சீன மருத்துவ, சித்த, ஆயுர்வேத மருத்துவ இலக்கியங்களில் பன்னெடுங்காலத்துக்கு முன்பே தைராய்டு கோளத்தின் நோய்கள் பேசப்பட்டுள்ளன. தைராய்டு கோளத்தில் வரும் முன் கழுத்து வீக்கத்தை (Goitre) லியோனார்டோ டாவின்சியின் உலகப் புகழ்பெற்ற 'Madonna of the Carnation’ ஓவியம் சித்திரித்திருக்கிறது. தைராய்டு என்பது, முன் கழுத்தில் மூச்சுக்குழலில் அமைந்திருக்கும் பட்டாம்பூச்சி வடிவக் கோளம். அந்த வடிவம் 'தைராய்டு’ என்ற பழங்காலப் போர் ஆயுதம்போல இருந்ததாக உணர்ந்த தாமஸ் வார்ட்டன் என்கிற விஞ்ஞானி, அந்தக் கோளத்துக்கு 'தைராய்டு’ எனப் பெயர் சூட்டினார். இந்தக் கோளம் சுரக்கும் சுரப்பு குறைந்தால்... ஹைப்போதைராய்டு, அளவு அதிகமானால்... ஹைப்பர்தைராய்டு, முன் கழுத்து வீங்கியிருந்தால்... 'காய்ட்டர்’ என்கிற கோளவீக்கம் என நோய்களாக அறியப்படுகின்றன. இவ்வளவு நீண்ட வரலாறு கொண்ட இந்த நோயை, இன்றளவிலும் முழுமையாகக் குணப்படுத்தும் மருந்து ஆதாரபூர்வமாகக் கண்டறியப்படவில்லை. காலை எழுந்து பல் துலக்கியதும், முதல் வேலையாக தைராக்சின் மருந்தை விழுங்குவோர் இப்போது அநேகர்.

தைராய்டு தொடர்பான நோய்கள், பெண்களைத்தான் அதிகம் தாக்குகின்றன. எனினும், அது பெண்களுக்கான பிரத்யேக நோய் அல்ல. ஆண்களுக்கு 'அந்த’ விஷயத்தில் நாட்டம் குறைவது, ஆண்மை குறைவது, முதியவர்களின் மறதி... போன்ற குறைபாடுகளுக்கு தைராய்டு சுரப்பு குறைவதும் ஒரு காரணம். பெண்களின் மாதவிடாய் சீர்கேடு, பாலிசிஸ்ட்டிக் ஓவரி எனப்படும் சினைப்பை நீர்க்கட்டி உருவாவது, கருத்தரிப்பு தாமதம் ஆவது, கருமுட்டை வெடிக்காமல் இருப்பது போன்றவற்றுக்கு முக்கியமான காரணம் இந்த தைராய்டு சுரப்பு குறைவே. ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் தொடங்கி, 14 அல்லது 15-வது நாளில் கருமுட்டை வெடிப்பு கட்டாயம் நிகழ வேண்டும். அந்த வெடிப்பை நிகழ்த்த ஹார்மோனைத் தூண்டுவது தைராய்டு சுரப்பிதான். மாதவிடாய், 30 நாட்களுக்கு ஒருமுறை நிகழாமல், அல்லது கருத்தரிப்பு, தாமதம் ஆகும் சமயத்தில், முதலில் தைராக்சின் சுரப்பு சரியாக உள்ளதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.

நலம் 360’  - 13

மாதவிடாய் சீர்கேடு மட்டும் அல்ல, உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக் குறைபாடு, எடை அதிகரிப்பு, அறிவாற்றல் குறைவு, முடி உதிர்தல், சரும உலர்வு... எனப் பல நோய்கள் தோற்றுவாய்க்கும் தைராய்டு சுரப்பு குறைவே காரணம். 'இதற்குத் தீர்வே கிடையாதா? எப்போ... எப்படிக் கேட்டாலும், மாத்திரையை நிறுத்தக் கூடாது என்று டாக்டர் சொல்றாரே?’ என்று வருத்தத்துடன் கேட்போர், இந்தியாவில் மட்டும் சுமார் 4.2 கோடி பேர்!

ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 150 மைக்ரோ கிராம் அயோடின்தான் நமக்குத் தேவை. அயோடின் உப்பு அதிகம் உள்ள கடலோர மண்ணின் நிலத்தடி நீரில் இருந்தும், கடல் மீன்களில் இருந்தும் இந்த உப்பு நமக்கு எளிதாகவே கிடைக்கும். ஆனால், இதுவே நன்னீர் மீன்களில் அயோடின் சத்து 20-30 மைக்ரோகிராம்தான் கிடைக்கும். தவிர, பால், முட்டை, காய்கறிகளில் இருந்தும் அயோடினை எடுத்துக்கொள்ள வேண்டும். மண்ணின் அயோடைடு சத்தைப் பொறுத்தே, அதில் வேர்விட்டு வளரும் காய்கறிகளில் அயோடின் அளவு கிடைக்கும்.

சுமார் 15 வருடங்களுக்கு முன், இந்தியாவின் கடல் ஓரத்தைவிட்டு விலகியுள்ள ஏறத்தாழ 226 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் அயோடின் சேர்க்கையையும், தைராக்சின் சுரப்பு அளவையும் இந்திய மருத்துவக்கழகம் ஆய்வு செய்தது. முடிவு, ஏராளமானோர் அயோடின் குறைவுடன் இருப்பதை உறுதிசெய்தது. இப்படியேவிட்டால், பெருவாரியான மக்கள் ஹைப்போதைராய்டு நோயால் பீடிக்கப்பட்டு சாதாரண உடல்சோர்வில் தொடங்கி, உடல் வளர்ச்சிக் குறைவு, மூளை செயல்திறன் குறைவு வரை ஏற்படக்கூடும் எனக் கருதினார்கள். உடனே அவசர அவசரமாக, இந்தியர் அனைவருக்கும் அயோடினை உணவில் அன்றாடம் கொடுக்க முடிவு செய்தது அரசு. உலக சுகாதார நிறுவன வழிகாட்டுதலின்படி அன்றாடம் நாம் சாப்பிடும் உப்பில் அயோடினைச் செறிவூட்டிக் கொடுப்பதைக் கட்டாயம் ஆக்கினார்கள். விளைவு, உப்பை உப்பளத்தில் காய்ச்சி பல கடல்சார் கனிமங்களின் தாவர நுண்கூறு கலவையாகத் தந்த காலம் மலையேறி, செறிவூட்டப்பட்ட சோடியம் குளோரைடை சோற்றில் போட்டுச் சாப்பிடும் நிலைக்கு வந்தோம்.

அயோடினை அதிகம் பெறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், அறுசுவையில் ஒரு பிரதான சுவையான உப்புச் சுவையை அதன் இயல்பான கடல் கனிமங்களில் இருந்து பெற்றபோதுதான், நாம் உப்பின் தேவையற்ற குணங்களைத் தவிர்த்தும், தேவையானவற்றை சரியான அளவில் பெற்றும் வந்தோம். அந்த உணவுக் கூட்டமைப்பை செயற்கை உப்பு நிச்சயம் அளிக்காது.

நலம் 360’  - 13

சென்னை மருத்துவக் கல்லூரியின் ஓய்வுபெற்ற எண்டோகிரைனாலஜி பேராசிரியர் ஒருவர், 'இந்த அயோடைஸ்டு உப்பு, மருந்து என்பதே சரி. அது எப்படி எல்லோருக்குமான உணவாகும்? முழுமையான ஆய்வுகள் நடத்தப்படாமல், அவசரகதியில் உட்கொள்ளவைக்கப்பட்ட இந்த உப்பே, நல்ல நிலையில் இயங்கும் தைராய்டுகளையும் நோய்வாய்ப்படுத்துகிறது’ என்றார். அயோடின் அதிகரித்தால் அது பெரிதாக நச்சு இல்லை எனச் சொல்லப்படுகிறது. ஆனால், சில சமயம் அதுவே காய்ட்டர் நோய்க்கு காரணமாகிவிடும் என மருத்துவ உலகின் ஓர் அச்சம் உண்டு.

சரி... இந்த நோயைத் தவிர்க்க என்னதான்  வழி? கடல்மீன் உணவுகள்தான் முதல் தேர்வு. வாரம் ஓரிரு நாள் மீன் உணவு சாப்பிடுவது அயோடினை சரியான அளவில் வைத்திருக்க உதவும். 'மீனா... வாட் யூ மீன்?’ என அலறும் சைவர்கள், அதற்குப் பதிலாக ஊட்ட உணவாக கடல் பாசிகளை உணவில் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். குறிப்பிட்ட சில உணவுகளே தைராய்டு கோளத்தில் பாதிப்புகளை உண்டாக்கும் (GOITROGENIC) எனக் குறிப்பிடுகிறார்கள். அந்த உணவுப் பட்டியலில் நம் ஊர் கடுகும் முட்டைக்கோஸும் இடம் பிடித்திருக்கின்றன. லேசாக முன் கழுத்து வீக்கமோ, ஹைப்போதைராய்டு நோயோ இருக்கும்பட்சத்தில், தாளிப்பதற்கு கடுகு, தடாலடி பொரியலாக முட்டைக்கோஸ் சமைப்பதைத் தவிர்க்கவும்.

இன்னொரு முக்கியமான விஷயம்... சந்தையில் உள்ள ஊட்டச்சத்துப் பானங்களில் அதிகமாகச்  சேர்க்கப்படுவது சோயா புரதம். 'அட... பிள்ளை போஷாக்கா தேறி வரட்டும்’ எனக் காரணம் சொல்லி, நேரடிச் சந்தை மற்றும் மல்ட்டிலெவல் மார்க்கெட்டிங் மூலமோ  அவற்றை  மருத்துவர் ஆலோசனை பெறாமல் கொடுப்பது நிச்சயம் நல்லது அல்ல. ஏனென்றால், 'புற்றைக் கட்டுப்படுத்தும்’, 'இது மெனொபாஸ் பருவப் பெண்களுக்கு நல்லது’, 'நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தரும்’, 'உடல் எடையைக் கூட்டும்’ எனக் கூவிக்கூவி விற்கப்படும் இந்தப் புரதம், சில நேரங்களில் தைராய்டு கோள வீக்கத்தையும் தரும். 'மாதவிடாய் சரியாக வரவில்லை, மந்த புத்தியாக இருக்கிறாள், இவனுக்குப் படிப்பு ஏறவே மாட்டேங்குது’ என்போருக்கு கடல் கடந்து விற்பனைக்கு வரும் டானிக்குகளைவிட, கடல் மீன்தான் நன்மை பயக்கும். கடல் மீன் தைராய்டு சுரக்க அயோடினைத் தரும். தைராய்டு நோயில் வலுவிழக்கும் எலும்புக்கு வைட்டமின் - டி தரும். மந்தம் ஆகும் மூளை குதூகலித்து உத்வேகம் பெற டி.ஹெச்.ஏ அமிலம், ஒமேகா கொழுப்பு எல்லாமும் பரிமாறும். கடையில் விற்கப்படும் புரத உணவுகளைக் காட்டிலும், பட்டை தீட்டாத தானியங்கள், பயிறுகளைச் சேர்த்து அரைத்து வீட்டில் செய்யப்படும் சத்துமாவு போன்றவை புரதச்சத்தைக் கொடுப்பதோடு, தைராய்டு நோயை மட்டுப்படுத்தும் கால்சியம், செலினியம் போன்றவற்றையும் அளிக்கும்.

தைராய்டு சுரப்பு குறைவாக இருந்தால், சரியான சிகிச்சை மிகவும் அவசியம்.  தைராக்சின் சத்துக் குறைவு உள்ளோருக்கு நேரடியாகவே அந்தச் சத்தைக் கொடுத்து வருகிறது நவீன மருத்துவம். எந்தக் காரணம்கொண்டும் மருத்துவர் அனுமதி இல்லாமல் இந்தச் சத்து மாத்திரைகளை நிறுத்துவதும், அளவைக் குறைப்பதும் கூடாது. பாரம்பர்ய பிற மருத்துவ முறைகளைப்

நலம் 360’  - 13

பின்பற்றுபவர்கள், அந்த மருத்துவ முறை மூலம் தைராய்டு கோளத்தைத் தூண்டியோ, அல்லது உடல் இயக்க ஆற்றலைச் சீராக்கியோ தைராய்டு கோளம் இயல்பு நிலைக்கு வரும் வரை, அதற்கான சத்து மருந்துகளை ஒருங்கிணைந்து எடுத்துக்கொள்வதுதான் நல்லது. தடாலடியாக நிறுத்துவது பெரும் நோய்ச் சிக்கலை ஏற்படுத்தும்.

சித்த, ஆயுர்வேதப் புரிதலில் கபத் தன்மையையும், பித்தத் தன்மையையும் சீராக்கும் மூலிகைகளை, மருந்துகளை இந்தத் தைராய்டு நோய்க்குப் பரிந்துரைப்பர். 'அன்னபவழச் செந்தூரம்’ என்கிற பாரம்பர்ய சித்த மருந்தும், மந்தாரை அல்லது 'கான்சனார்’ இலைகளால் செய்யப்படும் 'காஞ்சனார் குக்குலு’ என்கிற ஆயுர்வேத மருந்தும் இந்த நோய்களில் அதிகம் ஆராயப்பட்ட பாரம்பர்ய மருந்துகள். நவீன மருந்து அறிவியல் ஆய்வும், இந்த மருந்துகள் தைராய்டு சத்தை நேரடியாகத் தராமல், தைராய்டு கோளத்தைத் தூண்டி, அதன் செயல்திறனை ஊக்குவிக்கின்றன என்பதை உறுதிப்படுத்துகிறது. கூடவே உடல் எடை குறைவு, மாதவிடாய் கோளாறு போன்றவற்றைச் சீர்செய்வது இந்த மருந்துகளின் தனிச்சிறப்பு.

யோகாசனமும் மூச்சுப் பயிற்சியும் தைராய்டு கோளம் சரியாக இயங்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. சூரிய வணக்கம், கபாலபாதி பிராணாயாம மூச்சுப் பயிற்சி, விபரீதகரணி யோகப் பயிற்சி... ஆகியவை உடல் இயக்க ஆற்றலை வலுப்படுத்தும் என்கின்றன ஆராய்ச்சிகள்.

ஒரு தைராய்டு சுரப்பு குறைவு நோயாளி காலையில் ஒரு மாத்திரை சாப்பிடுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், கூட்டாக இந்த யோகாசனப் பயிற்சி, ஏதேனும் பாரம்பர்ய மருந்து, கூடவே அடிக்கடி கடல்மீன் உணவு/கடற்பாசி உணவு சாப்பிடுவது போன்றவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலம் மட்டுமே, மெள்ள மெள்ள இந்த நோயின் பிடியில் இருந்து விலக முடியும். ஆனால், என்று வரும் இந்த ஒருங்கிணைப்பு?

- நலம் பரவும்...

நலம் 360’  - 13

கடல் உணவுகள் சில...

• அயோடினும் புரதமும் நிறைந்த கடல் மீன்கள், தைராய்டு குறைவு நோய்க்கான சிறப்பு உணவுகள். கூடுதல் புரதமும் வைட்டமின் - டி சத்தும் இவற்றின் ஸ்பெஷல். அதிலும் குறிப்பாக வஞ்சிர மீன் குழம்பு, மிக அதிகப் புரதம் கொண்டது. இதை குடம்புளிக் கரைசலில் செய்தால், உடல் எடையையும் குறைக்கும்!

•  சுறா புட்டு, பாலூட்டும் பெண்ணுக்கு தைராய்டு குறைவைச் சரியாக்குவதுடன், பால் சுரப்பை மிக அதிகமாக்கும்!

•  பொரித்த சீலா மீனில், புரதச்சத்தும் அயோடினும் மிக அதிகம்!

•  'அகர் அகர்’ என்கிற கடற்பாசியில் வட இந்தியர்கள் செய்யும் இனிப்பு, குழந்தைகளுக்கு நலம் தரும் உணவு. பால், வெல்லம், அகர் அகர், ஏலக்காய்த் தூள் சேர்த்து இதைச் செய்யலாம்!

•  ஸ்பைரூலினா என்கிற சுருள்பாசி மாத்திரைகள்,  ஊட்ட உணவு வகைகளில் மிகப் பிரபலம். மீன் சாப்பிடாதோர் இதைச் சாப்பிடலாம்!

புற்றுநோய்... உஷார்!

ட்டுமொத்த சூழல் சிதைவு, மனம் வெதும்பிய வாழ்வியல்... போன்ற காரணிகளால் பல புற்றுநோய்க் கூட்டம் பெருகிவரும் சூழலில் தைராய்டு கோளப் புற்றும் அதிகரிக்கிறது. PAPPILLARY, FOLLICULAR, MEDULLARY, ANAPLASTIC... என நான்கு வகையில் இந்தப் புற்று வரலாம். இதில் வெகுசாதாரணமாக வரக்கூடியது PAPPILLARY. தைராய்டு கோள வீக்கத்தை எப்போதும் அலட்சியமாக எடுத்துக்கொள்ளாமல், எளிய அல்ட்ரா சவுண்டு மற்றும் FNAC பரிசோதனைகள் மூலம் தொடக்கத்திலேயே பரிசோதித்து, இந்த வீக்கத்தின் இயல்பைத் தெரிந்துகொள்ளலாம். ஒருவேளை புற்றுநோயாக இருக்கும்பட்சத்தில், ANAPLASTIC பிரிவைத் தவிர்த்து மற்றவற்றை அறுவைசிகிச்சை போன்ற சரியான ஒருங்கிணைந்த சிகிச்சைகள் மூலம், முழுமையாக நலம்பெற வாய்ப்பு அதிகம். புற்றாக இல்லாதபட்சத்தில், வெறும் வீக்கத்தைக் கண்டு கலவரப்படத் தேவை இல்லை!