Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 17

பாரதி தம்பி, படங்கள்: கா.முரளி, க.சதீஷ்குமார்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 17

பாரதி தம்பி, படங்கள்: கா.முரளி, க.சதீஷ்குமார்

Published:Updated:
கற்க கசடற விற்க அதற்குத் தக! - 17

'கனவு ஆசிரியர்’ என்ற ஒரு புத்தகம். க.துளசிதாசன் தொகுத்து, பாரதி புத்தகாலயம் வெளியீடாக வெளிவந்துள்ளது. எழுத்தாளர்கள், கலைஞர்கள், கல்வியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் தங்களின் 'கனவு ஆசிரியர்’ குறித்து விவரித்துள்ளனர். ஓய்வுபெற்ற பேராசிரியர் ச.மாடசாமி எழுதியிருக்கும் கட்டுரையில் அத்தனை நெகிழ்ச்சி. தன் ஒட்டுமொத்த பணிக் காலத்தையும் காய்த்தல் உவத்தல் இல்லாமல் சுய விமர்சனம் செய்யும் மாடசாமி, வகுப்பறையை மனதின் ஆழத்தில் இருந்து அத்தனை கனிவுடன் அணுகுகிறார்.

தான் பணியாற்றிய காலத்தில் தினசரி காலை 4 மணிக்கு எழுந்து, அன்று நடத்த வேண்டிய பாடங்களைத் தயார்செய்வார். அன்று வகுப்பறையில் சொல்லவேண்டிய கதைகள், மாணவர்களைச் சிரிக்கவைப்பதற்கான தயாரிப்புகள் என ஒவ்வொன்றாக நுணுக்கமாகக் குறிப்புகள் எடுப்பார். மாணவர்கள் தன்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக முழுநீள செய்யுள்களை மனப்பாடம் செய்வார். ''இதனால் என் வகுப்பறை என்னுடையதாகவே இருந்தது. என் சாமர்த்தியம்; என் உழைப்பு. நான் பாடம் நடத்த ஆரம்பித்தால், மாணவர்கள் கண்கொட்டாமல் கவனித்தார்கள். அப்போது அது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் இப்போது, அந்த 'அசையாத’ வகுப்பறையை நான் எதிர்க்கிறேன். அப்படி இருந்ததற்காகக் குற்றவுணர்வு அடைகிறேன். சிந்தித்துப் பார்த்தால் மாணவர்களுடன் சங்கமிப்பதற்காக அல்லாமல், அவர்களை வெற்றிகொள்வதற்காகவே உழைத்திருக்கிறேன். வகுப்பறையில் வெற்றி, தோல்வி என்ற சிந்தனைக்கு இடம் ஏது? வகுப்பறை என்பது மாணவர்களை மையப்படுத்தியதாக இருக்க வேண்டும். அவர்கள் பேச வேண்டும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நான் உழைத்தேன். ஆனால் என் உழைப்பை, மாணவர்களின் தலைச்சுமை ஆக்காமல், இறக்கை ஆக்கியிருக்க வேண்டும். வகுப்பு முழுக்க அவர்கள் பறப்பதைப் பார்த்திருக்க வேண்டும். ஏரி முழுக்க ஆசிரியர் ஒற்றைப் படகு செலுத்தினால், வேடிக்கை பார்க்கவா மாணவர்கள்? ஏரி முழுக்க ஏராளமான சிறுசிறு படகுகள் மிதக்க வேண்டும். இந்த உண்மைகளை உணர்ந்து என் இரண்டாம் பாதி பணிக் காலத்தில் மாணவர் மைய வகுப்பறையை நோக்கி நான் திரும்பியபோது, வகுப்பறையில் ஒவ்வொரு நாளும் புதிய நட்சத்திரங்கள் மின்னக் கண்டேன். புதிய திறமைகளை அடையாளம் கண்டேன்'' என்கிறார் மாடசாமி. இவர் கல்லூரிப் பேராசிரியராக இருந்தவர் என்றபோதிலும், இவர் குறிப்பிடும் வகுப்பறை அணுகுமுறை பள்ளிக்கும் பொருந்தும்.

''நான் 30 ஆண்டுகளாக ஆசிரியர் பணி செய்திருக்கிறேன். ஒரு முறைகூட மாணவர்கள், 'சார், போதும். தாங்க முடியலை’ என்று சொன்னது இல்லை. 30 ஆண்டுகளாக ஒரு முறைகூட குறுக்கீடு செய்ய முடியாததா என் வகுப்பறை? இத்தகைய செயற்கைத் தடைகள் விலகி, வகுப்பறையில் உரிமையான உரையாடல்கள் நிகழ வேண்டும் என்ற ஏக்கம் இறுதிவரை எனக்கு இருந்தது'' என்கிறார்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 17

கல்வி நிலைய வளாகத்தைவிட்டு வெளியேறி எத்தனையோ ஆண்டுகள் ஆன பின்னரும் அந்த ஏக்கத்தை அடைகாத்துவைத்திருக்கும் இத்தகைய ஆசிரியர்கள்தான், அந்தப் பணியின் மீதான மேன்மையை இன்றளவும் தக்க வைக்கிறார்கள்.

ஒரு சோவியத் சிறுகதையில், அம்மாவின் மடியில் இருந்து பிரித்து எடுக்கப்பட்டு பள்ளியில் விடப்படுகிறது ஒரு குழந்தை. தினமும் கத்திக் கதறி அழுதபடிதான், அந்தக் குழந்தை அம்மாவைப் பிரிகிறது. வீட்டில் வளரும் காலத்தில் ஒவ்வொரு நிமிடமும் தான் சந்தித்ததை எல்லாம் ஓடிஓடி வந்து ஒன்றுவிடாமல் அம்மாவிடம் சொல்லும் அந்தக் குழந்தை, பள்ளிக்குச் சென்றதும் ஓடிஓடிச் சொல்ல யாரும் இல்லாமல் மௌனத்தில் ஆழ்கிறது. கடுமையான உளவியல் சிக்கல். நாட்கள் செல்லச் செல்ல, வகுப்பின் ஆசிரியை அந்தக் குழந்தையுடன் பேசிப் பழகி, வீட்டில் அம்மாவிடம் எல்லாவற்றையும் பகிர்ந்துகொண்டதைப் போலவே, தன்னிடமும் பகிர்ந்துகொள்ளச் சொல்லிப் பழக்குகிறார். அந்தக் குழந்தைக்கு இப்போது இரண்டு அம்மாக்கள் கிடைத்துவிட்டார்கள். வீட்டில் ஓர் அம்மா; பள்ளியில் இன்னோர் அம்மா.

இந்தக் கதையைப் பகிர்ந்துகொள்ளும் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன், ''நான் இரண்டாம் வகுப்பு படித்தபோது, ஆதிலட்சுமி என்ற ஆசிரியை இருந்தார். பிரியமான முகம். அவர் கட்டியிருந்த சேலையின் நிறம்கூட எனக்கு நினைவில் இருக்கிறது. நான் தண்ணீர் குடிக்க சிரமப்பட்டு நின்றபோது, டீச்சர் ஓடிவந்து எனக்கு தண்ணீர் புகட்டினார். அவரது உள்ளங்கை ஸ்பரிசம் என் உதடுகளில் பட்டு என் அம்மாவை ஞாபகப்படுத்தியது. அப்பேர்ப்பட்ட ஆதிலட்சுமி டீச்சர், தெலுங்கு பேசும் பிள்ளைகளிடம், 'மன பிடலு... வாள பிடலு’ என்று பேசியபோது, திடீரென ஒரு நொடியில் நான் யாரோவாகியிருந்தேன். என் மனம் அடைந்த வேதனைக்கு அளவே இல்லை. 'எதுக்குடா அழுற இப்போ?’ என்று ஆதிலட்சுமி டீச்சர் கேட்டபோது எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. அந்தச் சிறிய இடைவெளியைக்கூட குழந்தையின் மனதால் தாங்கிக்கொள்ள முடிவது இல்லை என்பது இப்போது புரிகிறது'' என்கிறார். எத்தனை நுணுக்கமான உணர்வு! தன் அம்மா திடீரென வேறொரு மொழியில் பேசினால், அவர் யாரோ ஓர் அம்மா ஆகிவிடுவது இல்லையா... அதுபோல்தானே இதுவும்! அந்த சோவியத் சிறுகதையில் வரும் குழந்தையைப்போல, குழந்தையின் மனம் அம்மாவையும் ஆசிரியையும் சமமாகவே பாவிக்கிறது. குழந்தைகளின் இத்தகைய மெல்லிய உணர்வுகள் குறித்து, ஆசிரியர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

'புத்தகத்துக்குள் வைத்த மயிலிறகு குட்டி போடாது எனத் தெரிகிற வயதில், ஒரு குழந்தை தன் பால்யத்தை இழக்கத் தொடங்குகிறது’ என்கிறார் எழுத்தாளர் பிரபஞ்சன். பால்யத்தின் சிறகுகள் உதிரத் தொடங்கும் காலம், ஒரு குழந்தைக்கு எத்தனை முக்கியமானது? அந்தக் குழம்பிய மனதின் கலக்கத்தைப் புரிந்துகொள்ளும் பக்குவமும் பண்பும் வகுப்பறையில் நிலவ வேண்டும். 40 பேர் கொண்ட வகுப்பில் படிப்பில் சிறந்துவிளங்கும் மாணவர்களை, அனைவரின் முன்னிலையில் பாராட்டுவது நல்ல விஷயம்தான். அது குழந்தைக்கு உற்சாகத்தைத் தரும். அதே நேரம் மீதமுள்ள

39 குழந்தைகளின் மனநிலை என்ன? ஓர் ஆசிரியருக்கு மொத்த வகுப்பறை சூழல்தான் எப்போதும் முன்னுரிமையாக இருக்க வேண்டும். அப்படி ஒட்டுமொத்த மாணவர் நலனைக் கருத்தில்கொண்டு அக்கறையுடன் பணிபுரியும் ஆசிரியர்கள் மாநிலம் முழுக்க நிறைந்துள்ளனர்.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 17

ட்டி, கோத்தகிரி அருகே பசுமை சூழ்ந்த பிரதேசத்தில் இருக்கிறது அவ்வூர் கிராமத்தின் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 34 பேர் படித்த  பள்ளியில், இப்போது 63 பேர் படிக்கின்றனர். காரணம்... ஆசிரியர் நல்லமுத்து. இலங்கையில் ஒரு தேயிலைத் தோட்டத் தொழிலாளியின் மகனாகப் பிறந்து, தாயகம் திரும்பியோரில் ஒருவராக தமிழகம் வந்தார். சுமார்

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பணியில் சேர்ந்த இவரை, இப்போது அந்தப் பிரதேசமே கொண்டாடுகிறது. பாடம் நடத்துவதில் உள்ள அக்கறை மட்டுமா... பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை அவரே சுத்தம் செய்கிறார்; சிலம்பம் கற்றுத்தருகிறார்; பறை அடிக்கப் பயிற்றுவிக்கிறார்; கேரம்போர்டு, செஸ் இரண்டிலும் அந்த ஊர் பள்ளி மாணவர்கள் வெற்றிகளைக் குவிக்கக் காரணமாக இருக்கிறார். கேரம்போர்டில் இந்தப் பள்ளிதான் மாவட்ட அளவில் முதல் இடம். பள்ளி முழுக்க பல்வேறு போட்டிகளில் வென்ற 300-க்கும் மேற்பட்ட கோப்பைகள் குவிந்து கிடக்கின்றன. மாணவர்களை வீட்டில் இருந்து பள்ளிக்கு அழைத்து வர ஒரு வாடகை வேன் அமர்த்தப்பட்டுள்ளது. அதற்கான வாடகையாக, தன் சொந்தப் பணத்தில் இருந்து மாதம்தோறும் 5,000 ரூபாய் தருகிறார். தன் மகளையும் அதே பள்ளியில் சேர்த்துள்ளார்.

ரணி அடுத்த பையூர் எம்.ஜி.ஆர் நகரில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இருக்கிறது. இங்கு ஆசிரியராகப் பணியாற்றி வந்தார் நாராயணன். இவர் பணியில் சேர்ந்தபோது மாணவர்களின் எண்ணிக்கை 20. அதே நிலை நீடித்திருந்தால், ஒருசில ஆண்டுகளில் அந்தப் பள்ளி மூடப்பட்டிருக்கும். ஆனால், ஆசிரியர் நாராயணன், சைக்கிளை எடுத்துக்கொண்டு வீடு வீடாகச் சென்று மாணவர்களை பள்ளியில் சேர்த்தார். இப்போது அந்தப் பள்ளியில் 280 பேர் படிக்கிறார்கள். மாணவர் எண்ணிக்கை மட்டும் அல்ல... புத்தகக் கல்விக்கு அப்பாற்பட்ட வாழ்க்கைக் கல்வியை மாணவர்களுக்குப் போதித்தார். இதனால் ஊர் மக்களின் உள்ளத்தில் இடம் பிடித்தார். கடந்த ஜூன் மாதத்தில் அவர் சங்கீதவாடி கிராமத்துக்கு பணிமாறுதல் செய்யப்பட்டார். விஷயம் தெரிந்ததும் கிராம மக்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து பள்ளியைப் பூட்டி சாலை மறியல் செய்தனர்.  அது ஆசிரியர் நாராயணன், விரும்பிப்பெற்ற பணிமாறுதல் என்பது தெரிந்தும் கனத்த மனதுடன் அவருக்குப் பிரியாவிடை தந்தனர். இப்போது சங்கீதவாடி பள்ளியிலும் மிகுந்த அக்கறையுடன் பணி செய்துவருகிறார்.

புதுக்கோட்டை அருகே நெடுவாசல் வடக்கு கிராமத்தில் அரசுத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கிறார் ஆசிரியர் கருப்பையன். மிகவும் அவல நிலையில் இருந்த இந்தப் பள்ளியை மாற்றிக் காட்டுகிறேன் என வேண்டி விரும்பி இங்கு வந்தவர். சுத்தம், சுகாதாரத்தில் கிராம மக்கள் பின்தங்கி இருந்ததைப் பார்த்த அவர், கிராமத்து இளைஞர்கள் 10 பேரைத் துணைக்கு அழைத்துக்கொண்டு, அதிகாலை 4 மணிக்கு வீதிகளில் சத்தம் போட்டுக்கொண்டே சென்றனர். பொது

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 17

இடங்களில் அசுத்தம் குறைந்தது. ஒருசில ஆண்டுகளில் முழு சுகாதார கிராமத்துக்கான 3 லட்ச ரூபாய் அரசுப் பரிசை நெடுவாசல் வடக்கு கிராமம் வென்றது. அந்தப் பணத்தைக்கொண்டு மேலும் பல வசதிகளை ஊருக்குச் செய்துதந்தார். அரசின் அத்தனை திட்டங்களையும் கிராமத்துக்குக் கொண்டுவந்தார். மக்கள், ஆசிரியர் கருப்பையன் மீது முழு நம்பிக்கை கொண்டனர். பள்ளி கணினிமயம் ஆனது. பள்ளியின் மாணவர்கள் சிலர் இப்போது வலைப்பூ நடத்துகின்றனர். மாணவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைவாக இருப்பதை அறிந்து, எல்லோருக்கும் நவதானியக் கஞ்சி வழங்கச் செய்தார். இப்படி கிராமத்து நலன், மாணவர்களின் உடல் நலன், தரமான கல்வி, ஒழுக்கம்... என அனைத்து அம்சங்களிலும் அந்தக் கிராமத்துடன் ஒன்றிவிட்டார். தங்கள் ஊருக்கு இவ்வளவு செய்த ஆசிரியர் கருப்பையனுக்குக் கைமாறு செய்யும்விதமாக 2010-ம் ஆண்டில், 100 தட்டுகளில் பழம், சீர்வரிசையுடன் 'கல்விச் சீர்’ தந்தார்கள் கிராம மக்கள்.

இப்படிச் சொல்லிமாளாத அளவுக்கு அர்ப்பணிப்பு உணர்வு மிகுந்த ஆசிரியர்கள், மாநிலம் எங்கும் நிறைந்துள்ளனர். பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூரில், கடந்த ஆண்டு மூன்று அரசுப் பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி எனச் செய்தி வந்தது. கடந்த 2013-14-ம் கல்வி ஆண்டில் ப்ளஸ் டூ தேர்வில் மாநிலம் முழுவதும் உள்ள 113 அரசுப் பள்ளிகள் 100 சதவிகிதத் தேர்ச்சி அடைந்துள்ளன. இதற்கு எல்லாம் காரணம், அந்தப் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பு.

இவர்களால் மட்டும் எப்படி முடிகிறது? தாங்கள் செய்யும் பணியின் முக்கியத்துவத்தை இவர்கள் உணர்ந்துள்ளனர். வகுப்பறையில் தன் முன்னே அமர்ந்திருக்கும் மாணவர்கள் ரத்தமும் சதையுமான உயிர்கள் என்பதை அவர்கள் மறந்துவிடவில்லை. தனது கற்பிக்கும் திறன் மூலமாக தன் மாணவர்கள் அத்தனை பேரின் எதிர்காலத்தையும் புரட்டிப்போடும் பேராற்றல், தன்னிடம் இருப்பதை நினைவில் கொண்டுள்ளனர். தங்களின் பணிசார்ந்த அழுத்தங்களும், சொந்த மன நெருக்கடிகளும் மாணவர்களைச் சிதைத்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றனர்.

அந்த மனம்தானே, ஓர் ஆசிரியரின் அடிப்படைத் தேவை!      

- பாடம் படிப்போம்...