Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 18

பாரதி தம்பி

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 18

பாரதி தம்பி

Published:Updated:
கற்க கசடற விற்க அதற்குத் தக! - 18

ரசுப் பள்ளிகளில் ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், அவைதான் இன்று ஏழைகள் படிக்க எஞ்சியிருக்கும் ஒரே வாய்ப்பு. மேலும், கல்வியைக் கடைச்சரக்காக மாற்றி லாபநோக்குடன் செயல்படும் தனியார் பள்ளிகள் எங்கும் சூழ்ந்துள்ள நிலையில், அரசுப் பொதுப் பள்ளிகள்தான் நம் கல்வி உரிமையின் அடையாளங்கள். எந்தக் காரணம்கொண்டும் அவற்றை விட்டுத்தர முடியாது. வசதிக் குறைவுகள் இருக்கலாம். அவற்றை மட்டுமே ஊதி, மிகைப்படுத்தி அரசுப் பள்ளிகள் பற்றிய அவநம்பிக்கையை விதைக்க முடியாது. அதனாலேயே, அரசுப் பள்ளிகள் பற்றிய நம்பிக்கை அளிக்கிற, நேர்மறை அம்சங்களையும் பொது சமூகத்தின் பார்வைக்குக் கொண்டுவர வேண்டியிருக்கிறது.  

ஆண்டுதோறும் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளிவரும் சமயத்தில் நீங்கள் பார்க்கலாம். மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்கள் நாமக்கல் மாவட்டத்தில் அதிகம் இருப்பார்கள். அதிகத் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர் மாவட்டம் முதல் இடம் வகிக்கும். ஒருசில ஆண்டுகள் நீங்கலாக, இதுதான் தமிழகத்தின் நீண்ட காலக் காட்சி. முதல் மதிப்பெண் கொண்டாடப்படும் அளவுக்கு தேர்ச்சி விகிதம் கொண்டாடப்படுவது இல்லை. 26 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்துக்குத்தான் 10-ம் வகுப்புத் தேர்ச்சி விகிதத்தில் முதல் இடம். கடந்த ஆண்டில்தான் இந்தப் பெருமையை இழந்து ஐந்தாம் இடத்துக்குச் சென்றது. அதேபோல ப்ளஸ் டூ தேர்ச்சி விகிதத்திலும் விருதுநகருக்குத்தான் தொடர்ந்து முதல் இடம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒருசில மாணவர்களை ஸ்டேட் ரேங்க் எடுக்கவைப்பதைக் காட்டிலும் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக்காட்டுவதுதான் உண்மையான சாதனை. விருதுநகரில் மட்டும் அல்ல... மாநிலம் முழுவதும் 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி அடைந்த அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு 482. இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 887-ஆக அதிகரித்துள்ளது. மேலும், 88,840 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் குவித்து சாதனை படைத்துள்ளனர். இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டு வருவதன் பின்னால், அரசுப் பள்ளி ஆசிரியர்களின் அசராத உழைப்பு இருக்கிறது.  

இப்படியான முயற்சிகளை மேற்கொள்ளாமல், திருவண்ணாமலை மாவட்டம் ஒவ்வோர் ஆண்டும் தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம் பிடிப்பது ஏன் என்பதை, அந்த மாவட்டக் கல்வித் துறை அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகம் உள்ள திருவண்ணாமலையில் படிக்காத பெற்றோர்கள் அதிகம். அப்பா-அம்மா இருவரும் கூலி வேலைசெய்து குடும்பத்தைக் காப்பாற்றவேண்டிய நிலையில், பிள்ளைகளை கிராமத்தில் விட்டுவிட்டு வெளியூர் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். பிள்ளைகளைக் கவனிப்பதற்கு உரிய வாழ்க்கைச் சூழல் இல்லை. இத்தகைய இடங்களில் பெற்றோர்களின் இடத்தை நிரப்பவேண்டியவர்கள் ஆசிரியர்களே. அவர்கள்தான் படிப்பின் அவசியத்தைப் புரியவைத்து, இடைநிற்காமல் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வர வேண்டும். ஆனால், நடப்பது என்ன?

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 18

இந்த ஆண்டு 10-ம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு முடிந்த பிறகு, திருவண்ணாமலை மாவட்ட அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் 75 சதவிகிதம் தேர்ச்சி அடைந்திருந்த ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியரை நோக்கி, மாவட்டக் கல்வி அதிகாரி, 'உங்களைச் சுற்றியுள்ள எல்லா பள்ளிகளும் 98 சதவிகிதம் தேர்ச்சி அடைந்திருக்கும்போது நீங்கள் மட்டும் ஏன் எல்லா வருடமும் 75 சதவிகிதத்தைத் தாண்டாமல் இருக்கிறீர்கள்?’ எனக் கேட்டார். அதற்கு அந்தத் தலைமை ஆசிரியர் சற்றே இழுத்தவாறு, 'சார்... நாங்க கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்டா எக்ஸாம் நடத்துறோம்’ என்றார். உடனே அந்தக் கல்வி அதிகாரி, 'நீங்க 100 சதவிகிதம் ஸ்ட்ரிக்ட்டா எக்ஸாம் நடத்தணும்னு நான் சொன்னேனா சார்? எனக்குத் தேவை 100 சதவிகித ரிசல்ட்’ எனப் பதில் சொன்னார். 'எப்படியும் தேர்வு நடத்திக்கொள்ளுங்கள். தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டினால் போதும்’ என்றால், இது என்ன நியாயம்? பிட் அடிப்பதை ஊக்குவிக்கும் செயல் அல்லவா இது!

தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது மாய மந்திரம் அல்ல. இன்று தூங்கி எழுந்ததும் நாளை காலையில் அது நடந்துவிடாது. அதற்கு நீண்ட கால உழைப்பு தேவை. மாணவர்களைப் படிப்படியாகத்தான் படிக்கவைக்க முடியும். அவசர, அவசரமாகப் படித்து, அரும்பு மீசை படர்வதற்குள் அறிவாளியாகி, தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சிகளில் வருவதைப்போல 'வயதுக்கு மீறி’ பேசி குழந்தைத்தன்மையை இழப்பதுதான் அறிவா? குழந்தையை அதன் இயல்புடன் இருக்க அனுமதித்து, வயதுக்கு ஏற்ற கற்கும் ஆற்றலுடன் படிக்க அனுமதித்தாலே போதும். இந்த உண்மைகளைப் புரிந்துகொண்ட மாணவர்களின் உள்ளார்ந்த ஆற்றலை, அதன் சுயத்தன்மையுடன் வெளிக்கொண்டு வரும் முனைப்புகொண்ட ஆசிரியர்கள் எல்லா மாவட்டங்களிலும் நிறைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே கறையூர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் கல்பனா என்கிற தலைமை ஆசிரியை, வில்லுப்பாட்டு மூலம் பாடம் சொல்லித்தருகிறார். பாடமும் இசையும் இணைந்த லயத்தில் மாணவர்கள் லயிக்கின்றனர்; தன்னையும் அறியாமல் படிக்கின்றனர். விருதுநகர் மாவட்டம் திருச்சுழி டி.யூ.என்.எஸ்.வைத்தியலிங்கம் மேல்நிலைப்பள்ளியின் உதவித் தலைமை ஆசிரியர் வில்சன் பிரபாகர், தன் சொந்த செலவில் கம்ப்யூட்டர், புரொஜெக்டர் வாங்கித் தந்திருக்கிறார். இவர்கள் எதை எதிர்பார்த்து இவற்றைச் செய்கின்றனர்? தன்னிடம் படிக்கும் மாணவன் நன்றாக இருக்க வேண்டும், அவர்களது எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணமே இதற்கான அடிப்படை. திருநெல்வேலி மாவட்டம், கல்லணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்க பெற்றோர்கள் போட்டிபோடுகிறார்கள் என்றால், அந்தப் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்புதான், அந்த நற்பெயரைச் சம்பாதித்திருக்கிறது.

இந்த இடத்தில் நாம் நாமக்கல் மாவட்டம் பற்றி குறிப்பிட்டுப் பேச வேண்டியுள்ளது. தனியார் பள்ளிகளின் கொள்ளைக்குக் குறியீடுபோல இருக்கும் இதே மாவட்டத்தில் பைசா செலவு இல்லாமல் மிகச் சிறந்த மதிப்பெண்களும், தேர்ச்சி விகிதமும் பெற்றுவரும் பல அரசுப் பள்ளிகள் இருக்கின்றன.

நாமக்கல் மாவட்டம் ஆர்.புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியின் மாணவர் எண்ணிக்கை 2,714. இருபாலர் படிக்கும் இந்தப் பள்ளியில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழிப் பிரிவு இரண்டுமே செயல்படுகின்றன. ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால், பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இருந்து உடனடியாக ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட்டுவிடுகிறார். 1997-ல் இருந்து இப்போது வரை இந்தப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இருந்து நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம் மட்டும் 2.25 கோடி ரூபாய். தலைமை ஆசிரியர் மதியழகன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவினரின் இடைவிடாத உழைப்பின் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் இந்தப் பள்ளிதான் மாவட்ட அளவிலான ரேங்க் எடுக்கிறது. இங்கிருந்து மருத்துவம், பொறியியல் படிக்கச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பெரம்பலூர், தர்மபுரி, ஈரோடு, மதுரை என தொலைதூர ஊர்களில் இருந்து எல்லாம் இந்தப் பள்ளியில் வந்து மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் தங்கிப் படிப்பதற்கு என்றே, பள்ளியைச் சுற்றி எட்டு தனியார் விடுதிகள் முளைத்துள்ளன.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 18

இந்தப் பள்ளியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ள வெண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் இதே அளவுக்குப் புகழ்பெற்றது. சுமார் 1,600 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியும், ஆர்.புதுப்பாளையம் பள்ளியும்தான் மாவட்ட அளவிலான ரேங்க்கில் ஒவ்வோர் ஆண்டும் போட்டி போடும். இவர்களுடன் போட்டிக்கு நிற்கிறது திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி. 1921-ல் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் கடந்த கல்வியாண்டு ப்ளஸ் டூ தேர்ச்சி விகிதம் 98 சதவிகிதம். 10-ம் வகுப்பில் 92 சதவிகிதம். தாலுகா தலைமை இடத்தில் உள்ள இந்தப் பள்ளி, சுற்றிலும் தனியார் பள்ளிகள் சூழ்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இதனால் பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் கூடுதலாகவே இருக்கும். தலைமை ஆசிரியர் லோகநாதன் தலைமையிலான ஆசிரியர் குழுவினர் இதைப் புரிந்துகொண்டு உழைக்கின்றனர். மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்துவதற்காக, ஸ்போக்கன் இங்கிலீஷ் நடத்துவதற்கு என்றே பெற்றோர்-ஆசிரியர் கழகம் மூலம், ஓர் ஆசிரியரை நியமித்துள்ளனர்.

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தாற்போல இருக்கிறது, நாமக்கல், மேலப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி. உள்ளடங்கிய கிராமப்புற பள்ளியான இதில் படிப்பது 35 மாணவர்கள்தான். அத்தனை பேரின் கற்கும் திறனும் அசரடிக்கிறது. குறிப்பாக, இந்தப் பள்ளி மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் இந்த மாவட்டம் முழுவதும் பிரபலம். காரணம், ஆசிரியர் இளங்கோ. 13 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பள்ளியில் பணியில் சேர்ந்த இவர், ஒட்டுமொத்த ஊரையும் மாற்றி அமைத்துள்ளார். குறிப்பாக குழந்தைத் திருமணம் அதிகம் நடந்த ஊர் இது. ஆசிரியர் இளங்கோ இங்கு பணிக்கு வந்ததும், ஒவ்வொன்றாக மாற்றத் தொடங்கினார். கோழிப் பண்ணை உரிமையாளர்களிடம் பேசி, நிதி திரட்டி பள்ளிக்குச் சுற்றுச்சுவர் கட்டினார். தினசரி காலை 7 மணிக்கு எல்லாம் வந்து பெற்றோர்களைச் சந்தித்துப் பேசினார். பள்ளி நேரம் முடிந்ததும் வீட்டுக்குச் செல்லாமல் மாலை நேர வகுப்புகள் நடத்தினார். ஊர் மக்களின் மனதில் இடம் பிடித்தார். இன்று அந்த ஊரில் குழந்தைத் திருமணங்கள் அடியோடு இல்லை என்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்.

ஆசிரியர் இளங்கோ, ஆங்கிலம் படித்தவர்தான். எனினும், மாணவர்களுக்கு எளிய முறையில் சொல்லித்தரக் கூடுதலாக நேரம் செலவிட்டு ஆங்கிலம் படித்தார். ஆங்கிலம் வாசிக்க, எழுத, உரையாட என, அவரே ஒரு சிலபஸை வடிவமைத்தார். இன்று இந்தச் சின்னஞ்சிறிய ஊரின் அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், ஆங்கில தினசரியைப் படித்து புரிந்துகொண்டு, ஆங்கிலத்திலேயே அதுகுறித்து உரையாடும் அளவுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

''ஒரு குழந்தை, கற்றல் என்பதைத் தொடங்க ஆரம்பிக்கும் நாளில் இருந்து என்னுடன் இருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு என்னால் அந்தக் குழந்தையைக் கண்காணிக்கவும் முடிகிறது என்பதால், இது எனக்குச் சற்று எளிமையாக இருக்கிறது!'' என்று தன்னடக்கத்துடன் பேசுகிறார் இளங்கோ.

'நல்லாசிரியர்’ விருதுபெறாத இந்த நல்ல ஆசிரியர்களை வாழ்த்துவோம்!

- பாடம் படிப்போம்...