Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 15

பாரதி தம்பி, படம்: ந.வசந்தகுமார்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 15

பாரதி தம்பி, படம்: ந.வசந்தகுமார்

Published:Updated:

ரசுப் பள்ளிகளின் வசதிக் குறைவுகள் குறித்து நாம் அறியாதது அல்ல. இப்போது சில பள்ளிகளில் போதுமான கட்டட வசதிகள் வந்துவிட்டன. எனினும், வசதிகள் இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கைதான் இங்கே அதிகம். ஒரு பள்ளிக்குத் தேவை, கட்டடம் மட்டுமே அல்ல. ஓட்டை இல்லாத கூரை, உடையாத சுவர், சுத்தமான வகுப்பறைகள், குடிநீர் குழாய்கள், கழிப்பறை வசதி, வகுப்பறையில் மின்விளக்கு, மின்விசிறி, நாற்காலிகள்... இவை எல்லாமே ஒரு பள்ளியின் அடிப்படைத் தேவைகள். வெக்கை அதிகமான கோடைக்காலத்தில் வீட்டுக்குள் இரண்டு மின்விசிறிகளைச் சுழலவிட்டும்கூட வியர்வை பெருக்கெடுக்கும்போது, மின்விசிறி இல்லாத வகுப்பறையில் அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு, அது நரகம். அந்தப் பிசுபிசுப்பான அவதியுடன் அவர்கள் எப்படிப் படிக்க முடியும்?

'அரசுப் பள்ளிகளில் 20 மாணவர்களுக்கு ஒன்று என்ற விகிதத்தில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்’ என்று 2012-ம் ஆண்டின் பள்ளிக் கல்வித் துறையின் அரசு ஆணை சொல் கிறது. எந்த அரசுப் பள்ளியிலும் இப்படி இல்லை. 50 பேருக்கு ஒன்று என்ற விகிதத்தில்கூட அது இல்லை. பல பள்ளிகளில் தண்ணீர் வசதியே இல்லை. மாணவர்கள்தான் வீட்டில் இருந்து எடுத்து வந்தாக வேண்டும். இருக்கும் குடிநீர் குழாய்கள்கூட போதுமான சுத்தம் இல்லாமல், பயன்படுத்த லாயக்கற்றதாக இருக்கின்றன. இதனால் மாணவர்கள் தண்ணீர் குடிப்பதைத் தள்ளிப்போடுகின்றனர்; குறைத்துக்கொள்கின்றனர். அது அவர்களின் உடல்நலத்தைக் கெடுக்கிறது. '20 மாணவர்களுக்கு ஒரு சிறுநீர் கழிப்பறை; 50 மாணவர்களுக்கு ஒரு மலக் கழிப்பறை இருக்க வேண்டும்’ என்பதும் பள்ளிக் கல்வித் துறையின் அரசு ஆணைதான். ஆனால், நிலைமை அப்படியா இருக்கிறது?

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 15

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் கழிப்பறை இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரத்தை அண்மையில் வெளியிட்டது. 2013-14ம் ஆண்டு நிலவரப்படி தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 37,002 அரசுப் பள்ளிகளில் 1,442 பெண்கள் பள்ளிகளிலும், 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியே இல்லை. இது மொத்தப் பள்ளிகளில் 15.45 சதவிகிதம். எனில் அந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் கழிப்பறைக்கு என்ன செய்வார்கள்? புதர்களும் முட்காடுகளுமே அவர்களுக்கான திறந்தவெளிக் கழிப்பறைகள். பள்ளியில் கழிப்பறை மிகவும் அத்தியாவசியம் என்பது, நம் அரசின் மனசாட்சிக்கு உறைக்கவே இல்லை. 'மாநிலத்தின் முதலமைச்சரே ஒரு பெண்தான்’ என்று பெருமை பேசும் அதே வேளையில்தான், பெண்கள் பள்ளிகளில்கூட கழிப்பறைகள் இல்லாத நிலை நீடிக்கிறது!  

அரசுப் பேருந்துகளை 'லொடலொட’வென ஓடவிட்டு, 'காசு கொடுத்தாலும் பிரைவேட் பஸ் தேவலாம்’ என மக்களை எண்ணவைப்பதுபோல, அரசுப் பள்ளிகளை மிக மோசமான நிலையில் இயங்கவிட்டு, மக்களை தனியார் பள்ளிகள் பக்கம் தள்ளிவிடும் வேலையைச் செய்கிறது அரசு. இதன் ஓர் அங்கம்தான் மேலே சொன்ன வசதிக் குறைவுகள். இதன் விளைவாக மக்கள் அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளைச் சேர்ப்பதில் இருந்து பின்வாங்குகிறார்கள். சராசரியாக ஆண்டுக்கு 10 முதல் 20 சதவிகிதம் வரை சேர்க்கை எண்ணிக்கை அரசுப் பள்ளிகளில் குறைந்து வருகிறது. 2008-09 கல்வியாண்டில் விருத்தாசலம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 2,550 மாணவர்கள் படித்தனர். இந்த ஆண்டு 1,850 மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். மீதம் உள்ள 700 பேர் எங்கே? சொல்லப்போனால் இடைப்பட்ட நான்கு ஆண்டுகளில் மக்கள் தொகை பெருகியிருக்கிறது. பிள்ளைகளைப் படிக்கவைப்பதன் அவசியத்தைப் பெற்றோர்கள் முன்பைவிட அதிகமாக உணர்ந்துள்ளனர். ஆக, ஒவ்வொரு வருடமும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தல்லவா இருக்க வேண்டும்!? மாறாக இருப்பதும் இல்லாமல் போகிறது. மாநிலம் முழுவதுமான நிலைமை இதுதான். தொடக்கப் பள்ளிகளின் நிலைமையோ, இன்னும் மோசம்!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, கீழக்கோட்டை மற்றும் அறிவித்தி ஆகிய இரு கிராமங்களில் இருந்த தொடக்கப் பள்ளிகள், கடந்த ஜூலை மாதம் மூடப்பட்டுள்ளன. காரணம் மாணவர் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்துக்குள் சுருங்கி, அவர்களும் மாதக்கணக்கில் பள்ளிக்கு வரவில்லை. இதே ராமநாதபுரம் மாவட்டம் டி.கிளியூர் தொடக்கப் பள்ளியில், கடந்த ஆண்டு த்ரிஷா என்கிற ஒரே ஒரு மாணவி மட்டுமே பயின்று வந்தார். அவரும் தேர்ச்சிபெற்று சென்றுவிட்டதால், மாணவர்களே இல்லாமல் அந்தப் பள்ளியும் மூடப்பட்டுவிட்டது. இதுபோல சொற்ப எண்ணிக்கையில் மாணவர்கள் பயிலும் ஏராளமான தொடக்கப் பள்ளிகள் தமிழ்நாட்டில் இருக்கின்றன. அடுத்த அடுத்த ஆண்டுகளில் அவை மூடுவிழா காணும் செய்திகளை நாம் கவனிக்கலாம்... கவனிக்காமலும் போகலாம்!

ஆரோக்கியமான ஒரு சமூகத்தில், பள்ளிகள் திறக்கப்பட வேண்டும்; மூடப்படக் கூடாது. அப்படித் தொடர்ந்து மூடப்படுகிறபோது, அதன் காரணங்களை ஆய்வுசெய்து சரிசெய்யவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. ஆனால், அரசு இதற்கான முயற்சியைக்கூட எடுக்கவில்லை. மாணவர் எண்ணிக்கை குறைந்தால், ஆசிரியரை வேறு பள்ளிக்குப் பணிமாறுதல் செய்துவிட்டு, பள்ளியைப் பூட்டிவிட்டு வேலை முடிந்தது என ஒதுங்கிவிடுகின்றனர். திடீரென ஊருக்குள் பரவிய நோயில் வீழ்ந்து மரணத் தருவாயில் தவித்துப் போராடி ஒருவர் இறந்துபோனால், ஆசுவாசத்துடன் அடக்கம் செய்துவிட்டு உறவினர்கள் கிளம்பிச் செல்வதைப்போலத்தான் அரசு நடந்துகொள்கிறது. என்ன நோய், நோய்க்கான காரணம் என்ன என்பதை ஆராய்ந்தால்தானே, மேலும் பலரை அந்த நோய் பலிகொள்ளாமல் தடுக்க முடியும்!  

இப்படி மூடப்படும் பள்ளிக் கட்டடங்கள் பிறகு என்னவாகின்றன? வட சென்னை, ஸ்ட்ரஹான்ஸ் சாலையில் இருந்த அரசுப் பள்ளி, சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர் எண்ணிக்கை குறைவு காரணமாக மூடப்பட்டது. இப்போது அந்த இடத்தில் திரு.வி.க நகர் மாநகராட்சி மண்டல அலுவலகம் கட்டுவதற்கான வேலைகள் நடக்கின்றன. 2009-ம் ஆண்டில் சென்னையில் மொத்தம் 30 பள்ளிகள் மூடப்பட்டன. அந்தப் பள்ளிகள் அமைந்திருந்த இடங்களில், பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் கட்டப் பயன்படுத்தப்படுகின்றன. மூடப்பட்ட பள்ளிகளைத்தான் இப்படிச் செய்கிறார்கள் என்றால், இயங்கிக்கொண்டிருக்கும் பள்ளிகளை நோக்கியும் வருகிறார்கள். சென்னையில் கிழக்குக் கடற்கரைச் சாலையையும், பழைய மகாபலிபுரம் சாலையையும் இணைக்கும் புதிய சாலை ஒன்றை அமைக்க, அரசு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. இதற்காக துரைப்பாக்கத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியை இடித்துவிட்டு மேம்பாலம் கட்டப்போகிறார்கள். இத்தனைக்கும் அந்தப் பள்ளி இப்போதும் இயங்கிக்கொண்டிருக்கிறது. மதுரவாயலில் மாநகராட்சிக் கட்டடம் கட்டுவதற்காக அரசுத் தொடக்கப் பள்ளிக் கட்டட அறையை எந்தவித அனுமதியும் பெறாமல் இடித்துள்ளனர். இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம்.    

இயங்கிக்கொண்டிருக்கும் பல அரசுப் பள்ளிகளில் சனி, ஞாயிறு விடுமுறை முடிந்துவந்து பள்ளியைத் திறந்தால், வகுப்பறைகளில் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர்கள் இறைந்துகிடக்கின்றன. பள்ளி அறையை இலவச பார்போல பயன்படுத்துகின்றனர். இதுபோன்ற காட்சிகள் பெற்றோர் மனதில் அரசுப் பள்ளிகள் குறித்த அச்சத்தையும், அசூயை உணர்வையும் தோற்றுவிக்கின்றன.

'பொதுப் பள்ளிகள்தான் சமத்துவம், ஜனநாயகம், மதச் சார்பின்மை போன்ற உயர்ந்த பண்புகளை சமூகத்தில் நிலைநிறுத்தும். இந்தியா போன்ற நாட்டுக்கு பொதுப் பள்ளி முறைதான் மிகச் சிறந்தது. இதை ஏற்படுத்தவில்லை என்றால், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளும் பிரிவினைகளும் உருவாகும்’ என்று 1964-ம் ஆண்டு எச்சரித்தது கோத்தாரி கல்விக் குழு. பிறகு வந்த எத்தனையோ கமிட்டிகள் இதே பொதுக் கல்வி முறையை முன்வைத்தபோதிலும், அவை அறிஞர்களின் ஆய்வுகளாகவே சுருங்கிவிட்டன. பொது விவாதத்துக்கு வரவில்லை; பொதுக் கருத்தாக உருவாகவில்லை. இதன் விளைவாகவே இப்போது அரசுப் பள்ளிகள் அழிவைச் சந்திக்கின்றன!

- பாடம் படிப்போம்...

சேப்பாக்கம் மைதானம் குத்தகை ரூ. 50,000

'அரசு - தனியார் கூட்டு’ (Public Private Partnership-P.P.P) என்பதுதான் தனியார்மயத்தின் நவீன வடிவம். உலகம் தழுவிய அளவில் இந்த முறையில் பல்லாயிரம் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. பி.பி.பி முறைக்கான சோதனைக்கூடமாகத் திகழ்கிறது இந்தியா. விமானத்தளம், சுரங்கம், துறைமுகம், மருத்துவமனைகள், குடிநீர் விநியோகம்... என அனைத்துத் துறைகளிலும் இந்தியாவில் பி.பி.பி முறை அமலில் இருக்கிறது. கல்வித் துறையில் இது அதிவேகமாகவே இருக்கிறது. மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளை, தனியார் ஏற்று நடத்தும் வகையில் பி.பி.பி முறையில் குத்தகைக்குவிடுகின்றனர். சென்னையில் நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, சாந்தோம், திருவல்லிக்கேணி, தண்டையார்பேட்டை... உள்ளிட்ட எட்டு இடங்களில், 30-க்கும் குறைவான மாணவர்களைக்கொண்ட எட்டு பள்ளிகளை, இந்த முறையின் கீழ் கொண்டுவரும் முயற்சிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டுள்ளது. இனிவரும் காலத்தில் இது இன்னும் விரிவுபடுத்தப்படலாம். மேம்போக்காகப் பார்ப்பதற்கு அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டம்போல தோன்றினாலும், இது மிக அபாயமானது என்று எச்சரிக்கிறார்கள் கல்வியாளர்கள்.  

குறிப்பாக, இன்று நகர்ப்புறங்களில் நிலம் மிகவும் மதிப்புமிக்கது. ஒரு சதுர அடியே 10 ஆயிரம், 20 ஆயிரம் ரூபாய் விலைக்குப் போகிறது. அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றிலும் ஏக்கர் கணக்கில் நிலம் இருக்கிறது; அதுவும் நகரத்தின் மையப்பகுதியில். இவற்றின் மதிப்பு பல கோடிகளைத் தொடும். அரசு, இந்த நிலத்தையும் பள்ளியையும் தனியாருக்குக் குத்தகைக்குத்தான் விடுகிறது. எனினும், அந்தக் குத்தகை 30 ஆண்டுகள்,  50 ஆண்டுகள் என இருக்கும். அத்தனை ஆண்டுகள் கழிந்த நிலையில், அது அரசு சொத்து என்பது அரசுக்கே மறந்துபோகும். உதாரணமாக அமெரிக்கத் துணைத் தூதரகம் சார்பில் நடத்தப்படும் சர்வதேசப் பள்ளிக்காக தமிழக அரசு, சென்னையின் வெவ்வேறு பகுதிகளில் மொத்தம் 12.42 ஏக்கர் நிலங்களை ஒதுக்கியுள்ளது. இந்த மொத்த நிலங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆண்டுக் குத்தகை வெறும் 16.25 லட்சம் ரூபாய். அதேபோல் 12 ஏக்கர் 23 கிரவுண்டு 2,053 சதுர அடி பரப்பில் அமைந்துள்ள சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானமும் அரசுக்குச் சொந்தமானதுதான். அந்த இடத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துக்கு ஆண்டுக்கு வெறும் 50 ஆயிரம் ரூபாய்க்குக் குத்தகைக்கு விட்டுள்ளது அரசு. மாத வாடகையாகக் கணக்கிட்டால் வெறும் 4 ஆயிரம் ரூபாய். ஆனால், சேப்பாக்கம் மைதானம் இருக்கும் பகுதியில், 500 சதுர அடி வீட்டின் மாத வாடகை குறைந்தது 10 ஆயிரம் ரூபாய்!

இத்தனை குறைந்த தொகைக்கு சேப்பாக்கம் கிரிகெட் மைதானத்தை குத்தகைக்குக் கொடுக்க, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் என்ன வறுமையில் வாடுகிறதா? ஐ.பி.எல் போட்டிகள் மூலம் பல கோடிகள் சம்பாதிக்கிறதே... கிரிக்கெட் பார்க்கச் செல்லும் ரசிகர்கள் ஒவ்வொருவரிடமும் டிக்கெட்டுக்காக ஆயிரக்கணக்கான ரூபாய் பிடுங்குகிறார்களே... இப்படி அரசின் மதிப்புமிக்க நிலங்களை போகிற போக்கில் தூக்கித் தருகிற அரசுதான், கூவம் கரையோரக் குடிசைவாசிகளை, குப்பைகளைப்போல் வாரிக் கொண்டுசென்று கண்ணகி நகரில் கொட்டுகிறது.

அரசுப் பள்ளிகளை பி.பி.பி முறையில் தனியாரிடம் கொடுக்கும்போது இதே ஆபத்து இருக்கிறது. குத்தகை எடுப்பவர்களின் நோக்கம் கல்விச் சேவை செய்வதுதான் என்றால், அவர்கள் ஏற்கெனவே செய்த 'சேவை’ குறித்து மக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். ஏனெனில், அரசுப் பள்ளிகள் என்பவை அரசு சொத்து; மக்கள் சொத்து!