Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 12

பாரதி தம்பி, படங்கள்: ந.வசந்தகுமார்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 12

பாரதி தம்பி, படங்கள்: ந.வசந்தகுமார்

Published:Updated:
கற்க கசடற விற்க அதற்குத் தக! - 12

ஓர் அரசுப் பள்ளியில் கற்றல்-கற்பித்தல் எத்தனை நாட்கள் நடைபெறுகின்றன? அதாவது, எத்தனை நாட்கள் பள்ளிக்கூடம் நடக்கிறது? இதைத் தெரிந்து கொள்வதுதான் நம் நோக்கம். இதற்காக பல ஆசிரியர்களிடம் பேசியதைப்போலவே மதுரையைச் சேர்ந்த அந்த ஆசிரியரிடமும் பேசினேன். யதார்த்தமாக, நடைமுறை உண்மைகளுடன் கடகடவென அவர் விவரித்த விஷயங்கள், இன்றைய அரசுப் பள்ளிகள் குறித்தும், அரசு ஆசிரியர்கள் குறித்தும் மற்றொரு பக்கத்தைத் திறந்து காட்டின.

''முதல்ல ஒரு அரசுப் பள்ளி ஆசிரியருக்கு எத்தனை நாள் லீவு? அதுல இருந்து ஆரம்பிப்போம். ஒரு வருஷத்துக்கு 365 நாள். 52 சனிக்கிழமைகளும், 52 ஞாயிற்றுக்கிழமைகளும் லீவு. இதைக் கழிச்சா மீதி எத்தனை நாள்?'' எடுத்த எடுப்பிலேயே கேள்விகளை அடுக்கினார் அந்த ஆசிரியர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''261 நாட்கள்.''

''மே மாசம் கோடை விடுமுறை. அதில் நாலு வாரத்துக்கான சனி, ஞாயிறு எட்டு நாட்களை ஏற்கெனவே கழிச்சாச்சு. மீதி 23 நாட்களைக் கழிங்க..''

''238 நாட்கள்.''

''அரைப் பரீட்சைக்கும், கால் பரீட்சைக்கும் பத்து, பத்து நாள் லீவு. அதில் சனி, ஞாயிறை விட்டுட்டா மீதி 16 நாள். இதையும் கழிங்க.''

''222 நாட்கள்.''

''ஒவ்வொரு ஆசிரியருக்கும் கேஷ§வல் லீவு 12 நாட்கள்.''

''மீதி 210 நாட்கள்.''

''ரம்ஜான், கிறிஸ்துமஸ் மாதிரி மூன்று நாட்கள் வரையறுக்கப்பட்ட மத விடுப்பு.''

''அதையும் கழிச்சா 207 நாட்கள்.''

''மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், மாரியம்மன் கோயில்ல கூழ் காய்ச்சி ஊத்துறது... இப்படி உள்ளூர் விடுமுறை மூன்று நாட்கள்.''

''மீதி 204 நாட்கள்.''

''அரசு விடுமுறை தினங்கள் ஒரு வருஷத்துக்கு குறைஞ்சது 25 நாட்கள்.''

''கழிச்சுட்டா 179 நாட்கள்.''

''நீங்க கேக்குறது கற்றல்-கற்பித்தல் நடக்குற நாட்களைப் பற்றிதான். காலாண்டு, அரையாண்டு பரீட்சை ஒவ்வொண்ணும் பத்து, பத்து நாள் நடக்கும். இந்த நாட்களில் எந்தக் கற்பித்தலும் நடக்காது. இதையும் கழிச்சா எவ்வளவு நாள்?''

''159 நாட்கள்.''

''ஆதார் அட்டைக்கு கணக்கு எடுக்குறது, தேர்தல் வேலை, வாக்காளர் அடையாள அட்டை வேலை... இந்த மாதிரி விடுமுறைகளையும் கழிச்சா கிட்டத்தட்ட 150 நாட்கள் வரும். இதுதான் ஒரு பள்ளிக்கூடத்துல கற்றல்-கற்பித்தல் நடக்குற நாட்கள். அதாவது ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர், பள்ளிக்கூடத்துக்குப் போய் வேலை பார்க்கிறது இத்தனை நாட்கள்தான். 150 நாள் வேலைப் பார்த்து நாங்க 365 நாளுக்கு சம்பளம் வாங்குறோம். இதைச் சொன்னா நம்மளை கிறுக்கன்னு சொல்வாங்க... இதை எழுதினா  உங்க மேல கொந்தளிப்பாங்க... 'நாங்க மத்த நாள்ல ஸ்பெஷல் கிளாஸ் வைக்கிறோம்’னு சொல்லுவாங்க.  ஆனா, அதெல்லாம் எங்கேயோ யாரோ சில ஆசிரியர்கள் பண்றது.  நான் சொல்றது  பெரும்பான்மையைப் பற்றி...''

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 12

300 ரூபாய் தினக்கூலிக்காக நாள் முழுக்க, மாதம் முழுக்க சக்கையாக உழைப்பவர்களும், 10 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்க சனிக்கிழமை உள்பட தினசரி 12 மணி நேரம் உழைப்பவர்களும் நினைவில் வந்து சென்றனர்.

''இதுக்கே மலைச்சுட்டா எப்படி? இன்னும் இருக்கு...'' என்றவர்  தொடர்ந்தார். அனைவருக்கும் கல்வித் திட்டம், செயல்வழிக் கற்றல், சி.சி.இ... என்று கல்வித் துறையில் அமல்படுத்தப்படும் பல்வேறு புதியத் திட்டங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி குறித்துப் பேசினார்.

''1 முதல் 10-ம் வகுப்பு வரைக்கும் உள்ள பள்ளிக்கூட ஆசிரியர்களை, ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு பயிற்சிக்குனு வரச் சொல்வாங்க. ஸ்கூலை விட்டுட்டுப் போகணும். அங்கே ஒண்ணும் நடக்காது. டி.இ.ஓ வர மாட்டார். சி.இ.ஓ வர மாட்டார். தண்டத்துக்கு அந்தக் கூட்டம் நடக்கும். நாங்க ஒரு ஓரமா உட்கார்ந்து ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடுறது, வாட்ஸ்-அப்ல வீடியோ அனுப்புறதுனு செல்போனை நோண்டிட்டு இருப்போம். கதை, கவிதை எழுதுற ஆசிரியர்கள், 'என் கதை, புக்ல வந்திருக்கு’, 'என் தொகுப்பைப் படிச்சியா?’னு பேசிட்டு இருப்பாங்க. ' 'அஞ்சான்’ ஒண்ணும் சரியில்லையாம்’னு பேச்சுவார்த்தை ஓடும். கொஞ்ச நேரத்துல கேன்டீனில் போண்டா, வடை சாப்பிட்டுட்டுக் கிளம்பிடுவாங்க. அவ்வளவுதான் பயிற்சி. நான் மிகைப்படுத்திச் சொல்லலை. பயிற்சினு சம்பிரதாயத்துக்கு ஒண்ணு நடக்கும். ஒரு அதிகாரி கடமைக்கு எதையாவது சொல்வார். இதுதான் உண்மை நிலவரம். ஆக, ஒரு ஆசிரியருக்கு ஒரு வருஷத்துல பயிற்சிங்ற பேர்ல குறைஞ்சது 20 நாள் போயிடும். இதையும் கழிச்சுக்குங்க!''

''ஆக, மீதி 130 நாட்கள்.''

''இந்த 130 நாட்கள்ல கற்பித்தல் முறையா நடக்குதா, அதை மாணவர்கள் எந்த அளவுக்குக் கத்துக்குறாங்க... அதெல்லாம் தனி விஷயம்! ஆசிரியர்களே நினைச்சாலும் இந்த 130 நாட்கள்ல எதையும்  முழுமையாகக் கற்றுத்தர இயலாது. ஆனா, பள்ளிக் கல்வித் துறை, 'ஒரு வருடத்துக்கு குறைந்தது 200 கற்றல் அடைவு நாட்கள் இருக்க வேண்டும்’னு விதி வெச்சிருக்கு. அரசு, அதிகாரபூர்வமா கொடுக்குற விடுமுறையைக் கழிச்சாலே 150 வேலை நாட்கள்தான் வருது. அப்புறம் எங்கிருந்து 200 கற்றல் அடைவு நாள் வரும்? அரசே ஒரு விதியை உருவாக்கி, அரசே அதை மீறவும் சொல்லுது!''

சின்ன இடைவெளிவிட்டுத் தொடர்ந்தார். ''அஞ்சு வருஷம் பணி முடிச்ச ஒரு ஆசிரியர், 90 நாட்கள் சம்பளத்துடன்கூடிய மருத்துவ விடுப்பு எடுத்துக்கலாம். அந்த அஞ்சு வருஷத்துல அந்த லீவை எடுக்கலைன்னா, 10 ஆண்டுகள் சர்வீஸ் முடிச்சதும் முந்தைய 90 நாட்களையும் சேர்த்து        180 நாட்களா எடுத்துக்கலாம். இப்படி வயசாக வயசாக லீவு கூடிட்டேபோகும். முக்கியமான விஷயம்... இந்த லீவு எல்லாம் சம்பளத்தோட கூடியது!

இப்போ நான் வேற ஊருக்கு டிரான்ஸ்ஃபர்ல போறேன்னு வைங்க. புது ஊருக்குப் போய் வேலையில் சேர எனக்கு ஐந்து நாள் நேரம் தருவாங்க. ஒருவேளை, நான் ஒரே நாள்ல போய் வேலையில் சேர்ந்துட்டா, மிச்சம் உள்ள நான்கு நாளும் என் கணக்குல வந்திரும். அதை நான் இருப்பில் வெச்சுக்கலாம். அப்படி இருப்பில் 15 நாள் விடுமுறை சேர்ந்ததும் மொத்தமா சரண்டர் செஞ்சா, எனக்கு அரை மாசச் சம்பளம் கிடைக்கும். இப்போ என் சம்பளம் 50 ஆயிரம்னு வைங்க. 15 நாட்கள் விடுமுறையை சரண்டர் செஞ்சா, 25 ஆயிரம் ரூபாய் எந்தப் பிடித்தமும் இல்லாம கிடைக்கும்!''

''சரி, ஆசிரியர்களுக்கு உள்ள பணிச்சுமை என்ன?''

''என்னா பெரிய சுமை... ஒரே ஒரு விஷயம்தான். '100 சதவிகித ரிசல்ட் கொடுக்கணும்’னு மேலதிகாரிகள் பிரஷர் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க. எப்படி 100 சதவிகித ரிசல்ட் கொடுக்கிறது? பையனை அடிக்கக் கூடாது, திட்டக் கூடாது, கண்டிக்கக் கூடாது. அதெல்லாம் மனித உரிமை மீறல். சரி... ஏத்துக்குறோம்! அப்ப 'மாணவனை அடிக்காம, கண்டிக்காம எப்படி 100 சதவிகித ரிசல்ட் கொடுக்கிறது?’னு மேலதிகாரிகள் எங்களுக்குப் பயிற்சி கொடுக்கணும்ல! அப்பத்தானே நாங்க பசங்களைப் படிக்க வைக்க முடியும்?''

''அதான் பயிற்சிக்கு 20 நாட்கள் போயிடுதுனு சொன்னீங்களே?''

''அந்தப் பயிற்சி வேற. அது பாடத் திட்டங்கள்ல செய்யப்பட்டுள்ள மாற்றங்களைப் பற்றியது. கற்பித்தல் முறை மாற்றங்கள் பற்றி முறையான பயிற்சி கொடுக்கிறது இல்லையே... அப்புறம் 100 சதவிகித ரிசல்ட்டுக்கு நாங்க எங்கே போறது? மந்திரத்துலயா மாங்காய் காய்க்கும்? இது அதிகாரிகளுக்கும் தெரியும். அதான், பையன் படிக்கிறானா... படிக்கலையா, திறமை இருக்கா... இல்லையா, பார்த்து எழுதுறானா... படிச்சு எழுதுறானா, காப்பி அடிக்கிறானா, பிட்டு அடிக்கிறானா... இது எதையும் அவங்க பார்க்கிறதே இல்லை. அவங்களுக்குத் தேவை ரிசல்ட். அதுவும் ரெக்கார்டுல ரிசல்ட் இருந்தாப் போதும். வேணும்னா அரசுப் பள்ளியில் ஃபெயில் ஆகாம தொடர்ந்து ஏழாவது வரைக்கும் பாஸ் பண்ண பசங்க சிலரைக் கூப்பிட்டு தமிழ்ல எழுத்துக் கூட்டிப் படிக்கச் சொல்லுங்க. பாதிப் பேருக்குத் தெரியாது. காரணம், 'ரிசல்ட் ரிசல்ட்’னு அடிச்சுக்கிட்டு, கல்வியின் தரத்தைக் கீழே தள்ளிட்டாங்க!''

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 12

''சரி... இதை எல்லாம் சோதனை செய்ய, இன்ஸ்பெக்ஷன் நடத்த உயர் அதிகாரிகள் யாரும் இல்லையா?''

''முன்னாடி எல்லாம் ஸ்கூல்ல அதிகாரி இன்ஸ்பெக்ஷன் வர்றாருனா பரபரப்பா இருக்கும். அதுக்காகவே சில பசங்களுக்கு நல்லா சொல்லிக் கொடுத்து தயார் பண்ணி வெச்சிருப்பாங்க. ஆனா, அதெல்லாம் அந்தக் காலம். கடந்த நாலஞ்சு வருஷங்களா இன்ஸ்பெக்ஷன்னு எதுவுமே நடக்கலை. பசங்களுக்கு மட்டும் இல்லை... ஆசிரியர்களின் செயல்பாடுகளைச் சோதனை செய்யுறதுகூட நடப்பது இல்லை. உதாரணமா, 9.30-க்கு பள்ளிக்கூடம் ஆரம்பிக்குதுனு வைங்க. ஒரு டீச்சர் 10 மணிக்கு வர்றார். ஆனா, 9 மணிக்கு வந்ததா கையெழுத்துப் போடுவார். இன்னொரு டீச்சர் 9.15-க்கு வருவார். 9.15-ன்னே குறிப்பார். எப்பவாவது ஆடிக்கு ஒரு தரம், அமாவாசைக்கு ஒரு தரம் ஸ்கூலுக்கு வர்ற மேலதிகாரி, 'இந்த டீச்சர் 9 மணிக்கே வர்றாங்களே... வெரிகுட்’னு எழுதிட்டுப் போயிடுவார். இதுதான் நம் அரசுப் பள்ளிகளோட 'கிராஸ்செக்’ நிலைமை!''

''இதையெல்லாம் ஹெட்மாஸ்டர் கவனிக்க மாட்டாரா?''

''ஹெட்மாஸ்டர்னு மிடுக்கா இருந்தது எல்லாம் அந்தக் காலம். இன்னைக்கு ஒரு பள்ளிக்கூடத்துலயே அதிக வேலை பார்க்கிறவர்னா, அது ஹெட்மாஸ்டர்தான். ஸீட்ல உட்காரவே முடியாது. எங்களுக்கு 20 நாட்கள் பயிற்சினா, ஹெட்மாஸ்டர்களுக்கு வருஷம் முழுக்கப் பயிற்சி. இதுதான் இன்னைக்கு நிலவரம்.

ஆனா, ஒரு விஷயம் தம்பி... இன்னைக்கு அரசுப் பள்ளிகள்ல படிக்கிறது ஏழை பாழை வீட்டுப் பிள்ளைங்கதான். அடகு வைக்க ஒரு கிராம் தங்கம் இருக்கிறவன்கூட பிரைவேட் ஸ்கூலுக்குத்தான் போறான். எதுக்கும் வழியத்தவன்தான் இங்கே வர்றான். அவனுக்கு அக்கறையா பாடம் நடத்தி, கைதூக்கிவிட வேண்டியது அரசு ஆசிரியர்களோட கடமை. அவங்க ஒண்ணும் தங்களை வருத்திக்கிட்டு, அர்ப்பணிச்சுக்கிட்டு வேலை செய்ய வேண்டாம். வாங்குற சம்பளத்தை நினைச்சுப் பார்த்து, மனசாட்சிபடி வேலை செஞ்சாலே போதும். 10 வருஷம் சர்வீஸ் உள்ள ஆசிரியர் குறைஞ்சது 50 ஆயிரம் சம்பாதிக்கிறார். அது சாதாரண பணமா? யார் வீட்டுக் காசு?''

அது, அந்த அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் பெற்றோர் உடல் வருத்தி உழைத்த பணம்; பகல் முழுக்க வெயிலில் காய்ந்து சிமென்ட் பூசும் கட்டடத் தொழிலாளியின் பணம்; நாளெல்லாம் அனல் கக்கும் அடுப்பின் அருகே நின்றபடி ஆயிரக்கணக்கான பரோட்டாக்களை போடும் பரோட்டா மாஸ்டரின் பணம்; நள்ளிரவில் தொடங்கி மதியம் வரை காய்கறி மூட்டைகளை முதுகில் சுமக்கும் சுமைதூக்கும் தொழிலாளியின் பணம். அது உழைக்கும் வர்க்கத்தின் பணம்; உழைக்கும் வர்க்கத்தின் உதிரம்!

வை ஒரு பக்கம் இருக்க, அக்கறையுடன் சுயநலன் பாராது உழைக்கும் அரசு ஆசிரியர்கள் எத்தனையோ பேர் மாநிலம் எங்கும் நிறைந்துஉள்ளனர். நல்ல அரசுப் பள்ளிகள் குறித்து வெளிவரும் செய்திகளுக்குப் பின்னால் இவர்களின் கடின உழைப்பும், தியாகமும் இருக்கின்றன. மாணவர்களை தன் சொந்தப் பிள்ளைகளைப்போல் கருதி ஊதியத்தின் ஒரு பகுதியை அவர்களுக்காகச் செலவிடும் ஆசிரியர்கள் எத்தனையோ பேர். தன்னிடம் படிக்கும் மாணவனின் அறிவை வளர்த்து, வாழ்வை வளப்படுத்தி, உயர்வை உறுதிபடுத்தும் ஆசிரியர்கள் அதற்கான எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்கின்றனர்-தினமும் இருள் விலக்கும் சூரியக்கீற்று போல!

- பாடம் படிப்போம்...