Published:Updated:

ஃபிரில்ப்: சென்னையிலிருந்து ஒரு கூகுள்!

ச.ஸ்ரீராம்

ஃபிரில்ப்: சென்னையிலிருந்து ஒரு கூகுள்!

ச.ஸ்ரீராம்

Published:Updated:

உலக அளவில் டாப் 25 ‘ஸ்டார்ட்-அப்’ நிறுவனங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது சென்னையைச் சேர்ந்த ஃப்ரில்ப் நிறுவனம். அதுமட்டுமல்ல, கூகுள் நிறுவனம் இதற்கு வழிகாட்டியாகவும் இருக்கிறது என்பதைக் கேள்விப்பட்டு பள்ளிக்கரணையில் இருக்கும் இந்த நிறுவனத்தைத் தேடிப் போனோம். அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த இளைஞர்கள் இந்த நிறுவனத்தை ஆரம்பித்து நடத்தி வருகிறார்கள்.

உலக அளவில் டாப் 25 இடத்துக்குள் வருகிற மாதிரி என்ன செய்கிறீர்கள் என்று நாம் கேட்க, நம் கேள்விக்குப் பதில் சொல்ல ஆரம்பித்தார் செந்தில்.

‘‘நான், ஷியாம், ராஜா, அனீஷ், அரவிந்த் ஆகிய ஐந்து பேரும்தான் இந்த நிறுவனத்தைத் தொடங்கினோம்.  நானும் ஷியாமும் கல்லூரி நண்பர்கள். இருவரும் வெவ்வேறு நிறுவனங்களில் வேலை கிடைத்துச் சென்றபோது அங்குக் கிடைத்த நண்பர்கள்தான் மற்ற மூவர். படித்து முடித்தபின்பு நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்வோம். புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாக இருந்தது. தினமும் வேலை முடிந்து வந்ததும் புது ஐடியா ஒன்றைக் குறித்து விலாவாரியாகப் பேசுவோம். அப்படி வந்த ஒரு ஐடியா தான் ஃப்ரில்ப்.

‘ஃப்ரெண்ட்ஸ் ஹெல்ப்’ என்கிற இரண்டு வார்த்தைகளின் சுருக்கம்தான் ஃப்ரில்ப். உங்களுக்கு ஒரு பொருள் தேவைப்படுகிறது என்றால், என்ன செய்வீர்கள்? முதலில் அந்தப் பொருள் பற்றி உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் விசாரிப்பீர்கள். அவர்களிடமிருந்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை எனில், உங்கள் உறவினர்களிடம் விசாரிப்பீர்கள். அவர்களிடம் இருந்தும் சரியான தகவல் கிடைக்கவில்லை எனில், கூகுளுக்குச் சென்று அந்தத் தகவலைத் தேடுவீர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுதான் எங்களுக்குக் கிடைத்த ஒன்லைன் ஐடியா. எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் கூகுளில் தேடினால் லட்சம் தகவல்கள் கொட்டும். ஆனால். அது நமக்குத் தேவையானதா, அதை நம்பலாமா என்கிற கேள்விக்குப் பதில் கிடைக்காது. நாம் தேடுகிற தகவலை நமக்குத் தெரிந்தவர் சொன்னால், அது நம்பிக்கையான தகவலாக இருக்கும் என்று நினைப்பது  நம் இயல்பு. இந்த சைக்காலஜியை அடிப்படையாக வைத்து, எங்கள் புராஜெக்ட்டைத் துவக்கினோம். ஃபேஸ்புக் மூலமாக எங்கள் ஐடியாவை விரிவுபடுத்தினோம்.

ஃபிரில்ப்: சென்னையிலிருந்து ஒரு கூகுள்!

உதாரணத்துக்கு, லேட்டஸ்ட்டாக வந்திருக்கும் ஆப்பிள்6 செல்போன் பற்றியத் தகவலை நீங்கள் எங்களது தேடுதல் பொறியின் மூலம் தேடினீர்கள் எனில், உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் உள்ள நண்பர்களில் யாராவது ஆப்பிள்6 பற்றித் தகவல் சொல்லி இருந்தால், முதலில் அதைக் காட்டும். உங்கள் நண்பர்கள் ஆப்பிள்6 பற்றி எதுவும் சொல்ல வில்லை எனில், ஃபேஸ்புக்கில் இருக்கும் நண்பர்களின் நண்பர்கள் அதுபற்றி ஏதாவது சொல்லி இருந்தால், அந்தத் தகவலை எடுத்துத் தரும்.

இந்த ஐடியாவை ஐஐஎம் அஹமதாபாத்தில் நடந்த கருத்தரங்கில் நாங்கள் சமர்ப்பித்தோம். அங்கு பல நாடுகளின் முன்னணி நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர். அதில் டாப் ஐந்து ஐடியாக்களில் ஒன்றாகத் தேர்வானது எங்கள் ஐடியா. பிறகு அமெரிக்காவில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் இடம்பெற்றது. அங்கு ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் கூகுளின் சிஇஓகள் எங்களுக்கு வழிகாட்டினார்கள். அதன்பின் நாங்கள் அனைவரும் முழுநேரமாக செயல்பட்டு, இந்த நிறுவனத்தை உருவாக்கினோம்.

கடந்த ஆண்டு துவங்கியது எங்கள் நிறுவனம். கூகுள் வழிகாட்டும் எட்டு இந்திய நிறுவனங்களில் ஒன்றாக  உயர்ந்திருக்கிறோம். பல புதிய தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்தி, மக்களின் தேடலுக்கு நம்பகத்தன்மை மிகுந்த தகவல்களைத்  தருவதே எங்கள் நோக்கம்’’ என்றார் செந்தில்.

இந்த நிறுவனத்தில் தற்போது இருபது இன்ஜினீயர்கள் பணிபுரிகின்றனர்.   அலுவலகத்தில் தனி கேபின், கோட் சூட் ஆபீஸர்கள் என்றெல்லாம் இல்லாமல், கூகுள் பாணியில் டி-ஷர்ட் இளைஞர்களுடனும் காபி ஷாப் அமைப்புடனும் இருக்கிறது இந்த  ஃப்ரில்ப். எதிர்கால இளைஞர்களின்  முக்கிய நண்பனாக இந்த ஃப்ரில்ப் இருக்க நிறையவே வாய்ப்புகள் உள்ளன.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism