Published:Updated:

`Vlog' அபத்தங்கள்..! - ஹோம் மேக்கரின் ஆதங்கம் #MyVikatan

சமையல் செய்யவும், கோலம் போடவும், உடற்பயிற்சிகள் செய்யவும் யூடியூப் பார்க்கும் இல்லத்தரசிகளில் நானும் ஒருத்தி. ஆனால்...

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

சமூக வலைதளங்கள் நம் வாழ்வில் ஓர் அங்கமாக மாறிவிட்ட காலம் இது. பிரபலங்கள் முதல் காமன் பப்ளிக் வரை எல்லோருக்கும் பப்ளிஸிட்டி மீது ஆர்வம் வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. இது சரியா, லதவறா என்ற வாதத்திற்கு நான் வரவில்லை. இதை அடைய அவர்கள் எடுக்கும் முட்டாள்தனமான வழிகள்தான் எனக்கு அபத்தமாகத் தோன்றுகிறது. பல பிரபலங்கள் காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும்வரை ஒவ்வொரு நிகழ்வையும் வீடியோவாகப் பதிவு செய்கின்றனர். லாக்டெளனில் அவர்களுக்கு இது பொழுதுபோக்காக அமைந்திருக்கும். ஆனால் சாமான்ய மக்கள், குறிப்பாகப் பெண்கள் பலர் செய்யும் பெர்சனல் Vlogஸ்... வருத்தம் அளிக்கின்றன.

Representational Image
Representational Image
Pixabay

பெண்களின் டிக்டாக் வீடியோக்களுக்கோ, யூடியூப் வீடியோக்களுக்கோ எதிரானவள் இல்லை நான். பாடல், ஆடல் என்று பெண்கள் பதிவிடும் க்யூட்டான டிக்டாக் வீடியோக்களுக்கும், தகவல்கள் பகிரும் யூடியூப் வீடியோக்களுக்கும் நானும் ரசிகைதான். ஆனால், அதில் எல்லை தாண்டுபவர்களைப் பற்றியதே என் வருத்தம்.

நேர்மறை சிந்தனை கொண்ட பலர், Vlog வீடியோக்கள் முலம் பல நல்ல கருத்துகளை முன்னெடுத்துச் செல்கின்றனர். அது போன்றவர்கள் மீது எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு. ஆனால், அவர்களைப் பார்த்து, புலியைப் பார்த்து சூடு போட்டுக்கொண்ட பூனையைப்போல் உள்ள பலர் (குறிப்பாக டிக்டாக்கில் எல்லை மீறும் ஜோடி வீடியோக்கள் பகிர்ந்து வந்தவர்கள்), யூடியூப்பில் Vlog என்ற பெயரில் தங்கள் அன்றாட வாழ்வின் பக்கங்களைப் பதிவு செய்கின்றனர். அதை சமூக வலைதளங்களிலும் ஏற்றி லைக்குகள் வாங்கத் துடிக்கின்றனர். சிலர் அதில் பணம் ஈட்டவும் முயல்கின்றனர்.

சமீபத்தில் ஒரு பெண், தனக்குக் காய்ச்சல் வந்ததையும், அதற்காக மருத்துவமனை சென்று ரத்தப் பரிசோதனை செய்வதையும் பதிவிட்டதைக் கண்டு அதிர்ந்துவிட்டேன். இதில், கொடுமை என்னவென்றால் அந்த வீடியோவின் கடைசியில் அந்தத் தோழி,``ஃப்ரெண்ட்ஸ், இன்னைக்கு வீடியோ அவ்ளோதான். எனக்கு கோவிட் பாசிட்டிவ்வா இல்ல நெகட்டிவ்வான்னு நாளைக்கு வீடியோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க" என்றார்.

Representational Image
Representational Image
Pixabay

தன் நோயைக்கூட, அது பாசிட்டிவ்வா, நெகட்டிவ்வா என்று ட்விஸ்ட் content-ஆக மாற்றி, அதற்கு பல views வாங்க நினைக்கும் இந்த மனம், உண்மையில் ஒரு மனநோயில் இருப்பதாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மற்றொருவரோ, கணவருடன் ஐஸ்கிரீம் பார்லர் சென்றதை vlog செய்திருந்தார். உண்மையிலேயே அவர் ஐஸ்கிரீம் சாப்பிட்டதைவிட, வீடியோ எடுப்பதில்தான் ஆர்வமாக இருந்தார். அடுத்த நாள் அதே தோழி, கணவருடன் செலவிட்ட மூவி நைட் வீடியோவையும் பதிவிட்டு இருந்தார். இப்படிப்பட்ட personal பதிவுகளை நெருங்கிய நண்பர்களுடன் வேண்டுமானால் பகிரலாம். ஆனால், அதை ஒரு யூடியூப் சேனல் ஆரம்பித்துப் பதிவிடுவது சரியா எனத் தெரியவில்லை.

Representational Image
Representational Image
Pixabay

இன்னும் ஒருவர், `அன்றாடம் மின்சார ரயில் பயணம் செய்வது எப்படி?' என்று விளக்க வீடியோ எடுத்துக்கொண்டே ரயிலில் ஏறுகிறார். இது அவருக்கு மட்டும் ஆபத்தானதல்ல, அவருடன் அந்தப் பெட்டியில் ஏறத் தடுமாறும், உடன் பயணிப்பவர்களுக்கும் ஆபத்தே. அந்தப் பெண் கேமராவைப் பார்ப்பாரா, இல்லை ரயில் படிக்கட்டுகளைப் பார்ப்பாரா..? இதுபோன்ற விபரீத செல்ஃபிகளால் நிகழ்ந்த மரணங்கள் ஏராளம். மேலும், முட்டாள்தனமான செயல்களை `சேலஞ்ச்'கள் என்று கூறி அதைப் பெரிய சாகசமாக மக்களை நம்ப வைப்பது, மக்கள் மூளையை இவர்கள் மழுங்கடிப்பதன் உச்சம்.

சமையல் செய்யவும் கோலம் போடவும் யூடியூப் பார்க்கும் இல்லத்தரசிகளில் நானும் ஒருத்தி. எல்லா யூடியூப் சேனல்களையும் நான் குறை சொல்லவில்லை. திறமையால் அதில் சாதித்து வருபவர்கள் பலர் உள்ளனர். இன்றைய சூழலில் படிப்பதற்கும், அது சம்பந்தமான விளக்கவுரை கூறவும் இந்த வலைதள சேனல்கள் பெரிதும் உதவுகின்றன. அவர்கள் உண்மையில் தங்கள் திறமைகளைச் சரியாகப் பிரதிபலிக்கிறார்கள். ஆனால் அவர்களைப் பார்த்து, லைக்ஸ், வைரல் ஆசையில் பெர்சனலான வீடியோக்களை பதிவேற்றுபவர்கள் செய்வதுதான் வருத்தத்தை அளிக்கிறது.

Representational Image
Representational Image
Pixabay

இன்றைய சூழ்நிலையில் திரைப்படங்களைவிட, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைவிட சமூக வலைதள சேனல்களும் ஓடிடி தளங்களுமே பெரும்பாலான மக்களின் பொழுதுபோக்காக உள்ளன. நானாக தேடிப் போய் எந்த Vlog-களையும் பார்க்கவில்லை என்றாலும், யூடியூப் Suggestions-ல் இதுபோன்ற தேவையற்ற வீடியோக்கள் வருவது அயற்சியளிக்கிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதைவிட இது போன்ற வலைதள சேனல்களை மக்கள் அதிகம் பார்க்கின்றனர். எப்படி ஒரு திரைபடத்திற்கோ, தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கோ எதை ஒளிபரப்ப வேண்டும் எதை ஒளிபரப்பக் கூடாது என்ற சமூக அக்கறை, வரையறை உள்ளதோ அது இந்த வலைதள சேனல்களுக்கும் வேண்டும்தானே?!

இன்னும் சொல்லப்போனால் இதுபோன்ற சமூக அக்கறை இவர்களுக்கு சற்று அதிகமாகவே வேண்டும். ஏனெனில் இந்த வலைதளத் திரை நம் கைகளுக்கு மிக அருகில் உள்ளது; நம் விரல்களிலேயே ஒட்டிக் கொண்டுள்ளது. அர்த்தமற்ற, பயனில்லாத வீடியோக்களை பதிவேற்றி சில வலைதளவாசிகள் தங்கள் மனநோயை மற்றவர்களுக்கும் பரப்புகின்றனரோ என்ற அச்சம் எழுகிறது!

-விஜி குமரன்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு