Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 16

பாரதி தம்பிபடங்கள்: ரா.ராம்குமார், வீ.சக்தி அருணகிரி, ரா.சதானந்த்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 16

பாரதி தம்பிபடங்கள்: ரா.ராம்குமார், வீ.சக்தி அருணகிரி, ரா.சதானந்த்

Published:Updated:
கற்க கசடற விற்க அதற்குத் தக! - 16

'கட்டடங்கள் ஒருபோதும் கற்பிக்காது’ - கல்வியாளர் ச.சீ.ராஜகோபாலன் சொல்லும் பொருள்பொதிந்த வார்த்தைகள் இவை. 'அரசுப் பள்ளிகளில் போதுமான கட்டடங்கள் இல்லை’, 'உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை’... போன்ற புகார்களுக்குப் பதிலாக அவர் இதைச் சொல்கிறார். ஒரு பள்ளிக்கு இவை எல்லாம் அடிப்படைத் தேவைகள்தான். அதேநேரம் போதுமான கட்டடங்கள் இருந்துவிட்டால் கற்றலும் கற்பித்தலும் தானாகவே நடந்துவிடாது. அதை ஆசிரியர்கள்தான் முனைப்புடன் எடுத்துச்செய்ய வேண்டும். உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பினும், ஓர் ஆசிரியர் நினைத்தால், ஒரு பள்ளியில் சிறப்பான கற்பித்தலை நிகழ்த்த முடியும். ஒரு வகுப்பறையில் கற்பித்தல் என்ற நிகழ்வு நடக்க ஆசிரியர்-மாணவர் என்ற இரு தரப்புதான் இன்றியமையாதது. மற்றவை எல்லாம் கல்வியின் மைய நோக்கத்தைக்             கூர் தீட்டுபவையே.

ஆனால், இப்போது அரசுப் பள்ளிகளில் வசதிகள் இருந்தாலும் கற்பித்தல் முறையாக நடைபெறுவது இல்லை. அரசுப் பள்ளிகளின் மாணவர் எண்ணிக்கை ஆண்டுதோறும் வீழ்ச்சி அடைவதே இதற்கு உதாரணம். அதே நேரம், முற்றிலும் அவநம்பிக்கை அடையும் அளவுக்கு அரசுப் பள்ளிகள் அவலத்தை அடைந்துவிடவில்லை. அந்த விளக்கு மங்கலாக எரிகிறது; அணைந்துவிடவில்லை. நமது கல்விச்சூழல், தனியார் முதலாளிகளின் வேட்டைக்காடாக இருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் உயிர்த் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கின்றன நூற்றுக்கணக்கான அரசுப் பள்ளிகள். அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் இதைச் சாத்தியப்படுத்துகின்றனர். இத்தகையோர் எண்ணிக்கையில் குறைவாக இருக்கலாம். ஆனால் அவர்கள்தான் அரசுப் பள்ளிகளின் ஆக்ஸிஜன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 16

• மேட்டுப்பாளையம் அருகே இருக்கிறது ராமம்பாளையம் அரசுத் தொடக்கப் பள்ளி. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, மாநிலத்தின் இதர அரசுப் பள்ளிகளைப்போலவே மாணவர் எண்ணிக்கை குறைந்து, எந்தவித வசதிகளும் இல்லாமல் சுணங்கிக்கிடந்தது. இந்த நிலையில் ஃபிராங்க்ளின் என்கிற ஆசிரியர் இந்தப் பள்ளியில் பணியில் சேர்ந்தார். தலைமை ஆசிரியை சரஸ்வதியின் உதவியுடன் இவர் மேற்கொண்ட சீர்திருத்தங்களின் பலனாக, இன்று இது ஒரு முன்மாதிரிப் பள்ளியாகியிருக்கிறது. 'பள்ளிக்குச் சுற்றுச்சுவர் கட்ட வேண்டும்’ என்று கிராம மக்களிடம் ஃபிராங்க்ளின் கேட்டார். எவரும் ஆர்வம் காட்டவில்லை. ஒவ்வொரு நாளும் காலையில் வந்து பள்ளியைத் திறக்கும்போது, 'குடிமகன்’கள் குடித்துவிட்டு பள்ளிக் கட்டடத்துக்குள் வீசிய மது பாட்டில்கள் கிடந்தன. இரண்டு மாதங்கள் பொறுமையாக அவற்றைச் சேகரித்தார். அவற்றைக் கண்காட்சிபோல அடுக்கி வைத்து ஊர் மக்களை அழைத்து வந்து காட்டினார். உடனடியாக சுற்றுச்சுவர் கட்ட ஊர் மக்கள் ஏற்பாடு செய்தனர்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 16

ஆசிரியர் ஃபிராங்க்ளினும், ஆசிரியை சரஸ்வதியும் தங்கள் சொந்தப் பணத்தில் இருந்து பெற்றோர்-ஆசிரியர் கழகத்துக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி தந்தனர். ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவர்கள் அமர்ந்து படிக்க, வசதியாக வட்ட வடிவ மேசைகள் அமைக்கப்பட்டன. வகுப்பறையின் நான்கு புற சுவர்களும் கரும்பலகைகளாக மாற்றப்பட்டு, சுவரின் மற்ற பகுதியில் விதவிதமான இயற்கைக் காட்சிகளும் ஓவியங்களும் வரையப்பட்டன. தரைக்கு டைல்ஸ், கூரைக்கு ஃபால்ஸ் சீலிங், கோடைக்காலத்தில் பயன்படுத்த ஏ.சி., ரிவர்ஸ் ஆஸ்மாஸிஸ் முறையில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, வகுப்பறையின் நுழைவுவாயிலில் ஆளுயரக் கண்ணாடி, தரமான கழிப்பறைகள் என ஒவ்வொன்றாக வந்தது. மாணவர்கள் தினம்தோறும் தமிழ், ஆங்கில தினசரி செய்தித்தாள்களை வாசிக்கப் பழக்கப்படுத்தப்பட்டனர். 11 கம்ப்யூட்டர்கள் கொண்ட தனி அறை, தடையில்லா மின்சாரத்துக்கு யு.பி.எஸ் வசதி... என நவீன வசதிகள் புதுப்பிக்கப்பட்டன. 2012-ல் 27 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 62 ஆக உயர்ந்தது.

இந்தப் பள்ளியில் ஆசிரியர்களுக்கு என்று தனியே நாற்காலி கிடையாது. குழந்தைகளுடன் சமமாக அமர்ந்துதான் அவர்களும் பயிற்றுவிக்க வேண்டும். இப்படி அரசுப் பள்ளிகள் குறித்த நம் மனதில் பதிந்துள்ள சித்திரத்துக்கு நேர் எதிராக இருக்கிறது ராமம்பாளையம் அரசுத் தொடக்கப்பள்ளி.

•  பூச்சிவிளாகம் அரசுத் தொடக்கப் பள்ளிக்குள் நுழையும் யாரும், அந்தப் புத்துணர்ச்சியை உணர முடியும். பளிச்செனத் தூய்மையான வளாகத்துடன் நேர்த்தியாக அமைந்திருக்கும் பள்ளி, ஒட்டுமொத்த கிராமத்தின் கூட்டு உழைப்பின் காரணமாக மறுவாழ்வு பெற்றுள்ளது. நாகர்கோவில் அருகே உள்ள இந்தப் பள்ளிக்கு, 50 ஆண்டு கால பாரம்பர்யம் உண்டு. இந்தப் பகுதியில் இருந்து கல்விபெற்ற முந்தைய தலைமுறையைச் சேர்ந்த அனைவருக்கும் இதுதான் முதல் பள்ளி. அதன்பிறகு தனியார் பள்ளி மோகத்தால் மக்கள் இதைக் கைவிட்டனர். மாணவர்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 16

எண்ணிக்கை குறைந்து, கிட்டத்தட்ட மூடப்போகும் நிலையில் ஊர்க்கூட்டம் கூடியது. மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க ஊர் சார்பாக ஒரு குழு அமைக்கப்பட்டது. அவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தனர். முதல் கட்டமாக பள்ளியில் யு.கே.ஜி தொடங்கப்பட்டது. தனியார் பள்ளிகளைப்போல குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துவர வேன், ஆட்டோ போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டன. படிப்படியாகப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை உயர்ந்தது. கடந்த ஆண்டு 65 ஆக இருந்த மாணவர் எண்ணிக்கை இப்போது 112-ஆக அதிகரித்துள்ளது. தலைமை ஆசிரியர் வில்சன்ராஜ் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினரின் கடின உழைப்பால் இப்போது பூச்சிவிளாகம் பள்ளியில் பிள்ளையைச் சேர்க்க போட்டிப்போடுகின்றனர் பெற்றோர்கள்.

•  சென்னை, கூடுவாஞ்சேரி அருகே இருக்கிறது ராயமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி. இந்தப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் பேசும் அழகில் எல்லோரும் அசந்துபோகிறார்கள். படிப்பது என்றால், பாடப்புத்தகத்தில் உள்ளதைப் படிப்பது மட்டும் அல்ல; பேசுவது என்றால் பாடம் சார்ந்த வாக்கியங்களைப் பேசுவது மட்டும் அல்ல. தங்களின் அன்றாட வாழ்க்கைச் செயல்பாடுகளை ஆங்கிலத்திலேயே உரையாடும் அளவுக்கு இந்தப் பள்ளியின் மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். குறிப்பாக, இவர்களின் ஆங்கில உச்சரிப்பு இந்திய உச்சரிப்பு முறையில் அல்லாமல், பிரிட்டிஷ் உச்சரிப்பு முறையில் அமைந்துள்ளது.

''ஒரு மொழியை, அதன் தாய்மொழியினர் எப்படிப் பேசுகிறார்களோ அதைப்போலவே பேச வேண்டும். அதுதான் சரியானது'' என்கிறார் இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அய்யப்பன். ராயமங்கலம் அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகள் பெற்றுள்ள ஆங்கில மொழி அறிவுக்கு முழுக்க முழுக்க இவர்தான் காரணம். பொதுவாக, அரசுப் பள்ளிகளின் பலவீனமாகச் சொல்லப்படுவது, 'அங்கே படித்தால் ஆங்கிலம் வராது’. இதை மாற்றுவதற்கு முதலில் அய்யப்பன் ஆங்கிலம் கற்றுக்கொண்டார். அப்படிக் கற்கும்போது 'ஓசை வடிவில்’ ஆங்கிலத்தைப் பயில்வது அவருக்கு எளிதாகவும் சுலபமாகவும் இருந்துள்ளது. அதை அப்படியே தான் பணிபுரியும் பள்ளியிலும் பரிசோதித்துப் பார்த்தார். ஆச்சர்யப்படும்விதமாக மாணவர்கள் எளிதில் சரளமாக ஆங்கிலம் பேசினார்கள். இப்போது இவரது ஆங்கிலம் பயிற்றுவிக்கும் முறையை, மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் செயல்படுத்துவது குறித்து அரசு திட்டம் தீட்டி வருகிறது.

•  பெரியகுளம் ஊரில் இருந்து சுமார் 12 கி.மீ மலை ஏறினால் பேச்சிப்பாறை அணை. அதையும் தாண்டி மலைப்பாதையில் வளைந்து, வளைந்து சென்றால் ஆறு கி.மீ தொலைவில் கன்னக்கரை என்ற பகுதியில் இருக்கிறது அரசு உண்டு உறைவிடப் பள்ளி. சுற்றிலும் மலைகள், கீழே சலசலத்து ஓடும் காட்டு ஓடை, சில்லெனக் காற்று... என ரம்மியமான சூழலில் அமைந்திருக்கும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், இதற்கும் மேல் உள்ள மலைக் கிராமங்களைச் சேர்ந்த பழங்குடி குழந்தைகள். சாலை வசதி இல்லை. காட்டுத் தடத்தில் நான்கைந்து கி.மீ நடந்துதான் வரவேண்டும். இவர்களுக்காக அமைக்கப்பட்ட இந்த உண்டு உறைவிடப் பள்ளியின் ஆசிரியர் விஜயராஜா.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 16

இவர் அடிப்படையில் ஓர் ஓவியர் என்பதால், பழங்குடி குழந்தைகளின் மனதில் உறைந்துகிடக்கும் தூண்டப்படாத கற்பனைத்திறனை வெளிக்கொண்டுவர நினைத்தார். அந்தக் குழந்தைகள் வரைந்த ஓவியங்கள் ஒவ்வொன்றும் ஆச்சர்யங்களால் நிறைந்திருந்தது. ஒரு சிறுவன் வரைந்த ஓவியத்தில், மனிதர்களின் தலைக்கு மேலே சூரிய மின் தகடுகள் நடப்பட்டிருந்தன. ஏனெனில், காட்டுக்குள் அவர்களுக்கு சூரிய மின்தகடு வழியேதான் மின்சாரம் கிடைக்கிறது. இப்படி குழந்தைகளின் உண்மையான படைப்புத்திறனைக் கண்டறிந்து வெளிக்கொண்டு வருவதுதான் ஆசிரியர் பணியின் சுவாரஸ்யமும் சவாலும். அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டு ஆர்வத்துடன் செய்துவருகிறார் விஜயராஜா.

•  கோவை மாவட்டத்தின் மலைப்பகுதியில் உள்ளது தூமனூர் நடுநிலைப்பள்ளி. ஆனால் அத்தனை சுலபத்தில் இது நடுநிலைப் பள்ளியாக மாறிவிடவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாத இந்தப் பள்ளிக்கு, ஐந்து கி.மீ. நீளம் கொண்ட காட்டுப்பாதையில்தான் மாணவர்கள் நடந்து வர வேண்டும். அப்போது இது தொடக்கப்பள்ளியாக இருந்தது. அந்த நிலையில்தான் ஆசிரியர் ஜெயராஜ் இங்கு பணியில் சேர்ந்தார். பள்ளியை, முதலில் நடுநிலைப் பள்ளியாக மாற்றினால்தான் மேற்கொண்டு மாணவர்கள் படிப்பார்கள் என்பதால், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஊர் மக்களிடம் கடுமையாகப் போராடி அதைச் சாதித்தார். மாணவர்களைப் பள்ளிக்கு அழைத்து வர ஒரு ஜீப் வாங்கப்பட்டது. பள்ளிக் கட்டடம் கட்ட ஊர் மக்கள் நிதி திரட்டியபோது, தன் மோதிரத்தை விற்று பணம் தந்தார். தன் குடும்பத்தையும் அதே ஊரில் தங்க வைத்தார். தூமனூர் பள்ளியில் படித்து முடித்த ஐந்து மாணவர்களுக்கான கல்லூரிக் கட்டணத்தையும் தன் சொந்த பணத்தில் இருந்து இவரே கட்டுகிறார். ஒட்டுமொத்த ஊரும் ஆசிரியர் ஜெயராஜை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது!

'பெய்யெனப் பெய்யும் மழை’க்கு இப்படியான உள்ளங்களும் காரணம்!  

- பாடம் படிப்போம்...