Published:Updated:

நலம் 360’ - 14

மருத்துவர் கு.சிவராமன், படங்கள்: அருண் டைட்டன், சி.சுரேஷ்பாபு

நலம் 360’  - 14

திடீரென ஒரு நாள் 'சுரீர்’ என பல் வலியெடுத்து, முகம் கோணி, காது, தொண்டை, பின்மண்டை வரை வலித்த பிறகே நாம் பல் மருத்துவரைத் தேடுகிறோம். ஆனால் பல் மருத்துவ உலகம் சொல்வதெல்லாம், 'பற்களின் பாதுகாப்பு பிறந்தவுடன் தொடங்கியிருக்க வேண்டும்’ என்பதைத்தான்!

சிசுவுக்கு தாய்ப் பால் புகட்டியதும் மிருதுவான, சுத்தமான துணியால் மிகமிக மென்மையாக ஈறுகளைத் துடைப்பதில் இருந்து பல் பராமரிப்பு தொடங்குகிறது. நள்ளிரவில் பால் கொடுத்துவிட்டு ஈறுகளைச் சுத்தம் செய்யாமல் விடுவதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு அனைத்து பற்களும் முட்டிக்கொண்டு வெளியே வந்தவுடன், தினமும் இரு முறை பல் துலக்கும் பயிற்சியைக் கற்றுக்கொடுப்பது, 'பல்’லாண்டு கால பல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தரும். குழந்தைகளுக்கு என பிரத்யேகமாக ஃப்ளுரைடு கலக்காத பற்பசைகளைப் பயன்படுத்தலாம். இன்னொரு முக்கியமான விஷயம், 'இப்போ ஈ காட்டப்போறியா இல்லையா?’ எனப் பயமுறுத்தி, குழந்தைகளைப் பல் துலக்கப் பயிற்றுவிக்கக் கூடாது. பல் துலக்குவதை, வாய் கொப்பளிப்பதை ஒரு குதூகல விளையாட்டுபோல் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது மிக முக்கியம். அதே சமயம் ஆர்வக்கோளாறில் பற்பசையைக் கணிசமாகப் பிதுக்கி, பற்களில் அப்பி, உப்புத்தாள் போட்டு சுவரைப் பட்டி பார்ப்பதுபோல் தேய்ப்பதும் முட்டாள்தனம். ஒரு நிலக்கடலை அளவுக்கான பற்பசையே மந்திரப் புன்னகையை அளிக்கும்.

இன்னும் நம்மில் பலருக்கு பற்களின் இடையே சிக்கியிருக்கும் துணுக்குகளை நீக்கும் DENTAL  FLOSS (பற்களுக்கு இடையே மெல்லிய இழையைவிட்டு சுத்தம் செய்யும் பயிற்சி) பழக்கம் பற்றிய அறிமுகமே இல்லை. ஆனால், கல்யாணம் நிச்சயமானவுடன் வாழ்க்கையில்  முதன்முதலாக பல் மருத்துவரிடம் சென்று, 'கல்யாணம்... பற்களைச் சுத்தம் பண்ணணும்’ என நிற்போம். அவர் பலப் பல உபகரணங்களின் உதவியுடன் பற்களை சுத்தம் செய்யும்போது வெளியேறும் அழுக்கைப் பார்த்து, 'இத்தனை வருஷமும் இவ்வளவும் நம்ம வாய்க்குள்ளயா இருந்துச்சு’ என நொந்துபோவோம். அதே உத்வேகத்துடன் வந்து, 'இனி தினம் மூணு தடவை பல் தேய்க்கணும்’ என ஆரம்பித்து சில நாட்களுக்கு பிரஷ்ஷ§ம் வாயுமாகத் திரிவோம். ஆனால், எல்லாம் சில நாள் ஷோதான்!

நலம் 360’  - 14

பராமரிப்பைத் தாண்டி, பல்லைப் பாழடிக்கும் பழக்கங்களில் இருந்து விடுபடுவதுதான் பாதுகாப்புக்கான முதல் படி. சாப்பிட்ட பின் பலர் உதடுகளை மட்டும் தேய்த்துக்கொள்வார்கள். ஆனால், நன்றாக வாயைக் கொப்பளிப்பது முக்கியம். அதுவும்  ஆரோக்கியம் தரும் விட்டமின் சி சத்துள்ள பழங்களைச் சாப்பிட்டால்கூட முடிவில் வாயைக் கொப்பளிக்காமல் விட்டால், அந்தப் பழங்களின் அமிலத் துணுக்குகள் பற்களில் கறையை உண்டாக்கும்; எனாமலைச் சுரண்டும்.

'ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ எனப் பலகாலம் படித்து வந்தாலும், 'அந்த இரண்டும் எங்க ஃப்ளாட்ல இல்லையே’ என்ற பரிதவிப்புடன், ஷாருக் கான், அனுஷ்கா சொல்லும் பேஸ்ட் மற்றும் பிரஷில்தான் நம்மில் பலர் பல் துலக்குகிறோம். அந்த பேஸ்ட் மற்றும் பிரஷில்  நடக்கும் வணிக யுத்தம் எக்கச்சக்கம். சினிமா திரையரங்குகளில் மட்டுமே விளம்பரம் வந்திருந்த காலம் தொடங்கி, இன்று ஆன்லைன் விளம்பரங்கள் வரை, 'ஆயுர்வேத மூலிகையாலே... தயாரிப்பது...’ எனப் பாடிக்கொண்டு ஒரு குடும்பமே பளிச் பற்களைக் காட்டிப் பரவசப்படுத்தும். ஆரம்பத்தில், 'உங்கள் டூத் பேஸ்ட் வெள்ளையாக இருந்தால் மட்டுமே, பற்களும் வெள்ளையாக இருக்கும்’ எனப் பாடி வந்தன விளம்பரங்கள். இடையில், 'கலர்கலர் கெமிக்கல்கள்தான் உங்கள் பற்களுக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்’ என மினுங்கும் நிற ஜெல் பேஸ்ட்களை இளமையின் அடையாளம் ஆக்கினர். உப்பு, கரித்தூள் கொண்டு பல் தேய்த்துக்கொண்டிருந்த தாத்தா பாட்டிகளிடம், 'கரித்தூள் வெச்சு விளக்க, அது பல்லா... பழைய பாத்திரமா?’ எனக் கிண்டலடித்தோம். ஆனால், இப்போது அதே கரித்தூளை 'activated charcoal’ வடிவில் அடக்கியது என்று விளம்பரப்படுத்தி சார்க்கோல் இழைகளால் தயாரித்த பிரஷ் விற்கிறார்கள். ஆக, கூடிய விரைவில் ஆலங்குச்சி பிரஷ், வேலங்குச்சி பிரஷ் எல்லாம் பன்னாட்டு நிறுவனங்களால் விற்கப்படலாம். 'உங்கள் சட்டைப் பையில் இருக்கும் பணத்தை, உங்களை வைத்தே கிழித்தெறிய வைத்துவிட்டு, கூடுதல் வட்டியில் காலமெல்லாம் கடன் வாங்கவைக்கும்’ வணிக சித்தாந்தத்துக்கு இதைவிட மோசமான எடுத்துக்காட்டு இருக்க முடியாது.

ஆலும் வேலும் மட்டும் அல்ல, மருதம், இலந்தை, இலுப்பை, இத்தி, கருங்காலி... எனப் பல துவர்ப்புத் தன்மையுள்ள மூலிகைக் குச்சிகளை, அதன் பட்டையோடு சேர்த்து பல் துலக்கப் பயன்படுத்தியது  நம் பாரம்பர்யம். ஹெர்குலிஸில் இருந்து வந்தியத்தேவன் வரை அதில் ஒன்றைத்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஆலங்குச்சியில் குளிர்ச்சி, இலந்தையில் இனிய குரல்வளம், இத்தியில் விருத்தி, இலுப்பையில் திடமான செவித்திறன், நாயுருவியில் புத்திக்கூர்மை, தைரியம், மருதத்தில் தலைமயிர் நரையின்மை, ஆயுள் நீட்டிப்பு... என பல்குச்சி மூலம் சகல நிவாரணங்களைச் சொல்லிக்கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள். பல் துலக்க, துவர்ப்புத்தன்மை பிரதானமாக இருக்கவேண்டும். மேற்குறிப்பிட்ட அத்தனை குச்சிகளும் அதைத்தான் தந்தன. பொதுவாக துவர்ப்புச் சுவை தரும் தாவர நுண்கூறுகள் அனைத்தும்  நோய் எதிர்ப்பு ஆற்றலையும், எதிர் நுண்ணுயிரித்தன்மையையும், ஆன்ட்டி-ஆக்சிடென்ட் தன்மையையும் தருவன என்பது இன்றைய தாவரவியலாளர் கண்டறிந்தது.

நலம் 360’  - 14

திருக்குரானில்தான் முதன்முதலில் 'மிஸ்வாக்’ குச்சியைப் பல் துலக்கப் பயன்படுத்தச் சொன்னார்கள். துவர்ப்புச் சுவையுடைய மெஸ்வாக் குச்சி மரத்தின் பெயர் உகாமரம். வழக்குமொழியில் குன்னிமரம் என்பார்கள். உகா குச்சியின் பயனை நாம் மறந்தாலும் பேஸ்ட் கம்பெனி மறக்கவில்லை. மூலிகைப் பற்பசையில் அதற்கு எனத் தனிச் சந்தை உண்டு. திரிபலா சூரணம் எனும் மும்மூர்த்தி மூலிகைக் கூட்டணி, வாய் கொப்பளிக்கவும், பல் துலக்கவும் மிக எளிதான மிக உன்னதமான ஒரு மூலிகைக் கலவை. பல உடல் வியாதிக்கும் பயன் அளிக்கும் கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் கூட்டணி பல் ஈறில் ரத்தம் வடிதல், வலி, ஈறு மெலிந்து இருத்தல், கிருமித்தொற்று... போன்ற வாய் மற்றும் பற்கள் பிரச்னைக்குப் பலன் அளிக்கும் எளிய மருந்து.

பற்களுக்கு 'ரூட் கேனால்’ சிகிச்சை இப்போது பிரபலம். பற்கள் மற்றும் அதைச் சூழ்ந்துள்ள வெளி மற்றும் உள்சதைப் பகுதிகள் அழற்சியால், கிருமித் தொற்றால் பாதிப்பு அடையும்போது, பல் முழுதாகப் பாழ்பட வாய்ப்பு உண்டு. முன்னெல்லாம் குறடு வைத்து பல்லைப் பிடுங்கிவிடுவார்கள். இப்போது, பல்லை நீக்காமல் பாதிப்படைந்த சதைப்பகுதியை மட்டும் நீக்கி, இயல்பாகப் பல்லைப் பாதுகாக்கும் சிகிச்சைதான் ரூட் கேனால். உங்கள் குடும்ப மருத்துவர் பரிந்துரைந்தால், அதை மேற்கொள்வது உங்கள் பல்லை நெடுநாள் பாதுகாக்கும்.

பல் வலி, பல் பிரச்னை மட்டும் அல்ல. பல்லின் புறப்பகுதியில் வரும் அழற்சி மற்றும் தொற்றுப் பக்கவாதம், மாரடைப்பு முதல் ஆண்மைக் குறைவு வரை ஏற்படுத்தும் என்கிறது ஆங்கில மருத்துவம். தினம் இருமுறை பல் துலக்காவிட்டால், 'அந்த’ ஆர்வம் குறையும்  நிலை வரலாம். 'கருப்புபூலா வேர்’ எனும் சாதாரணச் செடியில் பல் துலக்கினால், ஆண்மை பெருகும் என்கிறது சித்த மருத்துவம். PERIODONTITIS எனும் அழற்சியே பலருக்கு வாயில் துர்நாற்றத்தை உண்டாக்கும். குறிப்பாக சர்க்கரை வியாதியினருக்கு இந்தப் பிரச்னை அதிகம். அதே சமயம் வாய் துர்நாற்றத்துக்கு பல் பிரச்னை மட்டும் காரணம் அல்ல. அஜீரணம்,  நாள்பட்ட குடல்புண், ஈரல், கணைய நோய்கள்கூட காரணங்களாக இருக்கலாம். 'வாய் நாறுது’ எனச் சொல்லி, சந்தையில் விற்கும் விதவிதமான மணமூட்டிக் கொப்பளிப்பான்களில் வாய் கொப்பளித்தால், வாய் மணக்காது... வாஷ்பேசின் வேண்டுமானால் மணக்கக்கூடும்!

நலம் 360’  - 14

'பல்லுன்னா அப்படித்தான் காரை ஏறும்; விழும்; பொக்கை ஆகும். அதுக்கெல்லாம் எதுக்கு இவ்வளவு அக்கறை? பொம்பளைக்கு எதுக்கு பல் கிளீனிங், பல் செட்டு?’ என மடமை பேசும் சமூகச்சூழலில் இருந்து, இன்னும் நம்மில் பலர் வெளியே வரவில்லை. ஸ்டெம் செல் உதவியுடன் டைட்டானியப் பல் வளர்க்கும் வித்தையை நவீன உலகு ஆய்வு செய்கிறது.  ஆலும் வேலும் பற்களைப் பராமரிக்கும் என 3,000 வருடங்களாக நம் இலக்கியம் அழுத்திச் சொல்கிறது. ஆனால், இதை வணிகம் மட்டும்தான் இணைக்க வேண்டுமா? சமூக அக்கறையுடன் இரண்டு அறிவியலும் இணைந்தால், அழகான அடித்தட்டு மக்களின் முகங்கள் புன்னகைக்கும்!

- நலம் பரவும்...

எது சரி... எது தப்பு?

•  அறிவுப் பல்லை (WISDOM TOOTH) கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்பது இல்லை. அது குறுக்கே வளர்ந்தால், தாடை சதைப்பகுதியில் சீழ்க்கட்டியை உருவாக்கினால் மட்டுமே அகற்றலாம்.

•  பல் வலிக்கு நிவாரணமாக கிராம்புத் தைலம் தடவுவது அல்லது வலிக்கும் பல்லில் கிராம்பை வைத்துக் கடித்துக்கொள்வது பாட்டி வைத்தியமுறை. ஆனால், இன்று சந்தையில் கிடைக்கும் கிராம்பில் 100-க்கு 90 சதவிகிதம், அதன் எண்ணெய் நீக்கப்பட்ட வெறும் சக்கை மட்டுமே இருக்கிறது. கிராம்பு எண்ணெயிலும் கலப்படம் அதிகம். பல்லில் உண்டாகும் லேசான வலிக்கு, அந்த இடத்தில் இஞ்சித்துண்டு வைத்துக் கடிப்பதும், கூடவே அரை டீ-ஸ்பூன் அமுக்கரா சூரணம் சாப்பிடுவதும் நிவாரணம் தரும். அப்போதும் வலி அதிகரித்தால் அல்லது தொடர்ந்தால், பல் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

•  ஈறில் ரத்தக் கசிவு இருந்தால், அது பல் நோயாகத்தான் இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை. அது ரத்தத்தட்டு குறை நோயோ அல்லது ஆரம்பக்கட்ட சர்க்கரை நோயாகவோகூட இருக்கலாம்.

•  டீன் டிக்கெட்டுகள் பற்களில் பச்சை குத்திக்கொள்கின்றனர். 'பல் மேல் உறைபோல செய்து அதில்தான் குத்துகிறோம். அதனால் பல்லுக்குப் பாதிப்பு இல்லை’ என இப்போது சொன்னாலும், நாளை மருத்துவ உலகம் எதை மென்று விழுங்கும் என யாருக்கும் தெரியாது... எனவே, உஷார்.

•  சீரான பல் வரிசை அமைக்கும் அழகியல் சிகிச்சை அதிகரித்துள்ளது. ஆனால், இது பார்லருக்குப் போய் முடிவெட்டுவதுபோல இல்லை. பல் மருத்துவரின் ஆலோசனை மிக அவசியம்.

•  பல்லில் காரை, மஞ்சள் கறை படிவதைப் போக்க, அமில உணவுகளைச் (தேநீர், பழச்சாறுகள்...) சாப்பிடும்போதெல்லாம் வாயைக் கொப்பளிக்கலாம்.

•  சிலர் மாருதி காரையே பற்களால் கடித்து இழுக்க, பலருக்கு பால்கோவா கடித்தாலே பற்கள் கூசும். 'பல் உறுதியாக இருக்க கால்சியமும் பாஸ்பரஸும் நிறைந்த பால் பொருட்கள் பயன்படும்’ என்கிறார்கள் பல் மருத்துவர்கள். மோரும் கம்பும் சேர்ந்த கம்பங்கூழ் நல்லது என்கிறார்கள் பல் போன பாட்டிகள்!  

பல் பத்திரம்

•  தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் 7 முதல் 10 நிமிடங்கள் வரை மென்மையான இழைகளால் ஆன டூத் பிரஷால் (mild, soft, wild, hard என்றெல்லாம் பல பிரஷ்கள் சந்தையில் உண்டு.) பல் துலக்கினால் போதும். ஆலும் வேலும் பல்லுக்கு உறுதிதான். ஆனால், உமிழ்நீர்பட்ட ஒரே குச்சியை ஒவ்வொரு நாளும் உபயோகிக்க முடியாது. தினம் ஒரு குச்சியை உடைத்தால், ஓர் ஊர் பல்தேய்க்க ஒரு காட்டையே அழிக்கவேண்டி வரும். அது சூழலுக்குக் கேடு. அந்தக் கால சாப்பாடு பல்லை அவ்வளவாகப் பாதித்திருக்காது. இப்போதைய சாப்பாட்டில் நேரடியாகவும் மறைமுகமாகவும் இருக்கும் பல ரசாயனத் துணுக்குகள், பல்லையும் வாயையும் பதம்பார்ப்பதால், பேஸ்ட், பிரஷ் பரவாயில்லை. வாரம் ஒரு நாள் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதுபோல், வாரம் இரண்டு நாட்கள் மூலிகை பல் துலக்குதல் நடத்தலாம்.

•  குளிர்பானம், சவ்வு மிட்டாய், தனி சர்க்கரை போன்றவை, பற்களின் எனாமலைப் பாதிக்கும். ஜீரணக் கோளாறால் வயிற்றில் சுரக்கும் அமிலம், வாய்ப் பகுதிக்கு வந்து பல் எனாமலை அரிக்கும்.

•  குழந்தைகள் ஃப்ளுரைடு இல்லாத பசையைப் பயன்படுத்துவது நல்லது. அதிகபட்ச ஃப்ளுரைடுகூட பல் அரிப்பு தொடங்கி சர்க்கரை வியாதி வரை உண்டாக்கும்.

•  'சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ எனச் சொன்னாலும் சொல்லிவைத்தார்கள்... நம்மவர்கள் குண்டூசி, கொண்டை ஊசி, உட்பட கூர்முனைகொண்ட பல பொருட்களாலும் பல் குத்துகின்றனர். பொதுவாகப் பல் குத்துவதே தவறு. அதற்குப் பதில் சாப்பிட்டு முடித்ததும், வாயை நன்கு கொப்பளியுங்கள். அல்லது அதற்கென உள்ள மென்மையான இழைகளால் சுத்தம் செய்யுங்கள்.

எண்ணெய்க் கொப்பளிப்பு சமீபத்தில் மிகவும் பிரபலம்.  கிருமிகள் நீங்க, உடல் சூடு குறைய, வாய்ப் புண்களைத் தடுக்க... செக்கில் ஆட்டிய நல்லெண்ணெயால் வாயைக் கொப்பளிக்கலாம்.