Published:Updated:

பேசாத பேச்செல்லாம்... - 13

ப்ரியா தம்பி, ஓவியங்கள்: ஸ்யாம்

பேசாத பேச்செல்லாம்... - 13

ப்ரியா தம்பி, ஓவியங்கள்: ஸ்யாம்

Published:Updated:
பேசாத பேச்செல்லாம்... - 13

ள்ளி நாட்களில் பேச்சுப் போட்டிகளில் நாங்கள் தோழிகள் கும்பலாகக் கலந்துகொள்வோம். மூன்று தலைப்புகள் கொடுத்து அதில் ஒன்றைத் தேர்வுசெய்யச் சொல்வார்கள். 'பெண் விடுதலை’ என்ற தலைப்பைத்தான் எளிதாகத் தேர்வுசெய்வோம். எங்கள் அனைவரின் பேச்சிலும் பொதுவாக ஒரு கருத்து இருக்கும். பொருளாதாரத்தில் சுதந்திரம் கிடைத்தால், பெண்கள் சுதந்திரமாக இருக்கலாம் என்று. அந்தப் பொதுக் கருத்தை உண்மையில் நாங்கள் அப்போது நம்பவும் செய்தோம். 'வீட்டில் எப்போது பார்த்தாலும் கேள்வி கேட்டு, 'அங்கே போகாத, இங்கே போகாத’னு சொல்லிக்கிட்டு. ஒரு வேலை மட்டும் கிடைச்சா, நாம இஷ்டப்படி சுதந்திரமா, யாரையும் டிபண்ட் பண்ணாம இருக்கலாம்ல...’ என்பதே எங்களின் நினைப்பாக இருந்தது. ஆனால், உண்மையில் பொருளாதாரச் சுதந்திரம் மனதளவில் பெண்களைச் சுதந்திரமாக்கிவிட்டதா?

எனக்குத் தெரிந்த பெண் ஒருவர், வங்கியில் உயர் பதவியில் இருக்கிறார். உடன் இருப்பவர்களிடம் இறுக்கமாக இருந்து 'ஸ்ட்ரிக்ட் ஆபீஸர்’ என்று பெயர் எடுத்திருப்பவர். அவரைப் பார்த்தால், இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பிரச்னையை ஒரே சிட்டிங்கில் முடித்துவிடுபவர்போலவே ஓர் அதிகாரத் தொனி இருக்கும். ஆனால், அவரோடு நெருங்கிப் பழகிய பிறகுதான் தெரிந்தது, அவரது பேஸ்மென்ட் எவ்வளவு வீக் என்று!

அவருக்கு அலுவலக வேலையைத் தவிர, வேறு எதுவும் செய்யத் தெரியாது. காலை, மாலை கணவர்தான் வங்கியில் டிராப், பிக்கப் எல்லாம். வருமான வரி தொடர்பான விவரம் ஏதாவது கேட்டால், 'எனக்கும் அவர்தான் கட்டுறாரு. அந்த டீட்டெய்ல்ஸ் எல்லாம் அவருக்குத்தான் தெரியும்’ எனச் சிரிப்பார். ஊருக்குப் போவதானால் கணவர் உடன் செல்ல வேண்டும். அல்லது டிக்கெட் போட்டு, தண்ணீர் பாட்டில் வாங்கி, சரியான எண் பார்த்து இருக்கையில் அமரவைத்து, பேருந்து கிளம்பியதும் டாட்டா சொல்ல வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் கணவரைச் சார்ந்திருக்கும்படியான வாழ்க்கை. 'எனக்கு எதுவும் தெரியாது. எல்லாம் அவருதான்’ எனச் சிரிப்பார். அதைச் சொல்லும்போது, முகத்தில் அப்படியே பெருமிதம் பொங்கி வழியும்!

வீட்டில் அப்பாவிடம், 'நான் என்ன பண்றேன்னு எனக்குத் தெரியும்ப்பா!’ என, தன் முடிவுகளுக்காக 'அபியும் நானும்’ த்ரிஷாபோல் சண்டை போட்டவர்கள்கூட, திருமணத்துக்குப் பின், வீட்டுப்புழுவாகிவிடுகிறார்கள். பள்ளி, கல்லூரி, அலுவலகம்... எனப் பல அத்தியாயங்களைக் கடந்தபோது, எதிர்ப்பட்டவர்களுள் 'இவன் நமக்கானவன்’ என மனம் விரும்பியவனை நம்பி, நம் வாழ்க்கையையே அவனிடம் கொடுக்கிறோம். ஆனால், திருமணத்துக்குப் பிறகு, 'இன்னைக்கு உருளைக்கிழங்கா... முட்டைக்கோஸா?’ போன்ற மிகவும் சின்னச்சின்ன விஷயங்களுக்குக்கூட 'என்னங்க’வின் ஆலோசனையை எதிர்பார்க்கிறோம். ஒருவேளை திருமணத்துக்குப் பின் எந்த முடிவையும் நாம் சுயமாக எடுக்கக் கூடாது என்பது மரபணுவில் பொதிந்துவிட்டதோ என்னவோ!? அலுவலகத்தில் நண்பனோ, வீட்டில் கணவனோ டிரைவர் வேலை செய்வதை நிறுத்திவிட்டால், நாம் வெளியே எங்கும் செல்லாமல் முடங்கி விடுகிறோம். நம்மில் நிறைய பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். எதற்கெடுத்தாலும், அப்பாவை, தோழனை, காதலனை, கணவனை, மகனைச் சார்ந்தபடி.

பேசாத பேச்செல்லாம்... - 13

'ஆம்பளைங்க வீட்டுக்குள்ளே வெச்சுக் கொடுமை பண்றாங்கப்பா’ என்று பொத்தாம்பொதுவாகப் புலம்பினாலும், 'சரி... வெளியே போயிட்டு வா’ என்று ஆண்கள் சொன்னால், பதறித்தான்போவார்கள். 'நீ உன் இஷ்டம்போல ஃப்ரீயா இரு’ என்று சொல்லும் கணவரின் மேல் பல பெண்களுக்கு மரியாதை இருப்பது இல்லை.

முன்பு இருந்த அபார்ட்மென்ட்டில் என் வீட்டுக்கு எதிர் வீட்டுக் குடும்பத் தலைவர் மிகவும் அப்பாவி. மனைவி, பிள்ளைகளின் அதட்டலுக்கு எப்போதும் சிரித்தபடி ஓடிக்கொண்டிருப்பார். 'இவருக்குக் கோபமே வராதா?’ என்றுதான் தோன்றும். அவரது மனைவி ஓர் ஆசிரியை. கணவர், பள்ளிக்கு அழைத்துக்கொண்டுபோய்  விட்டால், பாடம் எடுப்பார். திரும்பப் போய் அழைத்து வந்தால், வீட்டுக்கு வருவார். அப்படியே உட்கார்ந்து டி.வி பார்த்துக்கொண்டிருப்பார். விடுமுறை நாட்களில் அவரையும் பிள்ளைகளையும் கணவர்தான் வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். ஒருநாள் அந்த அப்பாவி கணவன், உடம்பு சரியில்லை என்று வெளியே அழைத்துச் செல்ல முடியாது எனச் சொல்ல, மனைவியின் கூச்சலும் அலறலும் பில்டிங்கையே கிடுகிடுக்கச்செய்தன. அந்த அப்பாவி மனுஷன் விழுந்தடித்து சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே அழைத்துச் சென்றார். அதே டீச்சர் பக்கத்து வீடுகளில் பேசும்போது தவறாமல் இப்படிச் சொல்வார், 'அவர் இல்லாம நான் எங்கயும் போறதே இல்லை. எனக்கு அதெல்லாம் பழக்கமும் இல்லை. எங்க வீட்ல அப்படி என்னை வளர்க்கலை!’ என்று. உண்மையில் தனியாக எதையும் செய்ய அவரால் இயலாது. 'என்னால் எதுவும் முடியாது!’ என்று சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது?

ஒருவேளை மெத்தப் படித்த பெண்கள்தான் இப்படி பிறரைச் சார்ந்தே வாழ்கிறோமோ எனத் தோன்றுகிறது. சாஃப்ட்வேரில் பணிபுரியும் பெண்கள்கூட சினிமாவுக்கு, ட்ரெயினுக்கு முன்பதிவு செய்யக்கூட நண்பரையோ, கணவரையோ சார்ந்துதான் இருக்கிறார்கள். இன்னும் சிலர் இருக்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு புராஜெக்ட்டுக்காக அமெரிக்காவுக்கு எல்லாம் சென்று, தனியாக இருந்து சமாளித்து வந்திருப்பார்கள். ஆனால், திருமணத்துக்குப் பிறகு அமைந்தகரையில் இருக்கும் அலுவலகத்துக்குக்கூட கணவர்தான் வந்து டிராப் செய்ய வேண்டும், அழைத்துச் செல்ல வேண்டும் என்று அடம்பிடிப்பார்கள். 'ஐய்யயோ... யார் பஸ்ல ஏறிப்போறது? டூ-வீலர் ஓட்டுறதுலாம் இம்சை!’ என்று அலுத்துக்கொள்கிறார்கள். பொறுப்பு ஏற்றுக்கொள்வதில் ஏன் நமக்கு இத்தனை அலுப்பும் சலிப்பும்!

சில ஆண்டுகளுக்கு முன்பு, குமரி மாவட்ட பெண் பஞ்சாயத்துத் தலைவர்களை ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்ந்து சந்தித்தேன். அதில் 80 சதவிகிதம் பஞ்சாயத்துத் தலைவிகளுக்குப் பதிலாக அவர்களின் கணவர்கள்தான் பேசினார்கள். பல தலைவிகள் தங்கள் முகத்தைக்கூட காட்டவில்லை. கணவர்களின் தலையீட்டை மீறி அந்தப் பெண்களால் ஒன்றும் செய்ய முடியாது என்ற வாதம், சில பெண்களுக்குப் பொருந்தலாம். ஆனால், எல்லோருக்கும் அல்ல. ஆண்கள், பெண்களை வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை, பெண்கள் வீட்டின் சுவர்களையே பாதுகாப்பாக நினைத்து, கணவரைச் சார்ந்தே வாழ்க்கையை ஓட்டிவிடுகிறார்கள் என்பதும். ஆதிக்கத்தைவிட மோசமானது அடிமைத்தனம். ஆனால், நாம் ஆதிக்கத்தைப் பற்றியே தான் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். அடிமைத்தன மனோபாவத்தை என்ன செய்வது?

பேசாத பேச்செல்லாம்... - 13

எனக்குத் தெரிந்த புரட்சிப் பெண் ஒருவர் உண்டு. பெண் விடுதலைக்கான அனல் தெறிக்கும் எழுத்துக்கள் அவருடையது. மேடை ஏறி பெண் விடுதலை பற்றி அவர் பேசத் தொடங்கினால், உட்கார்ந்திருக்கும் பெண்களுக்கு எழுந்துபோய் நான்கு செங்கற்களையாவது உடைத்து வீசத் தோன்றும். ஆனால், கூட்டம் முடிந்ததும் வெளியே வந்து கணவனுக்கு போன் போடுவார் அந்தப் புரட்சிப் புயல், 'வந்து கூட்டிட்டுப் போங்க... கூட்டம் முடிஞ்சிருச்சு!’ என்று. 'தோழர் மெயில் ஐ.டி குடுங்க’ எனக் கேட்டால், 'அதெல்லாம் அவருக்குத்தாங்க தெரியும். நமக்கு இதெல்லாம் ஒண்ணும் மண்டையில ஏறலை’ எனச் சிரிப்பார்.

அவர் வீட்டில் உட்கார்ந்து 10 நிமிடங்கள் பேசினால், 15 முறை உள்ளே பார்த்து 'என்னங்க’வை அழைப்பார். 'போன் பில் கட்டலைனு போன் வந்தது! என்னைக் கூட்டிட்டுப் போற டாக்டர் பேர் என்ன? சாயங்காலம் வெளிய போகணும்... கொண்டு போய் விட்ருங்க’ என எல்லாவற்றுக்கும் அவருக்கு 'என்னங்க’ வேண்டும்.

ஒருமுறை புரட்சித் தோழிக்கு வெளிநாடு அழைப்பு வர, பாஸ்போர்ட் விண்ணப்பிப்பதில் இருந்து, விசா விசாரணை, செல்லும் நாட்டின் பருவத்துக்கு ஏற்ற ஆடைகளை வாங்குவது... என எல்லாவற்றுக்கும் 'என்னங்க’தான் அலைந்துகொண்டிருந்தார். கடைசியில் விமான நிலையம் கொண்டுவிடுவது வரை, கணவர் ஒருவழி ஆகிவிட்டார். அங்கே போய் பெண்கள் எப்படிச் சுதந்திரமாக இருப்பது என்று பேசுவாராக இருக்கும். அவர் சித்தாந்தத்தில் எது சுதந்திரம் என்பது இன்று வரை எனக்குப் புரியவே இல்லை!

ரபு நாடுகளுக்கு வீட்டு வேலைகளுக்குச் செல்லும் படிக்காத, கிராமப்புறப் பெண்கள் நினைவுக்கு வருகிறார்கள். தான் செல்லப்போகும் நாட்டை அதற்கு முன்பு வரைபடத்தில்கூட பார்த்திருக்காத, இன்னும் சொல்லப்போனால் வரைபடத்தையே பார்த்திருக்காத அந்தப் பெண்கள், யாரையும் நம்பாமல் தன்னந்தனியாகக் கிளம்பிச் செல்கிறார்கள். நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் வரை பேருந்தில் சென்று, அங்கே தனியாக இறங்கி விமான நிலையம் சென்று, அவ்வளவு பெரிய கட்டடத்தைப் பார்த்து பிரமித்து, 'துபாய்க்கு எந்தப் பக்கம் போகணும்?’ என வெள்ளந்தி யாகக் கேட்டு விசாரித்து சென்று சேருவார்கள். அங்கு எழுதப்பட்டிருக்கும் எதையும்

பேசாத பேச்செல்லாம்... - 13

அவர்களால் வாசிக்கவும் முடியாது. சென்று சேரும் இடம் எப்படி இருக்கும் என்றும் தெரியாது. ஆனாலும், வாழ்க்கையின் நிர்பந்தம் பொருட்டு தன்னை நம்பி அந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். அதுதானே யாரையும் சாராது இருத்தல்?

துரையில் நண்பர் ஒருவர், அவர் அம்மா பற்றி சொல்லத் தொடங்கினால் கண்கலங்கிவிடுவார். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு எட்டோ, ஒன்பதோ பிள்ளைகளோடு நண்பரின் அப்பாவும் அம்மாவும் திருநெல்வேலி பக்கத்தில் இருந்து மாட்டுவண்டியில் பிழைப்புத் தேடி மதுரைக்கு இடம் பெயர்ந்திருக்கிறார்கள். வழியில் விருதுநகர் பக்கம் மனைவி, பிள்ளைகளைப் பாழடைந்த ஒரு மண்டபத்தில் தங்கவைத்து விட்டு, மதுரையில் வேலை தேடிவிட்டு திரும்ப அழைத்துச் செல்கிறேன் என நண்பரின் அப்பா கிளம்பியிருக்கிறார். போனவர் திரும்பியது சில வருடங்கள் கழித்து. அத்தனை பிள்ளைகளோடு அந்த ஊரில் வயல் வேலை தேடி, தங்கியிருந்த இடத்தைச் சுற்றி கீரை நட்டு... என பிள்ளைகளை வளர்த்திருக்கிறார் அந்த அம்மா. நமக்கு எல்லாம் அரை மணி நேரம் ரயில் நிலையத்தில் சொன்னவர்கள் வரவில்லை என்றால் கலங்கிப்போகிறது. இத்தனைக்கும் நண்பரின் அம்மா பள்ளிக்கூடம் எல்லாம் போகாதவர். அவர் இறப்பது வரைக்கும் அவரிடம் இருந்த தன்னம்பிக்கையையும், மனத்திடத்தையும், யாரையும் சாராத வாழ்வையும் நண்பர் பகிர்ந்துகொள்ளும்போது வியப்பாக இருக்கும்.

வீட்டு வேலைக்காக துபாய்க்கு தனியே கிளம்பும் பெண்ணையும், 'என்னங்க’ ஆசிரியை தோழியையும் ஒப்பிட்டு யோசித்தால், படிப்பும் பொருளாதாரமும் நமக்கு என்ன கற்றுக்கொடுத்திருக்கிறது என உண்மையிலேயே குழப்பமாக இருக்கிறது!

- பேசலாம்...