Published:Updated:

சென்னையில் இருந்து ஒரு சக்ஸஸ் ஸ்டார்ட்அப்..! - Lynk ஆப் வளர்ந்த கதை #StartUp

சென்னையில் இருந்து ஒரு சக்ஸஸ் ஸ்டார்ட்அப்..! - Lynk ஆப் வளர்ந்த கதை #StartUp
சென்னையில் இருந்து ஒரு சக்ஸஸ் ஸ்டார்ட்அப்..! - Lynk ஆப் வளர்ந்த கதை #StartUp

நம் தேவைகள் எதுவாக இருந்தாலும் அதற்கொரு ஆப்  இருக்கிறது. அதுபோல, சென்னை நகரில் வசிப்பவர்கள் வீட்டில் உள்ள பொருள்களையோ அல்லது புதிதாக வாங்கும் பொருள்களையோ இடமாற்றம் செய்ய புதிய ஆப் ஒன்றை லிங்க் நிறுவனம் (Lynk) அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்பின் மூலம் வாகனத்தை புக்செய்து, சென்னைக்குள் எங்கும் அலைந்து திரியாமல் வீட்டுப் பொருள்களையோ அல்லது நிறுவனங்களின் பொருள்களையோ இடமாற்றம் செய்துகொள்ளலாம். மாதத்துக்கு 30,000 ஆக்டிவ் பயனாளர்களைக் கொண்டு வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. சென்னை, கோபாலபுரம் அருகில் செயல்பட்டு வரும் அதன் அலுவலகத்தில் லிங்க் நிறுவனத்தின் நிறுவனர்கள், சேகர் பாண்டே, அபினவ் ராஜா ஆகியோரைச் சந்தித்து பேசினோம். உற்சாகம் பொங்க பேச ஆரம்பித்தார், சேகர் பாண்டே.

"கடந்த வருடம்தான் சென்னை மக்களின் உபயோகத்துக்காக இந்த மொபைல் ஆப்பை ரிலீஸ் செய்தோம். இந்த வருடம் ஐதராபாத் சிட்டியில் ஒரு கிளை அமைத்திருக்கிறோம். சென்னையில் இருப்போர் அதிகமாகக் காணும் விளம்பரம் எங்களின் லிங்க்(LYNK) ஆப்பின் மூலம் ட்ரக்கை புக் செய்யுங்கள் என்பதைத்தான். சென்னையில் ஓடும் 3,500 அரசுப் பேருந்துகளில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளுக்குப் பின்னால் ஒட்டப்பட்டிருக்கும் விளம்பரமும் இதுதான். இந்த ஆப்பை தொழில் ரீதியாக அறிமுகப்படுத்தப்பட்டபோது எங்களுக்குப் போதுமான வரவேற்புக் கிடைக்கவில்லை என்பதே உண்மை. புதிதாக ஒரு பொருள் சந்தையில் அறிமுகமாகிறது என்றால் பலருக்கும் அதைப்பற்றித் தெரியாது. அதனால் மக்கள் உபயோகிக்கத் தயங்குவார்கள் என்பது இயற்கையான ஒன்றுதான். ஆனால், இதற்கு முக்கியமானது மார்கெட்டிங்தான். மார்கெட்டிங் சரியான முறையில் இருந்தால் நிச்சயம் மக்களைக் கவர முடியும். அதேபோல மக்களைக் கவர்ந்துவிட்டு தரம் சரியாக இல்லையெனில் மக்கள் அந்தப் பொருளை ஓரம் கட்டத் தொடங்கி விடுவார்கள். ஓலா, உபெர் போல நாங்களும் ஆரம்பிக்க, இதுவரை இம்மாதிரியான முயற்சி யாரும் எடுக்காததே முக்கியமான காரணம். சென்னையில் பதிவாகும் வாகனங்களில் பெரும்பாலானவை டிரக்குகள்தான். இதுதான் எங்களுக்கு புதிய வழியைக் காட்டியது. எங்களுக்குப் பயனாளர்களும் முக்கியம், எங்களை நம்பி வரும் வாகன உரிமையாளர்களும் முக்கியம். அதே நேரத்தில் எங்கள் நிறுவனத்துக்குக் கிடைக்க வேண்டிய லாபமும் முக்கியம். இதைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டதால் மட்டும்தான் இந்நிறுவனம் இன்று அதிவேக வளர்ச்சியைக் கண்டுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு லிங்கின் சிறப்பம்சங்கள்:

டிரக்குகளை ஸ்டாண்டுக்குச் சென்று வீட்டுக்கு அழைத்து வரவேண்டியிருக்கும். ஆனால், இந்த ஆப்பில் வீட்டில் இருந்தபடியே பொருள்களைக் கொண்டுபோக வேண்டிய இடத்தைத் தேர்வு செய்யலாம். லிங்க் ஆப்பின் மூலம் பொருள்களை மாற்றினால், குறிப்பிட்ட தூரத்துக்கு எனக் கட்டணம் நிர்ணயிக்காமல், நேரத்துக்கு என வசூலிக்கிறோம். பயணக் கட்டணம் ஒரு நிமிடத்துக்கு நான்கு ரூபாய் மட்டுமே. அதுவும், ஒருமுறை புக் செய்துவிட்டால் 30 நிமிடங்களுக்கான கட்டணம் 120 ரூபாய் வசூலிக்கப்படும். அதன்பின்னர் பயணிக்கும் ஒவ்வொரு கி.மீக்கும் 4 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். இதில் விரைவில் இன்சூரன்ஸ் பாலிஸியையும் கொண்டு வர இருக்கிறோம். மேலே சொன்ன கட்டண விபரங்கள் தனி நபராக இருப்பவர்களுக்கு மட்டுமே. ஒரு நிறுவனம் தங்களின் பொருள்களை வாகனத்தில் எடுத்துக்கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் டெலிவரி செய்தால் அதற்குரிய பில்கள் கடைசியாக அந்நிறுவனத்திடம் வாகன டிரைவர் ஒப்படைக்க வேண்டும். அதற்காக மறுபடியும் புறப்பட்ட இடத்துக்கு அவ்வாகனம் வரவேண்டும். இதற்கு தனிக் கட்டணத்தை நிறுவனங்களிடமிருந்து டிரைவர் வசூலிப்பார். எங்களை அணுகினால், அதற்குக் கட்டணம் வெறும் 30 ரூபாயாகப் பெற்றுக்கொண்டு டெலிவரி பில்லை முதல்முறையாக ஏற்றப்பட்ட நிறுவனத்தின் தலைமையகத்துக்கு கூரியர் செய்துவிடுவோம். 

டிரைவர் மற்றும் வாகனத்துக்கான தகுதித் தேர்வு:

எங்கள் நிறுவனத்தில் டாடா ஏஸ் (TATA Ace), அஷோக் லைலாண்ட் தோஸ்த் (Ashok Leyland Doast), டாடா 407 TATA 407 ஆகிய வாகனங்கள் கிடைக்கும். லிங்க் ஆப்பில் இணையும் வாகனங்களை அவ்வளவு எளிதில் இணைத்துவிட மாட்டோம். முதற்கட்டமாக நேரடியாகச் சென்று வாகனத்தைப் பார்வையிடுவோம். வாகனம் முறையாக பராமரிக்கப்படுகிறதா, சீட்டுகள் முழுமையாக அமைக்கப்பட்டுள்ளனவா, வாகனத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை நேரடியாகப் பார்த்த பின்னரே டிரைவர்கள் எங்கள் அலுவலகத்துக்கு அழைக்கப்படுவர். எங்கள் வாகனம் இயக்கும் ஓட்டுநர்களுக்கு 3 நாள்கள் இங்கு பயிற்சி அளிக்கப்படும். அந்தப் பயிற்சியிலும் நிறைவு செய்யும் டிரைவர்களுக்கு மட்டும்தான் இந்த ஆப்பில் இடம். இந்த ஆப்பின் மூலம் புக் செய்யும் வாடிக்கையாளர்கள் எந்தவிதமான அச்சமும் கொள்ளத் தேவையில்லை. நீங்கள் புக் செய்யும் வாகனம் முழுமையாக எங்களின் நேரடிக் கண்காணிப்பில் இருக்கும். வாகன டிரைவர்களும் உங்களிடம் கடுமையாக நடந்துகொள்ள மாட்டார்கள். கடுமையாக நடந்துகொண்டது எங்களுக்குத் தெரிந்துவிட்டால் வேலையை விட்டு நீக்கிவிடுவோம். இதனால் அவர்களுக்கு வரும் வருமானம் குறைந்து விடும். வருமானத்தை இழக்க யாரும் விரும்ப மாட்டார்கள். அதனால் வாடிக்கையாளர்களுக்கு இதைப் பற்றிய அச்சம் கொள்ள தேவையில்லை.

டிரைவர்களுக்கு லாபம்:

எங்கள் நிறுவனத்தின் சென்னைக் கிளையில் மொத்தம் 700 வாகனங்கள் இருக்கின்றன. அவர்களுக்குத் தேவையான வருமானமும் கிடைக்க வழி செய்கிறோம். உதாரணமாக, ஒரு நபர் அம்பத்துரிலிருந்து பெசன்ட் நகருக்கு பொருள்களை மாற்றக் கட்டணம் செலுத்துகிறார். ஆனால், அவர் செலுத்திய கட்டணத்தில் அந்த வாகனமானது மீண்டும் அம்பத்தூர் வந்து சேர்வதற்கான கட்டணமும் இருக்கும். ஆனால், அவர் எங்கள் ஆப்பின் மூலம் வாகனத்தில் பொருள்களைக் கொண்டு சென்றால் செலுத்தும் கட்டணம் பாதியாகத்தான் இருக்கும். அந்த வாகனம் திரும்பி வருவதற்காக்காக பெசன்ட் நகரில் இருந்து மற்றொரு வாடிக்கையாளரை பிடித்துக் கொடுப்போம். எங்களிடம் இயங்கும் வாகனம் மாதம் 45,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை வருமானம் பெறுகிறது" என்றார்

வாடிக்கையாளர்களுக்குப் பணம் மிச்சம், வாகனத்துக்கும், நிறுவனத்துக்கும் லாபம். அடுத்த கிளை டெல்லியில் என்றபடி இருவரும் விடை கொடுத்தனர்.