ம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் கீதாவுக்கு, வயது 29. கணவருக்கு காவல்துறையில் வேலை. காதல் திருமணம் என்பதால், இரு வீட்டினரின் ஆதரவு துளியும் இன்றி, தனியாக வசித்து வருகிறார்கள். திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இந்த வருத்தங்களும் தவிப்பும் கீதாவை வேலையில் கவனம் செலுத்த அனுமதிக்கவில்லை. விளைவு, அலுவலகத்தில் சகதோழிகளுடனும் மிஸ்அண்டர்ஸ்டேண்டிங். யாரைப் பார்த்தாலும் டென்ஷன்... எதற்கு எடுத்தாலும் டென்ஷன். இப்படி கீதாவை அழுத்திய பல பிரச்னைகள், கணவரின் மேல் கோபமாக வெடித்து சண்டை போட வைத்தன.

வாழ்க்கையின் மீது ஒருவித கசப்பும், வெறுப்பும் ஏற்பட்டு, நாளுக்கு நாள் அசுரவேகத்தில் வளர்ந்தன. ஒருகட்டத்தில் சமாளிக்க முடியாமல், விரக்தியடைந்த கீதா, அன்று வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொள்ள முயன்றாள். நல்லவேளையாக கணவர் வந்துசேர, காப்பாற்றப்பட்டாள்.

கீதாவை தற்கொலை வரை யோசிக்க வைத்தவை, உண்மையில் மேலே பட்டியலிட்ட பிரச்னைகள் அல்ல. அவையெல்லாம் சுலபமாக எதிர்கொள்ளக்கூடிய மாயைக் காரணங்களே. உயிர் துறக்க முடிவெடுக்கக் காரணம், அவளுக்குள் இருக்கும் அளவுக்கதிகமான மனஅழுத்தமே (Excessive stress). இது கண்ணுக்குத் தெரியும் புறநோய் கிடையாது. யாருக்கும் வரக்கூடிய, குறிப்பாக பெண்கள் அதிகம் இலக்காகும் இந்நோயைக் குணப்படுத்த மருத்துவரும் நீங்கள்தான்... மருந்தும் நீங்கள்தான். ஒரு பைசா செலவில்லாமல், மனம் சார்ந்த இந்நோயிலிருந்து விடுபட... நீங்கள் மனது வைக்க வேண்டும். அவ்வளவுதான்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆல் இஸ் வெல்!

இன்றைக்கு சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி, முத்தி முதிர்ந்த மனிதர்கள் வரை 'டென்ஷன்' என்கிற வார்த்தையைப் பயன்படுத்தாதவர்கள் மிகமிகக் குறைவு! அந்த அளவுக்கு பல்வேறு பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து மனஅழுத்தத்துடனேயே உலவிக்கொண்டிருக்கிறார்கள்.

'வாழ்க்கையில டென்ஷன் எல்லாம் சாதாரணமப்பா...’ என்று துச்சமாக நினைப்பவர்கள், தொடர்ந்து படியுங்கள். உடலில் ஏற்படக்கூடிய நோய்களில் 90 சதவிகித நோய்களுக்கு மனஅழுத்தமே முக்கியக் காரணமாகிறது. முடி உதிர்தல், தோல் தடித்தல் தொடங்கி ரத்த அழுத்தம், நீரழிவு நோய், இதயநோய் வரை அனைத்துவிதமான நோய்களின் பின்னணியிலும், கொடிய ஆட்சி செய்துகொண்டிருக்கிறது ஸ்ட்ரெஸ். பல குற்றச்செயல்களின் பின்னணியிலும் இந்த ஸ்ட்ரெஸ்தான் கோரப் பற்கள் காட்டிச் சிரிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை. பொய் பேசுவது, சண்டை போடுவது, அடுத்தவரைக் காயப்படுத்துவது என்று சின்னச் சின்ன குற்றங்கள் தொடங்கி... மோசடி, கடத்தல், அமில வீச்சு, பாலியல் வன்முறை, கொள்ளை, கொலை வரை எதையும் செய்யத் தூண்டுவது இந்த ஸ்ட்ரெஸ்தான்.

இப்போது புரிகிறதா... இது ஏன் கவனம் கொடுத்து சரிசெய்ய வேண்டிய முக்கியப் பிரச்னை என்று!  

ஸ்ட்ரெஸ்ஸை அழிக்க முடியாது, கட்டுப்படுத்த முடியும். தனக்கே தனக்கென்று நேரம் ஒதுக்குவது, மனதை அமைதியாக வைத்துக்கொள்வது, மனதின் பாரங்களை மற்றவர்களுடன் பகிர்வது, எமோஷனல் பிரச்னைகளைத் தொடராமல் அன்றே முடிப்பது, மிகமுக்கியமாக தன் மீது அக்கறை எடுத்துக்கொள்வது... இவற்றை எல்லாம் செய்தாலே ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்கலாம். இது ஏற்படுத்தும் உடல் சார்ந்த நோய்களை யும் தவிர்க்கலாம். ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் (Stress Management) என்பது, ஒருவரின் ஆளுமையைச் சார்ந்து ஒவ்வொருவருக்கும் வேறுபடக்கூடியது.

ஆல் இஸ் வெல்!

இதில், பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ், நெகட்டிவ் ஸ்ட்ரெஸ் என்று இரு வகை உண்டு. தேர்வுக்காகப் படிக்கும் மாணவனுக்கு, நல்ல மதிப்பெண்கள் வாங்க வேண்டும் என்கிற உந்துதலும், சக்தியும் இருந்து, அதை எட்ட அவனுக்குள் உருவாவது பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ். அது இருந்தால்தான் இலக்கை அடைய முடியும். இல்லையேல், தேர்வு பற்றிய பயத்தையும், மதிப்பெண் குறித்த கலக்கத்தையும் ஏற்படுத்தும் நெகட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸுக்கு இடம் கிடைத்து, ஒருவித சோம்பலும், எதிர்மறை எண்ணமும் அவனை ஆக்கிரமித்து, செய்ய வேண்டிய காரியத்தைக் கெடுத்துவிடும். அளவுக்கதிகமான கோபம், பதற்றம், வருத்தம், பயம், தடுமாற்றம், சந்தேகம், கோரபுத்தி என அவன் மனதை மிகச் சிக்கலாக்கிவிடும்.

பாஸிட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை வளர்த்து, நெகட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸை நீக்குவது எப்படி?

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான பிரச்னைகள் இருக்கும். அதையெல்லாம் கண்டறிந்து களையெடுப்பது எப்படி?

உங்கள் கண் முன்னே வாழ்ந்துகொண்டிருக்கும் உதாரணங்களில் இருந்து பாடம் படிப்போம் இத்தொடரில்!

- ரிலாக்ஸ்...

மனநல மருத்துவர் அபிலாஷா, ப்ளஸ் டூ பொதுத்தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பெற்ற மாணவி என்கிற பெருமைக்குச் சொந்தக்காரர். சென்னை, 'மகளிர் கிறிஸ்தவக் கல்லூரியில்’ பி.எஸ்ஸி சைக்காலஜி, 'எஸ்.ஐ.இ.டி’ கல்லூரியில் எம்.எஸ்ஸி சைக்காலஜி முடித்து, அதே கையோடு இத்தாலி நாட்டில் பிஹெச்.டி முடித்தவர். ஆல்டர்நேட்டிவ் மெடிசன், ஹிப்னோதெரபி போன்றவற்றில் டிப்ளோமா படிப்பை முடித்திருக்கும் இவர், இந்தியாவைச் சேர்ந்த வெகுசிலர் மட்டுமே உறுப்பினர்களாக உள்ள 'அமெரிக்கன் சைக்காலஜிகல் அசோஸியேஷன்' எனும் அமைப்பில் இருக்கிறார். கல்லூரி மாணவர்கள், குடும்பத் தலைவிகள் தொடங்கி பலருக்கும் மனநலம் தொடர்பான செமினார் மற்றும் வொர்க்ஷாப் என்று பயிற்சி அளிப்பவர். ஐ.பி.எஸ் பயிற்சியிலிருப்பவர்களுக்கும் மனநலம் தொடர்பான வகுப்புகளை எடுக்கும் இவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மனநல ஆலோசகராக இருக்கிறார். அண்ணா நகரில் சொந்தமாக கிளினிக்கும் நடத்தி வருகிறார்.

'மனோதத்துவம்’ என்ற புத்தகத்தை எழுதிய இவர் இந்தியா மட்டுமின்றி மலேசியா, இந்தோனேஷியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளிலும் மனநலம் பற்றிய பயிற்சிகளை வழங்கி வருகிறார்.