Published:Updated:

கடவுள் தொடங்கிய இடம் - 13

த்ரில் திகில் தொடர்கதைஅ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ம.செ.,

கடவுள் தொடங்கிய இடம் - 13

த்ரில் திகில் தொடர்கதைஅ.முத்துலிங்கம், ஓவியங்கள்: ம.செ.,

Published:Updated:

இரவுக்குப் பின்னால்

முக்கச்சீவோ ரயில் நிலையம் வருவதற்குள் நிஷாந்துக்கு காய்ச்சல் பிடித்துவிடும்போல இருந்தது. இந்தக் கண்டத்தைக் கடந்தால் எப்படியும் ஸ்லோவோக்கியாவில் இருந்து செக் நாட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்து ஜெர்மனி போய்ச் சேர்ந்துவிடலாம். அவனுடன் படித்த பழைய நண்பன் அங்கே இருக்கிறான். ஒருகாலத்தில் மிக அன்னியோன்னியமாகப் பழகியவன். ஏஜென்ட் ஒருவர், அவனுடைய டெலிபோன் நம்பரைக் கொடுத்திருந்தார். ''நண்பா வா... உனக்காக ஜெர்மானியர்களின் எச்சில் தட்டுகள் கழுவுவதற்காகக் காத்துக்கொண்டிருக்கின்றன'' என்றான். அவன் மாறவில்லை. அதே வேடிக்கைக்காரன்தான்.

முக்கச்சீவோ வந்ததும் கும்பலில் இருந்து பிரிந்து தூரப்போய் நின்றுவிட்டான் நிஷாந். இவனுடைய பயணப்பத்திரத்தை மேலோட்டமாகப் பார்வையிட்ட அதிகாரி ஒன்றுமே சொல்லவில்லை. ஆச்சர்யமாக இருந்தது. பிடரி சும்மாதான் இருந்தது, அதிலே கை வைக்கவில்லை. மற்றவர்களின் ஆவணங்களை ஆராயத் தொடங்கினார். அவன் குழுவில் வந்த மீதி 12 அகதிகளையும் பிடித்து இறக்கினார். நிஷாந் அந்தக் குழுவைச் சேர்ந்தவன் என்பது, அதிகாரியின் மூளைக்கு எட்டவே இல்லை. ரயில் புறப்பட்டபோது 'நிஷாந்...’ என்று கத்தி, ஈஸ்வரநாதன் கையைக் காட்டினார். இவன் திரும்பியும் பார்க்கவில்லை.

ஸ்லோவோக்கியாவில் இருந்து ஜெர்மனிக்குக் கொண்டுபோவதற்கு தரகர்கள் இருந்தார்கள். ஜெர்மனி வந்ததும் சத்யனை டெலிபோனில் அழைத்தான். அவன் வராவிட்டால் என்ன செய்வது என்று ஒரு கணம் நினைத்தபோது, திகில் பிடித்தது. ஆனால், சத்யன் பாடிக்கொண்டே வந்தான். ''நீ மேற்குக்கு வந்துவிட்டாய்... மேற்குக்கு வந்துவிட்டாய். சுதந்திரப் பறவை!'' என்று கட்டிப்பிடித்தான்.

கடவுள் தொடங்கிய இடம் - 13

த்யனிடம் ஏராளமான கதைகள் இருந்தன. ஒடுக்கமான அறையிலே அவன் படுக்கையில் படுத்திருந்தான். நிலத்திலே மெத்தைபோன்ற ஒன்றில் நிஷாந் படுத்திருந்தான். அந்த மெத்தையில் அதற்கு முன்னர் ஒரு குதிரை படுத்து இன்புற்றிருக்கவேண்டும். அப்படி கட்டிதிட்டியாக இருந்தது. ஆனால், அவன் முறைப்பாடு செய்யப்போவது இல்லை. திடீரென படுக்கையில் இருந்து எழுந்து உட்கார்ந்த சத்யன், ''உனக்கு ரஷ்ய அதிபர் குருஷேவின் கதை தெரியுமா?'' என்று கேட்டான். நிஷாந் ''தெரியாது'' என்றதும், கதையைச் சொல்லாமலே சிரிக்க ஆரம்பித்தான். ''எனக்குச் சொன்னால்தானே நானும் சிரிக்கலாம்'' என்றான் நிஷாந். இதுதான் சத்யன். லாவண்யாவைப் போல, ஒரு நகைச்சுவையைச் சொல்லும் முன்னர், தானே ரசித்து தானே சிரிக்க ஆரம்பித்துவிடுவான்.

''ஒருநாள் காலை, சூரியனைப் பார்த்து குருஷேவ் 'காலை வணக்கம்’ என்றார். சூரியனும் 'காலை வணக்கம் அதிபரே’ என்றது. மதியம் மறுபடியும் குருஷேவ் 'மதிய வணக்கம் சூரியனே’ என்றார். சூரியனும் 'மதிய வணக்கம் அதிபரே’ என்றது. மாலையானதும் குருஷேவ் சிரித்தபடி, 'மாலை வணக்கம்’ என்றார். 'இழவு புடிச்சவனே, நான் மேற்குக்கு வந்துவிட்டேன்’ என்றதாம் சூரியன்.'' கீழே படுத்திருந்த நிஷாந்தை காலால் உதைத்து, ''நண்பனே, நீ மேற்குக்கு வந்துவிட்டாய். மறக்காதே!'' என்று சிரித்தான்.

சத்யனுக்கு ஓர் உணவகத்தில் கோப்பை கழுவும் வேலை. அவனுடைய அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பின்னர் அப்பீல் பண்ணியிருந்தான். ஆனால், முகத்தில் ஒரு கவலையும் கிடையாது. அவன் சொல்வான்... 'நண்பனே, மகிழ்ச்சியான விஷயங்களை இன்றே செய்வோம். மற்றவற்றை நாளை செய்யலாம். ஏனென்றால், நாளை என்ன நடக்கும் என்று யாருக்கும் தெரியாது!’

நிஷாந்துக்கும் அதே உணவகத்தில் வேலை தேடித் தந்தான். சத்யனுக்கு ஒரு காதலி இருந்தாள். துருக்கியப் பெண்; பெயர் சமீரா. அவளும் அங்கேதான் கோப்பை கழுவினாள். உணவகத்தில் சாப்பாட்டுக்குப் பஞ்சம் இல்லை. இரவு வேலை முடிந்ததும் சத்யனும் நிஷாந்தும் 10 மணிக்கு வீடு வந்துசேர்வார்கள். பஸ் தரிப்பு, மாதா கோயிலின் முன் இருந்தது. 'இதை ஞாபகத்தில் வை’ என்று சத்யன் சொல்வான். ஏனென்றால், எல்லா பஸ் தரிப்பு நிலையங்களும் ஒரே மாதிரி இருந்தன. மறுபடியும் அடுத்த நாள் காலை 7 மணிக்கு வேலைக்குப் புறப்பட வேண்டும்.

முதல் தடவை நிஷாந் வேலைசெய்து, அதற்குப் பணமும் கிடைத்தது. அவன் மகிழ்ச்சியாக இருந்தான். ஒரேயொரு குறைதான். அவனிடம் ஆவணம் இல்லை. பயணப் பத்திரத்தை சொந்தக்காரருக்குத் திருப்பி அனுப்பிவிட்டான். போலீஸ் பிடித்தால் அவனைச் சிறையில் வைப்பார்கள் அல்லது நாடு கடத்துவார்கள்.

த்யனின் துருக்கியக் காதலி, அவர்களின் அறைக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் வருவாள். அவளுடைய கூந்தல்போல கருமையான ஒன்றை நிஷாந் கண்டது இல்லை. எந்த சிகையலங்காரியின் உதவியும் இன்றி தானாகவே சுருண்ட கேசம். நீளமான காம்பின் மேல் நிற்கும் ட்யூலிப் பூப்போல அவள் தலை கழுத்தின் மேல் துவளும். எந்த நேரமும் கண்கள் ஈரமாக இருக்கும். சிரிக்கும்போதுகூட ஈரமாகப் பளபளக்கும். சமீரா சின்னச் சின்னப் பொய்களை உடனே நம்பிவிடுவாள். பெரிய பெரிய உண்மைகளை நம்ப மாட்டாள். சத்யன் சொல்வான்... 'எங்களுடையது ஏழைக் கிராமம். இரவு நேரத்தில் மின்மினிப்பூச்சிகளை போத்தலில் அடைத்து விளக்காக பாவிப்போம்’ நம்பிவிடுவாள். 'திமிங்கலம், குட்டிக்குக் கடலின் அடியில் இருந்து பாலைச் சீறி அடிக்கும். பால் வெளியே வரும்போது குட்டி வாயைத் திறந்து ஏந்திக் குடிக்கும்’. சமீரா நம்ப மாட்டாள்.

திடீரென்று ஏதாவது துருக்கிய உணவு சமைப்பாள். அநேகமாக அது 'கோர்பா சூப்’பாக இருக்கும். தக்காளியும் பருப்பும் கலந்தது. மிக முக்கியமான கூட்டுப்பொருள் தனக்குக் கிடைக்கவில்லை என்று துக்கப்படுவாள். 'அது என்ன?’ என்று கேட்டால், 'ஆட்டு நாக்கு’ என்பாள். சத்யன் 'அது பரவாயில்லை. கொஞ்ச நாளைக்கு ஆடு பேசட்டும்’ என்பான். சாப்பிட்டுவிட்டு வெளியே போவார்கள்.

கடவுள் தொடங்கிய இடம் - 13

சத்யனும் அவளும் பேசுவதைப் பார்க்க சுவையாக இருக்கும். ஜெர்மன் மொழி, துருக்கிய மொழி, ஆங்கிலம் எல்லாம் கலந்திருக்கும். 'எப்படிப் பேசுகிறாய்?’ என்று நிஷாந் கேட்டான். 'காதலுக்கு மொழி தேவை இல்லை, மூடனே!’ என்பாள். 'பெண்களின் மன ஆழத்தை கண்டுபிடிக்க முடியாது. அவர்கள் ஏமாற்றுவார்கள். உன் காதலின் ரகசியம் என்ன?’ என்று கேட்டாள். சத்யன் சொன்னான், 'சிம்பிள். உன் காதலி அழுதால், அழுகை முடியும் வரை பக்கத்தில் இரு. எழுந்து போனால், காதலும் போய்விடும்.’

சமீரா சூப் செய்வதை மன்னித்துவிடலாம். ஆனால், சில சமயங்களில் மதிய உணவு செய்ய ஆரம்பித்துவிடுவாள். எந்த உணவு செய்தாலும் காளான் முக்கியம். அந்தக் கூட்டுப்பொருள் இல்லாமல், அவளால் சமைக்க முடியாது. காளான் சேர்க்க வேண்டாம் என்று நிஷாந் கெஞ்சுவான். உக்ரைனில் பல அகதிகள் நச்சுக் காளான் சாப்பிட்டு இறந்திருக்கிறார்கள். அவள் கேட்க மாட்டாள். பிடிவாதமாக சமைப்பாள். ''காளான் பற்றிய கதை உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டுவிட்டு, சத்யன் சிரிக்கத் தொடங்கினான்.

''சரி சரி சொல்லு... ஆனால், சிரிக்காதே.''

''ஒருநாள், கல்லறையில் பெண் ஒருத்தி உட்கார்ந்து நீண்ட நேரம் அழுதுகொண்டிருந்தாள். 'சாப்பிட்டிருக்கலாமே. நான் சொன்னேனே சாப்பிட்டிருக்கலாமே’ என்று அரற்றினாள்.

மயானக் காவல்காரன் வந்து, 'அம்மா, இவர் பட்டினிகிடந்து இறந்துபோனாரா?’ என்று கேட்டான்.

அதற்குப் பெண், 'இல்லை. இவர் என் ஐந்தாவது கணவர். இப்படி அநியாயமாக இறந்துபோனார்’ என்றாள்.

'எப்படி இறந்துபோனார்?’

'மண்டை நான்காக உடைந்து இறந்தார்.’

'உங்கள் முதல் கணவர் எப்படி இறந்தார்?’

'அவர் நச்சுக் காளான் சாப்பிட்டு இறந்து போனார்.’

'இரண்டாவது கணவர்?’

'அவரும் நச்சுக் காளான் சாப்பிட்டு இறந்துபோனார்.’

'மூன்றாவது கணவர்?’

'இது என்ன? அவரும்தான்.’

'நான்காவது கணவர்?’

'எத்தனை தரம் சொல்வது. அவரும்தான்.’

'உங்கள் ஐந்தாவது கணவர்?’

'நான் சொன்னேனே. காளான் சாப்பிட மறுத்தார். அதுதான் நான் சுத்தியலால் மண்டையில் அடித்தேன். ஒரே அடிதான். நான்காக உடைந்துபோனது!’

நிஷாந், சத்யனுடன் சேர்ந்து விழுந்து விழுந்து சிரித்தான். சமீரா சிரிக்கவில்லை. அன்றைய உணவில் நிறைய காளான்களை அள்ளிப்போட்டு பழிதீர்த்துக்கொண்டாள்.

தன் தங்கையை ரயில் ஏற்ற சமீரா போனாள். அவளுக்குத் துணையாக சத்யன் போனான். அவனுக்குத் துணையாக நிஷாந் போனான். சமீராவும் தங்கையும் துருக்கிய மொழியில் பேசியபடியே முன்னால் நடந்தார்கள். அவர்கள் இப்படி துருக்கிய மொழியில் பேசுவது சத்யனுக்குப் பிடிக்கவில்லை. உரத்த குரலில் நிஷாந்திடம் சொன்னான். ''துருக்கியக் காதலியின் கதை உனக்குத் தெரியுமா?''

நிஷாந், ''இல்லையே'' என்றான்.

முன்னாலே நடந்த பெண்கள் பேச்சை நிறுத்திவிட்டு உன்னிப்பாகக் கேட்பது தெரிந்தது.

''துருக்கிய பெண் ஒருத்தி, ஜெர்மன்காரனைக் காதலித்தாள். இருவரும் இரவு நேரங்களில் வெளியே போய் உலாத்துவார்கள். ஒருநாள் ஜெர்மன்காரன் காதலியிடம் கேட்டான்... 'இன்றைக்கு பௌர்ணமியா?’ அதற்கு பெண் சொன்னாள், 'எனக்கு எப்படித் தெரியும். நான் துருக்கியில் இருந்து அல்லவா வந்திருக்கிறேன்.’ நிஷாந் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான். சமீரா சிரிக்கவில்லை.

சமீராவின் தங்கை, சத்யனைப் பார்த்து, ''உன்னை எனக்குப் பிடிக்கும், பாதிதான்'' என்றாள்.

கடவுள் தொடங்கிய இடம் - 13

நிஷாந் மெதுவாகக் கேட்டான், ''இந்தப் பெண் நல்லவளாகத் தெரிகிறாள். நீயும் அகதி; அவளும் அகதி. இதைவிட ஒரு நல்ல பொருத்தம் எங்கே கிடைக்கும்? நீ இவளை மணம் முடிக்கலாமே!''

''நானும் யோசித்திருக்கிறேன். நான் ஓர் எழுத்தாளனாக இருந்திருந்தால் கட்டாயம் இவளை மணம் முடித்திருப்பேன்.''

''அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?''

''இங்கே ஓர் எழுத்தாளருக்கு விவாகரத்து நடந்தது. பெண் சரிபாதி சொத்தைக் கேட்டாள். எழுத்தாளருக்கு ஏது சொத்து? அவர் எழுதிய கடைசி நாவலின் 10,000 பிரதிகள் 10 வருடங் களாக விற்காமல் கிடந்தன. தன்னுடைய பாதி சொத்து என்று ஒரு விலைபோட்டு அவர் அத்தனை நாவல்களையும் அவள் தலையிலே கட்டிவிட்டார். இன்று அவளும் இல்லை; நாவலும் இல்லை. மனிதர் சந்தோஷமாக இருக்கிறார்.''

இப்போது நிஷாந்தின் முறை. அவன் சத்யனை அடிக்கக் கிளம்ப, அவன் ஓடினான். இரண்டு சகோதரிகளும் இந்தக் கோமாளிகளை வியப்புடன் பார்த்தனர்.

யில் நிலையத்தில் எத்தனை மணி நேரமும் ஒருவர் நிற்க முடியும். ரயில்கள் மாறிமாறி  ஒவ்வொரு மேடையாக வந்து நிற்கும். வெவ்வேறு மேடைகளில் பயணிகள் ஏறுவது இறங்குவது எல்லாம் ஒரே கலகலப்பாக இருக்கும். எத்தனை விதமான மனிதர்கள்! வெள்ளை, கறுப்பு, பழுப்பு, மஞ்சள்... எத்தனை மொழிகள். அத்தனையும் அங்கே கேட்டன. எத்தனை விதமான உடைகள், எத்தனை அலங்காரங்கள், எத்தனை நடைகள்... இளம் பெண் ஒருத்தி,  மூன்று மேல் பட்டன்களை அவிழ்த்துவிட்டதால், சட்டை நான்காவது பட்டனில் தொங்கியது. இன்னொரு பெண், தொடை வரை இழுத்த பல வர்ணக் காலுறை அணிந்திருந்தாள். உற்றுப் பார்த்தபோது அது காலுறை அல்ல, காலிலே வர்ணம் பூசியிருப்பது தெரிய வந்தது. சமீராவின் தங்கை ரயில் ஏறிய பின்னர், மூவரும் காபி பருகினர். அப்போது ரயில் வந்து நிற்க, ஒரு பெண் ஏறினாள். நிறைய ஆட்கள் இறங்கினார்கள். அந்தப் பெண், அழகான இளைஞன் ஒருவனுக்குக் கைகாட்டினாள்.

நிஷாந் தற்செயலாக தலைநிமிர்த்திப் பார்த்தான். அது அகல்யாதான். என்ன நாகரிகமாக உடை அணிந்திருந்தாள். தலைமுடி நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. முகத்துக்கு வெளியே தள்ளும் அதே கண்கள். ரயில் தூரம் சென்ற பிறகும் தலையை நீட்டி கையை ஆட்டியபடி இருந்தாள். ஏதோ உந்த அவன் ரயிலை நோக்கி ஓடினான். ரயில் மறைந்த பிறகும்கூட ஓடினான். திடீரென்று தன்னுடைய மடத்தனமான வேலையை நினைத்து வெட்கினான். பின்னர் அதே இடத்தில் நின்றான்.

யாரோ அவனை நட்டுவிட்டதுபோல நின்றதைப் பார்த்து, சத்யன் அவனைப் பிடித்து உலுக்கி அழைத்துப் போனான். அகல்யாவின் கதை அவனுக்குத் தெரியும். 'உன்னை விட்டுப் போனவள் என்ன செய்தால் உனக்கு என்ன? உன் வாழ்க்கையில் அவள் இல்லை. மறந்துவிடு’ என்றான். அந்தக் கண்களை அவனுக்குத் தெரியும். அதில் நிறையக் காதல் வழிந்தது. ஒருமுறை நட்சத்திரக் கூட்டத்தின் நடுவில் அவனை அதே மாதிரி பார்த்திருக்கிறாள்.

ன்றிரவு நிஷாந் வெகுநேரமாக உறங்கவில்லை. அவளையே நினைத்தான். அவளுக்கு எப்போவாவது அவன் ஞாபகம் வருமா? தன்னுடைய புதுக் காதலனிடம் தினமும் சூரிய உதய நேரம் என்னவென்று கேட்பாளா? அவள் இருக்கும் ஊரில் அவனும் இருக்கக் கூடாது? எப்படியும் வெளியேறிவிட வேண்டும் எனத் தீர்மானித்தான்!

- கடவுள் கதைப்பார்...