Published:Updated:

நலம் 360’ - 16

மருத்துவர் கு.சிவராமன், படம்: அருண் டைட்டன்

கில உலகத்துக்கும் பொதுவான மொழி எது? சிரிப்பு!

உலகில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் தங்களின் தாய்மொழிக்கு முன்னரே முந்திக்கொண்டு தொடர்புகொள்ளும் ஊடகம்... சிரிப்பு! 'புன்னகைதான் மொழிக்கும் முன்னர் மனிதன் கண்டுபிடித்த முதல் தொடர்பு ஊடகம்’ என்கிறார், தலைசிறந்த 'சிரிப்பு’ ஆய்வாளர் பேராசிரியர் ராபர்ட் புரொவின். பார்வையற்ற, கேட்கும்திறன் இல்லாத குழந்தைகூட பிறந்த சில நாட்களில் சிரிக்கும் என்பது சிரிப்பின் தனிச் சிறப்பு. ஆனால், கைக்குழந்தையாக இருக்கும்போது நாள் ஒன்றுக்கு 200-300 முறை சிரித்துக்கொண்டிருந்த நாம், வளர்ந்து பொறுப்பானவர்கள் ஆகியதும் 15-20 முறைதான் சிரிக்கிறோம்... ஏன்?

புன்னகையும் சிரிப்பும் மகிழ்ச்சியை மட்டும் அல்ல... ஆரோக்கியத்தையும் இலவச இணைப்பாகத் தருகிறனவாம். ஆம்... ''மகிழ்ச்சி’ 100 சதவிகிதம் பலன் அளிக்கும் ஒரு தடுப்பு மருந்து’ என திருக்குறள் முதல் வாட்ஸ்-அப் ஸ்மைலி வரை அனைத்தும் அழுத்தமாகச் சொல்கின்றன. பிரச்னை என்னவென்றால், 'பிரிஸ்கிரிப்ஷனில் எழுதித் தர முடியாத அந்த மருந்தை எங்கே சென்று வாங்குவது?’ எனத் தெரியாததுதான்! வைரஸ், பாக்டீரியாவில் இருந்து சிட்டுக்குருவி, காட்டுயானை, கடல் மீன் எனப் பலவும் மகிழ்ச்சியாகத் திரியும்போது, மனிதன் மட்டும் மகிழ்ச்சிக்காக ஏன் மெனக்கெட வேண்டியிருக்கிறது? ஏனெனில், உயிர் வாழ பணம் தேவைப்படும் ஒரே உயிரினம் மனிதன் மட்டும்தானே!  

குளத்தாங்கரை, கோயில் வாசல், விளையாட்டு மைதானம், காமெடி சினிமா திரையிடப்படும் திரையரங்கு, பொருட்காட்சி, அப்பளக் கடைகள்,  அலுவலக கேபின், தேரடி முக்கு... என எங்கும் இப்போது சத்தமான சிரிப்பைக் கேட்கமுடிவது இல்லை. நாகரிகம் கருதியோ, நாசூக்குக் கருதியோ சிரிப்பு வெறும் சிக்னலாகக் சிக்கனமாகிவிட்டது. 'வாய்விட்டுச் சிரித்தால் நோய்விட்டுப் போகும்’ என்ற வழக்குமொழி, ஒரு விஞ்ஞான உண்மையும்கூட! எபிநெஃப்ரின், நார்-எபிநெஃப்ரின், கார்டிசால் ஆகியவை மன அழுத்தம் உண்டாக்கும் ஹார்மோன்கள். ஆனால், மனம்விட்டுச் சிரிப்பது அந்த ஹார்மோன்களின் சுரப்பைக் குறைக்கிறதாம். அதனால், இயல்பாகவே மன அழுத்தம் குறைகிறதாம். கிச்சுகிச்சு மூட்டி சிரித்தாலும் (Simulated laughter) சரி, தானாகவே கிளர்ச்சி அடைந்து சிரித்தாலும் (Simultaneous Laughter) சரி, இரண்டுமே மருத்துவப் பலன்களை அளிக்கும் என்கின்றன ஆய்வுகள். 'அதென்ன... பொம்பளைப் பிள்ளை கெக்கெபிக்கேனு சிரிக்கிறது?’ எனப் பண்பாட்டைக் காரணம் காட்டி பெண்களை அடக்கும் அடிப்படைவாதிகளின் கவனத்துக்கு ஒரு விஷயம்... இயல்பிலேயே சிரிக்காமல் இருந்து பிறகு சிரிக்கவே மறந்துபோவதுதான், நம்மூர் பெண்களுக்கு மன அழுத்தம், மாரடைப்பு, புற்று போன்ற  நோய்ச்சிக்கல்களைப் பெருக்குகிறது.  

நலம் 360’  - 16

மகிழ்ச்சி, வெற்றி, ஆறுதல், ஆசுவாசம்... எனப் பல உணர்வுகளை வெளிப்படுத்தும் சிரிப்பு, மூளையில் எண்டார்ஃபின்களைச் சுரக்கச்செய்து, நம் மனநிலையை உற்சாகமாக வைத்திருக்கும். ரத்தக்குழாயின் உட்சுவரான எண்டோதீலியத்தின் சுருக்கமும், அதில் கொழுப்புப் படிதலும்தான் ரத்தக் கொதிப்பு, மாரடைப்பு எனப் பல பிரச்னைகளுக்குக் காரணங்கள். மனம்விட்டுச் சிரிப்பது, அந்த எண்டோதீலியத்தை விரிவடையச் செய்யுமாம். 'கிச்சுகிச்சு மூட்டியோ, 'மிஸ்டர் பீன்’ படம் பார்த்தோ குபுகுபுக்கும் சிரிப்புகூட, மூளையின் ஹைப்போதலாமஸில் பீட்டா எண்டார்ஃபின்களைச் சுரக்க வைத்து, ரத்தக்குழாய் உட்சுவரை விரிவடையச் செய்யும்’ என்கிறார் மெரிலாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் மைக்கேல் மில்லர். 5,000 ரூபாய் மாத்திரை செய்யாததை ஐந்து நிமிடச் சிரிப்பு செய்துவிடும். பெண்களுக்கு மாதவிடாய் முடிவை ஒட்டிப் பயமுறுத்தும் புற்றுக் கூட்டத்துக்கும் சரி, அடிக்கடி சளி, இருமல், தும்மல் வரும் நோய் எதிர்ப்பாற்றல் குறைவுக்கும் சரி... வாய்விட்டுச் சிரிக்காததும் ஒரு காரணம்தான். அதிகமான ரத்தக் கொதிப்பு தரும் மாரடைப்பைக் காட்டிலும், மகிழ்ச்சிக் குறைவால் வரும் மாரடைப்பே அதிகம் எனப் பல ஆய்வுகள் சொல்கின்றன. வயிறு குலுங்கவைக்கும் சிரிப்புதான், மாரடைப்பைத் தள்ளிப்போடும் விலையில்லா மருந்து! 'வயிறு குலுங்க 10 நிமிடங்கள் சிரிப்பது என்பது, இரண்டு மணி நேரம் வலியை மறக்கவைக்கும் நிவாரணத்துக்கு சமம்’ என்கிறது ஓர் ஆய்வு. தீவிர வலியில் இருக்கும் நோயாளிகளுக்கு கஷாயம், மருந்து, மாத்திரை எனக் கசப்பானவற்றைக் கொடுக்காமல், சார்லி சாப்ளின் நடித்தப் படங்களைக் காட்டி செய்த பரிசோதனைகள் மூலம் இதை உணர்ந்திருக் கிறது மருத்துவ உலகம்.

நோயாளிகளின் மனதில் மலர்ச்சியை உண்டாக்குவதே மருத்துவத்தின் முதல் நோக்கம் என்பதில் உறுதியாக இருந்தவர் அமெரிக்க மருத்துவர் பாட்ச் ஆடம்ஸ். அதற்காக கோமாளி முகமூடி அணிந்துகொண்டு கோணங்கி சேட்டைகளைக்கூட செய்தவர் இவர். அவரது பெயரிலேயே உருவான ஹாலிவுட் சினிமாதான் நம்ம ஊர் 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தின் மூலம். பாட்ச் ஆடம்ஸ் எழுதிய Good health is a laughing matter என்ற நாவலில் ஊசி, மருந்துகளைத் தாண்டி நலம்தரும் முக்கியமான விஷயங்கள் சிரிப்பும் மகிழ்ச்சியுமே என்பதை பல உதாரணங்களுடன் உணர்த்தியிருப்பார் பாட்ச்.  

இரண்டும் உணர்வுகள்தானே என்றாலும், 'கலீர்’ சிரிப்பும், 'சுரீர்’ கோபமும் மனித உடலில் எக்கச்சக்க வேறுபாடுகளை உண்டாக்கும். கலகலவென வயிறு குலுங்கச் சிரிப்பது கிட்டத்தட்ட 15 விதமான தசைகளுக்குப் பயிற்சி கொடுத்து, கூடவே கொஞ்சமே கொஞ்சம் மூச்சை நிறுத்தும். அதனால்தான் சிலருக்கு சிரிப்போடு விக்கல் தோன்றுவதோடு, இன்னும் சிரிப்பு அதிகரிக்கும்போது கண்ணீர் பைகள் பிதுக்கப்பட்டு ஆனந்தக் கண்ணீரும் ஊற்று எடுக்கிறது. ஆனால், கோபம் இதற்கு நேர் எதிர். அடிக்கடி அதீத கோபம் வந்தால், பி.பி எகிறி வாயைக் கோணவைக்கும் பக்கவாதம், வாழ்வையே கோணலாக்கும் மாரடைப்பு போன்றவை வர வழிவகுக்கும். சர்க்கரை வியாதிக்கு நிவாரணமாக சாப்பிடுவதற்கு முன் ஒன்று, சாப்பிடுவதற்குப் பின் ஒன்று என வகை வகையாக மாத்திரைகள் தருவது சம்பிரதாயம். தினசரி சாப்பாட்டுக்குப் பின்        20 நிமிடங்கள் சிரிப்புப் படம் பார்த்து வயிறு வலிக்கச் சிரித்தவர்களின் HDL (நல்ல கொழுப்பு) கொஞ்சம் கூடுவதையும், அவர்களுக்கு நான்கு மாதங்களில் சர்க்கரையின் அளவு குறைவதையும் அமெரிக்க மருத்துவர்களும் ஜப்பானிய மருத்துவர்களும் கண்டறிந்து ஆவணப்படுத்தியுள்ளனர். இன்னொரு விஷயம்... சிரிப்பு, எல்லா நேரத்திலும் நோயைப் போக்குவது இல்லை. சில நேரங்களில், ஆஸ்துமாக்காரர்களுக்கு சத்தமாகச் சிரித்த அடுத்த இரண்டாவது நிமிடங்களில் மூச்சிரைப்பை உண்டாக்கிவிடும். உடற்பயிற்சியால் ஆஸ்துமா வரும் இயல்பு உடையவர்களுக்கு இந்தப் பிரச்னை இருக்கும்!

'கிச்சுகிச்சு தாம்பாளம்... கீய்யாகீய்யா தாம்பாளம்’ சொல்லி நமக்குச் சிரிப்புகாட்ட நிறையப் பேருக்கு நேரம் இல்லை. 'தினமும் நான்கு லிட்டர் தண்ணீர் குடித்தே ஆக வேண்டும்’ என்பதுபோல, 'தினமும் 25 தடவை சிரித்தே ஆக வேண்டும்’ என்பதும் நலவாழ்வுக்குக் கட்டாயம். அதற்காகக் கோபத்தைக் கட்டுப்படுத்த 'வசூல்ராஜா’ பிரகாஷ்ராஜ்போல வம்படியாகச் சிரிப்பதை, சிரிப்பு எனச் சொல்ல முடியாது. அப்படியான சிரிப்பு நோயைப் போக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை! சிரிப்பு அகமகிழ்ந்து வரவேண்டும்; உற்சாகத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்க வேண்டும்.

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்... மனிதர்களுக்கு இடையிலான ஈகோ மோதல்தான் சிரிப்பை மறைத்து வன்மத்தை வளர்க்கிறது. இலையோடு ஒட்டியிருக்கும் அழுக்கை தண்ணீர் தெளித்து அகற்றிவிட்டு சாதத்தைப் பரிமாறுவதுபோல, இதயத்தோடு ஒட்டிய ஈகோவையும் விரட்டித்தான் சிரிப்பைப் பூசிக்கொள்ள வேண்டும். எள்ளலுக்குக் குழைதலும், இடக்குக்குக் கனிதலும் இல்லாத தம்பதிக்கு இடையில் ஈகோ அரக்கன் விஸ்வரூபம் எடுத்து, மன அழுத்தத்தை அல்லது மணமுறிவை நோக்கி அவர்களைச் செலுத்துவது சமீபத்திய வேதனை!  

10-12 வருடங்களுக்கு முன் ஒரு சம்பவம். சிடுசிடு கண்டிப்புக்குப் பேர்போனவர் எங்கள் பேராசிரியர் தெய்வநாயகம் (தற்போது மறைந்துவிட்டார்). நான் ஒரு விபத்தில் சிக்கி அறுவைசிகிச்சைக் கட்டுகளுடன் கோரமாகப் படுத்திருந்தபோது என்னைப் பார்க்க வந்திருந்தார். 'ஒழுங்கா வண்டி ஓட்ட மாட்டியா?’ என்று திட்டுவாரோ என நான் நடுங்கிக்கிடந்தால் பெரும் புன்னகையுடன், 'அப்புறம்... ஜாங்கிரி வாங்கிட்டு வந்திருக்கேன். ஆனா, அவசரம் இல்லை... பொறுமையா சாப்பிடு. படுத்துக்கிட்டே ஒண்ணு, ரெண்டு போறதெல்லாம் வித்தியாசமா இருக்குல்ல... அனுபவி! எதைப் பத்தியும் கவலைப்படாத... சந்தோஷமா இருடா. வரட்டா!’ எனச் சொல்லிச் சென்றார். அந்த இயல்பான கரிசனமே எனக்கு 10 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றிய

நலம் 360’  - 16

உற்சாகத்தைக் கொடுத்தது. நீங்கள் வயிற்றுப்போக்கினாலோ அல்லது புற்று நோய்க்கோ சிகிச்சை எடுப்போரிடம், 'அட... என்ன இப்படி இளைச்சுப்போயிட்டீங்க?’ என அவர்களின் துன்பத்தில் தூபம் போடாதீர்கள். அவர்களிடம் உங்களுக்குத் தெரிந்த ஜோக்குகளைப் பகிருங்கள். நோயில் இருந்து மீண்டுவந்தவர்களின் கதைகளைச் சொல்லுங்கள். அப்படியான தருணங்களில் நீங்கள் அவர்களிடம் வரவழைக்கும் இரண்டு மி.மீ புன்னகைகூட, அவரது வாழ்க்கையை இரண்டு நிமிடங்களுக்கு நீட்டிக்கும்!

சிரிக்கும் தருணங்கள் சில நேரங்களின்தான் உருவாகும்; பல நேரங்களில் உருவாக்கப்பட வேண்டும். சுய எள்ளல் என்பது எளிய நகைச்சுவை. அதிலும் காதலி / மனைவியைச் சிரிக்கவைக்க சுய எள்ளல் சூப்பர் தேர்வு. ஆனால், நாமோ அடுத்தவரை எள்ளி நகையாடுவதை, அதிலும் குறிப்பாக மாற்றுத்திறனாளிகளை எள்ளி நகையாடும் போக்கை எப்படியோ கற்றுக்கொண்டோம். அந்த விஷச் சிரிப்பு வியாதி, விபத்து போன்றவற்றைத் தருமே தவிர, நோயை நீக்காது. மாத்திரை போட்டும் நிற்காத ஜுரம், நெபுலைசர் வைத்தும் நீங்காத மூச்சிரைப்பு, ஊசி மருந்து செலுத்தியும் போகாத வலி... மனசுக்குப் பிடித்தவரின் மார்பில் சாய்ந்து, கைகளை அழுந்தப் பற்றி, புன்னகையோடு அவர் காட்டும் அரவணைப்பில் காணாமல்போகும். சிரிப்பு வெறும் உணர்வு அல்ல... அது தோழமையான உயிர்வித்தை!

பூங்கொடியின் புன்னகை, அலைகடலின் புன்னகை, மழை முகிலின் புன்னகை... என, கொடி, கடல், முகில் போன்றவையே புன்னகைக்கும்போது, மனிதனுக்கு மட்டும் சிரிப்பதில் என்ன கஷ்டம்? நமக்குள்ளும் பூ, அலை, மழையை உண்டாக்கட்டும் புன்னகைகள்!

- நலம் பரவும்...

சிரிக்க சில வழிகள்...

டல்மொழியில் புன்னகைதான் மனதின் ஹைக்கூ. சிறுவயது முதலே அன்பை, நன்றியை, வாஞ்சையை, வாழ்த்தை, தியாகத்தை, காதலை, அர்ப்பணிப்பை... இன்னும் வாழ்வின் எல்லா நல்ல நகர்விலும், அந்த ஹைக்கூவை காம்போவாக கண்களில் காட்டிப் பழ(க்)க வேண்டும். காதலிக்கு ரோஜாப் பூ கொடுப்பதாக இருந்தாலும் சரி, ஆட்டோவுக்கு மீட்டருக்கு மேல் கொடுப்பதாக இருந்தாலும் சரி... புன்னகை பொக்கே அவசியம்!

• 'ஓ போடு’வில் தொடங்கி, கைக்குலுக்கல், அரவணைப்பு, சின்ன முத்தம், முதுகு தட்டல், கைதட்டல்... என இவையெல்லாம் சிரிப்பின் சினேகிதர்கள். சிரிப்பைப் பிரசவிக்க இவற்றில் ஏதாவது ஒன்றை முயற்சிக்கலாம்.

•  'வாட்ஸ் அப்’பில் வலம்வரும் ஜோக்குகள், ஹீரோ பன்ச்களை உட்டாலக்கடி காமெடி ஆக்குவது, வசனம் இல்லாத சாப்ளின் சேட்டைகளைப் பார்ப்பது... எனத் தினமும் ஏதாவது ஒன்றைப் பார்த்து, ரசித்து, அனுபவித்துச் சிரித்தால்தான் தொற்றாநோய்களை முடிந்தவரை தள்ளிப்போடலாம்... தவிர்க்கவும் செய்யலாம்.

•  சிரிப்பு, நோய் எதிர்ப்பாற்றலை உயர்த்தும்; ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்; இதயத்தையும் நுரையீரலையும் நல்வழியில் தூண்டும்; பிராண வாயு ஓட்டத்தை அதிகரிக்க செய்யும்; தசைகளைத் தளர்வு ஆக்கும்; வலி நீக்கும்; ரத்தக் கொதிப்பைக் குறைக்கும். ஞாபக சக்தி, படைப்பாற்றல், துடிப்பாக இருத்தல்... போன்ற மூளையின் செயல்திறனைக் கூர் ஆக்கும்.

•  உங்கள் வீட்டுச் செல்லக் குழந்தைகளைச் சிரிக்கவைக்க முயற்சி செய்யுங்கள். 'யானை யானை’ என முதுகில் அம்பாரி சவாரி செய்வது முதல், முகத்தில் சேட்டை ரியாக்ஷன்களைக் கொடுப்பது வரை செய்து அவர்களைச் சிரிக்க வையுங்கள். அவை குழந்தைகளை உங்களுடன் நெருக்கமாக்குவதுடன், அந்தச் சிரிப்பால் அவர்களின் மனங்களும் மலரும்.

•  குபீர் சிரிப்பை வரவைக்கும் படங்கள், வீடியோக்கள், குட்டிக் கதைகள்... போன்றவை இணையத்தில் ஏகமாகக் கொட்டிக்கிடக்கின்றன. அவற்றில் தரமான வலைதளங்களை புக்மார்க் செய்து வைத்துக்கொண்டு, தினமும் சில நிமிடங்கள் அவற்றை ரசியுங்கள். அதன்பிறகு பாருங்கள்... அலுவலகமோ, வீடோ எதுவாக இருந்தாலும் அது உங்களுக்குச் சொர்க்கமாகத் தெரியும்!

கோபத்தைத் திசைதிருப்புவது எப்படி?

ள்ளுவர் சொல்லிச் சென்றதுபோல, 'நகையும் உவகையும் சிரச்சேதம் செய்யும்’. ஆனால், ஜிவ்வுனு வரும் சினத்தைத் தடுப்பது எப்படி?

'கொஞ்சமே கொஞ்சம் சரியான கோபம் தவறு அல்ல. ஆனால், எங்கே, எப்படி, எந்த அளவில், யாரிடம், எப்போது, எங்ஙனம்... என அலகுகள் தெரியாமல் காட்டப்படும் கோபம், கோபப்படுபவனைத்தான் அழிக்கும்’ என்று சொன்னவர் அரிஸ்ட்டாட்டில்.

• 'கோபப்படுகிறோம்’ எனத் தெரிந்த அந்தக் கணத்தில் சொல்லவந்த வார்த்தையை, முகக்கோணலை, செயலை அப்படியே தடாலடியாக நிறுத்தவும். சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, 'அது அவசியமா?’ என யோசிக்கவும். பல சமயங்களில் 'அது அநாவசியம்’ எனத் தெரியும்.

• கோபம் உண்டாகும் தருணங்களின்போது மூச்சை நன்கு உள்ளிழுத்து விடவும்; கோபம் வளர்க்கும் அட்ரீனலின் ஹார்மோன் கட்டுப்படும்.

•  நெருக்கமானவர் நம்மீது தொடர்ந்து கோபம் பாராட்டிக்கொண்டே இருந்தால், ஃப்ளாஷ்பேக்கில் போய் எத்தனை கொஞ்சல், கரிசனம், காதல், தந்தவர் அவர் என்பதைச் சில விநாடிகள் ஓட்டிப்பார்த்து, சிந்தியுங்கள். டாபர்மேன் ஆகிப்போன நாம் ஜென்டில்மேன் ஆகிவிடுவோம்.

• அடிக்கடி தேவையற்று வரும் கோபத்துக்குப் பின்னணியாக மன அழுத்தம் காரணமாக இருக்கலாம். மனநல மருத்துவர் உதவியும்கூட அவசியப்படலாம். கோபப்படாமல், அவர் உதவியை நாடவும்!

• கோபத்தைத் தொலைக்க வேண்டுமே தவிர, மறைக்கக் கூடாது. மறைக்கப்படும் கோபம், கால ஓட்டத்தில் மறந்துபோகாமல், ஓரத்தில் உட்கார்ந்து விஸ்வரூபம் எடுத்து, நயவஞ்சகம், பொறாமை... எனப் பல வடிவங்களை எடுக்கும்!