Published:Updated:

``மனைவி, மகளுக்கு மனநலப் பாதிப்பு... 2 தம்பிகள் மாற்றுத் திறனாளி!" - `தாயுமானவர்' பிச்சை

பூரணம், இந்திராணி
பூரணம், இந்திராணி

`கொஞ்சம் அசந்தா, ரெண்டுபேரும் ரோட்டுக்கு ஓடிடுவாங்க. வாகனங்களுக்கு முன்னாடி விழுறது, கிணத்துல விழுறதுனு விபரீதமா எதையாவது செய்வாங்க’

வாழ்க்கை விசித்திரமானது. அது எல்லாருக்கும் வரமாக அமைவதில்லை. வறுமையில் உழல்பவர்களை, அது இன்னும் இறங்கி அடித்து அவர்களுக்கு நாலாப்பக்கங்களிலிருந்தும் கஷ்டத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறது. துயரங்களின் நாடகமேடையாக அவர்களது அன்றாடங்களை ரணமாக்கிக் கொண்டிருக்கிறது. பிச்சை போன்றவர்களின் வாழ்க்கையும் அதில் அடங்கும். ஒட்டுமொத்தத் துயரங்களின் ஒற்றைக் கண்ணியாகப் பிச்சையை மாற்றி, அவரது அன்றாடப் பொழுதுகளை அலைக்கழித்துக்கொண்டிருக்கிறது, வாழ்க்கை.

பிச்சை தனது குடும்பத்தினரோடு...
பிச்சை தனது குடும்பத்தினரோடு...

சிதைந்த கூரை வீடு, மனநலச் சவால் கொண்ட மனைவியும் மகளும், 50 வயதைக் கடந்தும் திருமணம் ஆகாத, வாய்பேச முடியாத இரண்டு தம்பிகள். இது போதாதென்று, வாட்டும் வறுமை ஒருபுறம். இத்தனை ஜீவன்களுக்காகவும் ஒற்றை மனிதராக எதிர்நீச்சல் போட்டுக்கொண்டிருக்கும் பிச்சை இவர்களுக்கு ஆண் தாயாக இருந்து அரவணைக்கிறார்.

Vikatan

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் பிச்சை. மனைவி பூரணமும், மகள் இந்திராணியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். தம்பிகள் பெறக்கலானும் முருகேசனும் வாய்பேச முடியாதவர்கள். சோகம் சூழ்ந்த பிச்சை

நம்மிடம் பேசத் தயங்கினார். இயல்பாக்கிப் பேசவைத்தோம்.

``வீட்டைத்தாண்டி சொந்தமாகக் கையளவுகூட நிலமில்லை. ஆதரிக்கவும் ஆளில்லை. நான் பொறந்ததுலருந்து, கஷ்டத்தை மட்டும்தான் அனுபவிச்சுக்கிட்டு வர்றேன். கிடைக்குற கூலிவேலையைப் பார்த்து காலத்தை ஓட்டிக்கிட்டிருந்தேன். நாற்பது வருஷத்துக்கு முன்னாடி பூரணத்தைக் கட்டி வெச்சாங்க. ரெண்டு பேரும் கூலிவேலைக்குப் போய் குடும்பம் நடத்தினோம். தம்பிங்க ரெண்டுபேருக்கும் வாய்பேச முடியாது. அதனால், அவங்களுக்கு பொண்ணு கிடைக்கலை. அவங்களையும் சேர்த்து சுமக்க வேண்டிய நிலைமை. 'விதி விட்டது வழி'னு எல்லாருக்காகவும் ஓடி உழைச்சோம்.

Pichai with his wife and daughter
Pichai with his wife and daughter

அடுத்தடுத்து பழனியம்மாள், இந்திராணினு ரெண்டு பொம்பளைப் பிள்ளைங்க பொறந்தாங்க. வளர ஆரம்பிச்சதும்தான் தெரிஞ்சது, இந்திராணி மனநிலை பாதித்த பொண்ணுன்னு. எங்க தலையில் இடி விழுந்தாப்புல ஆயிருச்சு. மொத பொண்ணுக்கு ஆரம்பத்துல எந்தப் பிரச்னையும் இல்லை. இந்திராணியைச் சரிபண்ண, வட்டிக்குக் கடன் வாங்கி எவ்வளவோ செலவு செஞ்சு, வைத்தியம் பார்த்தோம். சரிபண்ண முடியலை. எங்க ரெண்டு பேரோட வருமானமும் வைத்தியத்துக்கே சரியா போச்சு. ஆறு பேரும் பலநாள்கள் பட்டினி கிடந்திருக்கோம். இந்தக் கஷ்டம் பத்தாதுன்னு, கடவுள் அடுத்த கஷ்டத்தை எனக்குக் கொடுத்தான். நல்லா இருந்த பூரணத்துக்கு, 'மக இப்படி ஆயிட்டாளே'னு நெனச்சு நெனச்சு, மனநிலை சரியில்லாமப் போயிருச்சு.

கொஞ்சம் அசந்தா, ரெண்டுபேரும் ரோட்டுக்கு ஓடிடுவாங்க. வாகனங்களுக்கு முன்னாடி விழுறது, கிணத்துல விழுறதுனு விபரீதமா எதையாவது செய்வாங்க. நிலைமை மோசமானதால, என்னால கடந்த மூணு வருஷமா வேலைக்குக்கூடப் போக முடியலை.
பிச்சை

'எந்த சாமிக்கும் கண்ணில்லையே'னு மருகிகிட்டு, அவளுக்கும் கடனவுடன வாங்கி வைத்தியம் பண்ணினேன். சரிபண்ண முடியலை. கடன் கொடுத்தவங்க, தொந்தரவு பண்ணினாங்க. 'ஒருவேளை சோத்துக்கே வழியத்த நான், கடனை எங்கேருந்து கட்டுறது... 'மொத்தக் குடும்பத்துக்கும் விஷம் கொடுத்து சாகடிச்சுட்டு, நாமும் தற்கொலை பண்ணிக்கலாமா'னு தோணுச்சு. ஆனா, மனசு வரலை. ராப்பகலா உழைச்சு பாதிக்கடனை அடைச்சுட்டேன். இந்தச் சூழல்ல, நல்லா இருந்த என் மூத்த பொண்ணுக்கு திடீர்னு உடம்புக்கு முடியாமப்போச்சு. மறுபடியும் கடன் வாங்கினேன். அவளை ஆஸ்பத்திரியில காண்பிச்சேன்.

Pichai with family
Pichai with family

'மூளையில பிரச்னை. காப்பாத்த முடியாது'ன்னாங்க. என்னைத் தவிக்க விட்டுட்டு, அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி அவ போய் சேர்ந்துட்டா. 'இந்த வாழ்க்கை இப்படியா போட்டு உருட்டும்?'னு மனசொடிஞ்சு போனேன். இப்போ அஞ்சு வருஷமா என் மனைவி, இளைய மகள்... ரெண்டு பேரோட நிலைமையும் ரொம்ப மோசம்... ரெண்டுபேரையும் பார்த்துக்க யாராவது வேணும்கிற நிலைமை.

கொஞ்சம் அசந்தா, ரெண்டுபேரும் ரோட்டுக்கு ஓடிடுவாங்க. வாகனங்களுக்கு முன்னாடி விழுறது, கிணத்துல விழுறதுனு விபரீதமா எதையாவது செய்வாங்க. நிலைமை மோசமானதால, என்னால கடந்த மூணு வருஷமா வேலைக்குக்கூடப் போக முடியலை. 24 மணிநேரமும் இவங்களைக் கண்காணிச்சுக்கிட்டே இருக்கிறதுதான் வேலையாப்போச்சு.

Pichai with brothers
Pichai with brothers

என்னோட தம்பிங்க ரெண்டு பேரும் சேங்கல், கரட்டுப்பட்டி, பாறைப்பட்டி வாரச்சந்தைகள்ல மூட்டை தூக்குற வேலைக்குப் போறாங்க. வாரத்துல மூணுநாள் வேலை கிடைக்கும். அதைவெச்சுதான் குடும்பத்தோடு பசியாறுது. பலநாள் பட்டினிதான். மனைவிக்கும், மகளுக்கும் இருக்கிறதை ஆக்கிப்போட்டுட்டு, பலநாள் நான் பட்டினி கிடப்பேன். ரேஷன் கடையில் 20 கிலோ அரிசி கொடுக்கிறாங்க. அது மட்டும் இல்லைன்னா, மொத்தக் குடும்பமும் இந்நேரமும் மண்ணுக்கு உரமாயிருக்கும்" என்கிறார் பிச்சை.

பிச்சையின் தாத்தா காலத்தில் கட்டிய வீடு... இடியும் நிலையில் இருக்கிறது. சிறு தூறலுக்கே வீடு தாங்குவதில்லை. சில மாதங்களுக்கு முன்னால் இந்த ஊருக்கு வந்த டி.ஆர்.ஓ சூர்யபிரகாஷிடம் மனு அளிக்க, பிச்சையின் நிலை கேட்டு நெகிழ்ந்துபோன அவர், மறுநாளே குடும்பத்தோடு பிச்சை வீட்டுக்கு வந்துவிட்டார்.

DRO Surya Prakash
DRO Surya Prakash

"டி.ஆர்.ஓ சார், புடவை, பணம், பழங்கள் எல்லாம் கொண்டு வந்தார். பசுமை வீடு கட்ட அன்னைக்கே உத்தரவிட்டதோட, பூமிபூஜையும் போட்டார். சிலபேர்கிட்ட அவரே உதவிகள் வாங்கி வீட்டை பெரிசா கட்டித்தந்திருக்கார். மளமளன்னு வேலை நடந்து, முழுமையா இப்போ வீட்டைக் கட்டிமுடிச்சுட்டாங்க. வாழ்வாதாரம்தான் சிக்கலா இருக்கு. இருந்தாலும், என்னோட உடம்புல கடைசிச் சொட்டு ரத்தம் இருக்கிறவரைக்கும் குடும்பத்துக்காகப் போராடிக்கிட்டே இருப்பேன்" என்கிறார் உறுதியான குரலில்!

`அம்மாவின் உழைப்பு... வறுமை... ஏளனப்பேச்சு!' - கூடைப்பந்தாட்டத்தில் சாதித்த புஷ்பா
பின் செல்ல