Published:Updated:

`காதலனுக்குப் பரிசு வாங்கிய கதை!' - ஒரு ரொமான்டிக் பதிவு #MyVikatan

Representational Image
Representational Image ( Pixabay )

நான்தான் இப்படி தலை சொறிந்து யோசிக்கிறேன். அவன் போகிறபோக்கில் பிடித்ததைப் பரிசாக்குவான்...

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

பாலாவுக்கு இன்னும் பத்தே நாளில் பிறந்தநாள். என்ன பரிசு வாங்கலாம் என்ற சிந்தனை மனதை நிரப்பியுள்ளது. காதலில் இது ஒரு வகையான இன்ப தவிப்பு. அவனுக்கு மகிழ்ச்சி அளிக்க வேண்டும் என்ற தவிப்பு.

இந்தக் காலத்திலும் என்ன பரிசெல்லாம்.. வேறு வேலை இல்லையா என்றால்.. காதலன் முகத்தில் சந்தோஷம் காண சிந்திக்கும் நொடிகளைவிட தலை போற வேலை ஏதும் இல்லை.

இதற்கு முன் நான் பரிசு கொடுத்ததெல்லாம் சொதப்பல் கதைதான். இந்த முறை எப்படியாவது அவனுக்கு ஆச்சர்யம் கொடுக்க வேண்டும்.

நான்தான் இப்படி தலை சொறிந்து யோசிக்கிறேன். அவன் போகிறபோக்கில் பிடித்ததைப் பரிசாக்குவான்.

Representational Image
Representational Image
Nick Fewings / Unsplash

போன பிறந்தநாளுக்கு அவன் எனக்கு ஸ்கர்ட் அண்டு டாப்ஸ் எடுத்துக் கொடுத்தான். அம்மாவிடம் கேட்டால் இந்த வயதில் உனக்கு மிடி தேவையா என்று திட்டுவார். அம்மாவை சமாதானம் செய்து அவன் எடுத்துத் தந்த உடையை அணிந்தேன். அந்த கிருஷ்ணர் புல்லாங்குழல் ஊதும் மஞ்சள் நிற எம்பிராய்டரியும் சரசரவென தரையில் தேயும் வெள்ளை நிற பாவாடையும் அவன் என்னை கண்கொட்டாமல் பார்த்ததும் மனதுக்குள் பட்டாம்பூச்சிகளைப் பறக்கச் செய்தது.

அதற்கு முந்தைய முறை..

நானும் அவனும் இரு சக்கர வாகனத்தில் சென்றோம். என்ன பரிசு வேண்டும் என்று கேட்டதற்கு, நான்தான் அவனோடு பைக்கில் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பைக்கில் சென்று கொண்டிருக்கும்போது மனதில் இன்னொரு ஆசை.

``பாலா.. நம்ம ஊர்ல நிலாச் சோறுனு ஒரு ஹோட்டல் ஸ்டார்ட் பண்ணிருக்காங்க.. அங்க இப்போ போலாமா"

``அடம் பண்ணாதடி.. அதெல்லாம் சிட்டிக்கு வெளிய போணும்.. அங்கெல்லாம் வேணாம்.. சீக்கிரம் கிளம்பணும்ல.. அமைதியா வா"

பத்து பதினைந்து நிமிட பயணத்துக்குப் பின் வண்டியை நிறுத்தினான்.

``இந்த ஹோட்டல் ஓகேயா.. பைக் இங்க பார்க் பண்ணட்டா..." என்று கூறி ஒரு போர்டைக் காண்பித்தான்.

அதில் நிலா சோறு என்றிருந்தது. பைக்கில் இருந்து இறங்கி அப்படி குதிக்கிறேன். அவ்வளவு துள்ளல் மனதில். தமிழ் மணக்கும் சொற்களைப் பார்த்த ஆனந்தமா.. எனக்காக அவன் என்னை அழைத்து வந்த ஆனந்தமா.. அவனோடு இணைந்து அங்கு உண்ணப் போகும் ஆனந்தமா.. மொத்தத்தில் சில நிமிடங்கள் அனுபவித்து மகிழ்ந்தேன்.

Representational Image
Representational Image
Unsplash

அவனிடம் பல முறை என்ன பரிசு வேண்டும் என்று கேட்டிருக்கிறேன்.. அவன் பெரிதாக எதையும் கேட்டதில்லை.

மீண்டும் சிந்தைக்குள் யோசனை.. என்ன வாங்கலாம்?

உபயோகமற்ற அலங்காரப் பொருள்கள் அவனுக்குப் பிடிக்காது, பயனுள்ளதாக இருக்க வேண்டும். அதனால் போன பிறந்தநாளுக்கு ஷர்ட் கொடுத்தேன். அவன் மகிழ்ந்தான். ஆனால், எனக்குப் பெரிய திருப்தியில்லை.

சாக்லேட் கொடுப்பதெல்லாம் எனக்குப் பிடிக்காது. ஒரு துண்டு சாக்லேட்டிற்காக சண்டையிட்டு பிடிங்கித்தின்ற காலம் உண்டு. ஆனால், இப்போது என்னைப் பொறுத்தவரை அது இனிப்பும் கெமிக்கலும் சேர்ந்த கலவை அவ்வளவே. சாக்லேட் விளம்பரங்களை ரசிப்பதோடு சரி, உண்பதில்லை.

கிதார் வாங்கலாமா!!!!!

சட்டென மனதில் ஒரு பொறி.

எனக்கு கிதாருக்கும் வயலினுக்கும் வித்தியாசமே இன்னும் தெரியாது. ஆனால், அவன் அடிக்கடி கிதார் கிதார் என்று கூறியதுண்டு. அவனுக்குப் பரிசளித்தால் நிச்சயம் மகிழ்ச்சியாக வாசிக்கக் கற்பான்.

மனம் முடிவு எடுத்தது. இசைக் கருவிகள் பற்றிய ஞானம் உள்ள தோழியுடன் கடைக்குச் சென்றேன். அக்கோஸ்டிக் கிதார் என்று இரண்டு மரக் கலர் கிதாரை காண்பித்து எது வேண்டும் என்றால்..

முதலாவதை தட்டினேன் `பாலா' என்று தான் எனக்குக் கேட்டது. அதையே வாங்கினோம்.. ஒருவேளை இரண்டாவதை தட்டியிருந்தாலும் அதே கேட்டிருக்குமோ என்னவோ..

Representational Image
Representational Image
Pixabay

பிறந்தநாள் அன்று..

என்னால் வெளியில் செல்ல இயலாத சூழ்நிலை. பிறந்தநாள் பரிசை நண்பர்கள் மூலம் அவனிடம் எப்படியோ சேர்த்துவிட்டேன். அதில் எனக்கு அத்தனை பரவசம்.

அலைபேசியில் அவனை அழைத்தேன்.

``பாலா.. கிதார் வந்துச்சா.. பிடிச்சிருக்கா என் கிஃப்ட்.. ஹாப்பியா நீ.." ஆர்வத்துடன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனேன்.

``எதிர்பார்க்காத கிஃப்ட்.. அத யாரோ என்கிட்ட வந்து குடுத்ததுல எனக்கு சந்தோஷம் இல்லை.. உன்னை இன்னிக்கு பாத்திருந்தா அதைவிட பெரிய கிஃப்ட் வேறேதும் இல்லை.. இந்த கிதார் நீ என்கிட்ட கொடுத்திருந்தா.. நீ எவ்ளோ ஆசையா எனக்காக வாங்கி இருக்கன்னு உன் கண்ல எனக்குத் தெரியும்.. அதுலதான் அந்த கிஃப்ட்டோட சந்தோஷம் இருக்கு".

வழக்கம்போல் நான் தோற்றுவிட்டேன். காதல் வென்றுவிட்டது!

-செ.ரேவதி

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு