Published:Updated:

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 19

பாரதி தம்பி, படங்கள்: தி.விஜய்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 19

பாரதி தம்பி, படங்கள்: தி.விஜய்

Published:Updated:

ரசுப் பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழிக் கல்வியின் நிலை என்ன? 2011-12 கல்வி ஆண்டில் ஒரு மாவட்டத்துக்கு 10 பள்ளிகள் வீதம், 320 பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப்பட்டன. மொத்தம் 24 ஆயிரம் மாணவர்கள் அதில் சேர்க்கப்பட்டனர். 2012-13  கல்வி ஆண்டில் 640 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட இந்தத் திட்டம், இந்த ஆண்டு 3,500 பள்ளிகளில் 80 ஆயிரம் மாணவர்கள் எனப் பிரமாண்டமாக விஸ்தரிக்கப்பட்டுள்ளது. 'அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் பெற்றோர்களில், குறைந்தது 20 பேர் விரும்பினால், அந்தப் பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவைத் தொடங்கலாம்’ என்பது அரசின் அறிவிப்பு. தலைமை ஆசிரியர் விரும்பினாலும் ஆங்கில வழிப் பிரிவைத் தொடங்கிக் கொள்ளலாம். தொடங்குவது சரி... ஆங்கில வழியில் பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு எங்கு போவது? ஆங்கில வழியில் பாடம் நடத்துவதற்கு எனப் பிரத்யேகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. ஏற்கெனவே இருப்பவர்கள்தான் இதையும் நடத்த வேண்டும். அனைத்து ஆசிரியர்களும் ஆங்கிலப் புலமை பெற்றவர்கள் இல்லை என்ற நிலையில், அது ஆசிரியர்களுக்கு மிகவும் சவால். பல அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகளுக்குச் செல்வதை ஆசிரியர்கள் முடிந்த வரை தவிர்க்கிறார்கள். அல்லது தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்துச் சமாளிக்கின்றனர்.

இது ஆசிரியர்களின் தவறு அல்ல. அரசு, ஆங்கில வழியில் வகுப்புகளைத் தொடங்குவது என முடிவு செய்வதற்கு முன்பு, தகுதிவாய்ந்த ஆசிரியர்களைத் தயார்படுத்தி இருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் அவசரகதியில் அமல்படுத்தப்பட்டுள்ள இந்தத் திட்டம், ஆசிரியர்களையும் துன்புறுத்தி, மாணவர்களின் எதிர்காலத்தையும் பாழ்படுத்துகிறது. அரசுத் தொடக்கப் பள்ளிகள் பலவற்றில் இரண்டு ஆசிரியர்கள்தான் இருக்கின்றனர். ஐந்து வகுப்புகளில் 50 மாணவர்கள் படிக்கிறார்கள் என்றால், இரண்டு ஆசிரியர்கள்தான், அனைத்து வகுப்புகளையும் சமாளித்தாக வேண்டும். இப்போது ஆங்கிலவழிக் கல்வி என்பது கூடுதல் சுமை. மொத்தத்தில் ஆங்கில வழி வகுப்புகள் செயல்படும் விதம் எந்த விதத்திலும் மகிழ்ச்சி அளிப்பதாக இல்லை.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 19

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொல்வதைக் கேளுங்கள்... ''இங்கிலீஷ்ல பரீட்சை எழுதின பசங்களோட பேப்பரைத் திருத்தச் சொல்வாங்க. 'இல்ல சார், எனக்கு அவ்வளவா இங்கிலீஷ் நாலெட்ஜ் இல்லை’னு சொன்னா, 'சார், ஆன்ஸர் கீ கையில் கொடுத்துடப்போறோம். இதில் இருக்கிற விடையை எழுதியிருந்தா, மார்க் போடுங்க. இல்லைன்னா போடாதீங்க. நாமெல்லாம் டீச்சர்ஸ். இதைக்கூடச் செய்யலைனா எப்படி?’னு சொல்லித் திருத்தச் சொல்றாங்க. என்னதான் ஆன்ஸர் கீ கொடுத்தாலும், பையன் நேரடியா விடை எழுதாம சுத்தி வளைச்சு சரியான விடையை எழுதியிருந்தா, அதுக்கு அந்த ஆசிரியர் மார்க் போடமாட்டார். முக்கியமா நவீன சி.சி.இ முறை கேள்விகளுக்கு சுயமா சிந்திச்சு விடை எழுதச் சொல்லுது. ஒரு பையன் சுயமா சிந்திச்சு விடை எழுதினா, அதைப் புரிஞ்சுக்கிட்டு மதிப்பெண் வழங்குற திறன் ஆசிரியருக்கு இருக்கணுமே... 'ஆன்ஸர் கீ’ல இல்லேனு திருத்துற ஆசிரியர் மார்க் போடலைன்னா, பாதிப்பு மாணவர்களுக்குத்தான். ஆனா, இதுதான் பல இடங்கள்ல நடக்குது'' என்று இந்த ஆசிரியர் சொல்வது நடைமுறை உண்மையை முகத்தில் அறைகிறது!

'ஆங்கில வழி வகுப்பு’ எனச் சொல்லிவிட்டு தேர்வில் தமிழில் கேள்வித்தாள்கள் வழங்கப்படுவதில் இருந்தே, இதன் அபத்தத்தைப் புரிந்துகொள்ளலாம். எனினும் ஆங்கில மோகம், மக்கள் அடிமனதில் ஆழப் பதிந்துள்ளதால், மாணவர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. உதாரணமாக, திருப்பூர் மாவட்டத்தில் கடந்த கல்வி ஆண்டில் 45 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 57 நடுநிலைப் பள்ளிகளில் 2,736 மாணவர்கள் ஆங்கில வழி வகுப்புகளில் சேர்ந்தனர். இந்தக் கல்வி ஆண்டில் 83 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 98 நடுநிலைப் பள்ளிகளில் 7,067 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த நிலைதான். இதற்குக் காரணம், தனியார் பள்ளிகளில் அதிகப் பணம் கட்டி பிள்ளைகளைச் சேர்க்க முடியாத ஏழைப் பெற்றோர்கள், தங்கள் பிள்ளையும் ஆங்கிலம் பேசாதா என ஏங்குகின்றனர். அரசுப் பள்ளிகளில் இலவசமாகவே இங்கிலீஷ் மீடியம் என்றதும், அந்த ஏக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள கிடைத்த வாய்ப்பு என எண்ணுகின்றனர்.

'ஆனால் அரசு ஒண்ணும் தமிழ் வழிக் கல்வியைக் கைவிடலையே... அதுவும் இருக்கு; இதுவும் இருக்கு. மக்கள் ஆங்கில வழியைத்தான் தேர்வு செய்யுறாங்கனா, அதுக்கு அரசாங்கம் என்ன செய்ய முடியும்?’ என்பது கல்வித் துறை அதிகாரிகள் சிலரின் எதிர்வாதம். இரண்டும் இருப்பது உண்மைதான். ஆனால் இது தந்திரம் நிறைந்த உண்மை. மக்கள் ஆங்கில மோகத்தில் ததும்பி வழியும் நிலையில் இரண்டையும் ஒன்றாக நீட்டினால், ஆங்கிலம் பக்கம்தான் சாய்வார்கள். ஆகவே இரண்டுக்கும் சம மதிப்பு கொடுத்திருப்பதாகக் கூறுவது ஏமாற்று வேலை.

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 19

ஆங்கில அறிவைப் பெறுவதற்கு ஆங்கில மொழிக் கல்வியே போதும்; ஆங்கில வழிக் கல்வி தேவை இல்லை. ஆங்கிலத்தை ஒரு மொழிப் பாடமாகப் படித்து, மற்றப் பாடங்களை தாய்மொழியிலேயே படிப்பதன் வழியேதான் ஒரு குழந்தை சுயமாகச் சிந்திக்க முடியும். குழந்தையின் முழுமையான திறமை தாய்மொழி வழிக் கல்வியில்தான் வெளிப்படும். வீட்டில், சமூகத்தில், நண்பர்கள் வட்டத்தில் என அனைத்து இடங்களிலும் தமிழில் பேசி, சிந்தித்துக்கொண்டிருக்கும் குழந்தைகளை பள்ளியில் மட்டும் இவற்றை ஆங்கிலத்தில் செய்ய வேண்டும் எனச் சொல்வது, அவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை. இது குழந்தைகளின் சிந்திக்கும் திறனையே முடக்கிப்போடுகிறது; அவர்களின் மொத்த ஆளுமையையும் சிதைக்கிறது.

தாய்மொழி வழிக் கல்விதான் ஒரு குழந்தையின் உண்மையான அறிவுத்திறனை வளர்க்கிறது என்பது எத்தனையோ ஆய்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பணக்காரப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் அறிவுத்திறனைச் சோதிக்கும்விதமாக 2009-ம் ஆண்டு 'பிசா-2009’ (Programme for International Student Assessment) என்ற சோதனை நடந்தது. இதில் இந்தியா சார்பாக தமிழ்நாடு மற்றும் இமாச்சலப்பிரதேச மாநிலங்களில்

கற்க கசடற விற்க அதற்குத் தக! - 19

இருந்து மாணவர்கள் கலந்துகொண்டனர். மொத்தம் 74 நாடுகள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் வாசித்தல், கணிதம் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இந்தியா 72 மற்றும் 73-வது இடத்தையும், அறிவியலில் 74-வது இடத்தையும் பிடித்தது. இருப்பதிலேயே கடைசி!

ஆனால், ஆங்கிலம் படித்தால்தான் வேலைவாய்ப்பு என்ற கருத்து தொடர்ந்து பரப்பப்படுகிறது. இது எவ்வளவு பொய்யானது என்பதற்கு, வேலை கிடைக்காமல் திண்டாடும் லட்சக்கணக்கான பொறியியல் பட்டதாரிகளே சாட்சிகள். இவர்களில் கணிசமானோர் ஆங்கில வழியில் படித்தவர்கள். மேலும், 'இப்படித்தான் இந்தி படிப்பதைத் தடுத்து வேலைவாய்ப்பைக் கெடுத்துவிட்டார்கள்’ என்ற வாதத்தையும் இணைத்தே பேசுகின்றனர். இதுவும் பொய்யான கூற்று என்பதற்கு, தமிழகத்தின் வீதிகள்தோறும் பணிபுரியும் இந்தி பேசும் வட இந்தியத் தொழிலாளர்களே சாட்சி. 'இந்தி பேசினால் நல்ல வேலை கிடைக்கும்’ என்றால், அவர்கள் ஏன் ஐந்தாயிரம் ரூபாய்க்கு ஆயிரம் மைல் கடந்துவந்து இங்கு அல்லாட வேண்டும்? ஒரு மொழியைப் பேசினாலே வேலை கிடைத்துவிடும் என்பது மூட நம்பிக்கை.

இது தொடர்பான இன்னொரு கோணத்தையும் அடுத்த வாரம் அலசுவோம்..!

- பாடம் படிப்போம்...