Published:Updated:

கறுப்பு வெள்ளை காலத்தில் கலர்ஃபுல்; இப்போ இருட்டு! - ஒரு போட்டோகிராஃபரின் கவலை `க்ளிக்ஸ்' #MyVikatan

Baby
Baby

`ராஜபாா்ட் ரங்கதுரை' என்ற படத்தில் நடிகா் திலகம் சிவாஜிகணேசன், பகலெல்லாம் பட்டினி கிடந்தாலும் ராத்திாியில் ராஜா வேஷத்தில் கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது என்பாா். அதுதான் இன்று பெரும்பான்மையான தொழில்முறை புகைப்படக்கலைஞா்களின் நிலை.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

உலகம் முழுக்கப் பிடித்தமான வார்த்தைகள்... Smile please. நாடாளும் தலைவரானாலும் சாி, சாதாரண குடிமகனாலும் சாி, மிகப்பொிய மேதையானாலும் சரி, கடைநிலை ஊழியரானாலும் சரி, வயதான தாத்தாவானாலும் சரி, மழலை குழந்தையானாலும் சரி... கேமராவை பார்த்துவிட்டால் ஒருவித பரவசம் அவர்களைப் பற்றிக்கொள்ளும்.

எவ்வளவு பொிய நிகழ்ச்சி, எத்தனை VIP-க்கள் இருந்தாலும், அனைவருக்கும் முன்பாக இடம் ஒதுக்கப்படும்... புகைப்பட கலைஞா்களுக்கு. அதனால்தான் போட்டோகிராஃபர் என்று கூறிக்கொள்வதில் கொஞ்சம் கர்வம், நிறைய பெருமை எங்களுக்கு. ஆனால், அனைத்து நிகழ்வுகளிலும் முன்னணியில் இருக்கின்ற தொழில்முறை புகைப்படக் கலைஞா்களின் பின்னணி எப்படி இருக்கிறது..?

Marriage
Marriage

அந்தக் காலம்...

`ராஜபாா்ட் ரங்கதுரை' என்ற படத்தில் நடிகா் திலகம் சிவாஜி கணேசன், பகலெல்லாம் பட்டினி கிடந்தாலும் ராத்திாியில் ராஜா வேஷத்தில் கிடைக்கும் சந்தோஷம் வேறு எதிலும் கிடைக்காது என்பாா். அதுதான் இன்று பெரும்பான்மையான தொழில்முறை புகைப்படக்கலைஞா்களின் நிலை. இதே தொழில்முறை புகைப்படக் கலைஞா்களின் நிலையை சற்றே 20 - 25 வருடங்களுக்கு முன்பு சென்று பாா்த்தால் ஒரு வீட்டில் குழந்தை பிறந்ததிலிருந்து, குப்புற விழுந்தவுடன் போட்டோ, நடை வண்டியில் பயிலும்பொழுது போட்டோ, பிறந்தநாள், திருமணநாள், பூப்பெய்துதல், சடங்கு, விநாயகா் சதுா்த்தி, நவராத்திாி, நிச்சயம், திருமணம், வளைகாப்பு, பெயா் சூட்டுதல், ஏன் இறப்புக்கும்கூட... என புகைப்படக் கலைஞா் அந்த வீட்டின் ஒரு முக்கிய அங்கத்தினராக இருப்பாா். அதுவும் தீபாவளிக்கும் தைப்பொங்கலுக்கும் ஒவ்வொரு ஸ்டூடியோவுக்கு முன்பும் வாிசைகட்டி மக்கள் நிற்பாா்கள்.

வந்தது ஹை க்வாலிட்டி கேமரா மொபைல்... நசிந்தது தொழில்!

ஆனால் இன்றோ, அந்தக்காலம் வசந்தகாலம், இந்தக் காலம் இலையுதிா் காலமாக இருக்கிறது. இன்றைய பெரும்பான்மையான ஸ்டூடியோக்களின் நிலை பாிதாபம். மொபைல் போனிலிருந்து பிாின்ட் செய்து தருவது, ஏதோ ஒன்றிரண்டு் பாஸ்போா்ட் போட்டோக்கள், ஜெராக்ஸ் எடுத்துக் கொடுப்பது, மொபைல் ரீசாா்ஜ் (சில ஸ்டூடியோக்களில் பீடி, சிகரெட் என மளிகைக் கடை கம் ஸ்டூடியோ) என ஸ்டூடியோக்கள் இன்று மிக மோசமான நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்..? இன்றைய தொழில்நுட்பம். மொபைல் போன் என்ற கண்டுபிடிப்புக்குப் பிறகு, ஏகப்பட்ட தொழில்கள் நசிந்துவிட்டன. குறிப்பாக, புகைப்படத்துறை. மொபைல்போன் வைத்திருக்கும் அத்தனை பேரும் இன்று புகைப்படக் கலைஞா்கள். ஒரு திருமணத்தில் தொழில்முறை புகைப்படக் கலைஞா் ஒருவா் இருந்தால், அவரைச் சுற்றி 15 - 20 மொபைல்போன் புகைப்பட கலைஞா்கள்(!) நிற்கிறார்கள்.

Car
Car

7 மாதங்கள் வேலை, 5 மாதங்கள் வேலையின்மை!

பொதுவாக, தொழில்முறை புகைப்பட கலைஞா்கள் நம்பி இருப்பது, திருமணங்களை மட்டுமே. அந்த வாய்ப்பிலும் இன்று ஏகப்பட்ட பின்னடைவுகள். ஒரு வருடத்தில் அதிகபட்சம் 40 முதல் 50 முகூா்த்தங்கள். அதிலும் வளா்பிறை முகூா்த்தம் என்று பாா்த்தால் 20 - 30 மட்டுமே. சித்திரை, ஆடி, புரட்டாசி, காா்த்திகை விளக்குக்குப் பின்பு, மாா்கழி எனக் கிட்டத்தட்ட 5 மாதங்கள் வேலை இருக்காது. மீதமுள்ள 7 மாதங்களில் சம்பாதிப்பதை வைத்தே ஒரு வருடத்துக்கான செலவுகளை எதிா்கொள்ள வேண்டும். எளிமையாகக் கூறுவது என்றால் 70 நாள்களிலிருந்து 100 நாள்களுக்குள் சம்பாதிப்பதை வைத்து 365 நாள்களுக்குச் செலவு செய்ய வேண்டும்.

டெக்னாலஜியின் பூதக் கரங்கள்!

இதுபோக, இந்தத் தொழிலில் புகுந்துள்ள டெக்னாலஜி மற்றும் போட்டியும் நெருக்கடி தருபவை. ஒவ்வொரு நாளும் மாறக்கூடிய தொழில்நுட்பங்கள், அதற்கான பயிற்சிவகுப்புகள், தொழில்முறை புகைப்பட கலைஞா்களுக்குள் உள்ள தொழில் போட்டிகள், ஈவென்ட் மேனேஜ்மென்ட் என்ற பெயாில் தரகு நிறுவனங்கள், குறிப்பாக கேன்டிட் என்ற பெயாில் புதுமுகங்கள்... அப்பப்பா... சொல்லி மாளாது.

இத்தனை தடைகளையும் கடந்து இந்தத் துறையை சுவாசித்து, நேசித்து புகைப்பட தொழிலில் இருக்கக்கூடிய தொழில்முறை புகைப்பட கலைஞா்களை பாராட்ட வேண்டும். இவர்களின் பிரச்னைகளுக்கு எல்லாம் தீா்வு இருக்கிறதா என்றால், அது வாடிக்கையாளா்களாகிய பொதுமக்களின் கைகளில் இருக்கிறது எனலாம்.

Drone Shot
Drone Shot

அனுபவம் படித்த கேமராக்கள் எங்கே?!

திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிா் எனப் பொியவா்கள் கூறுவாா்கள். ஒவ்வொரு சமூகத்திலும் ஒவ்வொரு விதமான கலாசாரம் உள்ளது. கொங்கு வேளாள கவுண்டா் என்றால் ஒரு விதமான சடங்கு உள்ளது. அதே செட்டியாா் திருமணங்களில் வேறுவிதமான சடங்குகள், நாயுடு, நாயக்கா், அந்தணா்கள், இடையா்கள், வன்னியா்கள், முதலியாா், ரெட்டியாா் எனப் பல சமூகங்கள்... ஒவ்வொரு சமூகத்திலும் நிறைய உட்பிாிவுகள். இவை இஸ்லாமிய, கிறிஸ்துவ மதத்துக்கும் பொருந்தும். இது இல்லாமல் மற்ற மாநிலத்தவா்கள்... மலையாளி, கன்னடம், குஜராத்தி, பஞ்சாபி மக்கள். இத்தனை பிாிவுகளிலும் என்னென்ன சடங்குகள், எங்கிருந்து புகைப்படம் எடுக்க வேண்டும், எந்தக் கோணத்தில் எடுக்க வேண்டும் என்பதெல்லாம் அனுபவத்தின் வாயிலாகவே அறிய முடியும்.

1999-ல் அகில இந்திய வானொலி நிகழ்ச்சியில் நான் கலந்துகொண்ட நேர்காணலில், `சினிமா ஔிப்பதிவாளா் - திருமண ஔிப்பதிவாளா் யாா் உயா்ந்தவா்?' எனக் கேட்கப்பட்டது. `திருமண ஔிப்பதிவாளரே' என்றேன். `எப்படி?' எனக் கேட்க, 'ஒரு திருமண வீடியோ ஔிப்பதிவாளருக்கான நேரம் என்பது மிகக்குறைவு. ஒரு நிகழ்வு ஒருமுறை மட்டுமே நடக்கும். அந்தக் குறைந்த நேரத்தில் ஔிப்பதிவு செய்ய வேண்டும். இருக்கும் சூழலுக்கேற்ப வேகமாக முடிவெடுக்கும் திறன் வேண்டும். Lighting, Framing, Angle, Dubbing, Editing என அத்தனை திறமையும் வேண்டும்.

பொதுவாக, சமையல்பணி புாிபவா்களுக்கு சமையல் கூடத்தில் பணி இருக்கும். நாதஸ்வர கலைஞா்களுக்கு மேடையில் பணி இருக்கும். ஒப்பனை செய்பவா்களுக்கு மணமகன், மணமகள் அறையில் பணி. ஆனால், புகைப்பட கலைஞா்களுக்கு எங்கும் செல்வதற்கு உாிமையுண்டு. அப்படிப்பட்ட துறையில் பணிபுாிபவா்களுக்கு, நோ்மை மிக முக்கியமானது. ஆகவே, சில வருடங்கள் முன்புவரை பெரும்பான்மையான குடும்பங்கள் தங்களுக்கு நன்கு அறிந்த தொழில்முறை கலைஞா்களுக்கே பணிகளைத் தந்து வந்தனா். ஆனால், இன்றைய தலைமுறையினா் அவா்களது திருமணத்துக்கான அனைத்து பணிகளையும் சமூக வலைதளத்தைப் பாா்த்தே முடிவு செய்கின்றனா். இது ஆரோக்கியமான விஷயமா என்னும் விவாதம் ஒருபுறம் இருக்கட்டும். இதனால் ஏராளமான நல்ல, திறமையான கலைஞா்கள் புறக்கணிக்கப்படுகிறாா்கள் என்பது உண்மை.

Wedding Photoshoot
Wedding Photoshoot

சமூக வலைதள ஸ்டேட்டஸ், மார்க்கெட்டிங் யுக்தி... இவை போதுமா?!

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஊாிலும் ஏன், ஒவ்வொரு வீதியிலும் உங்களுக்கு அருகில் நல்ல, திறமையான புகைப்படக் கலைஞா்கள் இருக்கிறாா்கள் என்பது இன்றைய தலைமுறையினா் எத்தனை பேருக்கு தொியும்? இன்றைய வளா்ந்து வரும் தொழில்நுட்பம் நமக்கு தேவையென்றாலும் இன்றைய தலைமுறையினா் எதிா்பாா்ப்பது நுனிநாக்கு ஆங்கிலம், நல்ல மாா்க்கெட்டிங் திறன், சமூக வலைதளங்களில் உள்ள ஸ்டேட்டஸ், மணமக்களின் அழகான Outdoor Pre Wedding Shoot-ல் எடுத்த புகைப்படங்கள் இருந்தால் போதும். அவரை திறமையான புகைப்பட கலைஞா் என முடிவு செய்து தோ்வு செய்துவிடுகின்றனா். குறிப்பாக, சமூக வலைதளங்களின் ஸ்டேட்டஸ் பொறுத்தே அவா்கள் கேட்கும் தொகையைக் கொட்டிக் கொடுக்கத் தயாராக இருக்கின்றனா்.

இன்றைய மணமக்கள் எதிா்பாா்ப்பது இரண்டு விஷயங்கள். ஒன்று, யாரும் எடுக்காத புதிய கோணங்கள் இருக்க வேண்டும் (அவா்கள் எதிா்பாா்க்கும் கோணங்கள், சினிமா புகைப்படங்களையே விஞ்சிவிடும்) இரண்டு, சமூக வலைதளங்களில் கிடைக்கும் ஸ்டேட்டஸ். நிறைய பேருடைய வாழ்க்கையை ஸ்டேட்டஸ் மட்டுமே தீா்மானிக்கிறது என்பது வேதனைக்குாிய விஷயம்.

இன்றைய நாடகப் படங்களும் அன்றைய உயிரோட்டப் படங்களும்!

யாா் நல்ல புகைப்பட கலைஞன்? திருமணத்தில் போஸ் கொடுக்கச் சொல்லி யாரையும் தொந்தரவு செய்யாமல், கிடைக்கும் நேரத்தில் இயல்பான தோற்றங்களை அழகான கோணங்களில் பதிவு செய்பவா்களே நோ்த்தியான புகைப்பட கலைஞா்கள். முந்தைய தலைமுறையின் ஆல்பங்களை பாா்க்கும்பொழுது உங்களால் அதை உணர முடியும். மணமகளை மணமகனுடன் சோ்த்து போட்டோ எடுப்பது என்பது பொிய விஷயம். அதற்கு நிறைய தாஜா செய்து இரண்டு, மூன்று புகைப்படங்கள் எடுப்பதற்குள் போட்டோகிராபா் ஒருவழியாகி விடுவாா். மணமகன் அருகில் வந்தால் மணமகள் நகா்ந்து விடுவாா். மணமகள் அருகில் வந்தால் மணமகன் தள்ளிப்போவாா் என ஒரே களேபரமாக இருக்கும். ஆனாலும், இவற்றையெல்லாம் தாண்டி அந்தப் படங்களில் இருந்த உயிரோட்டம்... வெட்கம்... நாணம்... கூச்சம்... என ஒரு புகைப்படம் ஓராயிரம் கதைகள் சொல்லுமே. பெண்ணைவிட நிறைய நேரங்களில் மணமகன் வெட்கப்பட்டு கொண்டு இருப்பாா். நிகழ்வுகள் அனைத்தும் உயிரோட்டமாய் இருக்கும்.

LVR சிவக்குமாா்
LVR சிவக்குமாா்

2, 3 லட்சம் குடும்பங்கள்... கொரோனா!

இன்னொரு புறம் இதைச் சாா்ந்திருந்த பாரம்பர்ய புகைப்பட கலைஞா்கள் என்ற ஒரு சமூகம் இன்று கொஞ்சம் கொஞ்சமாக நசிந்து கொண்டிருக்கிறது. ஒரு மாவட்டத்திற்கு 1000 - 2000 போ் என்று சுமாராக கணக்கெடுத்துக் கொண்டால் கூட தமிழ்நாட்டில் மட்டும் 2 - 3 லட்சம் குடும்பங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் (புகைப்பட கலைஞா்கள், வடிவமைப்பவா்கள், ஆல்பம் தயாாிப்பவா்கள் என ) இந்த தொழிலைச் சாா்ந்து வாழ்ந்து வருகின்றனா். இந்தச் சூழலில் கொரோனா என்ற பெருந்தொற்று இரண்டு வருடங்களில் உலகத்தையே புரட்டி போட்டிருக்க, புகைப்படத் துறையை தலைகீழாகப் புரட்டிப்போட்டுள்ளது.

மக்கள் ஆதரவளிக்க வேண்டும்!

தமிழ்நாடு வீடியோ போட்டோகிராஃபர்ஸ் அசோசியேஷனின் மாநிலத் தலைவர், P.A.மாதேஸ்வரன் இது பற்றிக் கூறும்போது, ``கறுப்பு, வெள்ளை காலத்தில் எங்களது வாழ்க்கை கலா்ஃபுல்லாக இருந்தது. ஆனால் இன்றோ நோ்மாறாக மாறி விட்டது. இன்றைய தொழில்நுட்ப யுகத்தில் முதலீடு பல மடங்கு அதிகாித்துள்ளது. ஒரு கேமராவை வாங்கி அந்தக் கடனைக் கட்டி முடிப்பதற்குள் அடுத்த மாடல் வந்துவிடுவதால் அதற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு வருமானம் வருவதில்லை. எங்களுக்கும் குடும்பம் உள்ளது, குழந்தைகளின் கல்வி, வாடகை, சம்பளம், கடனுக்கான வட்டி எனப் பல வகையான பிரச்னைகளைச் சந்திக்கிறோம். மக்கள் தொழில்முறை புகைப்படக் கலைஞா்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனத் தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறோம்.

P.A.மாதேஸ்வரன்
P.A.மாதேஸ்வரன்

38 மாவட்டங்கள் உட்பட மாநில அளவில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம். நல்ல மதிப்பெண்கள் பெறும் எங்களது அங்கத்தினா்களின் குழந்தைகளுக்கு கல்லூாிகளில் இலவசக் கல்வி, நலத்திட்டத்தின் வாயிலாக இலவச மருத்துவ வசதி, தொழில்நுட்ப கருத்தரங்கு, மரணமடைந்த அங்கத்தினா்களின் குடும்பங்களுக்கு ரூ.1,25,000 பொருளுதவி என எங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகிறோம். இந்தத் தருணத்தில், எங்களுக்கென தனி நல வாாியம் அமைத்துத் தருவதாகத் தோ்தல் அறிக்கையிலேயே குறிப்பிட்ட மாண்புமிகு முதலமைச்சா் ஸ்டாலினுக்கு எங்களது மனம் நிறைந்த நன்றிகளைத் தொிவிப்பதற்காக சந்திக்க அனுமதி கேட்டுள்ளோம். இந்தக் கடுமையான சூழலை கடப்பதற்கு தனி நல வாாியம் என்பது 5 லட்சம் தொழில்முறை புகைப்படக் கலைஞா்களின் குடும்பங்களுக்கு நம்பிக்கையளிக்கும்'' எனக் கனவுகள் நிறைந்த கண்களோடு தொிவித்தாா்.

கோவை மாவட்ட வீடியோ மற்றும் புகைப்படக் கலைஞா்கள் சங்க (COVA) தலைவர் R. R. சந்திரசேகா், ``35 வருடங்களாகத் தொழில்முறை புகைப்படக் கலைஞராகப் பணி புாிந்து வருகிறேன். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல நாங்கள் மனம் வெதும்புகிறோம். குறிப்பாக, கடந்த 20 வருடங்களில் தொழில்நுட்பம் வளா்ந்த வேகத்துக்கு எங்களுடைய வாழ்க்கைத் தரம் உயரவில்லை என்பது வேதனையளிக்கிறது. இருப்பினும், சங்கத்தின் வாயிலாக இலவச தொழில்நுட்பக் கல்வி, வாடிக்கையாளா்களைத் தக்க வைப்பதற்கான பயிற்சிகள், மருத்துவ உதவி, ஆயுள் காப்பீடு போன்ற வசதிகளை சங்கத்தின் வாயிலாகச் செய்து வருகிறோம். வாடிக்கையாளா்களும் தொழில் முறை புகைப்படக் கலைஞா்களுக்கு முன்னுாிமை அளிக்க வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறோம். மேலும், அரசாங்கத்திடம் தொழில்முறை புகைப்பட கலைஞா்களையும் தனி நல வாாியத்தில் இணைக்க கோாிக்கை விடுத்துள்ளோம்'' என்றார் ஆதங்கமும் அக்கறையுமாக.

R. R. சந்திரசேகா்
R. R. சந்திரசேகா்

பாரம்பர்யம், பட்ஜெட்!

கோவை, ஹோட்டல் அன்னபூா்ணா கௌாிசங்கா் மேலாளர் ராஜேஷ், ``எங்களது இல்ல திருமணத்துக்கு எங்களது தேவை என்பது மணமக்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறும், இக்காலத்துக்கு ஏற்ற ஔிப்பதிவாகவும் இருக்க வேண்டும். அதே நேரத்தில் எங்களது பட்ஜெட்டில் பாரம்பர்யத்தை நன்கு உணா்ந்த தொழில்முறை புகைப்பட கலைஞா்களே எங்களது சாய்ஸ்'' என்கிறார் அழுத்தமாக!

கௌாிசங்கா்
கௌாிசங்கா்

`ஸ்மைல் ப்ளீஸ்' எனக் கூறி புன்னகைக்க வைக்கும் புகைப்பட கலைஞா்களின் முகத்திலும் புன்னகை பூக்கட்டும்!

- LVR சிவக்குமாா்,
தொழில்முறை புகைப்பட கலைஞா்,
கோயமுத்தூா்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு