Published:Updated:

``அவமானமெல்லாம் வெகுமானம்!'' சைக்கிளில் டெலிவரி செய்யும் மாணவர்

Raghunath delivering food by cycle.
Raghunath delivering food by cycle.

`15 நிமிஷத்துல உணவு வேணும்'னு ஆர்டர் பண்ணி இருந்தார். 8 நிமிஷத்துல அவர் முன்னால நின்னேன். 'சைக்கிளை வெச்சுக்கிட்டு இவ்வளவு வேகமா எப்படி வந்த? எதுவும் ஜீபூம்பா வேலை காட்டுறியா?’னு கேட்டார்.

'நடராஜா சர்வீஸ்', சைக்கிள், மாட்டு வண்டி என்று நம் முன்னோர்கள் பயணம் மேற்கொண்ட 'வாகனங்கள்' எல்லாம் இப்போது அசைபோடும் விஷயமாக மாறிவிட்டது. ஆனால், கரூரைச் சேர்ந்த ஒரு கல்லூரி மாணவர் வாழ்வியலுக்காக சைக்கிளில் உணவு டெலிவரி செய்து வருகிறார்.

அந்த நிறுவனத்தில் பணிபுரியும் எல்லோரும் டூவீலர்களில் பயணிக்க, இவர் மட்டும் பழைய சைக்கிளில் சென்று உணவு டெலிவரி செய்வது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. நமக்குள் வியப்பை ஏற்படுத்திய அந்த மாணவரின் பெயர் ரகுநாத். கரூரிலிருந்து சின்னதாராபுரம் செல்லும் சாலையில் உள்ள குக்கிராமமான காசிபாளைத்தைச் சேர்ந்தவர்.

Raghunath
Raghunath

கரூர் நகரில் ஒரு மழை பெய்து ஓய்ந்த இரவில்தான் அவரைச் சந்தித்தோம். 19 வயதுதான் ஆகிறது, ரகுநாத்துக்கு. ஆனால், அவரது பேச்சில், அவரது வாழ்நாளுக்கும் தேவையான பக்குவம் வாளிப்பாக வாழ்கிறது. "வாழ்த்துகள், எப்படி இப்படி?.." என்ற பீடிகையோடு, ரகுநாத்திடம் பேச்சுக்கொடுத்தோம்.

A college student delivering food by cycle for livelihood
A college student delivering food by cycle for livelihood

``அப்பா பேரு பொன்னுசாமி, அம்மா பேரு ரேவதி. தங்கச்சி கற்பகவள்ளி ஆறாவது படிக்கிறா. அப்பா ஒரு கம்பெனியில மெக்கானிக்கா இருக்கார். அம்மா கூலி வேலைக்குப் போறாங்க. எங்களுக்கு கால்பாதம் படுற அளவுக்குக்கூட சொந்தமா நிலமில்லை. வாடகை வீட்டுலதான் வசிக்கிறோம். அப்பாவும், அம்மாவும் சேர்ந்து மாசம் 14,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறாங்க. அதுல, வீட்டு வாடகை 3000 ரூபாய் போய்ட்டுனா, மீதியுள்ள 11,000 ரூபாயை வெச்சுதான் நாலு பேரும் மாசம் முழுக்க சாப்புடணும்; நல்லது கெட்டதுகளுக்கு செலவு பண்ணணும்; மத்த செலவுகளைப் பண்ணணும்ங்கிற நிலைமை. அப்பா, அம்மாவால இந்த வருமானத்துல குடும்பத்தை இழுத்துப் புடிச்சு ஓட்ட முடியலை. பலநாள் சாப்பிட முடியாத நிலைமை வந்துச்சு. இருந்தாலும், 'நாங்க படுற கஷ்டத்தை நீங்க படக்கூடாது'னு எங்க ரெண்டு பேரையும் படிக்க வெச்சாங்க. அதனால், 'அவங்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கக் கூடாது'னு நான் 11 ம் வகுப்பு படிக்கிற காலத்திலிருந்தே பகுதி நேரமா வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.

டெக்ஸ்டைல்ஸ்கள்ல பிசிறு எடுக்கிற வேலை, மில்லுல தேங்காய் மட்டை வெட்டிப்போடுற வேலைனு கிடைக்குற வேலைகளுக்குப் போக ஆரம்பிச்சேன். தினமும் மாலை 6 மணி தொடங்கி, இரவு 12 மணி வரைக்கும் வேலை பார்ப்பேன். 2000 ரூபாய் வரை மாசம் கிடைக்கும். இந்தச் சூழலில்தான், ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி, 11 ம் வகுப்பு விடுமுறையில் நண்பர் ஒருத்தரோடு சேர்ந்து, ஒரு டெக்ஸ்டைல்ஸ்ல பிசிறு எடுக்கிற கான்ட்ராக்ட்டை வாங்கி செய்ய ஆரம்பிச்சோம். மாசம் 3500 ரூபாய் வரை கிடைச்சுச்சு. அதை வெச்சு கரூர்ல ஒரு கல்லூரியில பி.சி.ஏ கோர்ஸ் சேர்ந்தேன். கல்லூரி முடிந்தபிறகு மாலையிலேருந்து இரவு 11 மணி வரை வேலை பார்த்தேன்.

Raghunath delivering food by cycle.
Raghunath delivering food by cycle.

ஆனா, நாளாக நாளாக கான்ட்ராக்ட் வருவது குறைய, மாசம் 1500 ரூபாய்தான் வருமானம் வந்துச்சு. அப்போதான், எங்க அப்பாவோடு வேலை பார்க்குற மேகநாதன் என்பவர், வருமானம் பத்தாத காரணத்தினால், பார்ட் டைம் ஜாப்புக்காக ஆன்லைனில் விண்ணப்பிச்சார். அவருக்கு பிரபல உணவு டெலிவெரி ஸ்டார்ட் அப் (சொமேட்டோ) கம்பெனியில வேலை கிடைச்சுச்சு. அவங்க, 'இன்னும் ஓர் ஆள் வேணும்'னு கேட்டிருக்காங்க.

Vikatan

உடனே, அவர் என்னை சிபாரிசு பண்ணினார். நானும் வருமானம் பத்தாம தவிச்சதால, உடனே சம்மதிச்சு, அந்த வேலையில் சேர்ந்துட்டேன். 'சைக்கிள் வாகனம்' என்றுதான் பதிஞ்சேன். உடனே சக டெலிவரி பையன்கள், 'ஏன்டா இந்த விஷப்பரீட்சை. இரண்டு நாள்கூட உன்னால சைக்கிள்ல போய் டெலிவரி பண்ணமுடியாது. உடம்பும் ஒத்துழைக்காது; மத்தவங்க பேசுற கேலியில, உன் மனசும் அதுக்குப் போக இடம்கொடுக்காது'னு பயமுறுத்துனாங்க. நான் அதை, இந்தக் காதுல வாங்கி, அந்தக் காதுல விட்டுட்டு, சைக்கிளை எடுத்து மிதிக்க ஆரம்பிச்சேன்.

Raghunath
Raghunath

அதுக்காக புது சைக்கிள்கூட வாங்கவில்லை. நான் ஏற்கெனவே பயன்படுத்தி வந்த பழைய சைக்கிளையே உணவு டெலிவரி பண்ணுவதற்குப் பயன்படுத்த ஆரம்பிச்சேன். கடந்த ஜூலை மாதம் 26 ம் தேதி வேலையில் சேர்ந்தேன். இன்னிக்குவரைக்கும் சைக்கிள்ல போய்தான் டெலிவரி பண்றேன். மாலை ஆறரைக்கு லாக் இன் பண்ணினேன்னா, இரவு பத்தரை மணிக்கு லாக் அவுட் பண்ணுவேன். தினமும் குறைந்தப்பட்சம் 5 ஆர்டர்கள் வரை கிடைக்கும். அதிகபட்சம் 8 வரை கிடைக்கும். சைக்கிள்ல அதிகபட்சமா கரூர் நகரத்துக்குள்ள 5 கிலோமீட்டர் வரை பயணிக்க வேண்டி இருக்கும். மாசம் இப்போ 4000 ரூபாய்வரை கிடைக்குது.

ஆரம்பத்துல, இரண்டு நாள் தொடர்ந்து சைக்கிள் மிதிச்சதும், தொடை முழுக்க கடுமையான வலி. நடக்கக்கூட முடியலை. 'சைக்கிள்ல போறது மத்தவங்க சொல்றதுமாதிரி கஷ்டமோ?'னு தோணுச்சு. ஆனா, கண் முன்னால உட்கார்ந்துகிட்டு, சதாகாலமும் கஷ்டத்தைத் தரும் வறுமையைவிட, சைக்கிள் மிதிக்கிற வலி அவ்வளவு கஷ்டமானதில்லை. உன்னால முடியும். அடுத்து எம்.சி.ஏ படிக்கணும். நல்ல வேலைக்குப் போகணும். தங்கச்சியை நல்லா படிக்க வைக்கணும். அம்மா, அப்பாவை நல்லா கவனிச்சிக்கணும். அதுக்காகவாச்சும் எழுந்து ஓடு'னு உள்ளுக்குள் ஏதோ ஒரு குரல் உற்சாகப்படுத்துச்சு. உடனே, 'நெஞ்சம் உண்டு, நேர்மை உண்டு ஓடு ராஜா'னு சைக்கிளை மிதிச்சு, உணவை டெலிவரி பண்ண ஆரம்பிச்சுட்டேன்.
A college student delivering food by cycle for livelihood
A college student delivering food by cycle for livelihood

சைக்கிள்ல வந்து டெலிவரி பண்ற என்னைப் பார்த்து பலரும், 'ஒரு பைக்கை வாங்கி வெச்சுக்கிட்டு போனா, இன்னும் நிறைய ஆர்டர்கள் கிடைக்கும். கூடுதலா வருமானம் வருமில்ல'னு சொல்வாங்க. ஆனா நான், 'அதுக்கு ஏத்தமாதிரி பெட்ரோல் செலவு, அந்தச் செலவு இந்தச் செலவுனு வரும். அப்புறம் பார்த்தா, இந்த சைக்கிள் டெலிவரி மூலமா வர்ற வருமானத்துக்கு சமமாதான் அதுவும் இருக்கும். இப்பவே அந்த வருமானம் கிடைக்குது. தவிர, உழைக்க தயங்குனா, உன்னதமான வாழ்வு கிடைக்காது'னு சொல்லி அவங்க வாயடைச்சுருவேன்.

ஒருநாள் ரோட்டுல ஒருத்தர் என்னைப் பார்த்து, 'இருக்கிறதை வெச்சு வாழுறதுக்கு பெரிய மனசு வேணும். எவ்வளவு கஷ்டப்பட்டாலும், இந்த மனநிலையை மாத்திக்க வேணாம். ஒருநாள் உங்களை இந்த உலகமே கொண்டாடும்'னு கைகொடுத்தார்.
ரகுநாத்
Raghunath
Raghunath

அதேபோல, கரூர் ரயில்வே ஸ்டேஷன்ல ஒருத்தர், '15 நிமிஷத்துல உணவு வேணும்'னு ஆர்டர் பண்ணி இருந்தார். 8 நிமிஷத்துல அவர் முன்னால நின்னேன். 'சைக்கிளை வெச்சுக்கிட்டு இவ்வளவு வேகமா எப்படி வந்த? எதுவும் ஜீபூம்பா வேலை காட்டுறியா?. அசத்தலான ஆளுப்பா நீ'னு பாராட்டினார்.

எனது இந்த உழைப்பை எந்தச் சூழலிலும் தொடர்வேன். யார் உதிர்க்கும் அவமானச் சொற்களும் என்னை கடுகளவும் பாதிக்காது. ஏன்னா, இப்ப இல்லைன்னாலும், வருங்காலத்தில் நான்தான் ராஜா. அந்த நம்பிக்கை எனக்கு நிறைய உண்டு" என்று சொல்லி, நம்மை புருவம் உயர்த்த வைத்தார்.

கனவு நிறைவேறட்டும்!

அடுத்த கட்டுரைக்கு