்கொண்டு அழும் ஐ.டி 'இணையர்களின்’ எண்ணிக்கை எகிறிக்கொண்டேயிருக்கிறது. எப்போதுமே நெருக் கடியிலும் பயத்திலும் வாழும் அவர்களுக்கு, இரவு கண் விழிப்பால் உடலின் பித்தம் கூடி விந்து அணு உற்பத்தியைக் குறைக்கிறது. மடிக்கணினி, விதைப்பகுதிச் சூட்டை அதிகரித்து உயிர் அணுக்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் என்பதையும் அவர்கள் உணர்வது இல்லை... அல்லது உதாசீனப்படுத்துகிறார்கள்.

உடலில் இதயம், மூளை போன்ற அத்தியாவசிய உறுப்புகளை எலும்புகளும் தசைகளும் பொத்திப் பாதுகாக்க, விந்து உற்பத்தி ஸ்தலமான விதைப்பையை மட்டும் உடலுக்கு வெளியே தொங்கவிட்டிருப்பதற்கு முக்கியமான காரணம், உடல் வெப்பத்தில் இருந்து 3-4 டிகிரி அது உஷ்ணம் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான். ஆனால், விஷயம் புரியாமல் இறுக்கமான உள்ளாடை, சருமத்தோடு ஒட்டித் தைத்ததுபோல இறுக்கமான ஜீன்ஸ்... என இயற்கையின் செட்டிங்ஸை மாற்றுவது சரியா? எள்ளு, கொள்ளுத் தாத்தாக்களின் வீரிய விருத்திக்கு, காத்தாடிய 'பட்டாபட்டி’ உள்டவுசரும், பட்டும்படாத எட்டு முழ வேட்டியும் எந்த அளவுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறது என்பது புரிகிறதா?

விதைப்பையில் உருவாகும் நாள அடைப்பு, சொந்த விந்துவையே பாக்டீரியாவாகப் பார்க்கும் பழுதாகிப்போன உடல் எதிர்ப்பாற்றல், பிட்யூட்டரி, ஹைபோதாலமஸ் கோளங்களின் செயல்பாட்டுக் குறைவால் நிகழும் ஹார்மோன் குறைவு... என விதவிதமான மருத்துவக் காரணங்களும் ஆண்மைக்குறைவை அதிகரிக்கின்றன.

'அட... பிரச்னையா அடுக்காதீங்க. சிக்கல் தீர என்ன வழி? அதைச் சொல்லுங்க!’ எனப் பொங்கி எழுவோருக்கு, பாரம்பர்ய வாழ்க்கைமுறையே பதில்! அதற்காக 'காண்டாமிருகக் கொம்பு தர்றேன், சிட்டுக்குருவி லேகியம் கை மேல் பலன் கொடுக்கும், தங்கபஸ்பம் ரெடி பண்ணிரலாம்’ என உட்டாலக்கடி வியாபாரிகளிடம் சிக்கிக்கொள்ளக்கூடாது. போலிகளிடம் சிக்காமல், ஒழுங்காக கீரை, காய்கறி சாப்பிட்டாலே, உயிர் அணு செம்மையாகச் சுரக்கும்!

உயிர்ச்சத்து... விதைகளிலும், மொட்டுக்களிலும், வேர்களிலும் பொதிந்து இருக்கும் என கருதியதாலோ என்னவோ, சித்த மருத்துவம் பல தாவர விதைகளை, மொட்டுக்களை, வேர்களை ஆண்மை அபிவிருத்திக்கான மருந்துகளில் அதிகம் சேர்க்கிறது. சப்ஜா விதை, வெட்பாலை விதை, பூனைக்காலி விதை, மராட்டி மொக்கு, மதனகாமேஸ்வரப் பூ, அமுக்குராங்கிழங்கு, சாலாமிசிரி வேர், நிலப்பனைக் கிழங்கு என அதன் பட்டியல் நீளும். வளம் குன்றிய தேரி நிலத்தில் வளரும் நெருஞ்சில் முள்ளின் சப்போனின்கள், விந்தணுக்களை உற்பத்தி செய்யும் செர்டோலி செல் பாதிப்பைச் சீராக்கும் என்கிறது மருத்துவத் தாவரவியல். அதேபோல் பூனைக்காலி விதையும், சாலாமிசிரியும், அமுக்குராங்கிழங்கும் அணுக்களை உயர்த்த, டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோன்களைச் சீராக்க எனப் பல பணிகள் செய்வதை, நவீன உலகம் உற்றுப் பார்க்கிறது. உடனே, 'ஒவ்வொன்றிலும் தலா 100 கிராம் வாங்கி ஒரு கலக்குக் கலக்கி...’ என ஆரம்பித்துவிட வேண்டாம். பிரச்னை உற்பத்தியிலா, பாதையிலா, மனதிலா என்பதை, உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசி யுங்கள். அதன் பிறகு தேவைக்கு ஏற்ப உங்கள் உணவுப் பழக்கத்தைத் தீர்மானியுங்கள்.

மிக முக்கியமாக, புரிதலிலும் விட்டுக்கொடுத்தலிலும் மட்டுமே தாம்பத்ய பயிர் வீரியமாக விளையும். கருத்தரிப்பைச் சாத்தியப்படுத்துவதில், உறுப்பின் அளவைக் காட்டிலும் மனதின் அளவுக்குத்தான் ஆண்மை அதிகம் உண்டு. ஆதலால் காதல் செய்வீர்... ஆரோக்கியமாக!

- நலம் பரவும்...

உயிர் அணுவைப் பெருக்கும் மெனு!

• மாதுளை வெல்கம் ட்ரிங்க், முருங்கைக் கீரை சூப், மாப்பிள்ளைச் சம்பா சோற்றுடன் முருங்கைக் காய் பாசிப்பயறு சாம்பார், நாட்டு வெண்டைக்காய்ப் பொரியல், தூதுவளை ரசம், குதிரைவாலி மோர் சோறு... முடிவில் தாம்பூலம்... இவை புது மாப்பிள்ளைகளுக்கான அவசிய மெனு.

•  நாட்டுக்கோழியும் சிவப்பு இறைச்சிகளும் காமம் பெருக்கும் காம்போ உணவுகள்.

•   உயிர் அணு உற்பத்தியில் துத்தநாகச் சத்தின் (zinc) பங்கு அதிகம். துத்தநாகச் சத்தை விலை உயர்ந்த பாதாம் மூலம்தான் பெற வேண்டும் என்பது இல்லை. திணையும் கம்பும் நாம் அன்றாடம் சாப்பிடும் அரிசியைவிட, துத்தநாகச் சத்து அதிகம் உள்ள தானியங்கள்.

•  மாப்பிள்ளைச் சம்பா சிவப்பு அரிசி அவல், முளைகட்டிய பாசிப் பயறு, நாட்டு வெல்லம், தேங்காய்த் துருவல் கலந்த காலை உணவுடன் வாழைப்பழம் ஒன்றைச் சாப்பிடலாம்.

•  சித்த மருத்துவம் 'காமம் பெருக்கிக் கீரைகள்’ எனப் பட்டியலிட்டுச் சொன்ன முருங்கை, தூதுவளை, பசலை, சிறுகீரை ஆகியவற்றில் ஒன்றை, பருப்பும் தேங்காய்த் துருவலும் கொஞ்சம் நெய்யும் சேர்த்து சமைத்துச் சாப்பிடுவது விந்து அணுக்களின் எண்ணிக்கையை நிச்சயம் உயர்த்தும்.

•  5-6 முருங்கைப் பூக்களுடன், பாதாம் பிசின், பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு சேர்த்து அரைத்து, அரை டம்ளர் பாலில் கலந்து சாப்பிடுவது, உயிர் அணுக்கள் உற்பத்தியையும் இயக்கத்தையும் சேர்த்துப் பெருக்கும்.

•  'மரத்தில் காய்க்கும் வயாகரா’ எனச் சீனர்கள் மாதுளையையும், ஐரோப்பியர்கள் ஸ்ட்ராபெர்ரியையும், நம்மவர்கள் வாழைப்பழத்தையும் நெடுங்காலமாகச் சொல்லிவந்துள்ளனர். பிற்காலத்தில் சோதித்ததில், செரடோனின் சுரக்கும் வாழைப்பழம், ஃபோலிக் அமிலம்கொண்ட ஸ்ட்ராபெர்ரி, ஃபீனால்கள்  நிறைந்த மாதுளைகள் காமம் கக்கும் கனிகள் என்பது புரிந்தது!

கவனம்!

•   நீச்சல் பயிற்சி, ஆண்மையைப் பெருக்கும் உடற்பயிற்சி.

•  'குடி, குடியைக் கெடுக்கும்; குழந்தை யின்மையைக் கொடுக்கும்’ என ஷேக்ஸ்பியர் முதல் மாத்ருபூதம் வரை சொல்லிச் சென்றிருக்கிறார்கள்.

•  உடல் எடை அதிகரிப்பில் புதைந்துபோகும் ஆண் உறுப்பும் (Buried Penis), கட்டுப்பாடு இல்லாத சர்க்கரை நோயில் ஏற்படும் ஆண்மைக்குறைவும் (Erectile Dysfunction) சமீபத்தில் ஆண்களுக்கான பெரும் நோய்ச் சிக்கல்கள். இரண்டுமே முறையான சிகிச்சையால் சரிசெய்யலாம்.

•  நல்லெண்ணெய்க் குளியல், பித்தத்தைச் சீராக்கி விந்து அணுக்களைப் பெருக்கும் பாரம்பர்ய உத்தி!