Published:Updated:

``அம்மா எப்போ வருவாங்கப்ப்பா..!’’ - ஊரடங்கில் ஓயாமல் கேட்கும் ஏக்கக் குரல் #MyVikatan

Representational Image
Representational Image

பாலா ஒரு புறமும் அவனின் மகள் அபி மற்றொரு புறமாக தண்டவாளத்தில் கைவீசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார்கள்.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஒரு இளவெயில் காலத்திய, ஆள் நடமாட்டம் இல்லாத கிராமப்புற ரயில் நிலையத்தின் மாலை நேரமிது. ஊரடங்கில் ரயில் போக்குவரத்து இல்லையென்பதால் மூன்று வெள்ளாடுகள் ஆனந்தத்தில் தங்களின் தாத்தா, பாட்டி காலத்திய வழித்தடத்தை அங்குமிங்குமாக தாண்டிக்கொண்டிருந்தன.

பாலா ஒரு புறமும் அவனின் மகள் அபி மற்றொரு புறமாக தண்டவாளத்தில் கைவீசிக்கொண்டே நடக்க ஆரம்பித்தார்கள்.

”இன்னிக்கு அம்மா வந்துடுவாங்களா?” அபியின் குரலில் ஏக்கம் மெலிந்தோடும்.

”நாளைக்கு வந்துடுவாங்க…” பாலாவின் குரலில் பொய் வழிந்தோடும்.

”இப்படியே தான் சொல்லிட்டு இருக்கீங்க…!” என ஏமாற்றத்தை அழுகையாய் மாற்றுவாள்.

Representational Image
Representational Image
Credits : Pixabay

இந்த உரையாடல் வீட்டிற்குள் அடிக்கடி கேட்டுக்கொண்டே இருக்கும். மனைவி நித்யா இந்த லாக்-டெளனில் வேலைக்குப் போயே ஆக வேண்டும். அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறாள். லாக்டெளன் ஆரம்பித்த நாள்களில் அதிக வேலை! சில நாள்கள் இரவு பத்து மணிக்குத்தான் வருவாள். காலையில் ஆறுமணிக்கு எழுந்து அந்த நாளுக்குரிய சமையல் செய்து வைத்து கிளம்பும் போது மகளை எழுப்பி, முத்தமிட்டு டாட்டா சொல்லி ஓடுவாள்.

கடந்த ஞாயிறு அன்று அங்கே பணிபுரியும் டாக்டருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவரோடு பணிபுரியும் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். அதனால், நித்யா வீட்டுக்கு வருவது தடுக்கப்பட்டது.

வீட்டு வேலை அனைத்தையும் அவனே செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டான். வீட்டைப் பராமரிக்கச் செய்யும் சூத்திரம் மட்டும் அவனுக்குப் பிடிபடவே இல்லை. துணி துவைக்கும்போது குடிதண்ணீர் வருகிறது. தண்ணீர் பிடிக்கப் போகும் போது குக்கர் விசில் அடிக்கிறது. வீட்டிற்குள் போய் வருவதற்குள் மகள் குடிதண்ணீரில் குளித்துக்கொண்டிருப்பாள். அவன் சாப்பிடும் போது மகள் வெளிக்கு வருவதாகச் சொல்வாள். எல்லா வேலைகளும் தன்னை துரத்திக்கொண்டே இருப்பதாகவும் தான் இடைவிடாமல் ஓடிக்கொண்டிருப்பதாகவும் சபித்துக்கொண்டான்!

Representational Image
Representational Image

அவனுக்கு எல்லாவற்றையும் விட மகளைச் சாப்பிட வைப்பதுதான் பெரும்பாடாக இருந்தது. முதல் மூன்று நாள்கள் சிரமமாக இல்லை. வீடியோகால் செய்து கொடுத்தால் அம்மாவிடம் ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டே சாப்பிடுவாள். அதற்குப்பின் எல்லாமே தடைப்பட்டு விட்டது. தானே சாப்பிட்டுக்கொள்வேன் எனக்கூறி தயிர் பிசைந்த சோற்றினை மேலெல்லாம் பூசிகொண்டு சாப்பிடும் போது செய்யும் சேட்டைகளை மட்டும் அவனால் தடுக்கவே முடியவில்லை.

குழந்தைக்கு சோறு ஊட்டுவதும், மேனேஜருக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைப்பதும் ஒன்றுதான். இரண்டு பேரிடமும் நம்பும் வகையில் பொய்களை நீண்ட நேரம் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் . குழந்தையைக் கவனிக்க யாருமில்லை எனச் சொன்னதை நம்பாமல் அவனுடைய ஃபைனான்ஸ் கம்பெனி மேனேஜர் ஒரு முறையாவது அலுவலகத்திற்கு வர வேண்டும் என அலப்பறை செய்துகொண்டே இருக்கிறார்.

மூன்றாவது நாளிலிருந்து அம்மாவைப் பார்த்தே ஆக வேண்டும் என அடம்பிடிக்க ஆரம்பித்து விட்டாள். வீட்டிற்கும் மருத்துவனைக்கும் இடையே ஏழு கிலோ மீட்டர் தூரத்திற்கு நகரம் அமைதியாகப் படுத்துக்கிடக்கிறது. மருத்துவமனை போவதென்றால் இரு செக் போஸ்ட்டுகளைக் கடக்க வேண்டும். காவலர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கொஞ்சம் பிசகினாலும் பைக்கில் மஞ்ச பெயின்டில் கோடு போட்டுவிடுவார்கள். பிறகு எதாவது ஆத்திர அவசரம் என்றால் குழந்தைக்கு எதுவும் வாங்கக்கூட ஒரு வாரத்திற்கு பைக் வெளியே எடுக்க முடியாது. அதனால்,வீட்டுக்குள் முடங்கியே இருந்தான். ஆனாலும், நாள் முழுவதும் வேலை அவனை இழுத்துக்கொண்டே இருந்தது.

Representational Image
Representational Image

மகள் போகோ, சின்சான் போன்ற கிட்ஸ் சேனல்களில் மூழ்கிக் கிடப்பாள்.செய்திகள் பார்க்க கொஞ்ச நேரம் போராடி ரிமோட் வாங்குவான். ரிமோட் மற்ற நேரங்களில் கிடைக்கவே கிடைக்காது. செய்திகள் பார்க்கும் நேரத்தில் அவன் மடியில் வந்து படுத்துக்கொள்வாள். சில சமயம் அவளை அறியாமலேயே மடியில் தூங்கி விடுவாள். டிவியில் நிவாரண உதவி பெறும் முதியவர்களை பார்த்தால் முகம் மாறுவாள். அவனுக்குக்கூட அவனின் அப்பா, அம்மா பற்றிய கவலை வந்து இனம் புரியாத சோகம் அவனைத் தழுவிக்கொள்ளும்.

இன்று, ”ஏம்பா எனக்கு பாட்டி, தாத்தா கிடையாதா?” எனத் தூங்காமல் கேள்வி கேட்டாள். என்ன பதில் சொல்வது என அவனுக்குத் தெரியவில்லை. அவன் கவனத்தை ஈர்க்க மீசையைப்பிடித்து இழுத்து மீண்டும் ,”சொல்லுப்பா…” என்றாள். தாத்தா, பாட்டிகளை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டோம் என ஐந்து வயது குழந்தைக்கு எப்படி சொல்லிப் புரியவைப்பது?

ஒருநாள் பக்கத்து வீட்டு பிள்ளைகள் தாத்தா, பாட்டிகளோடு கொஞ்சி விளையாடுவதையும் பார்த்து ”ஏம்மா, எனக்கு தாத்தா, பாட்டி இல்லையா?” என நித்யாவிடம் கேட்டே விட்டாள். அன்றைய நாள் முழுவதும் நித்யாவிற்கு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது. உறவுகளின் தேவையைக் காலம் அவ்வப்போது உணர்த்திக்கொண்டுதான் இருந்தது. இந்த லாக் டெளன் வாழ்க்கை குறித்த பல கேள்விகளை அவர்களிடம் எழுப்பி அதை முழுமைப்படுத்தியது.

Representational Image
Representational Image

மதியம் இரண்டு மணிக்குச் செய்திகள் முடியும் போது குடிதண்ணீர் வந்து விட்டது. ஒரு வாரத்திற்குப் பிறகு இன்றுதான் தண்ணீர் வருகிறது. தண்ணீரை தேவையான அளவு பிடித்து நிரப்பி வைக்க வேண்டும். தண்ணீர் பிடிக்கும் வரை பந்தை எடுத்துக்கொடுத்து கொஞ்ச நேரம் விளையாடச் சொன்னான்.

கிகோ புளூஷி எழுதிய `பெனி எனும் சிறுவன்’ என்னும் புத்தகத்தில் வரும், ``ஒரு முறையாவது உதைக்காமல் நாள் முழுவதும் பந்தை கையில் வைத்துக்கொண்டிருக்க ஒரு குழந்தையால் முடியுமா?” என்ற வரிகள் எவ்வளவு உன்னதமானது என உணர முடிந்தது. அவள் அதை உதைத்துக்கொண்டே இருந்தாள். அது அவளின் அம்மாவைக் காணாத ஆத்திரம் என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது.

சிறிது நேரத்திற்குப்பின் தானாக சிரித்துக்கொண்டே தனியாக பந்தை மேலே வீசி விளையாட ஆரம்பித்தாள். அப்போதெல்லாம் புவி ஈர்ப்பு விசை என்ற விஷயத்தை தாண்டி, “மகள் வானத்தை நோக்கிப் பந்தை எறிகிறாள்! கடவுள் அதைப் பிடித்துக் கீழே எறிகிறார்!” என்றே அவனுக்கு நினைக்கத்தோன்றியது.

தண்ணீர் பிடித்து துணி துவைத்து முடிக்கும் போது அவள் ஷோபாவில் தூங்கிப் போயிருந்தாள். தூக்கத்தில் உளறும் உதடுகளின் அசைவு இரண்டு பூவிதழ்கள் காற்றில் அசைவது போல இருந்தது.

தூங்கும் குழந்தையை எழுப்புவது நுண்ணிய கலை. ஓசைப்படாமல் நடந்து போய், ”தங்கம் முழிச்சுப்பாருடா….” என நான்கைந்து முறை மெலிதாக கன்னத்தில் தட்டிய பிறகு தெரியும் சின்ன அசைவை சாதகமாக்கி பூனை தன் குட்டியைக் கவ்வும் பதத்தில் தூக்க வேண்டும். அந்த நுணுக்கம் தெரியாதவர்கள் அதற்கான பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆமாம், தூக்கம் கலைக்கப்பட்டு எழுப்படும் குழந்தையின் அழுகையை அடக்க ஆயிரம் கைகள் வேண்டும்; ஆயிரம் பொய்கள் வேண்டும்.

Representational Image
Representational Image

மகளைக் குளிக்க வைத்து அவளுக்கு ஒரு சிவப்பு கவுன் போட்டான். அவள் கோபத்தில் அதைத் தள்ளி விட்டு அழுதாள். பளிச்சென்ற டி ஷ்ர்ட் அணிந்த பின்னேதான் சிரித்தாள்.. குழந்தைக்கு மட்டுமே அழுதுகொண்டே சிரிப்பதற்கும், சிரித்துக்கொண்டே அழுவதற்கும் தெரிகிறது. அவளின் விருப்பம் அம்மாவின் இணக்கங்களில் பிணைக்கப்பட்டதை முழுமையாக உணர்ந்தான். அதை உடைத்து அப்பாவின் ஆதிக்கத்தை அவளிடம் இதுநாள் வரை கொண்டு வரவே முடியவில்லை! முடியாது. எல்லாவிதத்திலும் பெண்ணின் வளர்ப்பில் தாய் என்பவள் தனித்துவமானவள்.

மகளின் கவனத்தை திசைத்திருப்பப் பக்கத்தில் இருக்கும் ரயில் நிலையத்திற்கு அழைத்து வந்திருக்கிறான். வீட்டிலிருந்து ரயில்நிலையத்திற்கு வரும் வழியில் இருந்த மாரியம்மன் கோயிலில் சாமி கும்பிட்ட பின் தண்டவாளங்களின் மீது பேசிக்கொண்டே நடந்துகொண்டிருக்கிறார்கள்.

சாமிக்கிட்ட என்ன கேட்ட?

அம்மா சீக்கிரமா வரணும்முன்னு…

அப்புறம்…

உங்க ரண்டு பேருக்கும் வயசு ஆகக்கூடாது…

கண்களில் நீர் தழும்ப… அங்கேயே நின்றான். அவர்கள் நடந்தவரையில் தண்டவாளங்கள் கூடவே இல்லை. "அப்பா, இந்தத் தண்டவாளங்கள் எப்ப கூடும்? எனக் கேட்டாள். இவை எப்போதும் இணைபிரியாமல் சென்றுகொண்டே இருக்கும் என்பதைச் சொல்ல வார்த்தைகள் எழவில்லை, நா தழுதழுத்தது.

அவன் கைகளை விரித்து, ”கூடாது…” என்ற ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான். சட்டென்று ஓடிவந்து அவன் இடுப்பில் தொற்றிக்கொண்டாள்.

-சி.ஆர்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு