Published:Updated:

அதிர்ஷ்டம் வரும் என நம்பிக்கை; ₹18.9 லட்சத்துக்கு ஏலம் போன ஐதராபாத் லட்டு; என்ன சிறப்பு?

1994-லிருந்து பாலாபூர் விநாயகர் ஆலயத்தில் இந்த லட்டு ஏலம் நடைபெற்று வருகிறது. முதல் ஏலத்தை 450 ரூபாய்க்கு எடுத்த கோலனு மோகன் ரெட்டி, தொடர்ந்து ஐந்து வருடங்கள் இந்த லட்டு ஏலத்தில் வெற்றி பெற்றிருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஹைதராபாத்தை அடுத்துள்ள பாலாபூரிலுள்ள விநாயகர் ஆலயத்துக்கு ஒரு ஸ்வீட்டான சிறப்பிருக்கிறது. அதுவொரு லட்டு. இந்த ஆலயத்தில் வருடம்தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவு நாளில், பிரசாதமாக 21 கிலோவில் லட்டு செய்து விநாயகருக்குப் படைப்பது வழக்கம். பின்னர், அந்த லட்டு ஏலம் விடப்படும். அந்தப் பகுதி மக்களுக்கு இந்த லட்டு பிரசாதத்தைச் சாப்பிட்டால் வளமாக வாழலாம் என்ற நம்பிக்கையிருப்பதால், இந்த லட்டை ஏலம் எடுப்பதற்குப் பக்தர்கள் போட்டிபோடுவார்கள். கொரோனா தொற்று காரணமாகச் சென்ற வருடம் லட்டு ஏலம் நடைபெறாத நிலையில், இந்த வருடம் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

பாலாபூர் கணேஷ்
பாலாபூர் கணேஷ்

ஏலத்தின் ஆரம்ப விலை 1,116 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஏலம் எடுக்க வந்திருந்த பலரும் நான், நீ எனப் போட்டிபோட்டு ஏலம் கேட்க, அந்த 21 கிலோ லட்டு பிரசாதம் கடைசியில் 18.9 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டது. ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.சி ரமேஷ் யாதவ் மற்றும் அவரின் ஆதரவாளர் மார்ரி சஷாங் ரெட்டி ஆகியோர் இந்த ஏலத்தை எடுத்திருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு இந்த ஏலம் நடைபெறவில்லை என்றாலும், வழக்கம்போல லட்டு தயாரிக்கப்பட்டு, அப்போதைய முதல்வர் சந்திரசேகர் ராவிடம் வழங்கப்பட்டது. இந்த வருடம் லட்டை ஏலம் எடுத்தவர்கள், இதை இப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு வழங்கியிருக்கிறார்கள். 2019-ல் 17.6 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன இந்த லட்டு, 2018-ல், 16.6 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டிருக்கிறது.

1994-லிருந்து பாலாபூர் விநாயகர் ஆலயத்தில் இந்த லட்டு ஏலம் நடைபெற்று வருகிறது. முதல் ஏலத்தை 450 ரூபாய்க்கு எடுத்த கோலனு மோகன் ரெட்டி, தொடர்ந்து ஐந்து வருடங்கள் இந்த லட்டு ஏலத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். அதன் பிறகு, அவர் செழிப்பாக வாழத் தொடங்கியதால், பாலாபூர் மக்களிடையே லட்டும் ஏலமும் பிரசித்திபெற்றுவிட்டது. ஒவ்வொரு வருடமும் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என ஒருவருக்கொருவர் போட்டியிட்டு அதிக ஏலத்துக்கு எடுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தூய நெய், சுத்தமான உலர் பழங்களைச் சேர்த்துச் செய்யப்பட்ட லட்டின் மேலே தங்க முலாம் பூசப்பட்டு, வெள்ளிக் கிண்ணத்தில் வைத்து விநாயகருக்கு நைவேத்தியம் செய்கிறார்கள்.

 21 கிலோ லட்டு
21 கிலோ லட்டு
Twitter Photo:// @YSRCParty
பாரம்பர்ய மைசூர் பாக் செய்வது எப்படி? | Traditional Mysore Pak Recipe Made With Ghee

இந்த லட்டை ஏலம் எடுப்பவர்கள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் லட்டுத் துண்டுகளைப் பகிர்ந்துகொள்வதோடு, தங்களுடைய வயல்கள், பணியிடங்கள் மற்றும் வீடுகளில் லட்டை உதிர்த்துத் தூவவும் செய்வார்களாம்.

இந்த வருடம் ஏலம் எடுத்தவர்களை சமூக வலைதளங்களில் ஒரு கூட்டம் கொண்டாட, இன்னொரு பக்கம் விமர்சித்துக்கொண்டுமிருக்கிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு